பிரதமர் அலுவலகம்

என்.எச்-19 வாரணாசி-பிரயாக்ராஜ் பிரிவில் ஆறு வழிச்சாலை விரிவாக்கத் திட்ட தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

Posted On: 30 NOV 2020 6:40PM by PIB Chennai

ஹர ஹர மகாதேவ்!

எனதருமை காசி வாழ் சகோதர, சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் வணக்கம். குறிப்பாக ராஜதலப், மிர்சாமுரத், கச்வா, கப்சேத்தி, ரோஹனியா, செவபுரி மண்டல விவசாயிகளுக்கு வணக்கம்.

உத்தரப் பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், துணை முதலமைச்சர் திரு கேசவ் பிரசாத் மவுர்யா, எனது நாடாளுமன்ற தோழர் பாய் ரமேஷ் சந்த், மற்றும் இங்கு கூடியிருக்கும் காசி வாழ் சகோதர, சகோதரிகளே, அனைவருக்கும் வணக்கம்.

தேவ் தீபாவளி மற்றும் குருநானக் தேவ் பிரகாஷோத்சவ்- ஒட்டி காசி மற்றொரு நவீன உள்கட்டமைப்பை பரிசாகப் பெறுகிறது. இது காசி மற்றும் பிரயாக்ராஜ் மக்களுக்குப் பயனளிக்கும். உங்கள் அனைவருக்கும் இதற்காக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மைதானத்தில் 2013-ல் நடைபெற்ற எனது முதல் பொதுக் கூட்டத்தை நான் நினைவு கூருகிறேன். இதன் வழியாக நான்கு வழிச்சாலை சென்றது. இன்று பாபா விஸ்வநாதரின் ஆசியால், இந்த நெடுஞ்சாலை ஆறு வழியாகியுள்ளது. இந்த நெடுஞ்சாலையில் உள்ள பிரச்சினைகள் பற்றி ஹாண்டியாவிலிருந்து ராஜதலப் செல்லும் மக்கள் அறிவார்கள். வாகன நெருக்கடியும், மிக மெதுவான போக்குவரத்தும் நடைபெற்று வந்தது. தில்லி மற்றும் இதர நகரங்களில் இருந்து வருபவர்களும் இந்த மார்க்கத்தில் பெரும் சிரமங்களை அனுபவித்து வந்தனர். இந்த 70 கிலோ மீட்டர் பயணம் இன்று வசதியாகவும், வேகமாகச் செல்லும் வகையிலும் மாறியுள்ளது. இந்த நெடுஞ்சாலையை அகலப்படுத்தியதுடன், காசிக்கும், பிரயாக்குக்கும் இடையிலான பயணம் தற்போது எளிதாகியுள்ளது. கும்ப மேளாவின் போது, இந்த நன்மைகள் கண்கூடாகத் தெரியும்.

சகோதர, சகோதரிகளே, நம்பிக்கை சார்ந்த இடமாக இருந்தாலும், வேறு இடமாக இருந்தாலும் மக்கள் எப்போதும் அங்கு செல்வதற்கு உரிய வசதிகளைப் பார்ப்பது வாடிக்கை. இத்தகைய வசதிகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களை ஊக்குவிக்கும். காசியில் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டுள்ள அழகுபடுத்துதல் மற்றும் சாலை வசதிகளின் பயன்களை தற்போது காண முடியும். வாரணாசி மற்றும் அருகாமை பகுதிகளில், போக்குவரத்து நெருக்கடிக்குத் தீர்வு காண அமைக்கப்பட்டுள்ள புதிய நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், சாலை விரிவாக்கம் ஆகிய ஏராளமான பணிகளை சுதந்திரத்துக்குப் பின்பு இதுவரை கண்டதில்லை. வாரணாசியின் சேவகன் என்ற முறையில், வாரணாசி மக்களின் பிரச்சினைகளைக் குறைத்து, அவர்களது வாழ்க்கையை சுமுகமாக்க நான் முயற்சி மேற்கொண்டுள்ளேன். கடந்த ஆறு ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. வேறு பல திட்டங்கள்  நடைபெற்று வருகின்றன. நகரத்தை விமான நிலையத்துடன் இணைக்கும் சாலை,வாரணாசியின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஒரு அடையாளமாகத் திகழ்கிறது. ரயில் நிலையத்தின் தொடர்பு சாலையும் மேம்படுத்தப்பட்டுள்ளது. வட்டச் சாலையின் இரண்டாம் கட்டப் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.இந்தப் பணி நிறைவடையும் போது, சுல்தான்பூர், ஆசம்கார்,காஜிப்பூர் வழியாகச் செல்லும் கனரக வாகனங்கள் நகரத்துக்குள் நுழையாமல் இந்த ஆறு வழிச்சாலையை நேரடியாக அணுகமுடியும். மற்ற நெடுஞ்சாலைப் பணிகளையும் வெகு விரைவில் முடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த அனைத்து நெடுஞ்சாலைப் பணிகளும் நிறைவடைந்த பின்னர், வாரணாசி, லக்னோ, ஆசாம்கார், கோரக்பூர் ஆகிய இடங்களுக்கான பயணம் மிகவும் வசதியானதாக மாறும்.

சகோதர, சகோதரிகளே, நல்ல சாலைகள், நல்ல ரயில்வே, குறைந்த கட்டணத்தில் சிறந்த விமானப் பயண வசதிகள் சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் அவசியமாகும். குறிப்பாக, ஏழைகள், சிறு தொழில் முனைவோர், நடுத்தரப் பிரிவினர் அதிக பயன்களைப் பெறுகின்றனர். கட்டுமானப் பணிகள் நடைபெறும் போது ஏராளமான மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. இந்தத் திட்டங்கள் முடிவடைந்து தயாராகும் போது, பயண நேரம், பணம், பிரச்சினைகளைக் குறைக்கும். கொரோனா காலத்திலும், இந்த உள்கட்டமைப்பு திட்டங்கள், தொழிலாளர் நண்பர்களுக்கு மிகப் பெரிய வேலைவாய்ப்பு அளிக்கக்கூடியவையாக மாறின.

சகோதர, சகோதரிகளே, உத்தரப்பிரதேசத்தில், யோகி ஆட்சி அமைந்ததிலிருந்து, உள்கட்டமைப்பு வளர்ச்சி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. முன்பு இந்த மாநிலத்தில் என்ன நிலை நிலவியது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இன்று, உத்தரப் பிரதேசம், எக்ஸ்பிரஸ் பிரதேசம் என அழைக்கப்படுகிறது. .பி.யில் பல்லாயிரக்கணக்கான கோடி மதிப்பில்சாலைத் தொடர்பு பணிகள் தொடர்பான ஐந்து மெகா திட்டங்கள் ஒரே சமயத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பூர்வாஞ்சல், புந்தேல்காண்ட் அல்லது மேற்கு உத்தரப் பிரதேசம் என ஒவ்வொரு மூலையும் விரைவுச் சாலைகளால் இணைக்கப்படுகின்றன. நாட்டின் இரண்டு நவீன பாதுகாப்பு தளவாட வளாகங்களில் ஒன்று உத்தரப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.

சகோதர, சகோதரிகளே, சாலைகள் மட்டுமின்றி, விமானத் தொடர்புகளும் மேம்பட்டுள்ளன. 3-4 ஆண்டுகளுக்கு முன்பு .பி.யில் இரண்டு பெரிய விமான நிலையங்கள் மட்டும் சிறப்பாக இயங்கி வந்தன.இன்று ஒரு டஜன் விமானநிலையங்கள் .பி.யில் தயாராகி வருகின்றன. வாரணாசி விமான நிலைய விரிவாக்கப் பணியும் நடைபெற்று வருகிறது. பிரயாக்ராஜில் விமானநிலைய கட்டுமானப் பணி வேகமாக நடைபெற்று புதிய வரலாறு படைத்துள்ளதுமேலும், குஷிநகர் விமான நிலையமும் சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. நொய்டாவில், ஜேவர் சர்வதேச பசுமைக்கள விமானநிலையப் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.

நண்பர்களே, இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்படும் நவீன சாலை வசதிகளால், நமது விவசாயிகளும், பண்ணைத் தொழிலும் வெகுவாகப் பயனடைந்துள்ளன. பல ஆண்டுகளாக, சேமிப்பு கிடங்குகள், பதனக் கிடங்குகள், கிராமங்களில் நவீன சாலைகள் போன்ற உள்கட்டமைப்பு வசிகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விசாயிகளுக்கான ஒரு லட்சம் கோடி ரூபாய் சிறப்பு நிதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக, நகரும் குளிர்பதனக் கிடங்கு அதாவது கிசான் ரயில் தொடங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் புதிய சந்தைகளைப் பெறுவதும், பெரிய நகரங்களை அணுகுவதும் அதிகரித்துள்ளது. இவையெல்லாம் அவர்களது வருமானத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க, 2 ஆண்டுகளுக்கு முன்பு சண்டாவ்லியில், அறிமுகம் செய்யப்பட்ட கருப்பரிசி, விவசாயிகள் அரசின் முயற்சிகளால் எவ்வாறு நன்மை அடைந்தனர் என்பதற்கு சான்றாகும்.   கடந்த ஆண்டு, ஒரு விவசாயக் குழு அமைக்கப்பட்டு, காரீப் பருவத்தில் விளைவிக்க இந்த அரிசி சுமார் 400 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதுசாதாரண அரிசி கிலோ ரூ.35 முதல் ரூ.40க்கு விற்கும்போது, கருப்பரிசி கிலோ ரூ.300க்கு விற்கப்பட்டது. முதல் முறையாக, இந்த அரிசி ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதுவும் கிலோ ரூ.800 விலையில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

சகோதர, சகோதரிகளே, இந்திய வேளாண் தயாரிப்புகள் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது. வேளாண் சீர்திருத்தங்கள், விவசாயிகளுக்கு விருப்பத்துக்கு ஏற்ற வகையில், புதிய வாய்ப்புகளையும், புதிய சட்டப் பாதுகாப்பையும் வழங்கியுள்ளன. அதே நேரத்தில், பழைய முறையும் தொடர்கிறது. ஒருவர் விரும்பினால் அதில் தொடரலாம்முன்பு சந்தைக்கு வெளியே விற்றால் சட்ட விரோதம் , ஆனால் தற்போது, மண்டிக்கு வெளியே நடக்கும் விற்பனை மீது சிறு விவசாயியும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.

கொள்கைகள், சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை அரசு உருவாக்குகிறது. முன்பு அரசின் முடிவுகளுக்கு ஆதாரபூர்வமாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டன, ஆனால் தற்போது, வெறும் சந்தேகங்களின் அடிப்படையில் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. ஏற்கனவேநடக்காதது பற்றியும், இனிமேல் நடக்க வாய்ப்பு இல்லாத விஷயம் பற்றியும் சமூகத்தில் குழப்பம் பரப்பப்படுகிறதுஇவர்கள் எல்லாம் பல தசாப்தங்களாக விவசாயிகளை தொடர்ச்சியாக ஏமாற்றியவர்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்.

சகோதர, சகோதரிகளேவிவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால், கொள்முதல் குறைந்த அளவில் நடந்ததுஇந்த மோசடி பல ஆண்டுகளாக தொடர்ந்தது. விவசாயிகள் பெயரில், கடன் தள்ளுபடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் அது சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு சென்றடையவில்லைவிவசாயிகள் பெயரில் பெரிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஒரு ரூபாயில் 15 பைசாதான், விவசாயியைச் சென்றடைகிறது என முந்தைய ஆட்சியாளர்களே நம்பினர். இது திட்டங்களின் பெயரில் நடந்த மிகப் பெரிய மோசடியாகும். கடந்த காலம் முழுவதும் மோசடிகள் நிறைந்திருந்த போது, இரண்டு விஷயங்கள் மட்டும் இயல்பாக இருந்தனமுதலாவது, அரசின் வாக்குறுதிகள் பற்றி விவசாயிகள் சந்தேகத்துடன் இருந்தது. இரண்டாவது  வாக்குறுதியை மீறுபவர்கள், பொய்யைப் பரப்ப வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாயினர். அதைத்தான் இப்போதும் அவர்கள் செய்து வருகின்றனர்மத்திய அரசின் சாதனைகளைப் பார்க்கும்போது, உண்மை தானாக வெளிவரும்.

சகோதர, சகோதரிகளேயூரியாவின் கள்ளச் சந்தையை நிறுத்தி, விவசாயிகளுக்குத் தேவையான யூரியா வழங்கப்படும் என அளித்த வாக்குறுதியை அரசு நிறைவேற்றியுள்ளது. சுவாமிநாதன் ஆணையம் பரிந்துரைப்படி, உற்பத்தி விலையை விட 1.5 மடங்கு குறைந்தபட்ச  ஆதரவு விலை அளிக்கப்படும் என்ற வாக்குறுதியையும் அரசு நிறைவேற்றியிருக்கிறது. இந்த வாக்குறுதி, இது விவசாயிகளின் வங்கி கணக்கை சென்றடைந்துள்ளது.

2014ம் ஆண்டுக்கு முந்தைய 5 ஆண்டுகளில், விவசாயிகளிடமிருந்து ரூ.650 கோடி அளவுக்கு மட்டுமே பருப்பு கொள்முதல் செய்யப்பட்டது. அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.49,000 கோடிக்கு பருப்புகள் கொள்முதல் செய்யப்பட்டன. இது 75 மடங்கு உயர்வு. 2014ம் ஆண்டுக்கு முந்தைய 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடிக்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்த 5 ஆண்டுகளில், ரூ.5 லட்சம் கோடிக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இது இரண்டரை மடங்கு அதிகமாகும். இதேபோல, 2014ம் ஆண்டுக்கு முந்தைய 5 ஆண்டுகளில், கோதுமை ரூ.1.5 லட்சம் கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டது. அதற்கு பிந்தைய 5 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் கோடிக்கு கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது 2 மடங்கு அதிகம். குறைந்தபட்ச ஆதரவு விலையும், மண்டிகளும் ஒழிக்கப்படக்கூடும் என்றால், அரசு இவ்வளவு செலவு செய்யுமா? என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். மண்டிகள் நவீன மயமாக்கத்துக்கு, அரசு கோடிக்கணக்கில் செலவு செய்கிறது என்பதையும் பார்க்க வேண்டும்.

 

பிரதமரின் கிஷான் சம்மான் நிதி பற்றி கேள்வி எழுப்புபவர்கள், தேர்தலை முன்னிட்டு இந்த நிதி வழங்கப்படுவதாக விமர்சித்தனர். தேர்தலுக்குப்பின் இந்தப் பணத்தை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் என அவர்கள் வதந்தி பரப்பினர்எதிர்க்கட்சி ஆளும் ஒரு மாநிலத்தில், அரசியல் நோக்கம் காரணமாக, இந்தத் திட்டத்தின் பயன்களை விவசாயிகள் பெற அனுமதிக்கப்படவில்லை. அரசின் உதவிகள், 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகின்றன. இதுவரை, விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி சென்றடைந்துள்ளது.

ஆண்டாண்டு காலமாக நடந்து வந்த  மோசடிகள்  மக்களை சந்தேகம் அடையச் செய்கிறது. தற்போது மோசடி என்பது அறவே இல்லை  கங்கை நீரை போன்ற தூய்மையான நோக்கத்துடன் ஒவ்வொரு வேலையும் செய்யப்படுகிறது. சந்தேகத்தின் அடிப்படையில் மாயத் தோற்றத்தை பரப்புபவர்கள், மக்கள் முன்பு தொடர்ந்து அம்பலப்படுத்தப்படுகின்றனர்அவர்களின் பொய்களை விவசாயிகள் புரிந்து கொள்ளும்போது, மற்றொரு விஷயம் பற்றி அவர்கள் பொய்யை பரப்பத் தொடங்குகின்றனர்கவலைப்படும் விவசாய சமூகத்துக்கு  அரசு தொடர்ச்சியாக பதில் அளித்து வருகிறது. வேளாண் சீர்திருத்தம் பற்றி இன்று சந்தேகப்படும் விவசாயிகள், எதிர்காலத்தில் இதே சீர்திருத்தத்தைப் பின்பற்றி தங்கள் வருமானத்தை அதிகரித்துக் கொள்வார்கள் என்பது எனது உறுதியான நம்பிக்கையாகும்.

கடைசியாக, இந்த நவீன நெடுஞ்சாலைத் திட்டத்துக்காக நான் வாழ்த்து தெரிவிக்கிறேன். காசியை மேம்படுத்தும் நமது முயற்சி தொடரும். எனக்கு வாரணாசியில் பல்வேறு நிகழ்ச்சிகள் உள்ளன. அங்கு பல்வேறு விஷயங்கள் பற்றி நான் விரிவாகப் பேசுவேன். கொரோனா காரணமாக, நான் தாமதமாக வந்துள்ளேன். ஆனால், உங்களைச் சந்தித்த பின்னர் நான் சக்தி பெற்றுள்ளேன். உங்களது வாழ்த்துகளுடன், நான் மேலும் உழைப்பதற்கு புத்துணர்ச்சி பெற்றுள்ளேன். நீங்கள் பெருமளவில் இங்கு வந்திருப்பது குறித்து நான் நன்றி தெரிவிக்கிறேன். பாரத் மாதாவுக்கு ஜே!

நன்றிகள் பல!

***(Release ID: 1677991) Visitor Counter : 15