நிதி அமைச்சகம்
பிரதமரின் ஜன் தன் திட்டம் 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது
Posted On:
28 AUG 2025 9:33AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியால் ஆகஸ்ட் 28, 2014 அன்று தொடங்கப்பட்ட பிரதமரின் ஜன் தன் திட்டம், 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதன் மூலம், இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிகப்பெரிய நிதி உள்ளடக்க முயற்சியாக, இத்திட்டம் கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு வங்கி சேவைக்கான அணுகல் வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
இது குறித்து, மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள செய்தியில், "இத்திட்டம், நிதி உள்ளடக்கம் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு ஒரு முக்கிய உந்துசக்தியாகும். வங்கிக் கணக்குகளுக்கான உலகளாவிய அணுகல், ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்கள் முறையான பொருளாதாரத்தில் முழுமையாக பங்கேற்கவும் அதன் வாய்ப்புகளிலிருந்து பயனடையவும் உதவுகிறது" என்று கூறியுள்ளார்.
"நேரடி பலன் பரிமாற்றத்தை (டிபிடி) பயன்படுத்தி பல்வேறு திட்டங்களின் கீழ் நன்மைகளை வழங்குவதற்கும், கடன் வசதிகள், சமூகப் பாதுகாப்பு, சேமிப்பு மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கும் பிரதமரின் ஜன் தன் திட்டம் முக்கிய வழிகளில் ஒன்றாகும்" என்று மத்திய நிதி அமைச்சர் கூறிவுள்ளார்.
"கடந்த 11 ஆண்டுகளில், 56 கோடிக்கும் மேற்பட்ட ஜன் தன் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன, இதன் மூலம் மொத்த வைப்புத்தொகை ரூ. 2.68 லட்சம் கோடி திரட்டப்பட்டுள்ளது. 38 கோடிக்கும் மேற்பட்ட இலவச ரூபே கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன, இது டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது," என்று திருமதி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
"பிரதமரின் ஜன் தன் திட்டத்தின் கீழ், 67% கணக்குகள் கிராமப்புறம் அல்லது சிறு நகர்ப்புறங்களில் திறக்கப்பட்டுள்ளன, மேலும் 56% கணக்குகள் பெண்களின் பெயர்களில் திறக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது, இது நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் பின்தங்கிய தனிநபர்கள் முறையான நிதித் துறைக்குள் எவ்வாறு கொண்டு வரப்பட்டுள்ளனர் என்பதைக் குறிக்கிறது" என்று மத்திய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு பங்கஜ் சவுத்ரி தமது செய்தியில், "பிரதமரின் ஜன் தன் திட்டம் நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் மிகவும் வெற்றிகரமான நிதி உள்ளடக்க முயற்சிகளில் ஒன்றாகும். இத்திட்டம் கண்ணியம், அதிகாரமளித்தல் மற்றும் வாய்ப்பு பற்றியது" என்று கூறியுள்ளார்.
"பிரதமர் தமது 2021 சுதந்திர தின உரையில், ஒவ்வொரு வீட்டிற்கும் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும் என்றும், வயது முதிர்ந்த ஒவ்வொருவருக்கும் காப்பீடு மற்றும் ஓய்வூதிய பாதுகாப்பு இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு இயக்கங்கள் மூலம் இந்தத் திசையில் தொடர்ச்சியான முயற்சிகள் மூலம், வங்கிக் கணக்குகளில் கிட்டத்தட்ட செறிவூட்டலை அடைந்துள்ளோம், மேலும் நாடு முழுவதும் காப்பீடு மற்றும் ஓய்வூதிய காப்பீட்டில் தொடர்ச்சியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது," என்று திரு. பங்கஜ் சவுத்ரி கூறியுள்ளார்.
நிதி உள்ளடக்கத்தை விரிவுபடுத்துதல்:
நிதி அமைச்சகம் வலுவான நிதி உள்ளடக்க உத்திகள் மூலம் ஒடுக்கப்பட்ட மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவுகளை ஆதரிப்பதில் உறுதியாக உள்ளது. வங்கி வசதி இல்லாத ஒவ்வொரு வயது வந்தவருக்கும் அடிப்படை வங்கிக் கணக்கை அணுகுவதை பிரதமரின் ஜன் தன் திட்டம் உறுதி செய்கிறது. இதில் பூஜ்ஜிய இருப்புத் தேவைகள் மற்றும் பராமரிப்பு கட்டணங்கள் இல்லை.
ஒவ்வொரு கணக்கிலும் ரூ 2 லட்சம் விபத்து காப்பீட்டுத் தொகையை வழங்கும் வசதி உள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் நிதிப் பாதுகாப்பை ஊக்குவிக்கும் இலவச ரூபே டெபிட் கார்டு உள்ளது. கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ 10,000 வரை ஓவர் டிராஃப்ட் வசதிக்கும் தகுதியுடையவர்கள்.
பிரதமரின் ஜன் தன் திட்டக் கணக்குகளின் அம்சங்கள்:
* முழுமையாக கேஒய்சி இணக்கம். பிரதமரின் ஜன் தன் திட்டக் கணக்குகளில் இருப்பு அல்லது பரிவர்த்தனைகளின் அளவு குறித்து எந்தக் கட்டுப்பாடும் இல்லை.
* வங்கி கிளை மற்றும் ஏடிஎம்/சிடிஎம்-களில் பணத்தை டெபாசிட் செய்யலாம்.
* எந்தவொரு மின்னணு வழியிலும் அல்லது மத்திய/மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் துறைகளால் டெபாசிட்/காசோலைகளை சேகரித்தல் மூலம் பணத்தைப் பெறுதல்/வரவு செய்தல்.
* ஒரு மாதத்தில் செய்யக்கூடிய வைப்புத்தொகைகளின் எண்ணிக்கை மற்றும் மதிப்புக்கு வரம்பு இல்லை.
* ஏடிஎம்-களில் ஒரு மாதத்தில் குறைந்தபட்சம் நான்கு முறை இலவசமாக பணம் எடுக்கலாம். அடுத்தடுத்த முறை பணம் எடுக்கும்போது வங்கிகள் கட்டணம் வசூலிக்கலாம்.
* ரூ. 2 லட்சம் உள்ளமைக்கப்பட்ட விபத்து காப்பீட்டுத் திட்டத்துடன் இலவச ரூபே டெபிட் கார்டு.
கடந்த 11 ஆண்டுகளில், பிரதமரின் ஜன் தன் திட்டம், பெரும் மாற்றத்தை ஊக்குவித்து, ஏழை மற்றும் மிகவும் தொலைதூர மக்களுக்கு கூட சேவை செய்ய வங்கி சூழல் அமைப்பை வலுப்படுத்தியுள்ளது. அரசு மானியங்கள் மற்றும் பயன்களை வெளிப்படையான, திறமையான மற்றும் ஊழல் இல்லாத முறையில் வழங்க உதவுகிறது.
பிரதமரின் ஆயுள் காப்பீடு, விபத்துக் காப்பீடு போன்ற திட்டங்கள் மூலம், அமைப்புசாரா துறையில் உள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஆயுள் மற்றும் விபத்து காப்பீட்டை விரிவுபடுத்துவதில் இந்தத் திட்டக் கணக்குகள் முக்கிய பங்கு வகித்துள்ளன.
முக்கிய சாதனைகள்:
ஆகஸ்ட் 13, 2025 நிலவரப்படி, பிரதமரின் ஜன் தன் திட்டக் கணக்குகளின் மொத்த எண்ணிக்கை 56.16 கோடியை எட்டியுள்ளது; 55.7% (31.31 கோடி) ஜன்-தன் கணக்கு வைத்திருப்பவர்கள் பெண்கள் மற்றும் 66.7% (37.48 கோடி) ஜன் தன் கணக்குகள் கிராமப்புற மற்றும் சிறு நகர்ப்புற பகுதிகளில் உள்ளன.
பிரதமரின் ஜன் தன் திட்டக் கணக்குகளின் கீழ் மொத்த வைப்புத்தொகை ரூ 2,67,756 கோடியை எட்டியுள்ளது. கணக்குகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ள நிலையில், மொத்த வைப்புத்தொகை தோராயமாக 12 மடங்கு அதிகரித்துள்ளது.
13.08.2025 நிலவரப்படி ஒரு கணக்கிற்கு சராசரி வைப்புத்தொகை ரூ.4,768. ஆகஸ்ட் 2015 உடன் ஒப்பிடும்போது ஒரு கணக்கிற்கான சராசரி வைப்புத்தொகை 3.7 மடங்கு அதிகரித்துள்ளது. சராசரி வைப்புத்தொகை அதிகரிப்பு கணக்குகளின் பயன்பாடு அதிகரிப்பதற்கும் கணக்கு வைத்திருப்பவர்களிடையே சேமிப்புப் பழக்கத்தை வளர்ப்பதற்கும் மற்றொரு அறிகுறியாகும்.
பிரதமரின் ஜன் தன் திட்டத்தின் கீழ், கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 38.68 கோடி ரூபே அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன: ரூபே அட்டைகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பயன்பாடு காலப்போக்கில் அதிகரித்துள்ளது.
முன்னர் முறையான நிதியிலிருந்து விலக்கப்பட்டவர்களுக்கு இத்திட்டம் சேமிப்பு மற்றும் கடன் அணுகலை செயல்படுத்தியுள்ளது. புலப்படும் சேமிப்பு முறைகளுடன், கணக்கு வைத்திருப்பவர்கள் முத்ரா கடன்கள் உள்ளிட்ட கடன்களையும் பெறுகிறார்கள், இதன் மூலம் தனிநபர்கள் தங்கள் வருமானத்தை வளர்க்கவும் நிதி மீள்தன்மையை உருவாக்கவும் அதிகாரம் பெறுகின்றனர்.
பிரதமரின் ஜன் தன் திட்டம் அதன் 12-வது ஆண்டில் நுழையும் போது, இது உள்ளடக்கிய வளர்ச்சி, டிஜிட்டல் பரிமாற்றம் மற்றும் பொருளாதார அதிகாரமளித்தல் ஆகியவற்றின் கலங்கரை விளக்கமாகத் தொடர்கிறது. நிதி சுதந்திரத்தை நோக்கிய பயணத்தில் எந்தக் குடிமகனும் பின்தங்கியிருக்கக்கூடாது என்பதை உறுதி செய்வதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அதன் நீடித்த வெற்றி பிரதிபலிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2161401
***
AD/PKV/KR
(Release ID: 2161472)
Visitor Counter : 15
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Nepali
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Telugu
,
Kannada
,
Malayalam