பிரதமர் அலுவலகம்

தேசிய தூய்மை மையத் திறப்பு விழாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆற்றிய உரை

Posted On: 08 AUG 2020 6:01PM by PIB Chennai

இன்று ஒரு வரலாற்றுப்பூர்வமான நாள். இந்த நாள், அதாவது ஆகஸ்ட் 8, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது. 1942-ஆம் ஆண்டின், இந்த நாளில் தான், மகாத்மா காந்தியின் தலைமையில் சுதந்திரத்துக்கான மிகப்பெரும் இயக்கம் தொடங்கப்பட்டது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக, “வெள்ளையனே வெளியேறு” என்ற முழக்கம் எழுப்பப்பட்டது. இந்த வரலாற்றுப்பூர்வ நாளில், ராஜ்காட் அருகே தேசிய தூய்மை இந்தியா மையம் திறக்கப்படுவது மிகவும் பொருத்தமானதாக உள்ளது. மகாத்மா காந்தியின் தூய்மைக்கான போராட்டத்துக்கு 130 கோடி இந்தியர்களின் அர்ப்பணிப்பாக இந்த மையம் அமைந்துள்ளது.

நண்பர்களே,

சுயாட்சியின் பிரதிபலிப்பை தூய்மையில் காண விரும்பியவர் வணக்கத்துக்குரிய மகாத்மா காந்தி அவர்கள். சுயாட்சியின் கனவை நிறைவேற்றுவதற்கான வழியாக சுற்றுப்புறம் சுகாதாரமாக இருக்கவேண்டும் என்று அவர் கருதினார். தூய்மை மற்றும் சுற்றுப்புற சுகாதாரம் குறித்து மகாத்மாவின் வலியுறுத்தலை எடுத்துரைக்கும் வகையிலான நவீன நினைவுச்சின்னம், தற்போது ராஜ்காட்டுடன் தொடர்பில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

நண்பர்களே,

தூய்மை குறித்த மகாத்மா காந்தியின் சிந்தனைகளை தேசிய தூய்மை மையம் தாங்கி நிற்கிறது. மேலும், அதே கொள்கைக்கான இந்தியர்களின் உறுதியான தீர்மானமும் ஒரே இடத்தில் அமைந்துள்ளது. சிறிது நேரத்துக்கு முன்பு, இந்த மையத்துக்குள் இருந்த போது, கோடிக்கணக்கான இந்தியர்களின் முயற்சிகளைப் பார்த்து, அவர்களுக்கு மரியாதை செலுத்துவதைப் போன்று உணர்ந்தேன். 6 ஆண்டுகளுக்கு முன்பு, செங்கோட்டையின் கோபுரத்தில் தொடங்கிய பயணத்தின் நினைவுகளும், படங்களும் எனது கண்கள் முன்பு தோன்றின.

கோடிக்கணக்கான நண்பர்கள், ஒவ்வொரு எல்லையையும் உடைத்தெறிந்து, ஒவ்வொரு கட்டுப்பாட்டையும் தாண்டி, தூய்மை இந்தியா இயக்கத்தை உருவாக்க இணைந்ததைப் போன்றே, இந்த மையத்திலும் அதே உணர்வு இணைந்துள்ளது. இந்த மையத்தில், தூய்மைக்கான நமது பயணம், சத்தியாகிரகப் போராட்டத்தின் உந்துதலுடன் நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு வரும் குழந்தைகள் மத்தியில், தூய்மைக்கான ரோபோ, மிகவும் பிரபலமடையும் என்பதையும் நான் உணர்ந்தேன். நண்பரைப் போன்று, அவர்களுடன் ரோபோ பேசுகிறது. தற்போது, நாட்டிலும், உலகிலும் உள்ள ஒவ்வொருவரும், சுற்றுப்புறத் தூய்மையின் கொள்கைகளுடன் அதே இணைப்பை அனுபவிப்பார்கள். இந்தியாவின் புதிய தோற்றத்தை வடிவமைத்து, புதிய ஊக்குவிப்பை ஏற்படுத்துவார்கள்.

நண்பர்களே,

இன்றைய உலகில், காந்திஜி அவர்களை விட மிகப்பெரும் ஊக்குவிப்பு எதுவும் இருக்க முடியாது. காந்தியின் கொள்கைகளையும், தத்துவங்களையும் ஏற்றுக் கொள்ள ஒட்டுமொத்த உலகமும் முன்வருகிறது. கடந்த ஆண்டில், காந்திஜி-யின் 150-வது பிறந்த தினம், உலகம் முழுவதும் மிகப்பெரும் அளவில் கொண்டாடப்பட்டது. இது இதுவரை இல்லாதது! வைஷ்ணவன் என்போன் யாரென கேட்பின்” (‘Vaishnav jana to tene kahiye’) என்ற காந்திஜிக்கு பிடித்த பாடலை, பல்வேறு நாடுகளிலும் பாடகர்களும், இசைக்கலைஞர்களும் பாடினர். இந்தப் பாடலை இந்திய மொழியில் மிகவும் அற்புதமாகப் பாடி, சாதனை படைத்தனர். உலகின் மிகப்பெரும் நாடுகளில் காந்தியின் போதனைகளும், கொள்கைகளும் நினைவுகூரப்பட்டன. ஐநா தலைமையகத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரே நூல் மூலம், ஒட்டுமொத்த உலகையும், ஒரே பந்தமாக காந்தி அவர்கள் கட்டியுள்ளதைப் போன்று தோன்றியது.

நண்பர்களே,

காந்தியை ஏற்றுக் கொள்வதும், அவரது பிரபலமும் காலத்தையும், இடத்தையும் கடந்து நீடிக்கிறது. எளிய முறைகள் மூலம் இதுவரை இல்லாத மாற்றத்தை கொண்டு வரும் அவரது திறனே இதற்கு ஒரு காரணம். மிகவும் பலம்வாய்ந்த ஆட்சியாளரிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கான வழி, தூய்மையிலும் இருக்கிறது என்று உலகில் யாராவது சிந்தித்துள்ளார்களா? காந்தி அவர்கள் இதனை சிந்தித்ததோடு மட்டுமல்லாமல், சுதந்திர உணர்வுடன் இணைத்து மிகப்பெரும் இயக்கமாக மாற்றினார்.

நண்பர்களே,

 “உறுதிக்கும், தூய்மைக்கும் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட மக்களால் மட்டுமே சுயாட்சியைக் கொண்டுவர முடியும்,” என்று காந்தியடிகள் கூறுவார். தூய்மைக்கும், சுயாட்சிக்கும் இடையேயான இணைப்பை காந்தி அவர்கள் நம்ப வைத்துள்ளார். ஏனெனில், சுகாதாரமற்ற சூழல் இருந்தால், சிலருக்கு அது மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, ஏழைகளையும் பாதிக்கச் செய்யும் என்று அவர் நம்பினார். சுகாதாரமற்ற சூழ்நிலைகள், ஏழைகளிடமிருந்து உடல் பலம் மற்றும் மனவலிமையை எடுத்து விடும். இந்தியாவை மிகவும் மோசமான நிலையில் வைத்திருக்கும் வரை, இந்திய மக்கள் மத்தியில் தன்னம்பிக்கையை ஏற்படுத்திவிட முடியாது என்று காந்தி தெரிந்து வைத்திருந்தார். பொதுமக்கள் மத்தியில் தன்னம்பிக்கை ஏற்படாவிட்டால், சுதந்திரத்துக்காக அவர்களால் எவ்வாறு போராட முடியும்? எனவே, தென்ஆப்பிரிக்கா முதல் சாம்பரன் மற்றும் சபர்மதி ஆஷ்ரமம் வரை, தனது இயக்கத்தின் மிகப்பெரும் கருவியாக சுகாதாரத்தை உருவாக்கினார்.

நண்பர்களே,

மகாத்மா காந்தியின் உந்துதல் மூலம், நாட்டின் ஒவ்வொரு மூலையிலும்  தூய்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் லட்சக்கணக்கானோர், தங்களது வாழ்க்கையின் இலக்காக தூய்மை இந்தியா இயக்கத்தை உருவாக்கியுள்ளனர். இதன் காரணமாகவே, 60 மாதங்களில், சுமார் 60 கோடி இந்தியர்கள் கழிவறை வசதியை பயன்படுத்துகின்றனர். மேலும், தற்போது தன்னம்பிக்கை பெற்றவர்களாக உள்ளனர். இதன் காரணமாக, நாட்டில் உள்ள சகோதரிகள், மரியாதை, பாதுகாப்பு மற்றும் வசதிகளைப் பெற்றுள்ளனர்; நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மகள்கள், இடைவிடாது படிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையைப் பெற்றுள்ளனர்; லட்சக்கணக்கான ஏழைக் குழந்தைகளுக்கு நோய்கள் வராமல் தடுக்க முடிகிறது. இதற்கும் மேலாக, கோடிக்கணக்கான தலித்கள், சமூகத்தில் வறிய நிலையில் இருக்கும் பிரிவினர், புறக்கணிக்கப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு சமத்துவ சமூகம் குறித்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

நண்பர்களே,

தூய்மை இந்தியா இயக்கம், நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதன் மிகப்பெரும் பலத்தை, நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்க்கையில் காண முடியும். சமூகம் என்ற அடிப்படையில், நமது சமூக உணர்வு மற்றும் நமது செயல்பாடுகளில் நிரந்தர மாற்றத்தை தூய்மை இந்தியா இயக்கம் கொண்டு வந்துள்ளது. நமது கைகளை நாம் அடிக்கடி கழுவ வேண்டும். அடிக்கடி எச்சில் துப்புவதைத் தவிர்க்க வேண்டும். குப்பைகளை அதற்கான இடத்தில் வீச வேண்டும் – இவை அனைத்தையும் சாதாரண இந்தியர்களுக்கு நம்மால் எளிதிலும், மிகவும் வேகமாகவும் எடுத்துரைக்க முடியும். எந்தப் பகுதியிலும் குப்பைகளைப் பார்த்த பின்னர், அதனை ஏற்கும் மனப்பக்குவத்திலிருந்து நாடு வெளியேறி வருகிறது. தற்போது வீடுகளிலும் அல்லது சாலைகளிலும் குப்பைகளை வீசுவோர் கண்டிக்கப்படுகிறார்கள். இந்தப் பணியை யார் மிகச் சிறப்பாக செய்கிறார்கள்? நமது குழந்தைகள், நமது வளர்இளம் பருவத்தினர் மற்றும் நமது இளைஞர்கள்!

நண்பர்களே,

கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் தனிப்பட்ட மற்றும் சமூக அடிப்படையிலான சுகாதாரம் குறித்து நாட்டில் உள்ள குழந்தைகள் மத்தியில் எழுந்துள்ள விழிப்புணர்வின் மூலம், நாம் மிகப்பெரும் அளவில் பயனடைந்து வருகிறோம். கொரோனா போன்ற பெருந்தொற்று, 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு தாக்கியிருந்தால், என்ன நடந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்? கழிவறைகள் இல்லாத நிலையில், தொற்றுப் பரவலை நம்மால் கட்டுப்படுத்தியிருக்க முடியுமா? இந்திய மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர், திறந்தவெளி மலக்கழிப்பிடத்தைப் பயன்படுத்திய நிலையில், பொதுமுடக்கம் போன்ற ஏற்பாடுகள் சாத்தியமாகியிருக்குமா? கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தூய்மைக்கான பிரச்சாரம் நமக்கு மிகப்பெரும் ஆதரவாக உள்ளது.

நண்பர்களே,

தூய்மை பிரச்சாரம் என்பது தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ஒரு பயணம். திறந்தவெளி மலக்கழிப்பிடம் இல்லாத நிலையை ஏற்படுத்திய பிறகு, தற்போது நமக்குப் பொறுப்பு அதிகரித்துள்ளது. திறந்தவெளி மலக்கழிப்பிடம் இல்லாத நிலையை (ODF) ஏற்படுத்திய பிறகு, அடுத்தகட்ட திறந்தவெளி மலக்கழிப்பிடம் இல்லாத நிலை (ODF PLUS) என்ற இலக்கை நிறைவேற்ற பணியாற்றி வருகிறோம். நகரமாக இருந்தாலும் அல்லது கிராமமாக இருந்தாலும் கழிவு மேலாண்மையை நாம் மேம்படுத்த வேண்டும். கழிவுகளிலிருந்து வளத்தை ஏற்படுத்துவதற்கான பணியை நாம் வேகப்படுத்த வேண்டும். இந்தத் தீர்மானத்துக்கு வெள்ளையனே வெளியேறு இயக்கம் துவங்கப்பட்ட நாளைத் தவிர வேறு எந்த நாள் சிறப்பாக இருக்கும்?

நண்பர்களே,

நாட்டை பலவீனப்படுத்திய கொடுமைகளை வெளியேறச் செய்ததைத் தவிர வேறு எது சிறப்பானதாக இருக்க முடியும்? இந்த சிந்தனையுடன் இந்தியாவை விட்டு வெளியேறச் செய்வதற்கான விரிவான பிரச்சாரம், நாட்டில் கடந்த 6 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வறுமையே இந்தியாவை விட்டு வெளியேறு! திறந்தவெளி மலக்கழிப்பிடத்துக்கு கட்டாயப்படுத்தும் சூழலே இந்தியாவை விட்டு வெளியேறு! நீருக்காக அலைய வைக்கும் நிர்ப்பந்தமே இந்தியாவை விட்டு வெளியேறு! ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளே இந்தியாவை விட்டு வெளியேறு. பாகுபாடு காட்டும் சூழலே – இந்தியாவை விட்டு வெளியேறு!

ஊழலே - இந்தியாவை விட்டு வெளியேறு! தீவிரவாதம் மற்றும் வன்முறையே – இந்தியாவை விட்டு வெளியேறு!

நண்பர்களே,

இந்த ‘இந்தியாவை விட்டு வெளியேறு’ தீர்மானங்கள், சுயாட்சியிலிருந்து, கொடுமைகளை அகற்றும் ஒளியை ஏற்படுத்தும் உணர்வை அடிப்படையாகக் கொண்டுள்ளன. இதே உணர்வுடன், குப்பைகளை வீசுவதைக் கைவிடுவோம் என்ற நமது தீர்மானத்தை நாம் அனைவரும் ஏற்போம். வாருங்கள், இதற்கான ஒரு வார காலப் பிரச்சாரத்தை இன்றிலிருந்து ஆகஸ்ட் 15 வரை, அதாவது சுதந்திர தினம் வரை மேற்கொள்வோம். சுயாட்சிக்கு மதிப்பளிக்கும் வாரம், அதாவது, “குப்பைகள் மற்றும் மாசுக்களை இந்தியாவை விட்டு வெளியேற்றும் வாரம்.” இந்த வாரத்தில், தங்களது மாவட்டங்களில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சமூகக் கழிவறைகளைக் கட்ட இந்தப் பிரச்சாரத்தை மேற்கொள்ளுமாறு ஒவ்வொரு மாவட்டத்திலும் பொறுப்பில் உள்ள அதிகாரிகளை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர் நண்பர்கள் வசிக்கும் பகுதிகளில் முன்னுரிமை அளித்து இதனை செயல்படுத்த வேண்டும். இதே வழியில், குப்பைகள் அல்லது பசுஞ்சாணத்திலிருந்து குப்பைகளை தயாரிப்பது, நீரை மறுசுழற்சி செய்வது, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளை கைவிடுவது போன்ற செயல்பாடுகளில் நாம் ஒருங்கிணைந்து ஈடுபட வேண்டும்.

நண்பர்களே,

கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளில் சிறந்த பலனை நாம் பெற்றுள்ளோம். அதனைப் போலவே, நாட்டில் உள்ள மற்ற நதிகளிலிருந்து மாசுக்களை அகற்ற வேண்டும். நமக்கு அருகேயே யமுனை நதி உள்ளது. யமுனை நதியிலிருந்து மோசமான மாசுக்களை அகற்றுவதற்கான பிரச்சாரத்தை நாம் தீவிரப்படுத்த வேண்டும். இதற்கு யமுனை நதியைச் சுற்றியுள்ள ஒவ்வொரு கிராமங்கள் மற்றும் ஒவ்வொரு நகரங்களில் வசிக்கும் மக்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மிகவும் முக்கியமானது. இதனைச் செய்யும் போது, தனி நபர் இடைவெளியும், முகக்கவசமும் அவசியம். இந்த விதியை மறந்துவிடாதீர்கள். நமது வாய் மற்றும் மூக்குப்பகுதி வழியாக கொரோனா வைரஸ் புகுந்து பரவி விடும். இது போன்ற சூழலில், முகக்கவசம் அணிவது, தனி நபர் இடைவெளியைப் பின்பற்றுவது, பொது இடங்களில் எச்சில் துப்பாமல் இருப்பது ஆகியவற்றை மிகவும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். நம்மை நாமே பாதுகாத்துக் கொண்டு, நாம் அனைவரும் இணைந்து இந்த மிகப்பெரும் பிரச்சாரத்தை வெற்றியடையச் செய்வோம்! இதே நம்பிக்கையுடன், தேசிய தூய்மை மையத்துக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்!!

மிக்க நன்றி!!!

 

*****



(Release ID: 1645062) Visitor Counter : 548