பிரதமர் அலுவலகம்
டெல்லி மெட்ரோவில் மேக்னெட்டா லைனில் ஓட்டுநர் இல்லாத ரயில் சேவைத் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை
Posted On:
28 DEC 2020 1:29PM by PIB Chennai
மத்திய அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் பூரி அவர்களே! டெல்லி முதல்வர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களே! டி.எம்.ஆர்.சி. நிர்வாக இயக்குநர் திரு. மங்கு சிங் அவர்களே! நாட்டில் இயங்கி வரும் மெட்ரோ திட்டங்களின் மூத்த அதிகாரிகளே! எனதருமை சகோதர சகோதரிகளே!
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மேக்னெட்டா லைனைத் தொடங்கி வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இன்றைக்கு அதே வழித்தடத்தில், நாட்டின் முதலாவது தானியங்கி மெட்ரோ சேவையை, சாதாரண வார்த்தைகளில் ``ஓட்டுநர் இல்லாத மெட்ரோ'' எனப்படும் சேவையைத் தொடங்கி வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. ஸ்மார்ட் நடைமுறைக்கு இந்தியா எவ்வளவு வேகமாக மாறி வருகிறது என்பதை இது காட்டுகிறது. இன்றைக்கு தேசியப் பொதுப் போக்குவரத்து அட்டை முறையுடன் டெல்லி மெட்ரோ தன்னை இணைத்துக் கொள்கிறது. கடந்த ஆண்டு இது ஆமதாபாத் நகரில் தொடங்கியது. இன்றைக்கு டெல்லி மெட்ரோவின் விமான நிலைய எக்ஸ்பிரஸ் லைனுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. நகர்ப்புற வளர்ச்சி, நகர்ப்புற ஆயத்தம் மற்றும் எதிர்காலத் தேவையைச் சந்திக்கும் ஆயத்தை உருவாக்கும் முயற்சியாக இன்றைய நிகழ்ச்சி இருக்கிறது.
நண்பர்களே!
எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், இப்போதே பணிகளை மேற்கொள்ள வேண்டியது நல்ல நிர்வாகத்தின் முக்கியமான கடமையாக உள்ளது. ஆனால், சில பத்தாண்டுகளுக்கு முன்னர், நகரமயமாக்கலின் எதிர்காலம் மற்றும் தாக்கம் பற்றி தெளிவாக உணரப்பட்டிருந்த போதிலும், மாறுபட்ட அணுகுமுறை கடைபிடிக்கப்பட்டதை மக்கள் பார்த்தார்கள். எதிர்காலத் தேவைகள் குறித்துப் பெரிதாக கவனம் செலுத்தப்படவில்லை. அரைமனதுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குழப்பமான நிலையே இருந்தது. அந்த சமயத்தில் நகரமயமாக்கல் பணிகள் வேகமாக அதிகரித்தன. ஆனால் நமது நகரங்கள் அதை எதிர்கொள்ளும் அளவுக்குத் தயார்படுத்தப் படவில்லை. அதனால் நாட்டின் பல பகுதிகளில் நகரக்கட்டமைப்புத் தேவைகள் மற்றும் அதைப் பூர்த்தி செய்யும் நிலைகளுக்கு இடையில் பெரிய இடைவெளி ஏற்பட்டது.
நண்பர்களே!
இந்தச் சிந்தனையில் இருந்து மாறுபட்டு, நகரமயமாக்கலை ஒரு சவாலாகप பார்க்காமல், அதை ஒரு வாய்ப்பாகக் கருதும் நவீன சிந்தனை உருவாகியுள்ளது. நாட்டில் நல்ல கட்டமைப்பு வசதியை உருவாக்குவதற்கான ஒரு வாய்ப்பாக நாடு இதைப் பார்க்கிறது. வாழ்க்கை நிலையை எளிதாக ஆக்குவதற்கான வாய்ப்பாகப் பார்க்கிறது. நகரமயமாக்கலின் ஒவ்வொரு அம்சத்திலும், இந்தச் சிந்தனையின் தாக்கத்தை நீங்கள் உணர முடியும். நாட்டில் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம் அதற்கு ஒரு நல்ல உதாரணமாக உள்ளது. டெல்லியில் மெட்ரோ சேவைகள் தொடங்குவது பற்றி பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு வந்தது. ஆனால் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் முயற்சியால் முதலாவது மெட்ரோ ஓடத் தொடங்கியது. மெட்ரோ கட்டுமானத்தின் நிலை குறித்து, இந்தத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள பல நிபுணர்களும் அறிவார்கள்.
நண்பர்களே!
எங்களுடைய அரசு 2014-ஈல் பொறுப்பேற்ற போது, ஐந்து நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில் சேவை இருந்தது. இன்றைக்கு 18 நகரங்களில் மெட்ரோ சேவை உள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் 25க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு இதை விரிவுபடுத்தப் போகிறோம். 2014ஆம் ஆண்டில் 248 கிலோ மீட்டர் அளவுக்குத் தான் மெட்ரோ ரயில் பாதைகள் பயன்பாட்டில் இருந்தன. இன்றைக்கு அது மூன்று மடங்கு அதிகரித்து 700 கிலோ மீட்டருக்கும் அதிகமாக மெட்ரோ ரயில் பாதைகள் உள்ளன. 2025ஆம் ஆண்டுக்குள் இந்த வசதியை 1700 கிலோ மீட்டர் அளவுக்கு விரிவுபடுத்த முயற்சிக்கிறோம். 2014ஆம் ஆண்டில் ஒரு நாளுக்கு 17 இலட்சம் பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்தனர். இப்போது இந்த எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. இப்போது மெட்ரோ ரயிலில் தினமும் 85 இலட்சம் பேர் பயணிக்கிறார்கள். இவை வெறும் எண்ணிக்கைகள் அல்ல. பல மில்லியன் இந்தியர்களின் வாழ்க்கை எளிதாக ஆகியிருப்பதன் அத்தாட்சிகளாக இவை உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள். செங்கற்கள், கான்கிரீட் மற்றும் இரும்பைக் கொண்டு உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளாக இவை இல்லை. நாட்டின் குடிமக்கள் மற்றும் நடுத்தர மக்களின் உயர் விருப்பங்களை நனவாக்குவதன் சாட்சிகளாக இவை உள்ளன.
நண்பர்களே!
இந்த மாற்றங்கள் எல்லாம் எப்படி வந்தன? அதே அதிகார வர்க்கம் தான் , அதே மக்கள் தான், பிறகு இவ்வளவு வேகமாக எப்படி மாற்றம் நிகழ்ந்தது? நகரமயமாதலை ஒரு சவாலாக அல்லாமல், ஒரு வாய்ப்பாக நாங்கள் கருதியதே இதற்குக் காரணம். நமது நாட்டில் முன்னர் மெட்ரோ குறித்து எந்தக் கொள்கையும் இருந்தது கிடையாது. சிலரை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக சில தலைவர்கள், சில அரசுகள் மெட்ரோ பற்றி அறிவிக்கும். இதில் இருந்து மாறுபட்டு மெட்ரோவுக்கென எங்கள் அரசு ஒரு கொள்கையை வகுத்து, ஒட்டுமொத்த உத்திகளை ஒருங்கிணைத்து இதை அமல்படுத்தியது. உள்ளூர்த் தேவைகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும், உள்ளூர்த் தரங்களை மேம்படுத்த வேண்டும், மேக் இன் இந்தியா திட்டத்தை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் முக்கியத்துவம் கொடுத்தோம்.
நண்பர்களே!
நாட்டில் வெவ்வேறு நகரங்களில் வெவ்வேறு மாதிரியான தேவைகள், விருப்பங்கள், சவால்கள் இருக்கும் என்பதை உங்களில் பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பீர்கள். குறிப்பிட்ட ஒரு திட்டத்தின் அடிப்படையில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கினால், வேகமாக அதை விரிவுபடுத்துவது சாத்தியமற்றதாக இருக்கும். அந்த நகர மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், அவர்களுடைய தொழில் வாழ்க்கை முறைக்கு ஏற்ற வகையில் மெட்ரோ ரயில் மற்றும் நவீனப் போக்குவரத்து வசதிகளை உருவாக்க வேண்டும் என்பதை நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டோம். அதனால் தான் வெவ்வேறு நகரங்களில் வெவ்வேறு மாதிரியான மெட்ரோ ரயில் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. டெல்லி - மீரட் இடையிலான ஆர்.ஆர்.டி.எஸ். திட்டத்தை உதாரணமாகக் கூறலாம். டெல்லி - மீரட் இடையிலான பயண நேரத்தை ஒரு மணி நேரத்துக்கும் குறைவாகக் குறைப்பதாக இது உள்ளது.
மெட்ரோ லைட் - என்பது பயணிகள் குறைவாக இருக்கும் நகரங்களுக்கானது. வழக்கமான மெட்ரோவை விட 40 சதவீத செலவில் இத்திட்டத்தை அமல்படுத்த முடியும்.
மெட்ரோ நியோ - என்பது பயணிகள் எண்ணிக்கை இன்னும் குறைவாக உள்ள பகுதிகளுக்கானது. 25 சதவீத செலவில் இதை உருவாக்கிட முடியும். அதே போல வாட்டர் மெட்ரோ திட்டமும் உள்ளது. இது வழக்கத்திற்கு மாறான சிந்தனையில் உதித்த திட்டமாக உள்ளது. பெரிய நீர்வழிப் பாதைகள் உள்ள நகரங்களுக்கென இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நகரங்களில் நல்ல போக்குவரத்துத் தொடர்பு வசதிகளை ஏற்படுத்துவதுடன், அருகில் உள்ள தீவுகளில் வாழும் மக்களுக்குக் கடைசி நிலைவரையான போக்குவரத்து வசதிகளை அளிப்பதாகவும் இருக்கும். கொச்சியில் இதற்கான பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று வருகின்றன.
நண்பர்களே!
இன்றைக்கு மக்களுக்கான போக்குவரத்து வசதியாக மட்டும் மெட்ரோ ரயில் சேவை இல்லை என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பதில் இது பெரும் பங்கு வகிக்கிறது. மெட்ரோ ரயில் சேவை காரணமாக, மாசு ஏற்படுத்திய போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய ஆயிரக்கணக்கான வாகனங்கள் சாலைக்கு வருவது தவிர்க்கப்பட்டுள்ளது.
நண்பர்களே!
மெட்ரோ ரயில் சேவைகளை விரிவுபடுத்த, மேக் இன் இந்தியா திட்டமும் முக்கியமானதாக இருக்கிறது. இத்திட்டத்தால், மெட்ரோ ரயில் திட்டத்தின் செலவுகள் குறைந்து, அந்நியச் செலாவணி மிச்சமாகி, நாட்டு மக்களுக்கு நிறைய வேலைகள் கிடைக்கின்றன. கையிருப்புகளின் தரத்தை நிலைப்படுத்துதலால் இந்திய உற்பத்தியாளர்கள் பயன் பெற்றுள்ளனர். ஒவ்வொரு ரயில் பெட்டியின் விலையும் ரூ.12 கோடியில் இருந்து ரூ.8 கோடியாகக் குறைந்துள்ளது.
நண்பர்களே!
இன்றைக்கு நமது நாட்டில் நான்கு பெரிய நிறுவனங்கள் மெட்ரோ ரயில் பெட்டிகளைத் தயாரிக்கின்றன. அவற்றுக்கான பாகங்களைத் தயாரிப்பதில் பல டஜன் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. மேக் இன் இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியா முயற்சிகளுக்கு இவை உதவியாக இருக்கின்றன.
நண்பர்களே!
நவீன தொழில்நுட்பப் பயன்பாடு தான் இந்த சமயத்தில் மிகவும் தேவையாக உள்ளது. ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலைத் துவக்கி வைக்கும் வாய்ப்பு எனக்கு இப்போது கிடைத்துள்ளது. இந்தச் சாதனையின் மூலம், உலகில் இது போன்ற வசதியுள்ள குறிப்பிட்ட சில நாடுகளுடன் இந்தியா இணைந்து விட்டது. பிரேக் அமைப்பு முறையில் பிரேக் போடும் போது செலவிடப்படும் எரிசக்தியில் 50 சதவீதம் மீண்டும் கிரிட்டுக்கே திரும்பக் கிடைக்கும் வகையிலான பிரேக் அமைப்பு முறை ஒன்று குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது மெட்ரோ ரயிலில் 130 மெகாவாட் சூரியசக்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது 600 மெகாவாட்டாக அதிகரிக்கப்படும். செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு உள்ள நடைமேடைகள், கண்காணிப்புக் கதவுகள் போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகளை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகளும் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.
நண்பர்களே!
நவீனப்படுத்துதல் என்பதற்கு ஒரே மாதிரியான தரத்தையும், வசதிகளையும் அளிப்பது மிகவும் முக்கியமாகும். தேசிய அளவில் பொதுவான நடமாடும் அட்டை என்பது இந்தத் திசையில் மேற்கொள்ளப்படும் மிக முக்கியமான அம்சமாகும். நீங்கள் எங்கே பயணம் மேற்கொண்டாலும் ஒருங்கிணைந்த வழி கிடைக்க இந்த அட்டை வகை செய்யும். இந்த அட்டையைப் பயன்படுத்தி பொதுத்துறைப் போக்குவரத்தின் எந்தப் போக்குவரத்து மூலமாகவும் பயணிக்கலாம். அதாவது எல்லா இடங்களுக்கும் ஒரே அட்டை போதும். இது எல்லா இடத்திலும் செல்லத்தக்கது.
நண்பர்களே!
ஒரு டோக்கனைப் பெறுவதற்கு மட்டுமே வரிசையில் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்பது மெட்ரோவில் பயணம் செய்பவர்களுக்குத் தெரியும். அலுவலகத்துக்கோ அல்லது கல்லூரிக்கோ செல்வதற்குத் தாமதமாகி விடுகிறது. பயணச்சீட்டு பெறுவதிலும் சிக்கல் உள்ளது. மெட்ரோவில் இருந்து வெளிவந்த பிறகு, பேருந்தில் பயணம் செய்கையில் பேருந்துக்கான பயணச்சீட்டை வாங்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் எல்லோருக்குமே நேரம் குறைவாக இருக்கிறது. இப்படிப்பட்ட குறைவான நேரத்தைப் பயணங்களில் இழந்து விட முடியாது. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும் நம் நாட்டு மக்களுக்கு இத்தகைய பிரச்சினைகளால் இடையூறு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் நாங்கள் செயலாற்றி வருகிறோம்.
நண்பர்களே!
நம்முடைய நாட்டின் ஆற்றலையும், வளங்களையும், முறையாக, நாட்டின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பது நம் அனைவரின் பொறுப்பாகும். எல்லாவிதமான அமைப்புகளையும் ஒருங்கிணைப்பதன் மூலம் நாட்டின் வலிமை இன்று மேம்படுத்தப்படுகிறது. ஒரே இந்தியா செழுமையான இந்தியா என்பது வலுப்படுத்தப்படுகிறது. ஒரே தேசம், ஒரு நடமாடும் அட்டை என்பதுபோல பல்வேறு அமைப்பு முறைகளை ஒருங்கிணைப்பதற்கு, கடந்த சில ஆண்டுகளாக நமது அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஒரு தேசம் ஒரு பாஸ்ட் டாக் திட்டம் நாட்டில் நெடுஞ்சாலைகளில் தங்கு தடையின்றி சீராகப் பயணிக்க முடிவதை உறுதி செய்துள்ளது.
போக்குவரத்து நெரிசலிலிருந்து நிவாரணம் கிடைத்திருக்கிறது. தாமதம் காரணமாக நாட்டுக்கு ஏற்பட்ட நேர இழப்பும், இதர இழப்புகளும் குறைந்துள்ளன. ஒரு தேசம் ஒரு வரி அதாவது ஜிஎஸ்டி என்பது நாடு முழுவதும் வரி நெரிசலை ஒழித்து விட்டது. நேரடி வரியில் ஒரே சீரான முறை பின்பற்றப்படுகிறது. ஒரு தேசம் ஒரு மின்சார கிரிட் என்பதன் மூலம் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் இடைவிடாத மின்சாரம் தேவையான அளவு கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.
மின் இழப்பு குறைக்கப்பட்டுள்ளது. ஒரு தேசம் ஒரே எரிவாயுக் கட்டமைப்பு என்பதன் மூலம் கடலுக்கு அப்பாலுள்ள - நாட்டின் பிற பகுதிகளுக்கும் தடையற்ற, சீரான எரிவாயு இணைப்பு அளிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எரிவாயு அடிப்படையிலான வாழ்க்கையும் பொருளாதாரமும் இங்கெல்லாம் ஒருகாலத்தில் கனவாகவே இருந்தது. ஒரு தேசம் ஒரு சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம் அதாவது ஆயுஷ்மான் பாரத் என்ற திட்டத்தின் மூலம் பல இலட்சக்கணக்கான மக்கள் பலனடைந்துள்ளனர். இத்திட்டம் ஒரு மாநிலத்தில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் எல்லா இடங்களுக்கும் பொருந்தும். ஒரு தேசம் ஒரே குடும்ப அட்டைத் திட்டமும், ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் குடிபெயரும் குடிமக்களுக்கு, புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்காக சிரமப்பட வேண்டிய அவசியம் இல்லாமல் செய்துள்ளது. மலிவான விலையில் நாட்டில் எந்த இடத்திலும் இருந்து ரேஷன் பொருள்களைப் பெற்றுக்கொள்ள ஒரு நாடு ஒரே குடும்ப அட்டைத் திட்டம் வகை செய்கிறது. இதே போல் புதிய வேளாண் சீர்திருத்தங்கள் மற்றும் இ நாம் போன்ற அமைப்புகள் மூலம் ‘ஒரு நாடு ஒரே விவசாயச் சந்தை’ என்பதை நோக்கி நாடு நகர்ந்து கொண்டுள்ளது.
நண்பர்களே,
நாட்டிலுள்ள ஒவ்வொரு சிறிய நகரமும் இந்தியப் பொருளாதாரத்தின் பெரியதொரு மையமாக 21-வது நூற்றாண்டில் உருவாகப் போகின்றன. நமது தில்லி, நாட்டின் தலைநகரமாகும். இன்றைக்கு, உலகிற்கான புதிய அடையாளத்தை 21-ஆம் நூற்றாண்டின் இந்தியா உருவாக்கிக் கொண்டிருக்கும் சமயத்தில், நமது தலைநகரில் அந்தப் பிரமாண்டம் பிரதிபலிக்க வேண்டும். பழைய நகரமாக இருப்பதால், சவால்கள் உள்ளன. ஆனால், இந்த சவால்களோடு, நவீனத்திற்கான புதிய அடையாளத்தை நாம் வழங்க வேண்டும். இதன் காரணமாக, தில்லிக்கு நவீன வடிவம் கொடுப்பதற்காக பல முயற்சிகள் இன்றைக்கு எடுக்கப்பட்டு வருகின்றன. மின்சாரப் போக்குவரத்தை தில்லியில் அதிகரிக்கும் விதமாக, மின்சார வாகனங்களை வாங்குவதன் மீது விதிக்கப்படும் வரியிலிருந்து அரசு விலக்களித்துள்ளது.
தில்லியில் உள்ள நூற்றுக்கணக்கான காலனிகளை முறைப்படுத்துவதாகட்டும், குடிசைப்பகுதிகளில் வாழும் குடும்பங்களுக்குச் சிறப்பான தங்கும் வசதியை வழங்குவதிலாகட்டும்... தில்லியில் உள்ள பழைய அரசுக் கட்டிடங்கள் இன்றைய தேவைகளுக்கேற்றவாறு சுற்றுப்புறச்சூழலுக்கு உகந்ததாக ஆக்கப்படுகின்றன. தொழில்நுட்பத்தைச் சார்ந்த நவீன உள்கட்டமைப்பைக் கொண்டு பழைய உள்கட்டமைப்பை மாற்றி வருகிறோம்.
நண்பர்களே!
தில்லியில், பழைய சுற்றுலாத் தலங்களை தவிர, 21-ஆம் நூற்றாண்டுக்கான புதிய கவர்ச்சிகரமான இடங்களை உருவாக்குவதற்கான பணியும் நடந்து வருகிறது. சர்வதேச மாநாடுகள், சர்வதேசக் கண்காட்சிகள் மற்றும் சர்வதேச வர்த்தகச் சுற்றுலா ஆகியவற்றின் முக்கிய மையமாக தில்லி இருக்கப்போகிறது. துவாரகாவில் நாட்டில் மிகப்பெரிய மையம் இதற்காக உருவாக்கப்பட்டு வருகிறது. அதே போன்று, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கான கட்டுமானப் பணி தொடங்கிய வேளையில், மிகப் பெரிய பாரத் வந்தனா பூங்காவும் உருவாக்கப்பட்டு வருகிறது. இத்தகைய பணிகள் தில்லி மக்களுக்கு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருவதோடு, மாநகரத்தின் உருவத்தையும் மாற்றி வருகின்றன.
130 கோடிக்கும் அதிகமான மக்களுக்கும், உலகின் மிகப்பெரிய பொருளாதார மற்றும் மூலோபாய சக்திக்கும் தலைநகரமாக தில்லி விளங்குகிறது. எனவே, அதற்கான பிரமாண்டம் இங்கே பிரதிபலிக்கப்பட வேண்டும். தில்லி மக்களின் வாழ்வை மேம்படுத்தவும், தில்லியை மிகவும் நவீனமாக ஆக்கவும் நாமனைவரும் இணைந்து பணிபுரிவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
புதிய வசதிகளுக்காக நாட்டுக்கும், தில்லி மக்களுக்கும் மீண்டுமொருமுறை நான் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி!
குறிப்பு: இது, பிரதமர் இந்தியில் ஆற்றிய உரையின், உத்தேசமான மொழிபெயர்ப்பாகும்.
***
(Release ID: 1684257)
Visitor Counter : 315
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam