சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19 குறித்த அண்மைச் செய்திகள்

Posted On: 18 APR 2020 6:19PM by PIB Chennai

கோவிட்-19 நோய்த் தாக்குதலைத் தடுத்தல், கட்டுப்படுத்துதல் மற்றும் நோயாளிகளைக் கையாள்வதில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் கூட்டு முயற்சியுடன் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவை மிக உயர்நிலையில் மறுஆய்வு செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.

செயல் திட்டத்தை நன்கு அமல் செய்த காரணத்தால் 23 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 47 மாவட்டங்களில் நல்ல பயன்கள் கிடைத்துள்ளன. கர்நாடகாவில் குடகு மாவட்டத்திலும், புதுவையில் மாகே பகுதியிலும் கடந்த 28 நாட்களில், புதிதாக யாருக்கும் நோய்த் தொற்று பதிவாகவில்லை. 12 மாநிலங்களில் 22 புதிய மாவட்டங்களில் கடந்த 14 நாட்களில், புதிதாக யாருக்கும் நோய்த் தொற்று பதிவாகவில்லை. அவை:

 

  • பிகாரில் லக்கிசரய், கோபால்கஞ்ச், பாகல்பூர்
  • ராஜஸ்தானில் தோல்பூர், உதய்ப்பூர்
  • ஜம்மு காஷ்மீரில் புல்வாமா
  • மணிப்பூரில் தௌபால்
  • கர்நாடகாவில் சித்ரதுர்கா
  • பஞ்சாப்பில் ஹோசியர்பூர்
  • ஹரியானாவில் ரோட்டக், சர்க்கி தாத்ரி
  • அருணாச்சலப் பிரதேசத்தில் லோகித்
  • ஒடிசாவில் பார்டாக், பூரி
  • அசாமில் கரீம்கஞ்ச், கோலாக்ட்டா, காம்ரூப் ஊரகம், நல்பாரி, தெற்கு சல்மாரா
  • மேற்கு வங்கத்தில் ஜல்பாய்குரி, கலிம்போங்க்
  • ஆந்திரப் பிரதேசத்தில் விசாகப்பட்டினம்

 

இப்போதுள்ள நிலையில் கோவிட்-19 பாதித்தவர்களில் உயிரிழப்பு 3.3 சதவீதமாக உள்ளது. இறந்தவர்கள் பட்டியலை மேலும் ஆய்வு செய்ததில் கிடைத்த தகவல்கள்:

 

  • 14.4 சதவீதம் பேர் 0 - 45 வயதுப் பிரிவில் உள்ளவர்கள்
  • 10.3 சதவீதம் பேர் 45- 60 வயதுப் பிரிவில் உள்ளவர்கள்
  • 33.1 சதவீதம் பேர் 60 - 75 வயதுப் பிரிவில் உள்ளவர்கள்
  • 42.2 சதவீதம் பேர் 75 மற்றும் அதற்கும் அதிக வயதானவர்கள்

 

அதாவது 75.3 சதவீதம் பேர் 60 வயதுக்கு மேற்பட்ட பிரிவினராக உள்ளனர். 83 சதவீதம் பேருக்கு நாள்பட்ட வேறு நோய்களின் பாதிப்புகளும் இருந்துள்ளதும் இதன் மூலம் தெரிய வந்துள்ளது. முதியவர்களும், நாள்பட்ட நோய் பாதிப்பு உள்ளவர்களும் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்ட தகவலை முன்னிலைப்படுத்துவதாக இவை உள்ளன.

உலக அளவிலான மருத்துவப் பரிசோதனை நடைமுறைகளை ஆய்வு செய்த பிறகு, ஐ.சி.எம்.ஆரின் தேசிய பணிக்குழு, அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டுதல்களை அனுப்பியுள்ளது. விரிவான வழிகாட்டுதல்களை கீழே உள்ள இணையத்தொடர்பு சுட்டியில் காணலாம்:

https://www.mohfw.gov.in/pdf/ProtocolRapidAntibodytest.pdf

 

கூடுதலாக, துரித பரிசோதனை எதையும் தொடங்குவதற்கு முன்பு கோவிட்-19 மருத்துவப் பரிசோதனை தொடர்பான தகவல்களை ஐ.சி.எம்.ஆர். இணையதளத்தில் (covid19cc.nic.in/ICMR)  பதிவு செய்ய வேண்டும்.

நாடு முழுக்க 14,378 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 1992 பேர் அதாவது 13.82 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர் / குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.


(Release ID: 1616024) Visitor Counter : 236