மத்திய அமைச்சரவை

கொல்கத்தா துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் பெயரை சியாம பிரசாத் முகர்ஜி துறைமுகம் என பெயர் மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

Posted On: 03 JUN 2020 5:13PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், கொல்கத்தா துறைமுகத்தின் பெயரை சியாம பிரசாத் முகர்ஜி துறைமுகம் எனப் பெயர் மாற்றம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

2020 பிப்ரவரி 25-ஆம் தேதி நடைபெற்ற கொல்கத்தா துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் வாரியக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில், கொல்கத்தா துறைமுகத்தின் பெயரை,  சிறந்த நீதிபதி, கல்வியாளர், சிந்தனையாளர் மற்றும் வெகுஜனத் தலைவர் எனப் பன்முகத் திறமை கொண்ட மேதையான சியாம பிரசாத் முகர்ஜியின் பெயரில்,  சியாம பிரசாத் முகர்ஜி துறைமுகம், கொல்கத்தா எனப் பெயர் மாற்றம் செய்யத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 
2020 ஜனவரி 12-ஆம் தேதி நடைபெற்ற கொல்கத்தா துறைமுகத்தின் நூற்று ஐம்பாதாவது ஆண்டு விழா தொடக்க நிகழ்ச்சியின் போது, மேற்கு வங்க மாநில மக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, மேற்கு வங்கத்தின் சிறந்த மகன்களில் ஒருவரும், தேசிய ஒருமைப்பாட்டின் முன்னணி தலைவரும், வங்கத்தின் வளர்ச்சியை கனவாகக் கண்டவரும் , தொழில்மயத்தை ஊக்குவித்தவரும், ஒரு தேசம் ஒரே சட்டம் என்பதைத் தீவிரமாக ஆதரித்தவருமான டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜியின் பெயர் , கொல்கத்தா துறைமுகத்துக்கு சூட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.  

 

பொதுவாக, இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகங்கள் எந்த நகரங்களில் அமைந்துள்ளதோ, அவற்றின் பெயரில் வழங்கப்படும். இருப்பினும், சில துறைமுகங்களுக்கு சிறப்பு நேர்வாக அல்லது சிறந்த தலைவர்களின் பங்களிப்பைப் போற்றும் விதமாக அத்தகைய பெரிய தலைவர்களின் பெயர்கள் கடந்த காலங்களில் சூட்டப்பட்டதுண்டு. 1989-ஆம் ஆண்டு நவசேவா துறைமுகத்துக்கு, ஜவஹர்லால் நேரு துறைமுகப் பொறுப்புக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது. தூத்துக்குடி துறைமுகம், 2011-இல் கப்பலோட்டியத் தமிழர் பெயரில்  வ.உ.சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக்கழகம்  எனவும், எண்ணூர் துறைமுகம், காமராஜர் துறைமுகம் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டன. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், சிறந்த விடுதலைப் போராட்ட வீரருமான திரு. கே.காமராஜரின் பெயர் எண்ணூர் துறைமுகத்துக்கு சூட்டப்பட்டது. அண்மையில், 2017-ஆம் ஆண்டு, காண்ட்லா துறைமுகம், தீன்தயாள் துறைமுகம் எனப் பெயரிடப்பட்டது. இவை தவிர, பல விமான நிலையங்களுக்கு இந்தியாவின் பெரும் தேசியத் தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன

 



(Release ID: 1629139) Visitor Counter : 393