பிரதமர் அலுவலகம்

மருந்து உற்பத்தி தொழில் தலைவர்களுடன் பிரதமர் உரையாடல்

Posted On: 19 APR 2021 8:08PM by PIB Chennai

மருந்து உற்பத்தி தொழில்  தலைவர்களுடன் காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாடினார்.

பெருந்தொற்றுக்கு எதிரான போரில் மருந்து உற்பத்தி துறையின் முக்கிய பங்களிப்பை பிரதமர் பாராட்டினார்.

கடினமான சூழ்நிலைகளிலும் சிறப்பாக பணியாற்றி வரும் மருந்து உற்பத்தி தொழில் துறையை பிரதமர் திரு மோடி பாராட்டினார்.

மருந்து உற்பத்தி தொழில்களின் முயற்சிகளால் தான் உலகின் மருந்தகமாக இந்தியா அடையாளம் காணப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறினார். பெருந்தொற்றின் போது அத்தியாவசிய மருந்துகளை 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அனுப்ப முடிந்தது என்றும்  அவர் கூறினார்.

அனைத்து சவால்களுக்கு மத்தியிலும், 18 சதவீத வளர்ச்சியை ஏற்றுமதிகளில் எட்டி தனது திறமையை இந்திய மருந்து உற்பத்தி துறை வெளிப்படுத்தியுள்ளது என்று பிரதமர் கூறினார்.

வைரசின் இரண்டாம் அலை மற்றும் அதிகரித்து வரும் பாதிப்புகள் குறித்து பேசிய பிரதமர் திரு மோடி, பல்வேறு அத்தியாவசிய மருந்துகளின் உற்பத்தியை அதிகரித்ததற்காக மருந்துகள் துறையை பாராட்டினார். ரெம்டெசிவிர் போன்ற ஊசி மருந்துகளின் விலையை குறைத்ததற்காக நிறுவனங்களை அவர் பாராட்டினார்.

மருந்துகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களின் விநியோகம் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்யுமாறு மருந்துகள் துறையை அவர் கேட்டுக்கொண்டார். இவற்றின் போக்குவரத்துக்கு அரசின் ஆதரவு வழங்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.

கொவிட் மற்றும் எதிர்காலத்தில் உருவாகக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்ளுமாறும் மருந்துகள் துறையை பிரதமர் கேட்டுக்கொண்டார். வைரசை கட்டுப்படுத்த இது உதவும் என்று அவர் கூறினார்.

மருந்துகள் துறையின் ஒத்துழைப்பை கோரிய பிரதமர் திரு மோடி, புதிய மருந்துகள் மற்றும் ஒழுங்குமுறை நடைமுறைகளில் சீர்திருத்தங்களை அரசு செய்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசின் உதவி மற்றும் ஆதரவை மருந்து உற்பத்தி தொழில் தலைவர்கள் பாராட்டினர். மருந்துகள் உற்பத்தி மற்றும் போக்குவரத்திற்கு கடந்த ஒரு வருடத்தில் செய்யப்பட்ட முயற்சிகளை அவர்கள் எடுத்துரைத்தனர். மருந்து உற்பத்தி மையங்களில் உற்பத்தி, போக்குவரத்து மற்றும் இதர சேவைகள் அதிகபட்ச அளவில் நடைபெற்றதாக அவர்கள் தெரிவித்தனர்.

கொவிட் சிகிச்சை நடைமுறையால் சில மருந்துகளுக்கு ஏற்பட்ட முன்னெப்போதும் இல்லாத அளவு தேவைக்கு மத்தியிலும், நாட்டின் ஒட்டுமொத்த மருந்துகள் தேவையை பூர்த்தி செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

மத்திய சுகாதார அமைச்சர் திரு ஹர்ஷ் வர்தன், சுகாதார இணை அமைச்சர் திரு அஷ்வினி குமார் சவுபே, மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் திரு டி வி சதானந்த கவுடா, ரசாயனம் மற்றும் உரங்கள் துறை  இணை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, பிரதமரின் முதன்மை செயலாளர், நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் டாக்டர் வி கே பால், அமைச்சரவை செயலாளர், மத்திய சுகாதார செயலாளர், மத்திய மருந்துகள் செயலாளர், ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநர் டாக்டர் பல்ராம் பார்கவா மற்றும் மத்திய அமைச்சகங்கள்/துறைகளின் இதர அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

******************



(Release ID: 1712759) Visitor Counter : 266