உள்துறை அமைச்சகம்

கொவிட்-19 சிகிச்சை மருத்துவமனைகளில் தீ விபத்து சம்பவங்கள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அறிவுறுத்தல்

Posted On: 05 MAY 2021 1:04PM by PIB Chennai

கொவிட்-19 சிகிச்சை மருத்துவமனைகளில் தீ விபத்து சம்பவங்கள் ஏற்படாமல்  இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அறிவுறுத்தியுள்ளது.  

நாட்டின் சில இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் மின்கசிவு காரணமாக, சமீபத்தில் தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்தன. இதை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கவனத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கொண்டு வந்துள்ளது.  
இது தொடர்பாக அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு, மத்திய உள்துறை செயலாளர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: 

கோடைக்காலத்தில் அதிக வெப்பம், பராமரிப்பு குறைவு, மின்னழுத்தம், இவற்றின் ஏதோ ஒன்றின் காரணமாக சமீபத்தில் தீ விபத்து சம்பவங்கள் ஏற்பட்டு உயிர் சேதமும், பொருட் சேதமும் ஏற்பட்டது. 
இதனால் அனைத்து மருத்துவமனைகளிலும், தீ பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய,  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சுகாதாரத்துறை, மின்துறை, தீயணைப்புத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு, விரிவான செயல் திட்டத்தை தயாரிக்க வேண்டும்.   

நாடு முழுவதும், கொவிட்-19 பிரத்தியேக மருத்துவமனைகளில், கொவிட் நோயாளிகள் அதிகளவில் சிகிச்சையில் உள்ளனர். அங்கு ஐசியு படுக்கைகள், வென்டிலேட்டர்கள் இருப்பதால், 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரத்தை உறுதி செய்வது முக்கியம். ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

நோயாளிகளின் சுகாதார வசதிகளுக்கு தடையாக இருக்கும் சம்பவங்களை   தவிர்க்க,   தேவையான நடவடிக்கைகளை  முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டும்.  
இவ்வாறு மத்திய உள்துறை செயலாளர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

******************(Release ID: 1716207) Visitor Counter : 194