வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாஸ்கோவில் நடைபெற்ற விடிபி ரஷ்ய அழைப்பின் முதலீட்டு மன்றத்தில் பிரதமர் மோடியின் " முதலில் இந்தியா" கொள்கை மற்றும் "இந்தியாவில் தயாரிப்போம்" முன்முயற்சிக்கு ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு

இந்தியாவில் உற்பத்தி செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென்ற ரஷ்யாவின் விருப்பத்தை அதிபர் புதின் எடுத்துரைத்தார்

சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் வளர்ச்சிக்கான ரஷ்யா-இந்தியா ஒத்துழைப்புக்கு அதிபர் புதின் வலியுறுத்தல்

உலகின் தெற்குப் பொருளாதாரங்களுக்கு ஆதரவளிக்க பிரிக்ஸ் முதலீட்டு மேடை முக்கியம் என்று அதிபர் புதின் கருத்து

Posted On: 05 DEC 2024 12:48PM by PIB Chennai

15-வது விடிபி ரஷ்யா முதலீட்டு மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் "இந்தியா முதலில்" கொள்கை மற்றும் "இந்தியாவில் தயாரிப்போம்"  முன்முயற்சி ஆகியவற்றை அதிபர் விளாடிமிர் புதின் பாராட்டினார். வளர்ச்சிக்கான நிலையான சூழலை உருவாக்க இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளை பாராட்டிய அதிபர் புதின், இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்தக் கொள்கைகள் எவ்வாறு பங்களித்துள்ளன என்பதையும் சுட்டிக்காட்டினார்.

உற்பத்தியை ஊக்குவிப்பது, அந்நிய முதலீட்டை ஈர்ப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட "இந்தியாவில் தயாரிப்போம்" முன்முயற்சி, உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று அவர் கூறினார். அதிபர் புதினின் கருத்து, பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது.  சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (எஸ்.எம்.இ) ஏற்ற "நிலையான சூழல்களை" உருவாக்குவதில் இந்திய அரசையும் அதன் முயற்சிகளையும் அவர் பாராட்டினார், குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுத்துள்ள பொருளாதார முன்முயற்சிகளை எடுத்துரைத்து, "இந்தியாவில் தயாரிப்போம்"  திட்டம் பற்றி சிறப்பாக பாராட்டினார்.

ரஷ்யாவின் இறக்குமதி மாற்று திட்டத்திற்கும், இந்தியாவின் "இந்தியாவில் தயாரிப்போம்" முன்முயற்சிக்கும் இடையிலான ஒற்றுமைகளை அதிபர் புதின் விளக்கினார். இந்தியாவில் உற்பத்தி செயல்பாடுகளை நிறுவ வேண்டும் என்ற ரஷ்யாவின் விருப்பத்தை  அவர் வெளிப்படுத்தினார். இந்தியாவில் செய்யப்படும் முதலீடுகள் லாபகரமானவை. இந்தியாவின் தலைமை தனது தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் கவனம் செலுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் மோடி "இந்தியாவில் தயாரிப்போம்" என்ற திட்டத்தை வைத்துள்ளார். இந்தியாவில் எங்கள் உற்பத்தி செயல்பாடுகளை மேற்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். பிரதமரின் தலைமையின் கீழ், இந்தியாவை முதன்மைப்படுத்தும் கொள்கையால் உந்தப்பட்டு நிலையான சூழல்களை இந்திய அரசு உருவாக்கி வருகிறது. இந்தியாவில் முதலீடு செய்வது லாபகரமானது என்று நாங்கள் நம்புகிறோம்" என்று ரஷ்ய அதிபர் கூறினார். ரஷ்ய நிறுவனமான ரோஸ்நெஃப்ட் சமீபத்தில் நாட்டில் 20 பில்லியன் டாலர் முதலீடு செயதுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரிக்ஸ் அமைப்பின் பரிணாம வளர்ச்சியின் பின்னணியில் ரஷ்யாவின் இறக்குமதி மாற்று திட்டத்தின் முக்கியத்துவத்தையும் அதிபர் புதின் எடுத்துரைத்தார், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் பிரிக்ஸ் + நாடுகளில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான சுமூகமான வணிகப் பரிவர்த்தனைகளை எளிதாக்க விரைவான தகராறு தீர்வு வழிமுறையின் அவசியம் ஆகியவற்றை அவர் விளக்கினார்.

நுகர்வோர் பொருட்கள், தகவல் தொழில்நுட்பம், உயர் தொழில்நுட்பம் மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் உள்ளூர் ரஷ்ய உற்பத்தியாளர்களின் வெற்றியைக் குறிப்பிட்டு, சந்தையில் இருந்து வெளியேறிய மேற்கத்திய வணிக முத்திரைப் பொருட்களுக்குப் பதிலாக புதிய ரஷ்ய பொருட்களின் எழுச்சியை அவர் சுட்டிக்காட்டினார்.

"எங்களைப் பொறுத்தவரை, எங்கள் இறக்குமதி மாற்று திட்டத்தின் ஒரு பகுதியாக இது மிகவும் முக்கியமானது. புதிய ரஷ்ய வணிக முத்திரைப் பொருட்களின் தோற்றம் தானாக முன்வந்து எங்கள் சந்தையை விட்டு வெளியேறிய மேற்கத்திய நிறுவனங்களை மாற்ற உதவுகிறது. எங்கள் உள்ளூர் உற்பத்தியாளர்கள் நுகர்வோர் பொருட்களில் மட்டுமல்ல, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயர் தொழில்நுட்ப தொழில்களிலும் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளனர், "என்று அவர் கூறினார்.

சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்க பிரிக்ஸ் நாடுகளிடையே அதிக ஒத்துழைப்பு தேவை என்று அதிபர் புதின் வலியுறுத்தியதுடன், அடுத்த ஆண்டு பிரேசிலில் நடைபெறவுள்ள உச்சிமாநாட்டில் ஒத்துழைப்புக்கான முக்கிய பகுதிகளை அடையாளம் காணுமாறு உறுப்பு நாடுகளை அவர் கேட்டுக் கொண்டார். பிரிக்ஸ் அமைப்புடன் ரஷ்யா உருவாக்கி வரும் முதலீட்டு தளம் பற்றி குறிப்பிட்ட அதிபர் புதின், அனைத்து கூட்டாளி நாடுகளுக்கும் பயனளிக்கும் திறனை இது கொண்டுள்ளது என்றும், நமது பொருளாதாரங்களை ஆதரிப்பதற்கும் உலகின் தெற்கு மற்றும் கிழக்கு நாடுகளுக்கு நிதி ஆதாரங்களை வழங்குவதற்கும் இது ஒரு முக்கிய கருவியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கூறினார்.

"ஒத்துழைப்பின் முக்கிய பகுதிகளில் தற்போதைய நிலைமையை மதிப்பீடு செய்யுமாறு எனது பிரிக்ஸ் சக நாடுகளைக் கேட்டுக்கொள்கிறேன், அடுத்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பை வழிநடத்தும் எங்கள் பிரேசிலிய சகாக்களின் கவனத்திற்கு இதை நிச்சயமாக கொண்டு வருவோம்" என்று அவர் மேலும் கூறினார்.

விவரங்களுக்குபார்க்கவும் http://en.kremlin.ru/events/president/news/75751

***

(Release ID: 2080978)
TS/PKV/RR


(Release ID: 2081033) Visitor Counter : 35