பிரதமர் அலுவலகம்

கருத்துக்களுக்கான இந்திய உச்சி மாநாட்டில் பிரதமர் சிறப்புரை

உள்நாட்டுப் பொருளாதாரத் திறமைகள் வலுவாக இருப்பதன் மூலமே உலகளாவிய பொருளாதார நிலைத்தன்மையைப் பெற முடியும் : பிரதமர்
‘சுயச்சார்புமிக்க இந்தியா’ என்ற அறைகூவலின் மூலம் வளமான, நிலைத்தன்மைமிக்க உலகத்திற்கு இந்தியா பங்களிக்கிறது: பிரதமர்
இந்தியாவில் முதலீடு செய்வதற்கு இதைவிட சிறப்பான தருணம் இருந்ததில்லை: பிரதமர்
வாய்ப்புகளுக்கான பூமியாக இந்தியா உருப்பெற்று வருகிறது: பிரதமர்
பெருந்தொற்றுக்குப் பிறகு உலகம் வேகமாக உய்த்தெழுந்து வர உதவுவதில் இந்திய - அமெரிக்கக் கூட்டணி முக்கியமானதொரு பங்கினை வகிக்க முடியும்: பிரதமர்

Posted On: 22 JUL 2020 9:25PM by PIB Chennai

கருத்துக்களுக்கான இந்திய உச்சிமாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சிறப்புரை ஆற்றினார். அமெரிக்க - இந்திய வர்த்தகக் கவுன்சில் இந்த உச்சி மாநாட்டை நடத்துகிறது. ‘சிறப்பான எதிர்காலத்தை உருவாக்குவது’ என்பதே இந்த ஆண்டிற்கான உச்சிமாநாட்டின் பேசுபொருளாக இருந்தது.

இந்த ஆண்டில் 45 ஆவது ஆண்டினை நிறைவு செய்துள்ளமைக்காக அமெரிக்க - இந்திய வர்த்தகக் கவுன்சிலுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். இந்திய - அமெரிக்கப் பொருளாதாரக் கூட்டணியை முன்னெடுத்துச் செல்வதில் பற்றுறுதியோடு செயல்பட்டு வருவதற்காக அமெரிக்க - இந்திய வர்த்தகக் கவுன்சிலின் தலைமைக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

வலுவான உள்நாட்டுப் பொருளாதாரத் திறன்களின் மூலம் உலகளாவிய பொருளாதாரத்தின் நிலைத்தன்மை

ஏழைகளையும், நலிவுற்றவர்களையும் வளர்ச்சிக்கான நிகழ்ச்சி நிரலின் மையத்தில் வைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பிரதமர் பேசினார்.  ‘வர்த்தகம் செய்வதை எளிதாக்குவது’ என்பதைப் போலவே ‘வாழ்க்கையை எளிதாக்குவது’ என்பதும் முக்கியமான ஒன்று என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். வெளிப்புற அதிர்ச்சிகளுக்கு எதிராக உலகளாவிய பொருளாதாரத்தின் நிலைத்தன்மை இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்தப் பெருந்தொற்று நமக்கு நினைவூட்டியுள்ளது என்று குறிப்பிட்ட அவர், இந்த நிலைத்தன்மையை வலுவான உள்நாட்டுப் பொருளாதாரத் திறன்களின் மூலமே அடைய முடியும் என்றும் குறிப்பிட்டார்.  ‘சுயச்சார்புமிக்க இந்தியா’ என்ற அறைகூவலின் மூலம் வலுவான, நிலைத்தன்மை மிக்கதொரு உலகத்தை நோக்கிய முன்னெடுப்பிற்கு இந்தியா பங்களித்து வருகிறது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

வெளிப்படைத் தன்மை, வாய்ப்புகள், விருப்பங்கள் ஆகியவற்றின் சிறப்பான கலவையை வழங்கும் இந்தியா

இந்தியா குறித்து உலகளாவிய நம்பிக்கை நிலவி வருகிறது என்று குறிப்பிட்ட பிரதமர் அதற்குக் காரணம் வெளிப்படைத்தன்மை, வாய்ப்புகள் மற்றும் விருப்பங்கள் ஆகியவற்றின் சிறப்பான கலவையை அது வழங்குவதே ஆகும் என்றும் குறிப்பிட்டார். கடந்த ஆறு ஆண்டுகளில் நமது பொருளாதாரத்தை மேலும் வெளிப்படையானதாக, சீர்திருத்தங்களை மையமாகக் கொண்டதாக ஆக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் போட்டித் தன்மையை உறுதிப்படுத்தியது; வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தியது; டிஜிட்டல் மயமாக்கலை விரிவுபடுத்தியது; மேலும் அதிகமான புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் கொள்கைகளின் நிலைத்தன்மையையும் அதிகரித்தது என்றும் அவர் மேலும் கூறினார்.

சமீபத்திய அறிக்கை ஒன்றை சுட்டிக் காட்டிய பிரதமர், இணையதள வசதியைப் பயன்படுத்துவோர் நகர்ப்புறங்களை விட அதிகமான அளவில் கிராமப்புறங்களில் உள்ளனர். தற்போது நாட்டில் 50கோடி பேர் இணையதள வசதியைப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் 50கோடி பேருக்கு இந்த வசதியை நீட்டிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் புதிய வாய்ப்புகளுக்கான ஒரு இடமாக இந்தியா உருவாகியுள்ளது என்றும் அவர் பாராட்டு தெரிவித்தார். 5ஜி தொழில்நுட்பம், பெருமளவிலான தரவு ஆய்வுகள், கணினி மூலமான தொகுப்பாய்வுகள், பிளாக் செயின், பொருள்களுக்கான இணைய வழி போன்ற முன்னோடித் தொழில்நுட்பங்களில் நிலவும் வாய்ப்புகளையும் அவர் சுட்டிக் காட்டினார்.

பல்வேறு துறைகளிலும் முதலீடு செய்வதற்கான விரிவான வாய்ப்புகள்

இந்தியாவில் பல்வேறு துறைகளிலும் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் விரிவாக உள்ளன என்பதையும் பிரதமர் சுட்டிக் காட்டினார். விவசாயத் துறையில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தங்கள் குறித்தும் அவர் பேசினார். விவசாய இடுபொருள்கள், கருவிகள், விவசாயப் பொருள்களின் வழங்கல் சங்கிலி, உணவுப்பொருள் பதப்படுத்தும் துறை, மீன்வளர்ப்பு, இயற்கை முறையிலான பொருள் உற்பத்தி ஆகியவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் சுகாதாரத்துறை ஆண்டு தோறும் 22 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ந்து வருகிறது என்று குறிப்பிட்ட பிரதமர், மருத்துவத் தொழில்நுட்பம், தொலைதூர மருத்துவ ஆலோசனை, பரிசோதனை ஆகிய துறைகளின் உற்பத்தியிலும் இந்திய நிறுவனங்களின்  முன்னேற்றம் குறித்தும் சுட்டிக் காட்டினார். இந்தியாவின் சுகாதாரத் துறையில் முதலீட்டை விரிவுபடுத்துவதற்கு இதுவே சிறப்பான காலமாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஆற்றல் துறை, வீடு கட்டுதல், சாலைகள், நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு உருவாக்கம், வான்வழிப் போக்குவரத்து ஆகிய துறைகளில் முதலீடு செய்வதற்கான பிரம்மாண்டமான வாய்ப்புகள் உள்ளன என்றும் பிரதமர் பட்டியலிட்டார். வரவிருக்கும் பத்து ஆண்டுகளில் ஆயிரத்திற்கு அதிகமான புதிய விமானங்களை ஈடுபடுத்த இந்தியாவின் முன்னோடி விமான நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன என்றும் அவர் கூறினார். எனவே இந்தியாவில் விமான உற்பத்திக்கான வசதிகளை நிறுவவும், விமானப் பராமரிப்பு, பழுதுபார்ப்பு, செயல்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றை மேற்கொள்வதிலும் முதலீட்டாளர்களுக்கு வாய்ப்புகள் உருவாகியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். பாதுகாப்புத் தளவாடத் துறையில் நேரடி அந்நிய முதலீட்டிற்கான உச்சவரம்பை 74 சதவீதமாக இந்தியா அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்ட அவர், பாதுகாப்புத் துறைக்கான கருவிகள், மேடைகள் ஆகியவற்றின் உற்பத்தியை ஊக்குவிக்க இரண்டு பாதுகாப்பு சிறப்புப் பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் கூறியதோடு, இத்துறையில் தனியார், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் சிறப்புச் சலுகைகள் பற்றியும் அவர் குறிப்பிட்டார். விண்வெளித் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதுப்பாதை வகுக்கும் சீர்திருத்தங்கள் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

நிதி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் முதலீடுகளை வரவேற்ற பிரதமர், காப்பீட்டுத் துறையில் நிலவிய நேரடி அந்நிய முதலீட்டிற்கான 49 சதவீத உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும், இடைநிலைக் காப்பீட்டு நடவடிக்கைகளில் நேரடி அந்நிய முதலீடு 100 சதவீதம் வரை இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். சுகாதாரம், விவசாயம், வர்த்தகம், ஆயுள்காப்பீடு போன்ற துறைகளில் காப்பீட்டு வசதிகளை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இதுவரையில் பெருமளவில் பயன்படுத்திக் கொள்ளப்படாமலேயே இருந்து வருகிறது என்றும் அவர்  சுட்டிக் காட்டினார்.

இந்தியாவில் அதிகரித்து வரும் முதலீடுகள்

வர்த்தகம் செய்வதை எளிதாக்குவது குறித்த உலக வங்கியின் தரவரிசையில் இந்தியாவின் நிலை உயர்ந்து கொண்டே போவது குறித்தும் பிரதமர் குறிப்பிட்டார்.  ஒவ்வோர் ஆண்டும் நேரடி அந்நிய முதலீட்டின் அளவும் அதிகரித்துக் கொண்டே போகிறது என்றும், 2019-20ஆம் ஆண்டில் இந்தியாவிற்குள் வந்த நேரடி அந்நிய முதலீட்டின் அளவு 74 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்றும், இது அதற்கு முந்தைய ஆண்டை விட 20 சதவீதம் அதிகமாகும் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். இந்தக் கொரோனா பெருந்தொற்றுக் காலப்பகுதியிலும் கூட ஏப்ரல்-ஜூலை மாதங்களுக்கு இடையிலான காலத்தில் 20 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேலான அந்நிய முதலீட்டை இந்தியா கவர்ந்திழுத்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

 

இந்தியாவில் முதலீடு செய்வதற்கான சிறப்பான நேரம்

உலகளாவிய அளவில் பொருளாதார மீட்சிக்கு உத்வேகமளிப்பதற்கான அனைத்தும் இந்தியாவிடம் உள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவின் எழுச்சி என்பதன் பொருள் நம்பிக்கைக்குரிய ஒரு நாட்டுடன் வர்த்தகம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன என்பதே ஆகும். இதன் மூலம் அதிகரிக்கும் வெளிப்படைத் தன்மையுடன் உலகளாவிய ஒருங்கிணைப்பு அதிகரிக்கும். மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே போகும் வாய்ப்புகளை வழங்கும்படியான சந்தையை அணுகும் வகையில் போட்டித் தன்மையும் அதிகரிக்கும். திறன்மிக்க மனித வள ஆதாரங்கள் இருக்கும் நிலையில் முதலீட்டின் மீதான வருவாயும் அதிகரிக்கும் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். அமெரிக்காவும் இந்தியாவும் இயற்கையான முறையிலேயே நட்பு நாடுகள் என்று குறிப்பிட்ட பிரதமர் பெருந்தொற்றுக்குப் பிறகு மேலும் வேகமாக உலகம் மீட்சி பெறுவதற்கு உதவுவதில் இந்தக் கூட்டணி முக்கியமான பங்கு வகிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார். அமெரிக்க முதலீட்டாளர்களை அறை கூவி அழைத்த அவர், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான இதற்கு முன் எப்போதுமில்லாத சிறப்பான தருணம் இதுவே ஆகும் என்றும் குறிப்பிட்டார்.

*****(Release ID: 1640648) Visitor Counter : 219