பிரதமர் அலுவலகம்
100-வது உழவர் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்த விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
Posted On:
28 DEC 2020 9:25PM by PIB Chennai
மத்திய வேளாண் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் அவர்களே, ரயில்வே அமைச்சர் திரு பியூஷ் கோயல் அவர்களே, சட்ட மன்ற உறுப்பினர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே, வணக்கம். முதலில் நாட்டின் லட்சக்கணக்கான விவசாயிகள் அனைவருக்கும் நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முற்றிலும் விவசாயிகளுக்கும் விவசாயத்துக்கும் என அர்ப்பணிக்கப்பட்ட நாட்டின் முதல் ரயில் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. வடக்கிலிருந்து தெற்கு வரை, கிழக்கிலிருந்து மேற்கு வரை அனைத்து பிராந்திய விவசாயிகளும் விவசாயமும் உழவர் ரயிலால் இணைக்கப்பட்டனர். கடந்த நான்கு மாதங்களில், கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட சவால்களுக்கு மத்தியிலும், உழவர் ரயிலின் எண்ணிக்கை இன்று 100-ஐத் தொட்டுள்ளது. இன்று, சற்று முன்பாக, 100-வது உழவர் ரயில் மகாராஷ்டிராவின் சங்கோலாவிலிருந்து புறப்பட்டு மேற்கு வங்கத்தின் ஷாலிமாரை நோக்கி பயணிக்கிறது. ஒரு வகையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள், மீனவர்கள், கால்நடை வளர்ப்பவர்கள் மும்பை, புனே, நாக்பூர் போன்ற மகாராஷ்டிராவின் பெரிய சந்தைகளை அணுக வழிகோலியுள்ளது. அதேபோல, மேற்கு வங்க சந்தைகளுடன், மகாராஷ்டிர நண்பர்கள் குறைந்த விலையில், வசதிகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை இது வழங்கும். நாட்டின் பல்வேறு பகுதிகளை இதுவரை இணைத்து வந்த ரயில்வே, தற்போது நாடு முழுவதும் உள்ள வேளாண் சந்தைகளை இணைக்கிறது.
நண்பர்களே, உழவர் ரயில் சேவை, நாட்டின் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான மிகப்பெரிய முக்கிய நடவடிக்கையாகும். இது வேளாண் பொருளாதாரத்தில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும். இது நாட்டின் குளிர்பதன சேமிப்பு விநியோக சங்கிலித் தொடர் முறையையும் வலுப்படுத்தும். உழவர் ரயில் மூலம், நாட்டின் சிறு, குறு விவசாயிகளில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பெருமளவில் ஊக்கம் பெறுவது முக்கிய அம்சமாகும். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், விவசாயிகளுக்கு குறைந்த அளவு என எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஒரு விவசாயி 50-100 கிலோ பார்சலை அனுப்ப விரும்பினால், அதனை ரயிலில் அனுப்பலாம். சிறு விவசாயிகளின் சிறிய அளவு உற்பத்தி பொருட்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பாக போய்ச் சேரவேண்டிய இடத்துக்கு செல்லும் என்பதே இதன் பொருளாகும். உழவர் ரயிலில் மூன்று கிலோ மாதுளம் பழ பார்சலும் அனுப்பட்டுள்ளது என்பதை நான் எங்கோ படித்துள்ளேன். அதுமட்டுமல்லாமல், ஒரு கோழிப்பண்ணை விவசாயி உழவர் ரயில் மூலம் 17 டஜன் முட்டைகளை அனுப்பியுள்ளார்.
நண்பர்களே, சேமிப்பு கிடங்குகளும், குளிர்பதன வசதி கொண்ட கிடங்குகளும் இல்லாததால், நாட்டின் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பு எப்போதும் மிகப்பெரும் சவாலாக இருந்து வருகிறது. இதனை சமாளிக்க எங்கள் அரசு கோடிக்கணக்கான ரூபாயை நவீன சேமிப்பு கிடங்குகளை அமைப்பதிலும், விநியோகச் சங்கிலித் தொடர் முறையை நவீனப்படுத்துவதிலும் முதலீடு செய்து வருகிறது. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னாலேயே, மிகப்பெரிய ரயில்வே கட்டமைப்பை இந்தியா கொண்டிருந்தது. குளிர்பதன சேமிப்பு வசதியும் இருந்து வந்தது. இது தற்போது உழவர் ரயில் மூலம் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகிறது.
பெரிய, புதிய சந்தைகளை விவசாயிகளுக்கு குறைந்த கட்டணத்தில் வழங்குவதைப் பொறுத்தவரை, எங்களது கொள்கைகளும் நோக்கமும் மிகத்தெளிவானவை. பட்ஜெட்டிலேயே இதுபற்றிய முக்கிய அறிவிப்புகளை நாங்கள் வெளியிட்டுள்ளோம். முதலாவது அறிமுகம் உழவர் ரயில், இரண்டாவது ஆறுமுகம் வேளாண் விமானம். சர்வதேச சந்தைகளையும் நமது விவசாயிகள் அணுக வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். இந்த வகையில் நாம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
ஆரம்பத்தில் உழவர் ரயில் வாராந்திர சேவையாக இருந்தது. சில நாட்களிலேயே, ரயிலுக்கு வரவேற்பு அதிகரித்ததால், இப்போது வாரம் மூன்று சேவைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தக் குறுகிய காலத்தில் 100-வது உழவர் ரயில் சேவையை துவக்கியிருக்கிறோம் என்றால், இது சாதாரணமான காரியம் அல்ல. நாட்டின் விவசாயிகள் எதை விரும்புகின்றனர் என்பதை இது தெளிவாகப் புலப்படுத்துகிறது.
நண்பர்களே. விவசாயிகளுக்கு தொண்டாற்றும் நமது அர்ப்பணிப்பை இது தெளிவுபடுத்துகிறது. புதிய வாய்ப்புகளை நமது விவசாயிகள் எவ்வளவு விரைவாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதற்கு இது ஒரு சான்றாகும். விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை மற்ற மாநிலங்களிலும் விற்பனை செய்வதை உறுதிப்படுத்துவதில் உழவர் ரயிலும், வேளாண் விமான சேவையும் முக்கிய பங்காற்றும். இத்தகைய வலுவான ஏற்பாடுகளைச் செய்த பின்னர்தான், வரலாற்று சிறப்புமிக்க வேளாண் சீர்திருத்தங்களை நோக்கி நாம் நகர்ந்துள்ளோம்.
விவசாயிகள் உழவர் ரயில் மூலம், எவ்வாறு புதிய சந்தைகளை அணுகி, வருமானத்தைப் பெருக்கி, செலவைக் குறைக்கின்றனர் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டைக் கூறுகிறேன். ஏதாவது ஒரு இடத்தில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்தால், எவ்வளவு வேதனையை விவசாயிகள் அடைகின்றனர் என்பதை நாம் பல முறை கண்டுள்ளோம். விவசாயிகள் தங்கள் கடின உழைப்பு தம் கண் முன்னேயே வீணாவதைக் கண்டு வந்தனர். ஆனால், இப்போது, புதிய வேளாண் சீர்திருத்தங்கள் மூலம், உழவர் ரயில் வாயிலாக அவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு கிட்டுகிறது. தக்காளிக்கு எங்கு தேவை அதிகமாக உள்ளதோ, அப்பகுதிக்கு அதனைக் கொண்டு சென்று, நல்ல விலைக்கு விவசாயி விற்க முடியும். பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு வழங்கப்படும் போக்குவரத்து மானிய வசதியையும் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சகோதர, சகோதரிகளே, உழவர் ரயிலில் மற்றொரு முக்கிய அம்சமும் உள்ளது. உழவர் ரயிலே ஒரு விதமான குளிர்பதன சேமிப்பு வசதி கொண்டதுதான். பழங்கள், காய்கறிகள், பால், மீன் வகைகள் போன்ற விரைவில் கெட்டுப் போகும் பொருட்களை பாதுகாப்பான விதத்தில் ஓரிடத்தில் இருந்து வேறோர் இடத்துக்கு இந்த ரயிலில் கொண்டு செல்ல முடியும். முன்பெல்லாம் விவசாயிகள் இந்தப் பொருட்களை சாலைகள் மூலம் லாரிகளில் அனுப்பி வந்தனர். இதில் பல பிரச்சினைகளைச் சந்திக்க நேர்ந்தது. கால விரயம் ஏற்பட்டதுடன், சாலைக் கட்டணமும் அதிகமாக இருந்தது. உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்கும் இதனால் பாதிப்பு ஏற்பட்டது. இப்போது மேற்கு வங்கத்துக்கு செல்லும் உழவர் ரயில் மகாராஷ்டிராவின் பல இடங்களில் இருந்து மாதுளை, திராட்சை, ஆரஞ்சு, சீதாப்பழம் ஆகியவற்றைக் கொண்டு செல்கின்றது.
40 மணி நேரத்தில் இந்த ரயில் செல்ல வேண்டிய இடத்தைச் சென்றடையும். ஆனால், இந்த 2000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தை சாலை மூலம் கடக்க பல நாட்கள் பிடிக்கும். பல்வேறு மாநிலங்களில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும். வழியில் எந்த இடத்தில் இருந்தும் விவசாயிகளின் பொருட்களை இந்த ரயில் ஏற்றிச் செல்லும். கட்டணமும் ஒரு லாரிக்கு ஆகும் கட்டணத்தை விட சுமார் ரூ.1700 குறைவாகும். உழவர் ரயிலுக்கு அரசு 50 சதவீத சலுகையும் வழங்குகிறது. இதுவும் விவசாயிகளுக்கு பயனளிக்கும்.
சகோதர, சகோதரிகளே, இன்று மேற்கு வங்க மாநில விவசாயிகளும் இந்த வசதியால் இணைக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில், உருளைக் கிழங்கு, பலா, முட்டைக்கோஸ், கத்தரிக்காய் போன்ற ஏராளமான காய்கறிகள் கிடைக்கின்றன.இதே போல, அன்னாசி, லிச்சி, மாம்பழம், வாழை ஆகிய பழ வகைகளையும் விவசாயிகள் விளைவிக்கின்றனர். கடல் மீன்கள், நன்னீர் மீன்களுக்கு மேற்கு வங்கத்தில் தட்டுப்பாடே கிடையாது. நாட்டின் பல்வேறு சந்தைகளுக்கு அவற்றைக் கொண்டு செல்வதில் தான் பிரச்சினை இருந்தது. தற்போது, மாநிலத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு உழவர் ரயில் பல்வேறு வாய்ப்புகளை அளிக்கிறது. விவசாயிகளைப் போல சிறு வியாபாரிகளும் இதனால் பயனடைவர்.
சகோதர, சகோதரிகளே, கிராமங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், விவசாயிகளின் வாழ்வை முன்னேற்ற புதிய வசதிகளை ஏற்படுத்தவும் புதிய தீர்வுகள் அவசியமாகும். இந்த லட்சியத்துடன்தான் வேளாண் சீர்திருத்தங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதிலும் வேளாண்மையுடன் தொடர்புடைய நிபுணர்களின் அனுபவங்கள், புதிய தொழில்நுட்பங்கள் ஆகியவை இந்திய வேளாண்மையில் புகுத்தப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் ரயில் நிலையங்களுக்கு அருகில் அழுகும் பொருள் சேமிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. வீட்டு வாசலில் பழங்கள், காய்கறிகளை நேரடியாக வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிரதமர் கிருஷி சம்பட திட்டத்தின் கீழ், மெகா உணவுப் பூங்காக்கள், குளர்பதன சேமிப்பு கிடங்குகள் உள்ளிட்ட சுமார் 6,500 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தற்சார்பு இயக்கத் தொகுப்பு மூலம் உணவு பதப்படுத்தும் குறு தொழிற்சாலைகளுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நண்பர்களே, நாட்டு மக்களின் சிறிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அவர்களின் பங்கேற்பு அவசியமாகும். வேளாண் துறையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களின் மிகப் பெரிய வலிமை, கிராம மக்கள், விவசாயிகள், இளைஞர்களின் பங்களிப்பில் அடங்கியுள்ளது. உழவர் உற்பத்தி மன்றங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், சுய உதவிக்குழுக்களுக்கு முன்னிரிமை அளிக்கப்படுவதால், கிராமப்புற இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் பலன் அடைவார்கள்.
வேளாண்மையில் தனியார் முதலீடானது அரசின் முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும். இந்திய வேளாண்மையின் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் முன்னேற்றத்துக்கும் வழி வகுக்கும் பாதையில் நாங்கள் முழுமூச்சுடன் தொடர்ந்து பயணிப்போம். மீண்டும் ஒரு முறை 100-வது உழவர் ரயில் வசதிக்காக நாட்டின் விவசாயிகள், ரயில்வே அமைச்சகம், வேளாண் அமைச்சகத்தை வாழ்த்துகிறேன்.
நன்றிகள் பலப்பல!
பொறுப்பு துறப்பு; இது பிரதமர் உரையின் தோராயமான மொழி பெயர்ப்பாகும். மூல உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.
***
(Release ID: 1685023)
Visitor Counter : 200
Read this release in:
Manipuri
,
Hindi
,
Marathi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Punjabi
,
Malayalam
,
Assamese
,
English
,
Urdu
,
Bengali
,
Odia