பிரதமர் அலுவலகம்
பொருளாதார மற்றும் சமூகக் கவுன்சிலின் உயர்நிலைக் குழுவில் பிரதமர் முக்கியமான உரையை நிகழ்த்தினார்.
ஐக்கிய நாடுகள் சபையில் மையச் சீர்திருத்தத்துடன் சீர்திருத்தப்பட்ட பன்மைத்துவத்திற்குப் பிரதமர் அழைப்புவிடுத்துள்ளார்.
அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரையும் அரவணைப்போம் என்ற எங்களின் குறிக்கோள் ஒருவரும் பின்தங்கிவிடக் கூடாது என்ற நீடித்த வளர்ச்சி இலக்குகளின் (SDG) மையக் கோட்பாடுகளை எதிரொலிக்கிறது: பிரதமர்
வளர்ச்சிக்கான பாதையில் முன்னேறிச் செல்லும்போது நமது புவிக்கோள் குறித்த நமது பொறுப்பை நாம் மறந்துவிடக் கூடாது: பிரதமர்
கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் குணமடைவோர் விகிதங்களில் உலகில் மிகச்சிறந்த நாடு என்பதை இந்தியா அடைவதற்கு எங்களின் அடித்தள நிலையிலான சுகாதாரமுறை உதவியிருக்கிறது: பிரதமர்
Posted On:
17 JUL 2020 8:46PM by PIB Chennai
நியூயார்க்கில் உள்ள ஐக்கியநாடுகள் சபையில் 2020 ஜூலை 17 வெள்ளியன்று இந்த ஆண்டுக்கான ஐக்கியநாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூகக் கவுன்சிலின் உயர்நிலைக் குழு அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொளிக் காட்சி மூலம் முக்கியமான உரையை நிகழ்த்தினார் .
2021-22 காலத்திற்கு பாதுகாப்பு சபையின் நிரந்தரமல்லாத உறுப்பினர் பதவிக்கு ஜூன் 17 அன்று அமோக ஆதரவுடன் இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்ட பின் ஐநாவின் உறுப்பினர்களிடையே பிரதமரின் முதலாவது உரையாக இது அமைந்தது.
கோவிட்-19க்குப் பின் பன்மைத்துவம்: 75வது ஆண்டில் நமது தேவைக்கு ஐநா என்னசெய்ய வேண்டும் என்பது இந்த ஆண்டுக்கான பொருளாதார மற்றும் சமூகக் கவுன்சிலின் உயர்நிலைக் குழு அமர்வின் மையப்பொருளாகும்.
ஐநா நிறுவப்பட்டதன் 75வது ஆண்டுடன் இணைகின்ற தருணத்தில் இந்த மையப்பொருளும் கூட ஐநா பாதுகாப்பு சபையின் உறுப்பினராக வரவிருப்பதற்கான இந்தியாவின் முன்னுரிமையையே எதிரொலிக்கிறது. சமகால உலகத்தின் எதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் வகையில் கோவிட்-19க்குப் பிந்தைய சீர்திருத்தப்பட்ட பன்மைத்துவத்திற்கான இந்தியாவின் அழைப்பைப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
நீடிக்கவல்ல வளர்ச்சி இலக்குகள் உட்பட ஐநாவின் வளர்ச்சிப் பணிகளிலும் பொருளாதார மற்றும் சமூகக் கவுன்சிலுடனும் இந்தியாவின் நீண்டகால நெருக்கத்தைப் பிரதமர் தமது உரையில் நினைவுகூர்ந்தார்.
அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரையும் அரவணைப்போம் என்ற இந்தியாவின் வளர்ச்சிக் குறிக்கோள் ஒருவரும் பின்தங்கிவிடக் கூடாது என்ற நீடித்த வளர்ச்சி இலக்குகளின் (எஸ்டிஜி) மையக் கோட்பாடுகளை எதிரொலிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
மிகவும் பரந்து விரிந்த தனது மக்கள்தொகையின் சமூக - பொருளாதார மேம்பாட்டுக் குறியீட்டில் இந்தியாவின் வெற்றி உலக அளவிலான நீடிக்கவல்ல வளர்ச்சி இலக்குகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். மற்ற வளரும் நாடுகள் தங்களின் நீடிக்கவல்ல வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கு உதவி செய்ய இந்தியா உறுதிபூண்டிருப்பது பற்றியும் அவர் பேசினார்.
தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் துப்புரவை மேம்படுத்துவது, மகளிருக்கு அதிகாரமளிப்பது, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்தை உறுதி செய்வது, அனைவருக்கும் வீடு திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் போன்ற முக்கியமான திட்டங்கள் மூலம் வீட்டுவசதி மற்றும் சுகாதாரவசதிகள் கிடைப்பதை விரிவுபடுத்துவது உட்பட இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சிக்கான முயற்சிகள் பற்றியும் அவர் பேசினார்.
சுற்றுச்சூழல் நிலைபேறு, பல்லுயிர்ப் பாதுகாப்பு ஆகியவற்றில் இந்தியாவின் கவனக்குவிப்பு பற்றியும் எடுத்துரைத்த பிரதமர், சர்வதேச சூரியமின்சக்திக் கூட்டணியை நிறுவியதிலும் பேரிடரைத் தாங்கவல்ல அடிப்படைக் கட்டமைப்பின் கூட்டிணைவிலும் இந்தியாவின் முன்னணிப் பங்களிப்பை நினைவுகூர்ந்தார்.
தமது பிராந்தியத்தில் முதலாவது உதவியாளராக இந்தியாவின் பங்களிப்பு பற்றி பேசிய பிரதமர், பல்வேறு நாடுகளுக்கு மருந்து விநியோகத்தை உறுதிசெய்வதற்கு இந்திய அரசாலும் இந்திய மருந்து நிறுவனங்களாலும் வழங்கப்பட்ட ஆதரவையும் சார்க் நாடுகளுக்கிடையே கூட்டான ஆதரவு அணுகுமுறையை ஒருங்கிணைப்பதையும் நினைவுகூர்ந்தார்.
பொருளாதார மற்றும் சமூகக்கவுன்சிலில் பிரதமர் உரைநிகழ்த்தியது இரண்டாவது முறையாகும். ஏற்கெனவே 2016 ஜனவரியில் பொருளாதார மற்றும் சமூகக்கவுன்சிலின் 70ஆவது ஆண்டு நிகழ்வில் அவர் முக்கிய உரைநிகழ்த்தினார்.
(Release ID: 1639610)
Visitor Counter : 323
Read this release in:
Gujarati
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam