குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

2026 குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை

प्रविष्टि तिथि: 25 JAN 2026 7:50PM by PIB Chennai

என் அன்பான நாட்டு மக்களே,

வணக்கம்!

இந்திய மக்களாகிய நாம், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும், குடியரசு தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடப் போகிறோம். இந்த தேசிய விழாவை முன்னிட்டு, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குடியரசு தினத்தின் உன்னதமான தருணம், நமது நாட்டின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தில் அதன் நிலை மற்றும் திசையைப் பற்றி சிந்திக்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 ஆகஸ்ட் 15 அன்று, நமது சுதந்திர இயக்கத்தின் வலிமை, நாட்டின் நிலையை மாற்றியது. நமது சொந்த நாட்டின் எதிர்காலத்தைக் கட்டமைக்கும் சிற்பிகளாக நாம் மாறினோம்.

ஜனவரி 26, 1950 முதல், நமது அரசியலமைப்பு லட்சியங்களை நோக்கி நமது குடியரசை நகர்த்தி வருகிறோம். அன்று, நமது அரசியலமைப்பு முழுமையாக அமல்படுத்தப்பட்டது. ஜனநாயகத்தின் பிறப்பிடமான பாரதம், ஆதிக்க அமைப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, நமது ஜனநாயகக் குடியரசு உதயமானது.

உலக வரலாற்றின் மிகப்பெரிய குடியரசின் அடிநாதமான ஆவணமாக நமது அரசியலமைப்பு விளங்குகிறது. நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் லட்சியங்கள், நமது குடியரசை வரையறுக்கின்றன. அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அரசியலமைப்பு விதிகள் மூலம் தேசியவாத உணர்வுக்கும், நாட்டின் ஒற்றுமைக்கும் ஒரு வலுவான அடித்தளத்தை வழங்கினர்.

நாட்டின் இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் படேல், நம் நாட்டை ஒன்றிணைத்தார். கடந்த ஆண்டு, அக்டோபர் 31-ம் தேதிஅவரது 150-வது பிறந்தநாளை நாடு உற்சாகமாகக் கொண்டாடியது. அவரது 150-வது பிறந்தநாள், படேலுடன் தொடர்புடைய நினைவுகளைப் போற்றுகின்றன. இந்தக் கொண்டாட்டங்கள், மக்களிடையே தேசிய ஒற்றுமை மற்றும் பெருமையின் உணர்வை வலுப்படுத்துகின்றன. வடக்கிலிருந்து தெற்கு வரையிலும், கிழக்கிலிருந்து மேற்கு வரையிலும், நமது பண்டைய கலாச்சார ஒற்றுமை எனும் நூலிழை நம் முன்னோர்களால் நெய்யப்பட்டது. இந்த ஒற்றுமை உணர்வை ஊக்குவிக்கும் ஒவ்வொரு முயற்சியும் மிகவும் பாராட்டத்தக்கது.

கடந்த ஆண்டு நவம்பர் 7-ம் தேதி முதல், நமது தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' இயற்றப்பட்டதன் 150 ஆண்டுகளைக் குறிக்கும் கொண்டாட்டங்களும் நாடுமுழுவதும் நடைபெற்று வருகின்றன. பாரத அன்னையின் தெய்வீக வடிவத்தை பிரார்த்திக்கும் இந்தப் பாடல், ஒவ்வொரு இந்தியரிடமும் தேசபக்தியைத் தூண்டுகிறது. சிறந்த தேசியக் கவிஞரான சுப்பிரமணிய பாரதியார், "வந்தே மாதரம் என்போம்" என்ற பாடலை தமிழில் இயற்றினார். மேலும் மக்களை வந்தே மாதரத்தின் உணர்வுடன் இன்னும் பெரிய அளவில் இணைத்தார். இந்தப் பாடலின் பிற இந்திய மொழிகளும் பிரபலமடைந்தன. ஸ்ரீ அரவிந்தர், இந்தப் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். மதிப்பிற்குரிய பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா இயற்றிய 'வந்தே மாதரம்' நமது தேசியப் பாடலானது.

இரண்டு நாட்களுக்கு முன், ஜனவரி 23-ம் தேதி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளன்று, நாடு அவருக்கு மரியாதை செலுத்தியது. 2021 முதல், நேதாஜியின் பிறந்தநாள் 'பராக்கிரம தினமாகக்கொண்டாடப்படுகிறது, இதனால் மக்கள், குறிப்பாக இளைஞர்கள், அவரது அசைக்கமுடியாத தேச உணர்விலிருந்து உத்வேகம் பெற முடியும். நேதாஜியின் 'ஜெய் ஹிந்த்' என்ற முழக்கம் நமது தேசிய பெருமையின் பிரகடனமாகும்.

அன்பார்ந்த நாட்டு மக்களே,

நீங்கள் அனைவரும் நமது துடிப்பான குடியரசை வலுப்படுத்துகிறீர்கள். நமது முப்படைகளின் துணிச்சலான வீரர்கள், நமது தாய் திருநாட்டைப் பாதுகாப்பதில் எப்போதும் விழிப்புடன் இருக்கிறார்கள். காவல்துறையிலும், மத்திய ஆயுதக் காவல் படைகளிலும் உள்ள நமது அர்ப்பணிப்புள்ள பணியாளர்கள் மக்களின் உள்நாட்டு பாதுகாப்பிற்காகத் தொடர்ந்து விடாமுயற்சியுடன் பாடுபடுகிறார்கள். நமது விவசாயிகள், மக்களுக்கு உணவை உற்பத்தி செய்ய கடுமையாக உழைக்கிறார்கள். நம் நாட்டின் முன்னோடி மற்றும் திறமையான பெண்கள் பல துறைகளில் புதிய அளவுகோல்களை அமைத்து வருகின்றனர். நமது திறமையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் மக்களின் ஆரோக்கியத்தைப் பேணுவதில் அர்ப்பணிப்புடன் உள்ளனர். நமது அர்ப்பணிப்புள்ள துப்புரவுப் பணியாளர்கள், நாட்டில் தூய்மையைப் பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நமது அறிவார்ந்த  ஆசிரியர்கள், எதிர்கால சந்ததியினரை வடிவமைக்கின்றனர். நமது உலகத்தரம் வாய்ந்த விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள், நாட்டின் வளர்ச்சிக்கு புதிய திசையைக் காட்டுகிறார்கள். கடுமையாக உழைக்கும் நமது  தொழிலாளர்கள், நாட்டை மீண்டும் கட்டியெழுப்புகிறார்கள். அவர்களது திறமையினாலும், பங்களிப்புகளாலும், நமது நம்பிக்கைக்குரிய இளைஞர்களும், குழந்தைகளும் மகத்தான எதிர்காலத்தில் நமது நம்பிக்கையை வலுப்படுத்துகிறார்கள். நமது திறமையான கலைஞர்கள், கைவினைக்கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள், நமது வளமான மரபுகளுக்கு நவீன வடிவத்தை அளிக்கின்றனர். பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள், நாட்டின் பன்முக வளர்ச்சிக்கு வழிகாட்டுகின்றனர். நமது நாட்டின் வலிமையான தொழில்முனைவோர், நாட்டை வளர்ச்சியடையச் செய்வதற்கும், தற்சார்புடையதாக மாற்றுவதற்கும் மகத்தான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். சமூகத்திற்கு தன்னலமின்றி சேவையாற்றும் தனிநபர்களும், நிறுவனங்களும், தங்கள் செயல்பாடுகளால் எண்ணற்ற மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றுகின்றனர்அரசு மற்றும் அரசு சாரா துறைகளில் பணிபுரியும் அனைத்து மக்களும், தங்கள் கடமைகளை உண்மையாகவும் திறமையாகவும் நிறைவேற்றி, தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களிக்கின்றனர். பொது சேவையில் அர்ப்பணிப்புடன் இருக்கும் மக்கள் பிரதிநிதிகள், மக்களின் விருப்பங்களுக்கு ஏற்ப மேம்பாட்டு இலக்குகளை அடைய உதவுகிறார்கள். இவ்வாறு, அனைத்து அறிவார்ந்த மற்றும் உணர்திறன் மிக்க குடிமக்களும் நமது குடியரசின் முன்னேற்றத்தில் அக்கறை செலுத்தி வருகின்றனர். நமது குடியரசை வலுப்படுத்த பாடுபடும் அனைத்து சக குடிமக்களையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன். வெளிநாடுவாழ் இந்தியர்கள் உலக அரங்கில் நமது குடியரசின் ஆன்மாவுக்கு பெருமை சேர்க்கிறார்கள். அவர்களுக்கு எனது சிறப்புப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பார்ந்த நாட்டு மக்களே,

 இன்று, ஜனவரி 25-ம் தேதி, நம் நாட்டில் 'தேசிய வாக்காளர் தினம்' கொண்டாடப்படுகிறது. நமது வயதுவந்த குடிமக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க ஆர்வத்துடன் வாக்களிக்கின்றனர். வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவது, அரசியல் கல்விக்கு வழிவகுக்கும் என்று பாபாசாகேப் டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் உறுதியாக நம்பினார். பாபாசாகேபின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, நமது வாக்காளர்கள், தங்கள் அரசியல் விழிப்புணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர். வாக்களிப்பதில் அதிகரித்து வரும் பெண்களின் பங்கேற்பு, நமது குடியரசிற்கு ஒரு சக்திவாய்ந்த பரிமாணத்தை சேர்க்கிறது.

நாட்டின் வளர்ச்சிக்குப் பெண்களின் சுறுசுறுப்பான மற்றும் அதிகாரம் பெற்ற பங்கேற்பு மிகவும் முக்கியம். அவர்களின் சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு மற்றும் பொருளாதார அதிகாரமளித்தல் ஆகியவற்றிற்கான தேசிய முயற்சிகள் பல துறைகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்துள்ளன. ‘பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்' திட்டம், பெண்களின் கல்வியை ஊக்குவித்துள்ளது. பிரதமரின் மக்கள் வங்கிக் கணக்குத்’ (ஜன் தன்) திட்டத்தின் கீழ், இதுவரை 57 கோடிக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. இந்தக் கணக்குகளில் கிட்டத்தட்ட 56% பெண்களுடையது.

நமது பெண்கள், காலங்காலமாக நிலவி வரும்  ஒரே மாதிரியான கருத்துக்களை உடைத்தெறிந்து முன்னேறி வருகின்றனர். அவர்கள் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தீவிரமாகப் பங்களித்து வருகின்றனர். சுய உதவிக் குழுக்களுடன் தொடர்புடைய பத்து கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் நாட்டின் வளர்ச்சி செயல்முறையை மறுவரையறை செய்து வருகின்றனர். விவசாயம் முதல் விண்வெளி வரை, சுயதொழில் முதல் ஆயுதப்படைகள் வரை, அனைத்துத் துறைகளிலும் பெண்கள் தங்கள் முத்திரையைப் பதித்து வருகின்றனர். விளையாட்டுத் துறையில், நமது மகள்கள் உலகளவில் புதிய சாதனைகளை படைக்கின்றனர். கடந்த ஆண்டு நவம்பரில், ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையையும் அதைத் தொடர்ந்து பார்வையற்ற பெண்கள் டி20 உலகக் கோப்பையையும் வென்றதன் மூலம் இந்திய மகள்கள் விளையாட்டு வரலாற்றில் ஒரு பொன்னான அத்தியாயத்தைப் பொறித்தனர். கடந்த ஆண்டு, சதுரங்க உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி இரண்டு இந்தியப் பெண்களுக்கு இடையே நடைபெற்றது. இந்த உதாரணங்கள் விளையாட்டு உலகில் இந்தியாவின் மகள்களின் ஆதிக்கத்திற்கு ஒரு சான்றாகும். நாட்டு மக்கள் அவர்களால் பெருமிதம் கொள்கிறார்கள்.

பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களில் பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 46 சதவீதம். பெண்களின் அரசியல் அதிகாரமளிப்பை மேலும் உயரத்திற்குக் கொண்டு செல்ல முயற்சிக்கும்நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு' திட்டம், பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்ற கருத்துக்கு முன்னெப்போதும் இல்லாத வலிமையை அளிக்கும். வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் மகளிர் சக்தியின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும். பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதால், பாலின சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு உள்ளடக்கிய குடியரசின் முன்மாதிரியாக நமது நாடு திகழும்.

அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையுடன், பின்தங்கிய பிரிவுகளின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் 15-ம் தேதி, நமது நாட்டு மக்கள் மண்ணின் மைந்தன் பகவான் பிர்சா முண்டாவின் பிறந்தநாளில்  பழங்குடியின கவுரவ தினத்தின் ஐந்தாவது பதிப்பைக் கொண்டாடினர். மேலும், இது பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் நடத்தப்பட்ட கொண்டாட்டங்களின் உச்சக்கட்டத்தைக் குறித்தது. 'ஆதி கர்மயோகி' பிரச்சாரத்தின் மூலம், பழங்குடி சமூக மக்களின் தலைமைத்துவ திறன் வளர்க்கப்பட்டுள்ளது. அண்மை ஆண்டுகளில், பழங்குடி சமூகத்தின் புகழ்பெற்ற வரலாற்றை நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்த, அருங்காட்சியகங்களை நிர்மாணித்தல் உட்பட பல நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. அவர்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 'தேசிய அரிவாள் செல் ரத்த சோகை ஒழிப்பு இயக்கத்தின்கீழ், இதுவரை 6 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து நாற்பதாயிரம் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர், மேலும் பல மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். சுகாதாரம் மற்றும் கல்வியில் இத்தகைய பிரச்சாரங்கள் பழங்குடி சமூகங்களிடையே மரபுகளுக்கும் நவீன வளர்ச்சிக்கும் இடையில் நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதற்குச் செயல்படுகின்றன. ‘தர்தி ஆபா பழங்குடியின கிராம வளர்ச்சித் திட்டம் மற்றும் 'பிரதமரின் ஜன்மன் திட்டம்ஆகியவை குறிப்பாக பாதிப்படையக்கூடிய பழங்குடியின  பிரிவு சமூகங்கள் உட்பட அனைத்து பழங்குடி சமூகங்களுக்கும் அதிகாரம் அளித்துள்ளன.

நம் விவசாயிகள், நமது சமூகம் மற்றும் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்கின்றனர். கடின உழைப்பாளியான விவசாயிகளின் தலைமுறைகள் நமது நாட்டை உணவு தானியங்களில் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றியுள்ளன. நமது விவசாயிகளின் கடின உழைப்பால்தான் விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடிகிறது. பல விவசாயிகள் வெற்றியின் மிகவும் ஈர்க்கக்கூடிய உதாரணங்களை வழங்கியுள்ளனர். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நியாயமான விலையைப் பெறுவதை உறுதிசெய்தல், குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குவது, பயனுள்ள காப்பீட்டுத் தொகை, நல்ல தரமான விதைகள், நீர்ப்பாசன வசதிகள், அதிகரித்த உற்பத்திக்கான உரங்கள், நவீன விவசாய நடைமுறைகளுக்கான அணுகல் மற்றும் இயற்கை விவசாயத்திற்கான ஊக்கம் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 'பிரதமரின் விவசாயி கவுரவிப்பு நிதிநமது விவசாயிகளின் பங்களிப்பை கௌரவித்து அவர்களின் முயற்சிகளை வலுப்படுத்துகிறது.

பல தசாப்தங்களாக வறுமையில் போராடி வரும் நமது மில்லியன் கணக்கான மக்கள் வறுமைக் கோட்டிற்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் மீண்டும் வறுமையின் பிடியில் சிக்காமல் இருப்பதை உறுதிசெய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தியோதயாவின் உணர்வை உள்ளடக்கிய உலகின் மிகப்பெரிய திட்டமான 'பிரதமரின் ஏழைகளுக்கான உணவு தானியத் திட்டம்', 140 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் நம் நாட்டில் யாரும் பசியால் வாடக்கூடாது என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் கிட்டத்தட்ட 81 கோடி பயனாளிகளுக்கு உதவி வருகிறது. ஏழைக் குடும்பங்களுக்கு மின்சாரம், தண்ணீர் மற்றும் கழிப்பறை வசதிகளுடன் கூடிய 4 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டியதன் மூலம், அவர்கள் கண்ணியமான வாழ்க்கை வாழ்வதற்கும், மேலும் முன்னேற்றம் அடைவதற்கும் ஒரு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. ஏழைகளின் நலனுக்கான இத்தகைய முயற்சிகள் மகாத்மா காந்தியின் சர்வோதய லட்சியத்திற்கு உறுதியான வடிவத்தை அளிக்கின்றன.

நமது நாடு உலகின் மிகப்பெரிய இளைஞர்களைக் கொண்டுள்ளது. நமது இளைஞர்கள் அபரிமிதமான திறமையைக் கொண்டுள்ளனர் என்பது நமக்குக் கூடுதல் பெருமையைத் தருகிறது. நமது இளம் தொழில்முனைவோர், விளையாட்டு வீரர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொழில் வல்லுநர்கள், நாட்டிற்குள் புதிய ஆற்றலைப் புகுத்தி உலக அரங்கில் தங்கள் முத்திரையைப் பதித்து வருகின்றனர். இன்று, நமது இளைஞர்கள் ஏராளமானோர் சுயதொழில் மூலம் வெற்றியின் அற்புதமான நிகழ்வுகளை முன்வைக்கின்றனர். நமது இளைஞர்கள், நாட்டின் வளர்ச்சிப் பயணத்தின் கொடியை ஏந்திவருகிறார்கள். ‘எனது புதிய இந்தியாஅல்லது 'மை பாரத்' என்பது இளம் குடிமக்களை தலைமைத்துவம் மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட பல துறைகளில் வாய்ப்புகளுடன் இணைக்க தொழில்நுட்பம் சார்ந்த அனுபவக் கற்றல் வாய்ப்பை வழங்குகிறது. நமது நாட்டில் புத்தொழில் நிறுவனங்களால் பதிவு செய்யப்படும் அற்புதமான வெற்றி முக்கியமாக நமது இளம் தொழில்முனைவோரால் இயக்கப்படுகிறது. இளைய தலைமுறையினரின் விருப்பங்களை மையமாகக் கொண்ட கொள்கைகள் மற்றும் திட்டங்கள் மூலம் நாட்டின் வளர்ச்சி, வேகம் பெறும். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு முன்னிலை வகிக்கும் என்று நான் நம்புகிறேன்.

அன்புள்ள நாட்டு மக்களே,

இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக விளங்குகிறது. உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியிலும், இந்தியா தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சியைப் பதிவுசெய்து வருகிறது. எதிர்காலத்தில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான நமது இலக்கை அடைவதை நோக்கி நாம் முன்னேறுகிறோம். உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்குவதில் முதலீடு செய்வதன் மூலம், நமது பொருளாதார வலிமையை மிகப் பெரிய அளவில் மீண்டும் கட்டியெழுப்புகிறோம். நமது பொருளாதார சக்தியை வடிவமைக்கும் இந்தப் பயணத்தில், தற்சார்பு இந்தியாவும், தன்னிறைவும், நமது வழிகாட்டும் கொள்கைகளாகும்.

சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டின் பொருளாதார ஒருங்கிணைப்புக்கான மிக முக்கியமான முடிவான ஜிஎஸ்டியை அமல்படுத்துவது, ஓரே நாடு, ஒரே சந்தை' என்ற அமைப்பை நிறுவியுள்ளது. ஜிஎஸ்டி முறையை இன்னும் பயனுள்ளதாக மாற்றுவதற்கான சமீபத்திய முடிவுகள், நமது பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும். தொழிலாளர் சீர்திருத்தத் துறையில் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை நமது தொழிலாளர்களுக்குப் பயனளிப்பதுடன், நிறுவனங்களின் வளர்ச்சியையும் துரிதப்படுத்தும்.

அன்பார்ந்த நாட்டு மக்களே,

பண்டைய காலத்திலிருந்தே, மனிதகுலம் நமது நாகரிகம், கலாச்சாரம் மற்றும் ஆன்மீக மரபுகளால் பயனடைந்துள்ளது. ஆயுர்வேதம், யோகா மற்றும் பிராணயாமம் ஆகியவை உலக சமூகத்தால் பாராட்டப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. பல சிறந்த ஆளுமைகள், நமது ஆன்மீக மற்றும் சமூக ஒற்றுமையின் போக்கைத் தொடர்ந்து வளப்படுத்தியுள்ளனர். கேரளாவில் பிறந்த சிறந்த கவிஞரும், சமூக சீர்திருத்தவாதியும்  ஆன்மீக குருவுமான ஸ்ரீ நாராயண குரு, சாதி மற்றும் மத அடிப்படையிலான பாகுபாடு இல்லாமல், அனைத்து மக்களும் சகோதரத்துவ உணர்வுடன் வாழ்வது ஒரு சிறந்த இடம் என்று கூறியிருந்தார்.

இன்றைய இந்தியா தனது புகழ்பெற்ற மரபுகளை உணர்ந்து, புதிய தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருவது, பெருமைக்குரிய விஷயம். சமீப ஆண்டுகளில், நமது ஆன்மீக பாரம்பரியத்துடன் தொடர்புடைய புனிதத்  தலங்கள் மக்களின் உணர்வுடன் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளன.

காலனித்துவ மனநிலையின் எச்சங்களை காலத்தால் வரையறுக்கப்பட்ட முறையில் ஒழிக்க இது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்திய அறிவுசார் பாரம்பரியம் தத்துவம், மருத்துவம், வானியல், கணிதம், இலக்கியம் மற்றும் கலை ஆகிய துறைகளில் ஒரு சிறந்த மரபைக் கொண்டுள்ளது. 'ஞான பாரதம் இயக்கம்போன்ற முயற்சிகள் இந்திய பாரம்பரியத்தில் கிடைக்கும் படைப்பாற்றலைப் பாதுகாத்து, பரப்புவது, பெருமைக்குரிய விஷயம். இந்த இயக்கம் நவீன சூழல்களில் இந்தியாவின் லட்சக்கணக்கான விலைமதிப்பற்ற ஓலைச்சுவடிகளில் குவிந்துள்ள பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும். இந்திய மொழிகளுக்கும் இந்திய அறிவின் பாரம்பரியத்திற்கும் முக்கியத்துவம் அளிப்பதன் மூலம், நமது தன்னிறைவிற்கான முயற்சிக்கு ஒரு கலாச்சார அடித்தளத்தை வழங்குகிறோம்.

எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து இந்திய மொழிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை, இப்போது அணுகலாம். இந்திய மொழிகளில் அரசியலமைப்பைப் படித்துப் புரிந்துகொள்வது மக்களிடையே அரசியலமைப்பு தேசியவாதத்தைப் பரப்பி, அவர்களின் பெருமை உணர்வை வலுப்படுத்தும்.

அரசிற்கும், பொதுமக்களுக்கும் இடையிலான இடைவெளி தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் நல்லாட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பல தேவையற்ற விதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், பல இணக்கத் தேவைகள் நீக்கப்பட்டுள்ளனமக்களுக்கு உதவ அமைப்புமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. பயனாளிகள் தொழில்நுட்பம் மூலம் நேரடியாக அரசுடன் இணைக்கப்படுகிறார்கள். அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தும் குறிக்கோளுடன் 'எளிதான வாழ்க்கைவலியுறுத்தப்படுகிறது.

கடந்த பத்தாண்டுகளில் பொதுமக்களின் பங்கேற்பு மூலம் தேசிய இலக்குகளை அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முக்கியமான தேசிய பிரச்சாரங்கள் வெகுஜன இயக்கங்களாக மாற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் உள்ள உள்ளூர் நிறுவனங்கள் முற்போக்கான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான கருவிகளாக மாற்றப்பட்டுள்ளன. வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவது அனைத்து குடிமக்களின் பகிரப்பட்ட பொறுப்பாகும். சமூகத்திற்கு மகத்தான சக்தி உள்ளது. அரசால் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் சமூகத்தின் தீவிர ஆதரவைப் பெறும்போது, புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. உதாரணமாக, நமது மக்கள் டிஜிட்டல் கட்டண (யுபிஐ) முறையை மிகப்பெரிய அளவில் ஏற்றுக்கொண்டுள்ளனர். இன்று, உலகின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பாதிக்கும் மேற்பட்டவை இந்தியாவில் நடைபெறுகின்றன. மிகச்சிறிய கடையில் பொருட்களை வாங்குவது முதல் ஆட்டோ ரிக்ஷா பயணத்திற்கு பணம் செலுத்துவது வரை, டிஜிட்டல் கட்டணங்களின் பயன்பாடு உலகளாவிய சமூகத்திற்கு ஒரு ஈர்க்கக்கூடிய எடுத்துக்காட்டாக மாறியுள்ளது. அனைத்து குடிமக்களும் இதேபோன்ற முறையில் பிற தேசிய இலக்குகளை அடைவதில் தீவிரமாக பங்கேற்பார்கள் என்று நம்புகிறேன்.

அன்பார்ந்த நாட்டு மக்களே,

கடந்த ஆண்டு, நமது நாடு ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாத உள்கட்டமைப்புக்கு எதிராக துல்லியமான தாக்குதல்களை நடத்தியது. பயங்கரவாத மையங்கள் அழிக்கப்பட்டன. மேலும் பல பயங்கரவாதிகள் தங்கள் அழிவை சந்தித்தனர். பாதுகாப்புத் துறையில் நமது தன்னிறைவே ஆபரேஷன் சிந்தூரின் வரலாற்று வெற்றிக்கு உந்துதலாக அமைந்தது.

சியாச்சின் முகாமில், மிகவும் சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் நாட்டைப் பாதுகாக்க நமது துணிச்சலான வீரர்கள் முழுமையாகத் தயாராகவும் உத்வேகத்துடன் இருப்பதைக் கண்டேன். இந்திய விமானப்படையின் சுகோய் மற்றும் ரஃபேல் போர் விமானங்களில் பறக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. விமானப்படையின் போர்த் தயார்நிலையைக் கண்டேன். இந்திய கடற்படையின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தின் தனித்துவம் வாய்ந்த திறன்களைக் கண்டேன். ஐஎன்எஸ் வாக்ஷீர் நீர்மூழ்கிக் கப்பலிலும் நான் பயணித்தேன். ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையின் வலிமையின் அடிப்படையில், மக்கள் நமது பாதுகாப்புத் தயார்நிலையில் முழு நம்பிக்கை வைத்துள்ளனர்.

 

என் அன்பான நாட்டு மக்களே,

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இன்று ஒரு உயர் முன்னுரிமையாக உள்ளது. சுற்றுச்சூழல் தொடர்பான பல துறைகளில் இந்தியா உலக சமூகத்தை வழிநடத்தி வருவதில் நான் பெருமைப்படுகிறேன். இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை முறை, இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இந்த வாழ்க்கை முறையே உலக சமூகத்திற்கான நமது செய்தியின் அடிப்படையாகும்: 'சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை' அல்லது லைஃப். பூமித் தாயின் விலைமதிப்பற்ற வளங்கள், எதிர்கால சந்ததியினருக்குக் கிடைப்பதை உறுதி செய்ய முயற்சிகளை மேற்கொள்வோம்.

நமது பாரம்பரியத்தில், பிரபஞ்சம் முழுவதும் அமைதி நிலவ வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகிறோம். உலகம் முழுவதும் அமைதி நிலவினால் மட்டுமே மனிதகுலத்தின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும். உலகின் பல பகுதிகளில் மோதல்கள் நிறைந்த சூழலில், இந்தியா உலக அமைதிக்கான செய்தியைப் பரப்பி வருகிறது.

அன்பார்ந்த நாட்டு மக்களே,

பாரத பூமியில் வாழ்வது, நமது மிகப்பெரிய பெருமை. நமது அன்னை-பூமியைப் பற்றி, கவி குரு ரவீந்திரநாத் தாகூர்,

அமர் தேஷர் மதி,

தோமர் போரே தேகை மாதா

என்று கூறியுள்ளார்.

அதாவது, என் நாட்டின் புனித மண்ணே! உன் காலடியில் தலை வணங்குகிறேன் என்று பொருள்படுகிறது.

குடியரசு தினம் என்பது இந்த வலுவான தேசபக்தி உணர்வை மேலும் வலுப்படுத்தும் ஒரு வாய்ப்பு என்று நான் நம்புகிறேன். ‘தேசமே முதலில்’ என்ற உணர்வுடன் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு நமது குடியரசை இன்னும் வலிமையாக்குவோம்.

மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சி, அமைதி, பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கத்தால் நிறைந்திருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உங்கள் அனைவருக்கும் மிகவும் பிரகாசமான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்.

நன்றி!

ஜெய் ஹிந்த்!

வாழ்க பாரதம்!

***

AD/RB/RJ


(रिलीज़ आईडी: 2218625) आगंतुक पटल : 53
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , Assamese , English , Khasi , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Odia , Kannada