பிரதமர் அலுவலகம்

சரக்குப் போக்குவரத்திற்கான பிரத்யேக கிழக்குப் பகுதி நெடும்பாதைத் திட்டத்தில் புதிய பாவ்பூர் - புதிய குர்ஜா பகுதி வசதியைத் தொடக்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 29 DEC 2020 2:03PM by PIB Chennai

உத்தரப்பிரதேச மாநில ஆளுநர் திருமதி ஆனந்திபென் பட்டேல் அவர்களே, முதல்வர் ஆதித்யநாத் அவர்களே, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களே, நாடாளுமன்றத்தில் எனது சக உறுப்பினர்களே, உ.பி. அரசின் அமைச்சர்களே! இந்த நிகழ்ச்சியுடன் தொடர்புள்ள மூத்த நிர்வாகிகளே, சகோதர சகோதரிகளே! பெருமைக்குரிய இந்திய ரயில்வேயின் 21வது நூற்றாண்டுக்கான புதிய அடையாளத்தைக் காட்டுவதாகவும், இந்தியா மற்றும் இந்திய ரயில்வேயின் வல்லமையைப் பறைசாற்றுவதாகவும் இன்றைய நிகழ்ச்சி இருக்கிறது. சுதந்திரத்துக்குப் பிறகு மிகப் பெரிய, நவீன ரயில்வே கட்டமைப்பு வசதியை இன்றைக்குத் தொடங்குகிறோம்.

குரியா - பாவு வழித்தடத்தில் சரக்கு நெடும்பாதையில் முதலாவது சரக்கு ரயில் இன்று ஓடும் போது, புதிய இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியாவின் கர்ஜனையை எல்லோரும் தெளிவாகக் கேட்க முடிகிறது. பிரயாக்ராஜில் உள்ள செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையமும், புதிய இந்தியாவின் புதிய திறன்களை வெளிக்காட்டுவதாக இருக்கிறது. உலகில் மிகச் சிறந்த மற்றும் நவீன கட்டுப்பாட்டு மையங்களில் ஒன்றாக இது இருக்கிறது. இதை நிர்வகிப்பதற்கான தொழில்நுட்பமும், தகவல் தொகுப்பும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டது, இதை இந்தியர்கள் தான் உருவாக்கினர் என்பதை அறியும் போது எல்லோருமே பெருமைப்படுவார்கள்.

சகோதர சகோதரிகளே!

எந்த தேசமாக இருந்தாலும் செயல்திறன் வளர்ப்புக்கு கட்டமைப்பு வசதிகள் தான் மிகப் பெரிய ஆதாரமாக இருக்கும். கட்டமைப்பு வசதியில் போக்குவரத்துத் தொடர்பு வசதி தான் நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களைப் போன்றதாகும். நரம்புகள் நன்றாக இருந்தால், ஆரோக்கியம் நன்றாக இருக்கும், தேசம் மிகவும் சக்தி மிகுந்ததாக இருக்கும். இன்றைக்கு உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்தியாக உருவாகும் பயணத்தில் இந்தியா வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் நேரத்தில், சிறப்பான போக்குவரத்துத் தொடர்பு வசதி தான் நாட்டில் முன்னுரிமையான தேவையாக இருக்கிறது. இதை மனதில் கொண்டு, கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தியாவில் நவீன போக்குவரத்து வசதியின் ஒவ்வொரு அம்சத்திலும் கவனம் செலுத்தப்படுகிறது. நெடுஞ்சாலைகள், ரயில்வேக்கள், விமானப் போக்குவரத்து, நீர்வழித் தடங்கள் அல்லது ஐ- நெடும்பாதைகள் என வேகமான பொருளாதார வளர்ச்சிக்கான ஐந்து துறைகளிலும் உத்வேகம் தந்து, துரிதமாகப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சரக்குப் போக்குவரத்திற்காக கிழக்குப்பகுதியில் பிரத்யேகமான நெடும்பாதை என்பது இந்த வகையில் முக்கியமான திட்டமாக உள்ளது.

நண்பர்களே!

சரக்குப் போக்குவரத்திற்கான பிரத்யேக நெடும்பாதைகள் என்பதை, சாதாரண வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், சரக்கு ரயில்களுக்கு மட்டுமான விசேஷ ரயில் பாதைகள் மற்றும் ஏற்பாடுகள் என்று சொல்லலாம். அதற்கான தேவை என்ன வந்தது? நமது விவசாய நிலங்கள், தொழிற்சாலைகள் மற்றும் சந்தைகள் எல்லாமே சரக்குகளைச் சார்ந்து இருக்கின்றன. பயிர்கள் எங்கோ விளைகின்றன; நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு அவற்றைக் கொண்டு போக வேண்டும். ஏற்றுமதி செய்வதற்கு அவற்றைத் துறைமுகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதே போல தொழிற்சாலைகளுக்கான கச்சாப் பொருள்கள் எங்கோ இருந்து கடல் வழியாகக் கொண்டு வரப்பட வேண்டும். தொழிற்சாலையில் உற்பத்தியான பொருள்களை சந்தைக்குக் கொண்டு செல்ல வேண்டும். அல்லது ஏற்றுமதிக்காக துறைமுகத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இதில் ரயில்வே கட்டமைப்பு தான் மிகப்பெரிய வசதிகளை அளிக்கிறது. மக்கள் தொகை வளரும் போது, பொருளாதாரம் வளர்கிறது. அப்போது சரக்குப் போக்குவரத்தின் தேவையும் அதிகரிக்கிறது. நாட்டில் பயணிகள் ரயில்களும், சரக்கு ரயில்களும் ஒரே ரயில் பாதை வசதியைப் பயன்படுத்துவதில் பிரச்சினை உள்ளது. சரக்கு ரயில்களின் வேகம் குறைவு. அவற்றுக்கு வழி விடுவதற்காக பல இடங்களில் பயணிகள் ரயிலை இடையில் நிறுத்த வேண்டியுள்ளது. இதனால் பயணிகள் ரயில்கள் குறித்த நேரத்தில் சென்று சேருவதில்லை, சரக்கு ரயில்களும் தாமதம் ஆகின்றன. சரக்கு ரயில்களின் வேகம் குறைவாக உள்ள போது, தடங்கல்கள் ஏற்படுவதால், பொருள்களைக் கொண்டு போய் சேர்ப்பதற்கான செலவு அதிகரிக்கிறது. அதனால் வேளாண் விளைபொருள்களின் விலைகள், கனிமப்பொருள்கள், தொழிற்சாலை உற்பத்திப் பொருள்களின் விலைகள் அதிகரிக்கின்றன. விலை அதிகமாக இருப்பதால் உள்நாட்டுச் சந்தையிலும், வெளிநாட்டுச் சந்தையிலும் போட்டியிட முடியாமல் பின்தங்கி இருக்கும் சூழ்நிலை உள்ளது.

சகோதர சகோதரிகளே!

இந்தச் சூழ்நிலையை மாற்றுவதற்காக சரக்குப் போக்குவரத்துக்காக பிரத்யேக போக்குவரத்து வசதி உருவாக்கத் திட்டமிடப்பட்டது. ஆரம்பத்தில் சரக்குப் போக்குவரத்திற்காக இரண்டு பிரத்யேக வழித்தடங்கள் உருவாக்கத் திட்டமிடப்பட்டது. கிழக்குப் பகுதியில் பிரத்யேக சரக்குப் போக்குவரத்து நெடும்பாதை வசதி பஞ்சாபின் தொழில்நகரமான லூதியானாவை, மேற்குவங்கத்தின் தன்குனி நகருடன் இணைக்கிறது. நூறு கிலோ மீட்டர் நீளம் உள்ள இந்த வழித்தடத்தில் நிலக்கரிச் சுரங்கங்கள், அனல் மின் நிலையங்கள், தொழிற்சாலை நகரங்கள் இருக்கின்றன. இவற்றுக்கான துணைப் பாதைகளும் உருவாக்கப்படுகின்றன. அதே போல மேற்குப் பகுதியில் சரக்குப் போக்குவரத்திற்கான பிரத்யேக நெடும்பாதையானது மகாராஷ்டிராவில் ஜே.என்.பி.டி.யை உத்தரப்பிரதேச மாநிலம் தாத்ரியுடன் இணைக்கிறது. 1500 கிலோ மீட்டர் நீளம் உள்ள இந்தப் பாதையில் முந்த்ரா, காண்ட்லா, பிபாவ், டாஹேஜ் மற்றும் குஜராத்தில் ஹாஜிரா ஆகிய பெரிய துறைமுகங்களுடன் இணைக்கும் துணைப் பாதைகளும் உருவாக்கப்படுகின்றன. இந்த இரண்டு சரக்குப் போக்குவரத்துப் பாதைகளைச் சுற்றி டெல்லி - மும்பை தொழிற்சாலை நெடும்பாதை மற்றும் அமிர்தசரஸ் - கொல்கத்தா தொழிற்சாலை நெடும்பாதை ஆகியவையும் உருவாக்கப்படுகின்றன. அதே போல, வடக்கு முதல் தெற்கு வரையில், கிழக்கில் இருந்து மேற்கு வரையில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த சிறப்பு ரயில்வே வழித்தடங்களை உருவாக்குவதற்கான நடைமுறைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

சகோதர சகோதரிகளே!

சரக்கு ரயில்களுக்குத் தனி போக்குவரத்து வசதி செய்வதால், பயணிகள் ரயில்கள் அடிக்கடி தாமதம் ஆவது குறையும். அடுத்ததாக, சரக்கு ரயில்களின் வேகம் மூன்று மடங்கைக் காட்டிலும் கூடுதலாக அதிகரிக்கும். இரு மடங்கு சரக்குகளை இந்த ரயில்களில் எடுத்துச் செல்ல முடியும். இந்த ரயில் பாதைகளில் இரண்டடுக்கு சரக்கு ரயில்கள் இயக்கப்படுவதால் இது சாத்தியமாகிறது. சரக்கு ரயில்கள் குறித்த நேரத்தில் சென்று சேரும் போது, சேமிப்புக் கிடங்குச் செலவுகள் குறைவாக இருக்கும். போக்குவரத்துச் செலவு குறைவதால் சரக்குகளின் விலை குறையும். எனவே ஏற்றுமதிக்கு உதவியாக இருக்கும். அது மட்டுமின்றி, நாட்டில் தொழில்துறைக்கு நல்ல சூழல் ஏற்படும். தொழில் செய்வதை எளிமையாக்கும் நிலை மேம்படும். முதலீட்டாளர்களை ஈர்க்கும் வாய்ப்பு அதிகரிக்கும். வேலைவாய்ப்பு, சுய வேலைவாய்ப்புக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும்.

நண்பர்களே!

தற்சார்பு இந்தியாவில் இந்த சரக்குப் போக்குவரத்து வழித்தடங்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கும். தொழில்துறை, வியாபாரம், விவசாயிகள் அல்லது நுகர்வோர் என எல்லா தரப்பினரும் இதனால் பயனடைவர். லூதியானா மற்றும் வாரணாசியைச் சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்களாக இருந்தாலும் பெரோஸ்பூரைச் சேர்ந்த விவசாயியாக இருந்தாலும், அலிகாரை சேர்ந்த பூட்டுத் தயாரிப்பாளராக இருந்தாலும், ராஜஸ்தானைச் சேர்ந்த மார்பிள் கல் தயாரிப்பாளராக இருந்தாலும், மலிஹாபாத்தைச் சேர்ந்த மாம்பழ உற்பத்தியாளராக இருந்தாலும், கான்பூர் மற்றும் ஆக்ராவைச் சேர்ந்த தோல் தொழிற்சாலையினராக இருந்தாலும், பாடோஹியைச் சேர்ந்த கார்ப்பெட் தயாரிப்பாளராக இருந்தாலும், பரீதாபாத்தைச் சேர்ந்த கார் உற்பத்தியாளராக இருந்தாலும், எல்லோருக்கும் புதிய வாய்ப்புகளை அளிப்பதாக இந்த வசதி இருக்கும். இந்தியாவில் கிழக்குப் பகுதியில் தொழில் துறையில் பின்தங்கியுள்ள பகுதிகளுக்கு சிறப்பு உத்வேகம் தருவதாக இந்த நெடும்பாதைத் திட்டம் இருக்கும். இதில் 60 சதவீதம் உத்தரப்பிரதேசத்தில் வருவதால், இங்கு எல்லா சிறு தொழிற்சாலைகளும் இதனால் பயன்பெறும். உத்தரப்பிரதேசத்தை நோக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புகள் முந்தைய காலத்தை விட இன்னும் அதிகரிக்கும்.

சகோதர, சகோதரிகளே!

இந்தப் பிரத்யேக சரக்குப்பாதை உழவர் ரயிலுக்கும் பயனளிக்கப் போகிறது. நாட்டின் 100-வது உழவர் ரயில் நேற்று கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. உழவர் ரயில் மூலம், வேளாண் உற்பத்திப் பொருள்களை நாடு முழுவதும் பெரிய சந்தைகளுக்கு குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பாகக் கொண்டு செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது, புதிய சரக்குப்பாதையின் மூலம் உழவர் ரயில் அதி விரைவாக அதன் இலக்கு இடத்தை அடைய முடியும். உத்தரப்பிரதேசத்திலும், பல்வேறு ரயில் நிலையங்கள் உழவர் ரயில் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் ரயில் நிலையங்களுக்கு அருகில், சேமிப்பு மற்றும் குளிர்பதனக் கிடங்குகளின் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டு வருகிறது. உ.பி.யில் நாற்பத்தைந்து சேமிப்புக்கிடங்குகள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன. மாநிலத்தில் கூடுதலாக, எட்டு புதிய சரக்குக் கொட்டகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் வாரணாசி, காசிப்பூர் ஆகிய இடங்களில் இரண்டு பெரிய அழுகக்கூடிய பொருள்களுக்கான சரக்கு மையங்கள் விவசாயிகளுக்குப் பயனளித்து வருகின்றன. பழங்கள், காய்கறிகள் போன்ற அழுகக்கூடிய உற்பத்திப் பொருள்களை விவசாயிகள் குறைந்த கட்டணத்தில் இங்கு சேமித்து வைக்கலாம்.

நண்பர்களே! இத்தகைய உள்கட்டமைப்பு நாட்டுக்குப் பெருமளவில் பயன் அளித்து வரும் போது, ஏன் இது தாமதமானது என்ற கேள்வியும் எழுகிறது. இந்தத் திட்டம், 2014-க்கு முன்பு இருந்த அரசின் பணிக் கலாச்சாரத்துக்கு சான்றாக உள்ளது. 2006-ஆம் ஆண்டு இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன் பின்னர் இது காகிதத்திலும், கோப்புகளிலும் மட்டுமே வடிவம் பெற்றது. இந்தத் திட்டம் குறித்து மாநிலங்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்ற உண்மையான அணுகுமுறையை அப்போதைய மத்திய அரசு கொண்டிருக்கவில்லை. இதன் விளைவாக, பணிகள் தேக்கமடைந்தன. இந்தச் சூழ்நிலையால், 2014-ஆம் ஆண்டு வரை, ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குக் கூட பாதை அமைக்கப்படவில்லை. இந்தத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட பணமும் முறையாகச் செலவழிக்கப்படவில்லை.

நண்பர்களே!

2014-இல் நமது அரசு அமைக்கப்பட்ட பின்னர், திட்டத்துக்கான கோப்புகள் மீண்டும் சேகரிக்கப்பட்டன. புதிதாக அதிகாரிகள் பணியைத் தொடங்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். மதிப்பீடு 11 மடங்கு அதாவது, 45,000 கோடி ரூபாயாக அதிகரித்தது. ஆய்வுக்கூட்டங்களின் போது, எனது நேரடிக் கண்காணிப்பில், சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாநில அரசுகளுடன் மத்திய அரசு தொடர்பைப் புதுப்பித்து அவற்றை அதில் ஈடுபட ஊக்குவித்தது. புதிய தொழில்நுட்பத்தையும் நாங்கள் கொண்டு வந்தோம். இதன் பயனாக, அடுத்த சில மாதங்களில் 1100 கி.மீ தூரத்துக்குப் பணிகள் நிறைவடைய உள்ளன. எட்டு ஆண்டுகளில் ஒரு கி.மீ தூரம் கூட போடப்படாத நிலையில், 6,7 ஆண்டுகளில் 1100 கி.மீ தூரத்துக்குப் பணிகள் எவ்வாறு சாத்தியமாயின என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்.

சகோதர, சகோதரிகளே!

உள்கட்டமைப்பு மீதான அரசியல் அக்கறையின்மை, சரக்குப் பாதைக்கு இழப்பை ஏற்படுத்துவதுடன், முழுமையான ரயில்வே முறைக்கும் பெருமளவுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. முன்பெல்லாம், தேர்தல் வெற்றிக்குப் பயன்படும் என்பதற்காக, ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வந்தது. ஆனால், ரயில்கள் ஓடக்கூடிய பாதைகளுக்கான முதலீடு செய்யப்படவில்லை. ரயில்வே கட்டமைப்பை நவீனப்படுத்தும் நடவடிக்கையில் உண்மையான அக்கறை இருக்கவில்லை. நமது ரயில்களின் வேகம் மிகவும் குறைவாக இருந்ததுடன், முழு கட்டமைப்பும் உயிர்களைப் பலி கொள்ளும் ஆள் இல்லாத ரயில்வே கடவுப்பாதைகளால் நிறைந்திருந்தது.

நண்பர்களே!

இத்தகைய பணியாற்றும் முறையையும், மனநிலையையும் 2014-க்கு பிறகு நாம் மாற்றினோம். தனியான ரயில் பட்ஜெட் முறையை நீக்கியதன் மூலம், அறிவிப்புகள் செயத பிறகு அவற்றை மறக்கும் அரசியலை நாம் மாற்றினோம். ரயில் தடங்களில் நாம் முதலீடு செய்தோம், ஆளில்லாத கேட்டுகளில் இருந்து ரயில்வேயை நாம் விடுவித்தோம், அதிவேக ரயில்களுக்கான தடங்களை உருவாக்கினோம், ரயில்வேயின் விரிவாக்கம் மற்றும் மின்மயமாக்கல் மீது கவனம் செலுத்தினோம். இன்றைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் போன்ற அதிவேக ரயில்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன, இந்திய ரயில்வே முன்னெப்போதையும் விட பாதுகாப்பனாதாக உள்ளது.

நண்பர்களே!

ரயில்வேயின் அனைத்து மட்டங்களிலும் கடந்த சில வருடங்களாக சீர்திருத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தூய்மையாகட்டும், சிறப்பான உணவு அல்லது இதர வசதிகள் ஆகட்டும், இன்றைக்கு ஒரு மாற்றம் காணப்படுகிறது. அதே போல், ரயில்வே நடவடிக்கைகள் தொடர்பான உற்பத்தியில் தன்னிறைவுக்கான மிகப் பெரிய அடியை இந்தியா எடுத்து வைத்துள்ளது. தனக்கான நவீன ரயில்களை இந்தியா தானே தயாரிப்பதோடு, அவற்றை ஏற்றுமதியும் செய்கிறது. உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ரயில் எஞ்சின் மையம் இந்தியாவின் மிகப்பெரிய மின்சார ரயில் எஞ்சின் மையமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. சிறு பழுதுகளுக்கும், வண்ணம் பூசுவதற்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்ட ரேபரேலியில் உள்ள நவீன ரயில் பெட்டித் தொழிற்சாலைக்கு கடந்த ஆறு வருடங்களில் புத்தாக்கம் அளித்துள்ளோம். 5000-க்கும் அதிகமான புதிய ரயில் பெட்டிகள் இதுவரை இங்கு தயாரிக்கப்பட்டுள்ளன. இங்கு தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகள் ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.

சகோதர, சகோதரிகளே!

நாட்டின் வளர்ச்சியை அரசியலுக்கு அப்பால் வைக்க வேண்டும் என்பதை நமது கடந்த கால அனுபவங்கள் காட்டுகின்றன. நாட்டின் உள்கட்டமைப்பு என்பது நாட்டின் வளர்ச்சிக்கான வழியே தவிர, எந்தக் கட்சியின் கொள்கையும் அல்ல. இது ஐந்தாண்டு அரசியல் அல்ல, மாறாக, இனி வரவிருக்கும் தலைமுறைகளுக்குப் பயனளிப்பதற்கான ஒரு இயக்கம். அரசியல் கட்சிகள் தங்களுக்குள் போட்டியிட்டுக் கொள்ள வேண்டும் என்றால், அது உள்கட்டமைப்பு, அதன் வேகம் மற்றும் அளவு ஆகியவற்றை அதிகரிப்பது பற்றியதாக இருக்க வேண்டும். போராட்டங்களில் நாம் அடிக்கடி காணும் மற்றுமொரு மனநிலை குறித்தும் நான் இங்கு கூற விரும்புகிறேன். நாட்டின் உள்கட்டமைப்பையும், சொத்துக்களையும் சேதப்படுத்துவதே அது. இந்த உள்கட்டமைப்பும், சொத்துக்களும் எந்த ஒரு தலைவருக்கோ, கட்சிக்கோ, தனிப்பட்ட அரசுக்கோ சொந்தமானதல்ல. இது நம் நாட்டின் சொத்து. ஒவ்வொரு ஏழை, வரி செலுத்துவோர், நடுத்தரப் பிரிவினர் மற்றும் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவின் வியர்வை அதில் இருக்கிறது. இவற்றுக்கு ஏற்படுத்தப்படும் சேதம், நாட்டிலுள்ள ஏழைகளுக்கும், பொதுமக்களுக்கும் ஏற்படுத்தப்படும் பாதிப்பு ஆகும். எனவே, நமது ஜனநாயக உரிமைகளை வெளிப்படுத்தும் போது, நமது தேசியக் கடமைகளை நாம் மறந்து விடக் கூடாது.

நண்பர்களே!

அடிக்கடி குறி வைக்கப்படும் ரயில்வே, கொரோனா போன்ற கடினமான காலகட்டத்தில் நாட்டுக்கு சேவையாற்றியதை நாம் பார்த்தோம். புலம்பெயர்ந்தோரை அவர்களின் சொந்த ஊர்களுக்குக் கொண்டு சேர்த்தது, மருந்துகளைக் கிடைக்கச் செய்தது, நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் ரேசன் பொருள்களை கொண்டு சேர்த்தது, கொரோனா மருத்துவமனை வசதிகளை ரயில் பெட்டிகளிலேயே வழங்கியது போன்ற சேவைகளுக்காக ரயில்வேயையும், அதன் பணியாளர்களையும் என்றைக்கும் நாடு நினைவு கூறும். அது மட்டுமல்ல, கடினமான காலகட்டத்தில் கிராமங்களுக்குத் திரும்பிய தொழிலாளர் தோழர்களுக்கு ஒரு இலட்சம் நாட்களுக்கான வேலைவாய்ப்பை ரயில்வே உருவாக்கியது. நாட்டுக்கான தொய்வில்லா இந்தச் சேவை, நல்லிணக்கம் மற்றும் வளம் என்றைக்கும் தொடரும் என்று நான் நம்புகிறேன்.

சரக்கு வழித்தடங்கள் என்னும் புதிய வசதியை பெற்றுள்ள உத்தரப்பிரதேசம் உட்பட நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும், ரயில்வேயில் உள்ள அனைத்து சக பணியாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு, இந்தச் சரக்குத் தடத்திற்கான பணியை வேகமாக மேற்கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். 2014-க்குப் பிறகு நாம் கொண்டு வந்துள்ள வேகம் வரும் நாட்களில் இன்னும் துரிதப்படுத்தப்பட வேண்டும். எனவே, ரயில்வேயில் உள்ள எனது அனைத்து சக பணியாளர்களும் நாட்டின் எதிர்பார்ப்பைக் கட்டாயம் பூர்த்தி செய்வார்கள் என நான் நம்புகிறேன். இந்த நம்பிக்கையோடு, எனது வாழ்த்துகளை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி!

குறிப்பு: இது, பிரதமர் இந்தியில் ஆற்றிய உரையின், உத்தேசமான மொழிபெயர்ப்பாகும்.

                                                                                        ***

 



(Release ID: 1684521) Visitor Counter : 159