உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா புதுதில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார், இந்தச் சட்டங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நீதி வழங்கக் கூடியவை என்று தெரிவித்தார்

Posted On: 01 JUL 2024 7:32PM by PIB Chennai

இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்கள் தண்டனையை மையப்படுத்தாமல், நீதியை மையமாகக் கொண்டவை என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து நீதி வழங்கக்கூடியவை  என்றும், மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா கூறியுள்ளார்.

புதுதில்லியில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய திரு அமித் ஷா, புதிய சட்டங்களில், தண்டனைக்குப் பதிலாக நீதிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், தாமதத்திற்குப் பதிலாக விரைவான நீதி வழங்கப்படும் என்றும், பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும் அவர் கூறினார். புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து பல்வேறு தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றன, அவை இந்தச் சட்டங்கள் குறித்து பொதுமக்களின் மனதில் குழப்பத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்றார். புதிய சட்டங்களின் ஒவ்வொரு அம்சமும் நான்கு ஆண்டுகளாக பல்வேறு தரப்பினருடன் விரிவாக விவாதிக்கப்பட்டது என்றும், சுதந்திர இந்தியாவில் எந்தச் சட்டமும் இவ்வளவு விரிவாக விவாதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

 

சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பு முற்றிலும் உள்நாடு சார்ந்த்தாக மாறி வருவதாகவும், இந்த மூன்று புதிய சட்டங்களும் இன்று முதல் நாட்டின் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றும் உள்துறை அமைச்சர் கூறினார். இந்தச் சட்டங்கள் தண்டனைக்கு பதிலாக நீதி, விரைவான விசாரணை, தாமதத்திற்கு பதிலாக விரைவான நீதி என்று வரையறுக்கப்பட்டுள்ளதாக திரு அமித் ஷா கூறினார். இதனுடன், முந்தைய சட்டங்கள் காவல்துறையின் உரிமைகளை மட்டுமே பாதுகாத்தன. ஆனால் இந்தப் புதிய சட்டங்கள் இப்போது பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புகார்தாரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளைக் கொண்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

மூன்று புதிய சட்டங்கள் நமது நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் நீதி அமைப்பிலும் இந்திய உணர்வை பிரதிபலிப்பதாக திரு அமித் ஷா கூறினார். இந்தச் சட்டங்களில் நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் பல அம்சங்கள் உள்ளன என்று அவர் கூறினார். இந்தச் சட்டங்களில், ஆங்கிலேயர் காலம் தொட்டு மக்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தி வந்த பல சர்ச்சைக்குரிய ஷரத்துகள் நீக்கப்பட்டு, இன்றைக்கு பொருத்தமான புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

இந்தச் சட்டங்களில் பிரிவுகள், அத்தியாயங்களின் முன்னுரிமை இந்திய அரசியலமைப்பின் உணர்வுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு முதல் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த 35 பிரிவுகள் மற்றும் 13 பிரிவுகளைக் கொண்ட புதிய அத்தியாயத்தை சேர்ப்பதன் மூலம், புதிய சட்டங்கள் மிகவும் உணர்திறன் வாய்ந்ததாக மாற்றப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். இதேபோல் கும்பல் கொலை குற்றத்திற்கு முந்தைய சட்டங்களில் எந்த ஏற்பாடும் இல்லை என்று அவர் கூறினார். ஆனால் இந்தப் புதிய சட்டங்களில், முதல் முறையாக, கும்பல் கொலை வரையறுக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு கடுமையான தண்டனை வழங்க வகைசெய்யப்பட்டுள்ளது. புதிய சட்டங்களில், ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட தேசத்துரோக சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய சட்டத்தில் தேச விரோத நடவடிக்கைகளுக்காக ஒரு புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அதன் கீழ் இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை சேதப்படுத்துபவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வகை உள்ளது என்று அவர் கூறினார்.

மூன்று புதிய சட்டங்கள் முழுமையாக அமல்படுத்தப்பட்ட பிறகு மிக நவீன நீதித்துறை அமைப்பை உருவாக்கும் என்று திரு அமித் ஷா கூறினார். மூன்று புதிய சட்டங்களில் தொழில்நுட்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பது மட்டுமின்றி, அடுத்த 50 ஆண்டுகளில் உருவாகும் அனைத்து தொழில்நுட்பங்களையும் இதில் சேர்க்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். நாடு முழுவதும் 99.9 சதவீத காவல் நிலையங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன என்றும், மின்-பதிவு உருவாக்கும் செயல்முறை ஏற்கனவே 2019 இல் தொடங்கப்பட்டதாகவும் அவர் கூறினார். புதிய சட்டங்களில் ஜீரோ-எஃப்.ஐ.ஆர், இ-எஃப்.ஐ.ஆர் மற்றும் குற்றப்பத்திரிகை அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று அவர் கூறினார். புதிய சட்டங்கள் அனைத்து நடைமுறைகளையும் முடிப்பதற்கான காலக்கெடுவையும் நிர்ணயித்துள்ளன. சட்டங்களை முழுமையாக அமல்படுத்துவதன் மூலம் நீதிக்கான முடிவற்ற காத்திருப்பு முடிவடையும் என்று திரு ஷா மேலும் கூறினார். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ததில் இருந்து 3 ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் வரை நீதி கிடைக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

இந்திய சாட்சிய சட்டம் 2023 சான்றுகள் துறையில் தொழில்நுட்பத்தையும் மேம்படுத்தியுள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். மின்னணு ஆதாரங்களின் நம்பகத்தன்மையை அதிகரிக்க பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

 

இந்த சட்டங்கள் மக்களவையில் மொத்தம் 9 மணி நேரம் 29 நிமிடங்கள் விவாதிக்கப்பட்டன. இதில் 34 உறுப்பினர்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை வழங்கினர். அதே நேரத்தில் மாநிலங்களவையில் இது 6 மணி நேரம் 17 நிமிடங்கள் விவாதிக்கப்பட்டது. இதில் 40 உறுப்பினர்கள் பங்கேற்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்ட பின்னர் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக ஒரு பொய் பரப்பப்படுகிறது என்று அவர் கூறினார். வெளியேற்றப்பட்ட உறுப்பினர்கள் சபைக்கு வந்து தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த, விவாதத்தில் பங்கேற்க வாய்ப்பு இருந்த போதிலும், ஒரு உறுப்பினர் கூட அவ்வாறு செய்யவில்லை என்று அவர் கூறினார்.

***

(Release ID: 2030088)

PKV/AG/RR


(Release ID: 2030160) Visitor Counter : 170