பிரதமர் அலுவலகம்
அனைத்து ஐஐடிகளின் சர்வதேச உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
04 DEC 2020 10:22PM by PIB Chennai
திரு சுந்தரம் ஸ்ரீனிவாசன்,
தலைவர்
அனைத்து ஐஐடி அமெரிக்கா,
பெருமைக்குரிய முன்னாள் மாணவர்களே,
நண்பர்களே,
உங்கள் அனைவரோடும் இன்று இணைவதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். சென்னை, மும்பை, கவுகாத்தி, மற்றும் மிக சமீபத்தில் தில்லி என ஐஐடிகளின் பட்டமளிப்பு விழாக்களில் உரையாற்றும் வாய்ப்பினை நான் பெற்றிருக்கிறேன். அப்போதெல்லாம், இந்தியா மற்றும் உலகின் எதிர்காலத்தைப் பற்றி மிகுந்த நம்பிக்கையையும், உற்சாகத்தையும் பெற்று நான் திரும்பி இருக்கிறேன்.
நண்பர்களே,
மனித குலத்துக்கு சேவையாற்றும் நீங்கள் இந்தியாவின் மகன்கள் மற்றும் மகள்கள் ஆவீர்கள். புதுமைகளை படைப்பதற்கான உங்களது ஆர்வம் பெரிய கனவுகளைக் காண உலகுக்கு உதவுகிறது. உங்களது மிகப்பெரிய பலங்களில் இதுவும் ஒன்றாகும். உங்களின் தொழில்நுட்ப மற்றும் நிர்வாக திறமைகளுக்குப் பிறகு இது வருகிறது. ஐஐடி முன்னாள் மாணவர்கள் உலகத்திற்கு ஆற்றிய சேவைகளின் பொருளாதார மதிப்பை யாராவது கணக்கிட வேண்டும். குறிப்பிடத்தக்க அளவுள்ள ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சமமாக அது இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்.
நண்பர்களே,
இதுபோன்ற கூட்டங்களில் முன்பெல்லாம் வெறும் 5 அல்லது 6 ஐஐடிகளின் முன்னாள் மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள். இந்த எண்ணிக்கை உயர்ந்து தற்போது இரண்டு டசன்களுக்கு நெருக்கமாக உள்ளது. மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதே சமயம், ஐஐடிகளின் சந்தை மதிப்பு வலுவடைவதையும் நாம் உறுதி செய்திருக்கிறோம். இந்தியாவில் இருக்கும் நாம், நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வியை ஊக்கப்படுத்துவதற்கு உறுதி பூண்டுள்ளோம். ஹேக்கத்தான் கலாச்சாரம் சமீப காலங்களில் இந்தியாவில் அதிகரித்து வருவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். இது போன்ற சில ஹேக்கத்தான்களில் பங்கேற்கும் வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். இந்நிகழ்ச்சிகளில், தேசிய மற்றும் சர்வதேச பிரச்சினைகளுக்கு இளைஞர்கள் சிறப்பான தீர்வுகளை வழங்குவதை நான் கண்டிருக்கிறேன்.
தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளுடன் இத்துறையில் நாம் பணியாற்றிக் கொண்டு இருக்கிறோம். தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கு சர்வதேச களம் இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே எங்களுடைய லட்சியம். சர்வதேச சிறந்த நடைமுறைகளில் இருந்து அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியில் இருந்து வைபவ் உச்சி மாநாட்டை இந்தியா நடத்தியது.
ஒரு மாதத்திற்கு நடைபெற்ற இந்த உச்சிமாநாட்டில் அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகள் துறைகளிலிருந்து மிகவும் திறமையானவர்கள் கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட 23 ஆயிரம் பேர் இதில் கலந்து கொண்டனர். 230 விவாதங்கள் நடைபெற்றன. மிகவும் பயனுள்ள இந்த உச்சிமாநாடு அறிவியல் மற்றும் புதுமைகளின் எதிர்கால கூட்டணிக்கு அடித்தளம் அமைத்தது.
நண்பர்களே,
இந்தியா பணிபுரியும் முறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. நடக்கவே நடக்காது என்று நாம் நினைத்த விஷயங்கள் துரிதமாக நடந்து வருகின்றன. உங்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு துறையிலிருந்து சிறு உதாரணம் ஒன்றை நான் வழங்குகிறேன். முன்பெல்லாம், விண்வெளி பொறியாளர்களை ஐஐடிகள் உருவாக்கிய போது, அவர்களுக்கு வேலை வாய்ப்பை அளிப்பதற்கான உள்நாட்டு தொழில் சூழலியல் இல்லை. ஆனால் இன்று, நமது விண்வெளி துறையில் செய்யப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க சீர்திருத்தங்களின் காரணமாக, இந்திய திறமை களுக்கான வாய்ப்புக்கான கதவு திறக்கப்பட்டிருக்கிறது.
இதனால்தான் விண்வெளி தொழில்நுட்ப புது நிறுவனங்கள் தினமும் இந்தியாவுக்கு வந்து கொண்டிருக்கின்றன. இதுவரை யாரும் செல்லாத இடத்திற்கு உங்களில் சிலர் துணிச்சலுடன் செல்வீர்கள் என்று நான் உறுதியுடன் நம்புகிறேன். சிறப்பான மற்றும் புதுமையான பணிகள் பல்வேறு துறைகளில் நாடு முழுவதும் நடந்து வருகின்றன. "சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம்" என்ற கொள்கையில் நமது அரசு முழு அர்ப்பணிப்புடன் உள்ளது.
நம்முடைய சீர்திருத்தங்களில் இருந்து எந்த துறையும் விடுபடவில்லை. வேளாண்மை, அணுசக்தி, பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, நிதி, வங்கியியல் மற்றும் வரியியல் என்று பட்டியல் நீள்கிறது. 44 மத்திய தொழிலாளர் சட்டங்களை வெறும் நான்கு சட்டங்களாக மாற்றி தொழிலாளர் துறையில் மிகப்பெரிய சீர்திருத்தங்களை நாம் கொண்டு வந்திருக்கிறோம். நம்முடைய பெருநிறுவன வரி விகிதம் உலகத்திலேயே குறைவான விகிதங்களில் ஒன்றாகும்.
10 முக்கிய தொழில்துறைகளில் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு இந்திய அமைச்சரவை சில வாரங்களுக்கு முன் ஒப்புதல் அளித்தது. ஏற்றுமதிகள் மற்றும் உற்பத்தியை ஊக்குவிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டது. மின்கலம், மின்னணு, மருந்துகள், வாகனங்கள், தொலைதொடர்பு சூரியசக்தி மற்றும் இதர துறைகளுக்கு இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடினமான கொவிட் காலங்களில், மிக அதிக முதலீடுகளை இந்தியா பெற்றுள்ளது. இதில் பெரும்பாலான முதலீடு தொழில்நுட்பத் துறைக்கு வந்துள்ளது. நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக இந்தியாவை உலகம் பார்க்கிறது.
நண்பர்களே,
தற்சார்பு இந்தியாவாக உருவாகும் நமது கனவுக்கு அனைத்து ஐஐடிகள் இயக்கம் வலு சேர்க்கலாம். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் சில முக்கிய திருப்புமுனை கட்டங்களில் உலகெங்கிலுமுள்ள
இந்தியர்கள் நாட்டின் உறுதி மற்றும் திறமையின் மீது தங்களது நம்பிக்கையை வைத்தனர். புதிய இந்தியாவின் தூதுவர்களாக அவர்கள் மாறினர். இந்தியாவின் எண்ண ஓட்டங்களை உலகம் சரியாக புரிந்து கொண்டதற்கு முக்கிய காரணமாக அவர்கள் விளங்கினார்கள்.
நண்பர்களே,
இன்னும் இரண்டு வருடங்களில் தனது 75-வது ஆண்டு சுதந்திரத்தை இந்தியா கொண்டாட இருக்கிறது. இந்தியாவுக்கு திரும்ப வழங்குவதில் இன்னும் முனைப்புடன் செயல்படுமாறு அனைத்து ஐஐடி இயக்கத்தை நான் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் கற்ற கல்வி நிறுவனத்துக்கு நீங்கள் ஆற்றும் சேவைகள் பிரபலமானவை மற்றும் ஊக்கமளிப்பவை. உங்களுக்கு அடுத்து படிக்க வரும் மாணவர்கள் சரியான பணிப் பாதையை தேர்ந்தெடுப்பதற்கு, கல்வியிலும் தொழில் துறையிலும் நீங்கள் வழிகாட்டியாக இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியும். இன்றைக்கு அவர்களில் நிறைய பேர் சொந்த நிறுவனங்களை தொடங்க விரும்புகின்றனர். தங்களின் கடின உழைப்பு மற்றும் புதுமைகளின் மூலம் முத்திரையை பதிக்க முயற்சிக்கும் திறமையான மற்றும் நம்பிக்கை மிகுந்த இளைஞர்கள் அவர்கள்.
இந்த முயற்சிகளிலும் அவர்களுக்கு வழிகாட்ட நான் தற்போது உங்களை அழைக்கிறேன். நமது 75 ஆண்டுகால சுதந்திரத்தை எவ்வாறு நாம் பதிவு செய்யலாம் என்பது குறித்து உங்களது சிந்தனைகள் மற்றும் உள்ளீடுகளை பகிர்ந்து கொள்ளுமாறு நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். மை கவ் மூலமாகவோ அல்லது நரேந்திர மோடி செயலியின் மூலம் நேரடியாக என்னிடமோ உங்களது எண்ணங்களை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.
நண்பர்களே,
நம்முடைய இன்றைய செயல்கள் நாளைய உலகத்தை வடிவமைக்கின்றன. மறு கற்றல் மறு சிந்தனை மறு புதுமைகள் மற்றும் அனைத்து துறைகளிலும் மறு கண்டுபிடித்தல் ஆகியவை கொவிட்டுக்கு பிந்தைய உலகத்தின் நடைமுறைகளாக இருக்கப் போகின்றன. இவையும் பொருளாதார சீர்திருத்தங்களும் நமது உலகிற்கு புத்துணர்ச்சி அளிக்கும். வாழ்க்கையை எளிதானதாக்கி ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களிடையே நேர்மறை விளைவுகளை இவை உருவாக்கும். தொழில் மற்றும் கல்வி துறைக்கிடையேயான கூட்டணி மூலம் பல்வேறு புதுமைகள் பெருந்தொற்றின் போது எவ்வாறு வெளிவந்தன என்பதை நாம் அனைவரும் பார்த்தோம். புதிய நடைமுறைக்கு தேவையான தீர்வுகளை உலகம் இன்று எதிர்நோக்குகிறது. இதை முன்னெடுத்துச் செல்வதற்கு உங்களை விட சிறந்தவர் யார்? இன்றைக்கு ஐஐடிகளின் முன்னாள் மாணவர்கள் உலகெங்கும் தலைமை பதவிகளில் உள்ளனர். தொழில்துறை, கல்வித்துறை, கலைகள் மற்றும் அரசுகளில் உங்களது வலுவான வலைப்பின்னல் பரவியுள்ளது. அனைத்து இடங்களிலும் நீங்கள் நீக்கமற நிறைந்து இருக்கிறீர்கள். தினமும் இல்லாவிட்டால் கூட ஒவ்வொரு வாரமும் உங்களில் ஒருவர் உடனோ அல்லது பலருடனோ நான் உரையாடிக் கொண்டிருக்கிறேன். புதிய உலகத்துக்கு ஏற்ற தீர்வுகளை விவாதித்து, ஆலோசித்து உருவாக்குமாறு நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். இது மிகப்பெரிய பொறுப்பு தான், ஆனால் உங்களது தோள்களால் அதைத் தாங்க முடியும்.
இத்துடன், 'எதிர்காலம் தற்போது' என்று சரியாக பெயரிடப்பட்டுள்ள இந்த வருடத்தின் மாநாட்டுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்வாழ்த்துகள் மற்றும் நன்றி.
**********************
(Release ID: 1678605)
Visitor Counter : 316
Read this release in:
Assamese
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam