நிதி அமைச்சகம்

பொருளாதார மாற்றம், தடையற்ற பல்முனை இணைப்பு மற்றும் சரக்கு போக்குவரத்து மேம்பாட்டிற்காக சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள், வெகுஜன போக்குவரத்து, நீர்வழிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து உள்கட்டமைப்பு ஆகிய ஏழு இயக்க சக்திகளை பிரதமரின் கதிசக்தி தேசிய மாஸ்டர் பிளான் கொண்டிருக்கும்

Posted On: 01 FEB 2022 12:49PM by PIB Chennai

பொருளாதார மேம்பாடு மற்றும் நிலைத்தன்மை மிக்க வளர்ச்சிக்கான மாற்றியமைக்கும் அணுகுமுறையாக பிரதமரின் கதிசக்தி அமைந்துள்ளது. சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள், வெகுஜன போக்குவரத்து, நீர்வழிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து உள்கட்டமைப்பு ஆகிய ஏழு இயக்க சக்திகளால் இந்த அணுகுமுறை இயக்கப்படுகிறது.

மத்திய பட்ஜெட் 2022-23-ஐ நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், இந்த ஏழு இயக்க சக்திகளும் ஒன்றிணைந்து பொருளாதாரத்தை முன்னேற்றும் என்று தெரிவித்தார்.

எரிசக்தி பரிமாற்றம், தகவல் தொடர்பு, ஒட்டு மொத்த நீர் & கழிவுநீர் மேலாண்மை மற்றும் சமூக உள்கட்டமைப்பு ஆகியவற்றின் பங்களிப்புகளால் இந்த இயக்க சக்திகள் ஆதரிக்கப்படுகின்றன. இறுதியாக, தூய்மையான எரிசக்தி மற்றும் அனைவரின் முயற்சியால் (மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் தனியார் துறையின் முயற்சிகள்) இந்த அணுகுமுறை இயக்கப்படுகிறது.

அனைவருக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கு, மிகப்பெரிய வேலை மற்றும் தொழில்முனைதல் வாய்ப்புகளுக்கு இது வழிவகுக்கிறது.

 

பிரதமரின் கதிசக்தி தேசிய மாஸ்டர் பிளான்:

 

பொருளாதார மாற்றம், தடையற்ற பல்முனை இணைப்பு மற்றும் சரக்கு போக்குவரத்து மேம்பாட்டிற்காக ஏழு இயக்க சக்திகளை பிரதமரின் கதிசக்தி தேசிய மாஸ்டர் பிளான் கொண்டிருக்கும் என நிதி அமைச்சர் கூறினார்.

 

கதிசக்தி மாஸ்டர் திட்டத்தின்படி மாநில அரசுகளால் உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்பும் இதில் அடங்கும். திட்டமிடல், புதுமையான வழிகள் மூலம் நிதியளித்தல், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் மற்றும் விரைவாக செயல்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்.

 

தேசிய உள்கட்டமைப்பு வழித்தடத்தில் உள்ள இந்த 7 இயக்க சக்திகள் தொடர்பான திட்டங்கள் பிரதமர் கதிசக்தி கட்டமைப்புடன் இணைக்கப்படும் என்று திருமதி நிர்மலா சீதாராமன் கூறினார்.

 

உலகத் தரம் வாய்ந்த நவீன உள்கட்டமைப்பு, பல்வேறு போக்குவரத்து முறைகள் (மக்கள் மற்றும் பொருட்கள்) மற்றும் திட்டங்களின் அமைவிடம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு பெருந்திட்டத்தின் முக்கிய அம்சமாக ஆகும். உற்பத்தியை அதிகரிக்கவும், பொருளாதார மேம்பாடு மற்றும் வளர்ச்சியை விரைவுபடுத்தவும் இது உதவும் என்றார் அவர்.

 

சாலைப் போக்குவரத்து:

 

மக்கள் மற்றும் சரக்குகளின் விரைவான இயக்கத்தை எளிதாக்கும் வகையில் 2022-23-ம் ஆண்டில் விரைவுச் சாலைகளுக்கான பிரதமர் கதிசக்தி பெருந்திட்டம் வகுக்கப்படும் என்று நிதி அமைச்சர் கூறினார். தேசிய நெடுஞ்சாலைகள் 2022-23-ல் 25,000 கிமீ அளவிற்கு விரிவாக்கம் செய்யப்படும். பொது வளங்களை மேம்படுத்த புதுமையான நிதி முறைகள் மூலம் ரூ.20,000 கோடி திரட்டப்படும் என்றார் அவர்.

 

சரக்கு மற்றும் மக்களின் தடையற்ற பல்முனை போக்குவரத்து:

 

ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்து இடைமுக தளத்தில் (யுலிப்) அனைத்து வகை செயல்பாட்டாளர்களிடையேயான தரவு பரிமாற்றம் கொண்டுவரப்படும் என்று திருமதி நிர்மலா சீதாராமன் கூறினார். பல்வேறு முறைகள் மூலம் சரக்குகளை திறம்பட நகர்த்துவதற்கும், தளவாடச் செலவு மற்றும் நேரத்தைக் குறைப்பதற்கும், சரியான நேரத்தில் இருப்பு மேலாண்மைக்கு உதவுவதற்கும், கடினமான ஆவணங்களை நீக்குவதற்கும் இது உதவும்.

 

பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்காக்கள்:

 

அரசு தனியார் கூட்டு முறையின் மூலம் நான்கு இடங்களில்  பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்காக்களை நிறுவ 2022-23-ல் ஒப்பந்தங்கள் வழங்கப்படும்.

 

ரயில்வே:

 

உள்ளூர் வணிகங்கள் மற்றும் விநியோகச் சங்கிலிகளுக்கு உதவ, ‘ஒரு நிலையம்-ஒரு தயாரிப்பு பிரபலப்படுத்தப்படப்படும்.

 

2,000 கிமீ நீளமுள்ள ரயில்வே நெட்வொர்க் கவச்சின் கீழ் கொண்டு வரப்படும், 400 புதிய தலைமுறை வந்தே பாரத் ரயில்கள் உருவாக்கப்பட்டு இயக்கப்படும்.

 

ரயில்வேயுடன் வெகுஜன நகர்ப்புற போக்குவரத்து இணைப்பு:

புதுமையான முறையில் நிதியளித்தல் மற்றும் விரைவான செயல்படுத்தல் ஆகியவை மெட்ரோ அமைப்புகளை உருவாக்க ஊக்குவிக்கப்படும் என்று நிதி அமைச்சர் கூறினார்.

வெகுஜன நகர்ப்புற போக்குவரத்து மற்றும் ரயில் நிலையங்களுக்கு இடையே பலதரப்பட்ட இணைப்பு முன்னுரிமை முறையில் எளிதாக்கப்படும். சிவில் கட்டமைப்புகள் உட்பட மெட்ரோ அமைப்புகளின் வடிவமைப்பு, இந்திய நிலைமைகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப தரப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

பர்வத்மாலா: தேசிய கயிறுவழி (ரோப்வே) மேம்பாட்டு திட்டம்

தேசிய ரோப்வேஸ் மேம்பாட்டுத் திட்டம் அரசு தனியார் கூட்டு முறையில் செயல்படுத்தப்படும்.

60 கி.மீக்கான 8 ரோப்வே திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் 2022-23-ல் வழங்கப்படும்.

உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான திறன் வளர்த்தல்:

திறன் மேம்பாட்டு ஆணையம், மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள் மற்றும் அவற்றின் உள்கட்டமைப்பு நிறுவனங்களின் தொழில்நுட்ப ஆதரவுடன் அவர்களின் திறன்கள் மேம்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் கூறினார். பிரதமரின் கதிசக்தி உள்கட்டமைப்பு திட்டங்களின் திட்டமிடல், வடிவமைப்பு, நிதி (புதுமையான வழிகள் உட்பட) மற்றும் செயல்படுத்தல் மேலாண்மை ஆகியவற்றில் திறனை இது அதிகரிக்கும்.

2022-23-ல் பொருளாதாரத்தில் ஒட்டுமொத்த முதலீடுகளை ஊக்குவிப்பதில் மாநிலங்களுக்கு உதவ ரூ 1 லட்சம் கோடி வழங்க நிதி அமைச்சர் முன்மொழிந்தார். இந்த ஐம்பது வருட வட்டியில்லா கடன்கள், மாநிலங்களுக்கு அனுமதிக்கப்பட்ட சாதாரண கடன்களை விட கூடுதலாகும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1794123

 

********



(Release ID: 1794278) Visitor Counter : 310