பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியா - இலங்கை கூட்டறிக்கை: எதிர்காலத்திற்கான கூட்டு ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு

Posted On: 16 DEC 2024 3:26PM by PIB Chennai

1. பிரதமர் திரு நரேந்திர மோடியும் இலங்கை அதிபர் திரு அனுர குமார திசநாயகவும் இன்று (2024 டிசம்பர் 16) புதுதில்லியில் சந்தித்தபோது, விரிவான, பயனுள்ள விவாதங்களை நடத்தினர்.

2. ஆழமான வேரூன்றிய கலாச்சார, நாகரிக உறவுகள், புவியியல் ரீதியான அருகாமை, மக்களுக்கு இடையிலான உறவு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியா-இலங்கை இடையேயான இருதரப்பு உறவுகள் அமைந்துள்ளன என்பதை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

3. 2022-ம் ஆண்டில் ஏற்பட்ட முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியின் போதும் அதன் பின்னரும் இலங்கை மக்களுக்கு இந்தியா வழங்கிய அசைக்க முடியாத ஆதரவுக்கு அந்நாட்டு அதிபர் திரு திசாநாயக தனது நன்றியைத் தெரிவித்தார்.  இந்தியாவின் 'அண்டை நாடுகளுக்கு முதலிடம்' என்ற கொள்கை, 'சாகர்' கடல்சார் தொலைநோக்குக் கொள்கை ஆகியவற்றில் இலங்கை சிறப்பான இடத்தை வகிப்பதாகவும், இதில் இந்தியா முழு உறுதியுடன் ஆதரவு வழங்கும் என்றும் இலங்கை அதிபர் திரு திசாநாயகவிடம் பிரதமர் திரு நரேந்திர மோடி உறுதியளித்தார்.

4. கடந்த சில ஆண்டுகளாக இருதரப்பு உறவுகள் ஆழமடைந்துள்ளதாகவும், இலங்கையின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை இந்தியா வழங்கியுள்ளதாகவும் இரு தலைவர்களும் தெரிவித்தனர். இரு நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக பரஸ்பரம் பயனளிக்கும் விரிவான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை அவர்கள் வெளிப்படுத்தினர்.

அரசியல் பரிமாற்றங்கள்:

5. கடந்த பத்து ண்டுகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் முயற்சிகள் அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். தலைமை மட்டத்திலும் அமைச்சர்கள் மட்டங்களிலும் உரையாடல்களை மேலும் தீவிரப்படுத்த ஒப்புக்கொண்டனர்.

6. ஜனநாயக மாண்புகளை ஊக்குவிப்பதற்கும், சிறந்த நடைமுறைகள் குறித்த நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்வதற்கும் வழக்கமான பரிமாற்றங்களின் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் சுட்டிக் காட்டினர்.

வளர்ச்சி ஒத்துழைப்பு:

7) இலங்கையின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ள இந்தியாவின் உதவி, நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.  இந்தியா தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவை இலங்கை அதிபர் பாராட்டினார்.

8. மக்கள் சார்ந்த வளர்ச்சிக்கான ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்த நெருக்கமாக பணியாற்ற தங்களின் உறுதிப்பாட்டை மீண்டும் இரு தலைவர்களும் உறுதி செய்ததுடன் பின்வரும் நடைமுறைகளை மேற்கொள்ள ஒப்புக்கொண்டனர்:

i. இந்திய உதவியுடனான வீடுகள் கட்டும் திட்டம், சமூக வளர்ச்சித் திட்டங்கள் போன்ற தற்போதைய திட்டங்களை சரியான நேரத்தில் முடிக்க ஒன்றிணைந்து பணியாற்றுதல்;

ii. இலங்கையில் உள்ள மத வழிபாட்டுத் தலங்களில் சூரிய மின்மயமாக்கல் ஆகியவற்றுக்கான திட்டங்களை உரிய நேரத்தில் செயல்படுத்துவதற்கு முழு ஆதரவை வழங்குதல்;

iii. இலங்கை அரசின் தேவைகளுக்கு ஏற்ப வளர்ச்சி ஒத்துழைப்புக்கான புதிய திட்டங்களை அடையாளம் காணுதல்.

பயிற்சி, திறன் மேம்பாடு:

9.  இலங்கையில் பல்வேறு துறைகளில் தனித்துவமான பயிற்சி:

i. இந்தியாவின் நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் மூலம் ஐந்து வருட காலப்பகுதியில் 1500 இலங்கை சிவில் ஊழியர்களுக்கு பயிற்சியை அளிக்க ஒப்புக் கொள்ளப்பட்டது.

ii. இலங்கையின் தேவைகளுக்கு ஏற்ப சிவில், பாதுகாப்பு, சட்ட துறைகளில் இலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி திட்டங்களை வழங்குதல்.

கடன் மறுசீரமைப்பு:

10. அவசரகால நிதி, 4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அந்நிய செலாவணி ஆதரவு உட்பட பல்முனை உதவிகள் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதில் இந்தியாவின் ஆதரவுக்காக இலங்கை அதிபர் திசநாயக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

11. கடன் அடிப்படையிலான மாதிரிகளிலிருந்து பல்வேறு துறைகளில் முதலீடு சார்ந்த ஒத்துழைப்புகளை நோக்கிய உத்திசார் மாற்றம், இலங்கையின் பொருளாதார மீட்சி, வளர்ச்சி, செழிப்பு ஆகியவற்றுக்கான நிலையான பாதையை உறுதி செய்யும் என்று இரு தலைவர்களும் தெரிவித்தனர்.

இணைப்பு:

12) அதிக போக்குவரத்து இணைப்பின் முக்கியத்துவத்தை தலைவர்கள் சுட்டிக் காட்டினர்.  இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முடிவுகள்:

i. நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையே பயணிகள் படகு சேவை மீண்டும் தொடங்கப்பட்டதற்கு திருப்தி தெரிவித்த அவர்கள், ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே பயணிகள் படகு சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து பணியாற்ற ஒப்புக் கொண்டனர்.

ii. மத்திய அரசின் மானிய உதவியுடன் இலங்கையிலுள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை சீரமைக்க கூட்டாக பணியாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்தல்.

எரிசக்தி மேம்பாடு:

13. எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யவும், மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் நம்பகமான, மலிவான எரிசக்தி வளங்களின் அவசியத்தை வலியுறுத்திய இரு தலைவர்களும், எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினர். அது தொடர்பான முடிவுகள்:

i. இலங்கையின் தேவைகளுக்கேற்ப சம்பூரில் சூரிய சக்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் அதன் திறனை மேலும் அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுத்தல்.

ii.  பல்வேறு நிலைகளில் உள்ள பல முன்மொழிவுகளை தொடர்ந்து பரிசீலித்தல்:

(அ) இந்தியாவிலிருந்து இலங்கைக்கு திரவ இயற்கை எரிவாயுவை விநியோகித்தல்.

(ஆ) இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே உயர் திறன் கொண்ட மின் தொகுப்பு இணைப்பை நிறுவுதல்.

(இ) மலிவான, நம்பகமான எரிசக்தியை வழங்குவதற்காக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பல்பொருள் குழாய் திட்டத்தை செயல்படுத்த இந்தியா, இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான ஒத்துழைப்பு.

 

(ஈ) பாக் ஜலசந்தியில் உள்ள கடல் காற்றாலை மின் திறனை கூட்டாக மேம்படுத்துதல். அதே நேரத்தில் விலங்கினங்கள், தாவரங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்தல்.

14. திரிகோணமலை பகுதியை கைத்தொழில் மையமாக வளர்ச்சி அடையச் செய்வதற்கு ஆதரவளிக்க இரு தலைவர்களும் தீர்மானித்தனர்.

மக்களை மையமாகக் கொண்ட டிஜிட்டல்மயமாக்கல்:

15. மக்களை மையமாகக் கொண்ட டிஜிட்டல் மயமாக்கலில் இந்தியாவின் வெற்றிகரமான அனுபவத்தைப் இலங்கை அதிபர் திரு திசநாயக பாராட்டினார்.  இது தொடர்பான இலங்கையின் முயற்சிகளுக்கு முழுமையாக ஆதரவளிக்க இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முடிவுகள்:

i. இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பை (DPI) முழுமையாக செயல்படுத்துவதற்கான வழிகளில் ஒத்துழைத்தல்.

iii. இலங்கையில் டிஜிலாக்கரை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆதரவு வழங்குதல்.

iv. இரு நாடுகளின் நலனுக்காகவும், இரு நாடுகளின் பணம் செலுத்தும் முறைகள் தொடர்பான ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களுக்கு ஏற்பவும் யுபிஐ டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை விரிவுபடுத்துவதன் மூலம் டிஜிட்டல் நிதி பரிவர்த்தனைகளை ஊக்குவித்தல்.

v. இந்தியாவின் ஆதார் தளம், ஜிஇஎம் தளம்போன்றவற்றின் நன்மைகளை பரிமாறிக் கொண்டு இது தொடர்பாக இலங்கைக்கு ஆதரவு வழங்குதல்.

கல்வி, தொழில்நுட்பம்:

16. இலங்கையில் மனிதவள மேம்பாட்டுக்கு ஆதரவளித்தலில் இரு தலைவர்களும் பின்வருவனவற்றை ஏற்றுக்கொண்டனர்:

I. பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி - மேம்பாட்டில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல்.

ii. இரு நாடுகளிலும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இடையே ஒத்துழைப்பை அதிகரித்தல்.

iii.  இலங்கையில் புத்தொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல்.

வர்த்தக, முதலீட்டு ஒத்துழைப்பு:

17. இந்தியா-இலங்கை இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (ISFTA) இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்தியுள்ளது என்பதை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.  கீழ்க்கண்டவற்றின் மூலம் வர்த்தக ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்:

i. பொருளாதார, தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை மீதான விவாதங்களை தொடர்ந்தும் மேற்கொள்ளல்.

ii. இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தங்களை மேம்படுத்துதல்.

iii. இலங்கையின் ஏற்றுமதி வாய்ப்பை மேம்படுத்துவதற்காக பிரதான துறைகளில் முதலீடுகளை ஊக்குவித்தல்.

18. உத்தேசிக்கப்பட்டுள்ள இருதரப்பு சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடர வேண்டியதன் அவசியம் குறித்து இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

விவசாயம், கால்நடை பராமரிப்பு:

 

19.  இலங்கையில் பால்பண்ணைத் துறையின் வளர்ச்சிக்குத் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் ஒத்துழைப்பை இரு தலைவர்களும் பாராட்டினர்.

20.  இலங்கையின் விவசாயத் துறையின் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளை கண்டறிவதற்காக ஒருங்கிணைந்த பணிக்குழுவொன்றை அமைக்க இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

உத்திசார், பாதுகாப்பு ஒத்துழைப்பு:

21. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பொதுவான சவால்களை எதிர்கொள்ள இணைந்து பணியாற்ற இருதலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

22), கடல்சார்  பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

23. கடல்சார் கண்காணிப்புக்காக டோர்னியர் விமானம் ஒன்றை வழங்குவதன் மூலம் இந்தியா வழங்கிய ஆதரவுக்கு இலங்கை அதிபர் திரு திசநாயக நன்றி தெரிவித்தார்.

24.  இலங்கையின் கடல்சார் திறன்களை மேம்படுத்துவதற்குத் தேவையான உதவிகளை வழங்க இந்தியா ஆதரவு வழங்கும் என உறுதி அளிக்கப்பட்டது.

25. பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல், பணமோசடி போன்ற பல்வேறு பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு, பயிற்சி, திறன் வளர்ப்பு, புலனாய்வு, தகவல் பகிர்வு ஆகியவற்றில் தற்போது நடைபெற்று வரும் கூட்டு முயற்சிகளை மேலும் வலுப்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

கலாசார - சுற்றுலா வளர்ச்சி:

26) கலாச்சார ஒற்றுமை, புவியியல் ரீதியான நெருக்கம், நாகரீக உறவுகளை சுட்டிக் காட்டிய இரு தலைவர்களும் பின்வருவனவற்றை மேற்கொள்ள உறுதியளித்தனர்:

i. சென்னைக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவை வெற்றிகரமாக மீண்டும் தொடங்கியுள்ள அதே வேளையில், இந்தியா இலங்கை இடையே பல்வேறு இடங்களுக்கு விமான இணைப்பை மேம்படுத்துதல்.

ii. இலங்கையில் விமான நிலையங்களை வளர்ச்சி அடையச் செய்வது தொடர்பாக தொடர்ச்சியான கலந்துரையாடல்.

iii. இலங்கையில் சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்திய முதலீடுகளை ஊக்குவித்தல்.

iv. சமய மற்றும் பண்பாட்டுச் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்துதல்.

v. இரு நாடுகளுகளின் கல்வி நிறுவனங்களுக்கிடையே கல்வித் தொடர்புகளை மேம்படுத்துதல்.

மீன்பிடி பிரச்சினைகள்

27. இரு தரப்பிலும் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், வாழ்வாதார கவலைகளை கருத்தில் கொண்டு, அவற்றை மனிதாபிமான முறையில் தொடர்ந்து தீர்க்க வேண்டியதன் அவசியத்தை தலைவர்கள் ஒப்புக் கொண்டனர்.  இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சிறப்பு உறவைக் கருத்தில் கொண்டு, இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண தங்கள் ஈடுபாட்டைத் தொடருமாறு அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

28. பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தை மேம்படுத்துதல், காரைநகர் படகுத்துறையை புனரமைத்தல், இந்திய உதவியின் மூலம் நீர்வாழ் உயிரின வளர்ப்பில் ஒத்துழைப்பு உள்ளிட்ட இலங்கையின் மீன்பிடித் துறையின் நிலையான வளர்ச்சிக்காக இந்தியா முன்னெடுத்துள்ள முயற்சிகளுக்கு இலங்கை அதிபர் திரு திசநாயக நன்றி தெரிவித்தார்.

பிராந்திய - பலதரப்பு ஒத்துழைப்பு:

 

29. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பகிரப்பட்ட கடல்சார் பாதுகாப்பு நலன்களை அங்கீகரித்த இரு தலைவர்களும், இருதரப்பு, பிராந்திய கட்டமைப்புகள் மூலம் பிராந்திய கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதை கூட்டாக முன்னெடுத்துச் செல்ல ஒப்புக்கொண்டனர்.

30. இந்தியப் பெருங்கடல் சங்கத்தின் உறுப்பு நாடுகள் இந்த மண்டலத்தில் உள்ள அனைவரின் வளர்ச்சிக்கான செயல் திட்டத்தை வகுக்க வேண்டியதன் அவசியத்தை இரு தலைவர்களும் சுட்டிக் காட்டினர்.

31. பிம்ஸ்டெக் அமைப்பின் கீழ் பிராந்திய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், விரிவுபடுத்தவும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

32. பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினராவதற்கான இலங்கையின் விண்ணப்பத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆதரவை இலங்கை அதிபர் திரு திசாநாயக்க கோரினார்.

33. 2028-2029-ம் ஆண்டிற்கான ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தரமற்ற உறுப்பினருக்கான இந்தியாவின் வேட்புமனுவுக்கு இலங்கை அளித்த ஆதரவை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார்.

முடிவு:

34. ஒப்புக்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை திறம்பட, சரியான நேரத்தில் அமல்படுத்துவது இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்தும் என்று தலைவர்கள் குறிப்பிட்டனர். அதன்படி, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தலைவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதுடன், தேவைப்படும் நேரங்களில் வழிகாட்டுதல்களை வழங்கவும் ஒப்புக்கொண்டனர். தமக்கு ஏற்ற சூழலில் வசதிக்கேற்ப விரைவில் இலங்கைக்குப் பயணம் செய்யுமாறு பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு இலங்கை அதிபர் திரு திசநாயக அழைப்பு விடுத்தார்.

***

(Release ID: 2084793)

PLM/AG/DL


(Release ID: 2084918) Visitor Counter : 57