பிரதமர் அலுவலகம்

லக்னோ பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு நிறுவன தின விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 25 NOV 2020 9:02PM by PIB Chennai

வணக்கம்!

மத்திய அமைச்சரவையில் எனது மூத்த சகாவும், லக்னோ நாடாளுமன்ற உறுப்பினருமான திரு ராஜ்நாத் சிங் அவர்களே, உத்தரப் பிரதேச முதல்வர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, துணை முதல்வர் டாக்டர் தினேஷ் சர்மா அவர்களே, உயர்கல்வி இணை அமைச்சர் திருமதி நீலிமா கட்டியார் அவர்களே, உத்தரப் பிரதேச அரசின் அமைச்சர்களே, லக்னோ பல்கலைக்கழக துணைவேந்தர் திரு அலோக் குமார் ராய் அவர்களே, பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்களே, மாணவர்களே, தாய்மார்களே மற்றும் பெரியோர்களே,

நூற்றாண்டை நிறைவு செய்யும் லக்னோ பல்கலைக்கழகத்தின் குடும்பத்திற்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள். இந்த நூறு வருடங்களில் பல்வேறு சாதனைகள் நடந்தேறியுள்ளன. நூற்றாண்டு நினைவு நாணயத்தையும், இந்திய தபால் துறையால் வெளியிடப்பட்ட பல்கலைக்கழக நூற்றாண்டு சிறப்பு தபால் தலை மற்றும் உரையையும் வெளியிடும் வாய்ப்பை பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

நண்பர்களே,

ஒன்றாம் எண் வாயிலுக்கு அருகில் இருக்கும் ஒரு அரச மரத்தைப் பற்றி என்னிடம் கூறினார்கள். கடந்த 100 ஆண்டுகளாக இப்பல்கலைகழகத்தின் பயணத்தை அந்த மரம் கண்டு வருவதாக எனக்கு கூறப்பட்டது. திறன்மிக்க பலர் இந்த பல்கலைக்கழகத்திலிருந்து உலகெங்கும் சென்றிருப்பதை இந்த மரம் கண்டிருக்கிறது. இங்கிருந்து சென்றவர்கள் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களாக பதவி வகித்து இருக்கிறார்கள். அறிவியல், நீதி, அரசியல், நிர்வாகம், கல்வி, இலக்கியம், கலாச்சாரம், விளையாட்டு என ஒவ்வொரு துறையிலும் திறன் மிக்கவர்களை லக்னோ பல்கலைக்கழகம் செதுக்கி இருக்கிறது. இப்பல்கலைக்கழகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் குரல் எதிரொலித்திருக்கிறது. நாம் அரசியல் சாசன தினத்தை கொண்டாடும் போது நேதாஜி சுபாஷ் அவர்களின் அறைகூவல் நமக்குப் புதிய உத்வேகத்தைத் தரும்.

நண்பர்களே,

லக்னோ பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய எண்ணற்றோரை நான் மதிக்கிறேன். பலர் பல்வேறு வகைகளில் இந்த நூற்றாண்டு பயணத்தில் பங்காற்றி இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். லக்னோ பல்கலைக்கழகத்தில் இருந்து வந்த நபர்களுடன் உரையாட எனக்கு வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் அவர்களின் கண்களில் புதிய ஒளியை நான் கண்டிருக்கிறேன். அவர்கள் இங்கு செலவிட்ட நாட்களும், கற்ற கல்வியும், அடைந்த ஞானமும், பருகிய தேநீரும், உண்ட உணவுகளும் இன்னும் அவர்களின் மனதில் பசுமையாக இருக்கின்றன. காலங்கள் மாறினாலும் லக்னோ பல்கலைக் கழகத்தின் உணர்வு மாறவில்லை.

நண்பர்களே,

இன்று தேவ் பிரபோதினி ஏகாதசி ஆகும். ஒரு வகையில், கடவுளர்கள்  இன்று துயில் எழுந்திருக்கிறார்கள். நாட்டு மக்கள் எவ்வாறு கொரோனாவின் சவாலை பொறுமையுடன் எதிர்கொண்டு, நாட்டை முன்னெடுத்து செல்கிறார்கள் என்பதை இன்றைக்கு நாம் பார்க்கிறோம்.

நண்பர்களே,

நாட்டை உற்சாகப்படுத்தும் மற்றும் ஊக்கப்படுத்தும் மக்களை இது போன்ற கல்வி நிறுவனங்கள் உருவாக்குகின்றன. லக்னோ பல்கலைக்கழகம் இப்பணியை தசாப்தங்களாக செய்து வருகிறது. ஆசிரியர்களும் மாணவர்களும் கொரோனாவுக்கு இடையிலும் சமூகத்திற்கு பல்வேறு தீர்வுகளை வழங்கி இருக்கிறார்கள்.

நண்பர்களே,

லக்னோ பல்கலைக்கழகத்தின் எல்லைகளை விரிவுபடுத்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக எனக்கு கூறப்பட்டிருக்கிறது. பல்வேறு ஆய்வு மையங்களையும் இப்பல்கலைக்கழகம் அமைத்திருக்கிறது. நான் சிலவற்றை கூற விரும்புகிறேன். நீங்கள் இதை விவாதிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். உள்ளூர் கலைகள் மற்றும் பொருட்களைப் பற்றிய படிப்புகளை இப்பல்கலைக்கழகம் வழங்க வேண்டும். இந்தப் பொருட்களைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும். லக்னோ 'சிகன்காரி', மொராதாபாத்தின் பித்தளை பாத்திரங்கள், அலிகார் பூட்டுகள், பதோஹி கம்பளங்கள் ஆகியவற்றை சர்வதேச அளவில் போட்டியிட செய்வதற்கான மேலாண்மை, சந்தைப்படுத்துதல் மற்றும் உத்தியைப் பற்றிய படிப்புகள் பல்கலைகழகத்தால் வழங்கப்பட வேண்டும். 'ஒரு மாவட்டம், ஒரு பொருள்' என்னும் சிந்தனை வெற்றி பெற இது உதவும். கலைகள், கலாச்சாரம், ஆன்மிகம் ஆகிய தலைப்புகளோடு தொடர்ந்து தொடர்பில் இருப்பது அவை சர்வதேச அளவில் சென்றடைய உதவும்.

நண்பர்களே,

பல்கலைக்கழகம் என்பது உயர் கல்விக்கான மையம் மட்டுமே அல்ல. பெரிய இலட்சியங்கள் மற்றும் இலக்குகளை அடைவதற்கான ஊக்கத்தையும் உற்சாகத்தையும் வழங்கும் ஒரு மிகப்பெரிய இடம் அது. நமது குணநலன்களை கட்டமைப்பதற்கும், நம்முடைய மன வலிமையை தட்டி எழுப்புவதற்குமான இடம் அது. மாணவர்களின் முழு திறனையும் வெளிக்கொண்டு வருவதில் ஆசிரியர்களுக்கும் ஒரு மிகப் பெரிய பங்கு உண்டு.

ஆனால் நண்பர்களே, நீண்டகாலமாக, நமது திறமையை முழுவதும் பயன்படுத்துவதில் நமக்கு சிக்கல் இருந்து வந்தது. இதற்கு நான் ஒரு உதாரணம் கூறுகிறேன். ரே பரேலியில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலை லக்னோவில் இருந்து வெகு தொலைவில் இல்லை. பல்லாண்டுகளாக, சிறு பொருட்கள் மற்றும் கபுர்தலாவில் தயாரிக்கப்பட்ட பெட்டிகளுக்குத் தேவையான சில இணைப்புகளைத் தவிர, இந்த தொழிற்சாலைக்காக செய்யப்பட்ட முதலீடு பெரிதாக பயன்படுத்தப்படவில்லை. ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்வதற்கான திறன் இந்த தொழிற்சாலையில் இருந்த போதிலும், அதை முழுமையாகப் பயன்படுத்தியதே இல்லை. 2014-இல் இது மாறியது, தொழிற்சாலையின் முழு திறனும் தற்போது பயன்படுத்தப்பட்டு, நூற்றுக்கணக்கான பெட்டிகளை இன்றைக்கு இது தயாரிக்கிறது.

நண்பர்களே,

திறமைகளைப் போன்றே, நம்பிக்கையும், எண்ணமும் முக்கியம். நேர்மறை சிந்தனையையும், அணுகலுக்கான சாத்தியக்கூறுகளையும் எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும். முன்னொரு காலத்தில் உர தயாரிப்புக்காக நாட்டில் பல்வேறு தொழிற்சாலைகள் இருந்த போதிலும், அதிக அளவில் உரத்தை இந்தியா இறக்குமதி செய்து கொண்டிருந்தது. இதற்கு காரணம் அவற்றின் முழு திறனும் பயன்படுத்தப்படவில்லை. எனது அரசு அமைந்த பின்னர் இதைப்பற்றி அதிகாரிகள் கூறியதை கேட்டு நான் அதிர்ந்தேன்.

நண்பர்களே,

கொள்கை முடிவுகளை ஒன்றன் பின் ஒன்றாக நாங்கள் எடுத்த காரணத்தால் உரத் தொழிற்சாலைகள் இன்று தமது முழு திறனுடன் இயங்குகின்றன. 100 சதவீத வேப்பம் பூச்சோடு, உரங்களின் கள்ள சந்தைக்கு எதிரான தீர்வை நாம் கண்டுபிடித்தோம். இன்றைக்கு நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகளுக்கு போதிய அளவில் உரம் கிடைக்கிறது.

நண்பர்களே,

பழைய மற்றும் மூடப்பட்ட உரத் தொழிற்சாலைகளுக்கு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம்

 நாங்கள் புத்துயிர் அளித்து வருகிறோம். கோரக்பூர், சிந்திரி மற்றும் பரவுணி ஆகிய இடங்களில் உள்ள உரத் தொழிற்சாலைகள் இன்னும் சில வருடங்களில் மீண்டும் இயங்கத் தொடங்கும். இதற்காக ஒரு மிகப்பெரிய எரிவாயு குழாய் கிழக்கு இந்தியாவில்  பதிக்கப்படுகிறது.

நண்பர்களே,

உங்களுக்கு உற்சாகம் கொடுக்காமல், உங்களது ஊக்கத்தை குலைக்கும் பல நபர்களை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் காண்பீர்கள். ஆனால் உங்கள் மீது நம்பிக்கை வைத்து, நீங்கள் வாழ்க்கையில் முன்னேறி செல்ல வேண்டும். உங்களது லட்சியங்களை அடைவதற்கான முயற்சிகளை ஒருபோதும் கைவிடாதீர்கள். இதற்கு நான் இன்னொரு உதாரணம் கூறுகிறேன்.

நண்பர்களே,

குஜராத்தின் முதல்வராக நான் பதவியேற்ற பிறகு காதியை நான் மிகவும் ஊக்குவிக்கத் தொடங்கினேன். ஆனால், காதி சலிப்பளிக்கும் விஷயம் என்றும் இளைஞர்களிடம் அதை பிரபலப் படுத்த முடியாது என்றும் பலர் கூறினர். நானோ நேர்மறை சிந்தனையுடன் ஒரு புதிய ஆரம்பத்தை உருவாக்கினேன். போர்பந்தரில் காந்தி ஜெயந்தி அன்று, நாகரீக அணிவகுப்பை மாணவர்களின் உதவியுடன் நடத்தி காதியை பிரபலப்டுத்தினோம். காதியை நவீனமயம் ஆக இது ஆக்கியது. கடந்த ஆறு ஆண்டுகளில், அதற்கு முந்தைய 20 ஆண்டுகளில் விற்கப்பட்டதை விட அதிக காதி விற்பனையாகி உள்ளது.

நண்பர்களே,

சிந்தித்தல் திறன் மற்றும் சுய பரிசோதனை ஆகியவை இன்றைய காலகட்டத்தில் குறைந்து வருகின்றன. டிஜிட்டல் சாதனங்களும், தளங்களும் நமது நேரத்தை அபகரித்துக் கொள்கின்றன. இத்தகைய அனைத்து வகையான கவனச் சிதறல்களுக்கிடையே உங்களுக்காக நேரத்தை நீங்கள் ஒதுக்க வேண்டும்.

நண்பர்களே,

மாணவர் வாழ்க்கை என்பது விலைமதிப்பில்லாதது, அது மீண்டும் கிடைக்காது. எனவே உங்களது மாணவர் வாழ்க்கையை நீங்கள் அனுபவிக்க வேண்டும். தற்போது உங்களுக்கு நண்பர்களாக கிடைப்பவர்கள் என்றைக்கும் நண்பர்களாக இருப்பார்கள். நீங்கள் எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும், எந்த பணியை அல்லது தொழிலை செய்தாலும் உங்களது பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்களுக்கு உங்களது வாழ்வில் முக்கிய பங்கு உண்டு. நிறைய நண்பர்களை உருவாக்கிக் கொள்ளுங்கள், நட்புக்கு உதாரணமாக இருங்கள்.

நண்பர்களே,

நாட்டின் ஒவ்வொரு இளைஞரும் தன்னை பற்றி அறிந்துகொண்டு, பரிசோதித்துக்கொள்ள வேண்டும் என்பதே புதிய கல்விக் கொள்கையின் நோக்கம் ஆகும் இதை மனதில் வைத்தே, ஆரம்ப கல்வி முதல் முனைவர் பட்டம் வரை மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களைத் தாங்களே பரிசோதித்துக் கொள்வதற்கான கருவியாக தேசிய கல்விக் கொள்கை விளங்கும். மாணவர்களிடையே தன்னம்பிக்கை மற்றும் நெகிழ்வுத் தன்மை ஆகியவற்றை இந்த புதிய கொள்கை வழங்கும். மரபுகளை உடைத்து, மாற்றத்தைப் பற்றி கவலைப்படாமல் புதிதாக சிந்திக்குமாறு மாணவர்களை நான் கேட்டுக் கொள்கிறேன். புதிய கொள்கையைப் பற்றி விவாதித்து அதை செயல்படுத்த உதவுமாறும் மாணவர்களையும், ஆசிரியர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

நண்பர்களே,

நமது நாடு சுதந்திரம் பெற்ற நூற்றாண்டு 2047-ஆம் ஆண்டில் கொண்டாடப்படும். நாடு சுதந்திர தின நூற்றாண்டை கொண்டாடும் போது லக்னோ பல்கலைக்கழகம் எந்த நிலையில் இருக்கும் என்பதை விவாதிக்கும் நோக்கில் பல்வேறு குழுக்களை அமைக்குமாறு இப்பல்கலைக்கழகத்தின் கொள்கையை வடிவமைப்பாளர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.

2047-க்குள் நாட்டுக்கு தன்னால் என்ன வழங்க முடியும் என்பதை லக்னோ பல்கலைக்கழகம் சிந்திக்க வேண்டும். 2047-ஐ மனதில் வைத்துக்கொண்டு தனி மனிதராகவும், பல்கலைக்கழகமாகவும் நாட்டுக்கு நம்மால் என்ன பங்காற்ற முடியும் என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும். பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு உங்களை சந்திக்க வாய்ப்பளித்ததற்காக எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி!!

குறிப்பு: இது, பிரதமர் இந்தியில் ஆற்றிய உரையின், உத்தேசமான மொழிபெயர்ப்பாகும்.

*******************

 



(Release ID: 1677212) Visitor Counter : 153