பிரதமர் அலுவலகம்

இந்திய வர்த்தக சபையின் 95-வது ஆண்டுக் கூட்டத்தின் தொடக்க விழாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆற்றிய உரை

Posted On: 11 JUN 2020 12:54PM by PIB Chennai

வணக்கம்!!

நீங்கள் அனைவரும் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள் என்று நான் கருதுகிறேன்! நாட்டுக்காக தொடர்ந்து 95 ஆண்டுகள் சேவையாற்றுவது என்பது எந்தவொரு அமைப்புக்கும் மிகப்பெரிய  விஷயம். கிழக்கு இந்தியா மற்றும் வடகிழக்குப் பகுதிகள், குறிப்பாக அங்குள்ள உற்பத்தி நிறுவனங்களின் மேம்பாட்டுக்காக இந்திய வர்த்தக சபை, தனது பங்களிப்பை செய்து வருகிறது. இது வரலாற்றுப்பூர்வமானது. இந்திய வர்த்தக சபைக்கு தங்களது பங்களிப்பை செய்திருக்கும், இங்குள்ள ஒவ்வொருவரையும் நான் வாழ்த்துகிறேன்.  

நண்பர்களே, இந்திய வர்த்தக சபை 1925-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது முதலே, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தை நேரில் பார்த்துள்ளது. கடுமையான பட்டினி மற்றும் உணவு நெருக்கடியை பார்த்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சிப் பாதையிலும் ஓர் அங்கமாக இருந்துள்ளது.

தற்போது நமது நாடு பல்வேறு சவால்களுக்கு எதிராக போராடிவரும் நிலையில், இந்த ஆண்டுக்கான பொதுக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. கொரோனா வைரஸுக்கு எதிராக ஒட்டுமொத்த உலகமும் போராடி வருகிறது; இந்தியாவும்கூட போராடி வருகிறது. இதேபோல, மற்ற வகை சவால்களும் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.

சில இடங்களில் வெள்ளப்பெருக்கு; சில இடங்களில் வெட்டுக்கிளி பிரச்சினை; சில இடங்களில் சூறாவளிப் புயல் உருவாகி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளளது. சில இடங்களில் எண்ணெய்க் கிணற்றில் தீவிபத்து அல்லது தொடர்ந்து சிறு அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதன் உச்சகட்டமாக, நாட்டின் கிழக்கு மற்றும் மேற்குப் பிராந்தியங்களை அடுத்தடுத்து இரண்டு புயல்கள் தாக்கி, உண்மையான சவாலை ஏற்படுத்தின.

இந்த அனைத்து சூழ்நிலைகளுக்கும் எதிராக நாம் ஒன்றாக இணைந்து போராடி வருகிறோம். இதைப் போன்று நேரம் நம்மை சோதித்ததில்லை. சில நேரங்களில் பல்வேறு பிரச்சினைகளும், சவால்களும் ஒரே நேரத்தில் உருவாகின்றன. எனினும், இதுபோன்ற சூழ்நிலைகளில், நமது செயல்பாடுகள் மூலம், சிறந்த எதிர்காலத்தை கண்டுள்ளோம். சவாலை எவ்வாறு சமாளிக்கிறோம் மற்றும் பிரச்சினைகளுக்கு எதிராக நாம் எவ்வாறு போராடுகிறோம் என்பது வாய்ப்புகள் வருவதை உறுதிப்படுத்துகிறது.

நண்பர்களே, मन के हारे हार, मन के जीते जीत, என்று இங்கு கூறப்படுவதுண்டு. அதாவது, நம்மிடம் உள்ள ஏற்றுக் கொள்ளும் சக்தியும், தீர்மானமும் நமது முன்னோக்கிய பாதையை தீர்மானிக்கிறது. தோல்வியை தொடக்கத்திலேயே ஒப்புக் கொண்டவர்கள், தங்களுக்கு முன்பு குறைந்த அளவிலான வாய்ப்புகளையே பெறுகிறார்கள். ஆனால், வெற்றிக்காக போராடி, முன்னோக்கி செல்பவர்கள் மற்றும் ஒவ்வொருவருக்கும் ஆதரவாக இருப்பவர்களுக்கு அதிக அளவிலான வாய்ப்புகள் வருகின்றன.

நண்பர்களே, நமது ஒற்றுமை, மிகப்பெரும் பேரிடர்களை ஒன்றாக எதிர்கொள்ளும் உணர்வு, நமது தீர்மானம், நமது சக்தி ஆகியவையே நாட்டின் மிகப்பெரும் பலமாக உள்ளது.

எந்தவொரு நெருக்கடியிலும் வலிமையாக இருப்பதே, அதற்கான வலிநிவாரணியாக இருக்கும். கடுமையான நேரங்களே, இந்தியாவின் தீர்மானத்தை ஒவ்வொரு நேரத்திலும் வலுவாக்கியுள்ளது. இது நாட்டு மக்களை ஒரே தேசம் என்ற தீர்மானத்துக்கு ஊக்குவித்து சக்தியை அளிக்கிறது. இதே உணர்வைத்தான், இன்று உங்கள் முகத்திலும், நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் முயற்சியிலும் நான் பார்க்கிறேன். கொரோனா நெருக்கடி, ஒட்டுமொத்த உலகிலும் நீடித்து வருகிறது. இதற்கு எதிராக ஒட்டுமொத்த உலகமும் போராடி வருகிறது. கொரோனா போராளிகளின் உதவியுடன் நமது நாடு இதை எதிர்கொண்டு வருகிறது.

இவை அனைத்துக்கும் மத்தியில் இந்த பேரிடரை வாய்ப்பாக மாற்றிக் கொள்ளும் தீர்மானத்தை ஒவ்வொரு குடிமகனும் கொண்டுள்ளனர்; நாம் இதனை நாட்டுக்கான மிகப்பெரும் திருப்புமுனையாக மாற்ற வேண்டும்.

இந்த திருப்புமுனை என்பது என்ன? ஆத்மன்நிர்பார் பாரத், அதாவது, சுயசார்பு இந்தியா!! பல ஆண்டுகளுக்கான எதிர்பார்ப்புகளைப் போன்று, ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் இந்த சுயசார்பு இந்தியா என்ற உணர்வு வாழ்ந்து வருகிறது.

ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் இன்னும் மிகப்பெரும் விருப்பம் உள்ளது – மருத்துவ உபகரணங்கள் துறையில் நாம் சுயசார்புடன் இருக்க நான் விரும்புகிறேன்! பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தியில் சுயசார்புடன் இருக்க விரும்புகிறேன்! நிலக்கரி மற்றும் சுரங்கத் துறையில் சுயசார்புடன் இருக்க விரும்புகிறேன்!

சமையல் எண்ணெய் மற்றும் உரத் துறைகளில் சுயசார்புடன் இருக்க விரும்புகிறேன்! மின்சாதன உற்பத்தியில் சுயசார்புடன் இருக்க விரும்புகிறேன்! சூரியத் தகடுகள், பேட்டரிகள் மற்றும் சிப் உற்பத்தியில் சுயசார்புடன் இருக்க விரும்புகிறேன்! விமானத் துறையில் சுயசார்புடன் இருக்க நான் விரும்புகிறேன். இந்த கணக்கில்லா எதிர்பார்ப்புகளும், விருப்பமும் எப்போதும் ஒவ்வொரு இந்தியருக்கும் இருக்கிறது.

நண்பர்களே, நாட்டின் கொள்கை மற்றும் செயல்பாடுகளில் இந்தியாவின் சுயசார்பு இலக்கு முக்கியத்துவமாக கடந்த 5-6 ஆண்டுகளாக இருப்பதற்கு இதுவே முக்கிய காரணம். இதனை எவ்வாறு வேகப்படுத்த வேண்டும் என்ற பாடத்தை தற்போது கொரோனா நெருக்கடி நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது. இந்த பாடத்திலிருந்தே “சுயசார்பு இந்தியா” பிரச்சாரம் பிறந்தது.

நண்பர்களே, குடும்பங்களில் கூட, ஒரு குழந்தை, மகனோ அல்லது மகளோ, 18 அல்லது 20 வயது அடையும்போது, சுதந்திரமாகவும், சுயசார்புடனும் இருக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுவதை நாம் பார்த்திருப்போம். இந்த வழியில், தன்னிறைவுபெற்ற இந்தியாவுக்கு முதல் பாடம் குடும்பத்திலிருந்தே தொடங்கியுள்ளது. இந்தியாவும் கூட, சுயசார்புடன் இருக்க வேண்டும்.

நண்பர்களே, மற்ற நாடுகளை சார்ந்திருப்பதை இந்தியா குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதே சுயசார்பு இந்தியா பிரச்சாரத்தின் எளிதான பொருள். இந்தியா இறக்குமதி செய்ய வேண்டியுள்ள பொருட்கள் அனைத்தையும் இந்தியாவுக்குள்ளேயே தயாரிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இந்தப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா எவ்வாறு எதிர்காலத்தில் மாறும் என்ற கோணத்தில் நாம் வேகமாக பணியாற்ற வேண்டும்.

அதற்கும் மேலாக, இந்தியாவில் பல ஆண்டுகளாக சிறு தொழில்முனைவோர், நமது கலைஞர்கள், கைவினைக் கலைஞர்கள், சுயஉதவிக் குழுக்களில் இடம்பெற்றுள்ள லட்சக்கணக்கான ஏழை மக்கள் ஆகியோர் தயாரித்து விற்பனை செய்துவரும் பொருட்களை நாம் இறக்குமதி செய்வதை வரைமுறைப்படுத்த வேண்டும். அதே பொருட்களை வெளிநாடுகளிலிருந்து பெறும் நிலையை நாம் கட்டுப்படுத்த வேண்டும்.

இந்த செயல்பாடுகளுடன், சிறு தொழில்முனைவோரிடமிருந்து பொருட்களை வாங்குவதோடு மட்டுமன்றி, பணம் வழங்குவதோடு மட்டுமன்றி, அவர்களின் கடினஉழைப்புக்கு அங்கீகாரம் அளிப்பதுடன், அவர்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். இந்த செயல்பாடுகள், அவர்களது இதயத்தில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும், அவர்கள் எந்த அளவு பெருமை கொள்வார்கள் என்றுகூட நமக்கு தெரியாது.

எனவே, உங்களது உள்ளூர் பொருட்களுக்கு மதிப்பளிக்க வேண்டியது நேரம் இது. ஒவ்வொரு கிராமம், ஒவ்வொரு நகரம், ஒவ்வொரு மாவட்டம், ஒவ்வொரு மாநிலம் என ஒட்டுமொத்த இந்தியாவையும் தன்னிறைவு அடையச் செய்ய வேண்டிய நேரம் இது.

நண்பர்களே, சுவாமி விவேகானந்தர் ஒரு முறை எழுதிய கடிதத்தில், “தற்போது நாம் செய்ய வேண்டிய எளிய முறை என்பது, இந்தியர்களை தங்களது சொந்த தயாரிப்புகளையே பயன்படுத்தச் செய்து, இந்திய உற்பத்தி பொருட்களுக்கு மற்ற நாடுகளில் வாய்ப்புகளைப் பெறச் செய்ய ஊக்குவிக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார். சுவாமி விவேகானந்தர் காட்டிய வழி, கோவிட்-டுக்கு பிந்தைய உலகில் இந்தியாவுக்கான உந்துசக்தியாக இருக்கும். தற்போது நாடு உறுதிபூண்டுள்ளதுடன், நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. சுயசார்பு இந்தியா பிரச்சாரத்தின்படி அறிவிக்கப்பட்ட மிகப்பெரும் சீர்திருத்தங்கள் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான வரையறையை விரிவாக்கம் செய்வோமா அல்லது சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்க ஆயிரக்கணக்கான கோடி சிறப்பு நிதி அளிப்போமா என்ற அனைத்தும் இன்று உண்மையாக மாறியுள்ளது. திவாலாதல் மற்றும் நொடிப்புநிலை விதிகள் தொடர்பான முடிவுகள், சிறு தவறுகளை குற்றமற்றவையாக அறிவிப்பது அல்லது முதலீடுகளை வேகமாக கண்காணிப்பதற்கு திட்ட மேம்பாட்டுப் பிரிவுகளை ஏற்படுத்தியது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன.

பல்வேறு துறைகளையும், குறிப்பாக நிலக்கரி மற்றும் சுரங்கத் துறையை போட்டியிடும் அளவுக்கு மாற்றுவதற்கு, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சீர்திருத்தங்களின் முழு பலனையும் பயன்படுத்திக் கொள்ள தொழில் துறையினர் முன்வர வேண்டும். இளம் நண்பர்களும் முன்வர வேண்டும்.

நண்பர்களே, விவசாயிகள் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்துக்காக அண்மையில் எடுக்கப்பட்ட முடிவுகள், விவசாயப் பொருளாதாரத்தை பல ஆண்டுகளாக இருந்த அடிமைத்தனத்திலிருந்து விடுவித்துள்ளன. தற்போது, இந்திய விவசாயிகள், தாங்கள் விளைவித்த பொருட்களை நாட்டின் எந்தப் பகுதியிலும் விற்பனை செய்யும் சுதந்திரத்தைப் பெற்றுள்ளனர்.

வேளாண்மை உற்பத்திப் பொருட்கள் சந்தை குழு சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், விவசாயிகள் மற்றும் தொழில்துறையினருக்கு இடையே கூட்டை ஏற்படுத்துவதற்கான வழியை ஏற்படுத்தியுள்ளன. விவசாயிகள் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்டுவதை இது உறுதிப்படுத்தியுள்ளது. இந்த முடிவுகள், விவசாயிகளை உற்பத்தியாளர்களாகவும், அவர்கள் விளைவிப்பவற்றை பொருட்களாகவும் அடையாளம் காணச் செய்துள்ளது.

நண்பர்களே, விவசாயிகளின் வங்கிக்கணக்கிலேயே பணத்தை நேரடியாக பரிமாற்றம் செய்வது, குறைந்தபட்ச ஆதார விலை அல்லது அவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் என அனைத்து முயற்சிகளுமே விவசாயிகளை மேம்படுத்துவதற்கானவை. மிகப்பெரும் சந்தை சக்தியாக மாறுவதற்கு விவசாயிகளுக்கு உதவி செய்யப்பட்டுள்ளது.

நண்பர்களே, இந்தியாவில் தற்போது ஊக்குவிக்கப்படும் உள்ளூர் பொருட்களுக்கான தொகுப்பு அடிப்படையிலான நடவடிக்கைகளும், ஒவ்வொருவருக்கும் வாய்ப்பாக உள்ளது. மாவட்டங்கள் அல்லது வட்டங்களில் என்ன பொருட்கள் தயாரிக்கப்படுகிறதோ, அதுதொடர்பான தொகுப்புகள் அதன் அருகிலேயே உருவாக்கப்படும். உதாரணமாக, மேற்குவங்கத்தில் சணல் விவசாயிகளுக்கு அருகில் உள்ள பகுதிகளில் சணல் அடிப்படையிலான தொழில் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும்.

வனப்பகுதிகளில் உள்ள வளங்களிலிருந்து வனப் பொருட்களை தயாரிக்கும் பழங்குடியின மக்களுக்காக அவர்களுக்கு அருகிலேயே நவீன பதப்படுத்தும் பிரிவுகள் ஏற்படுத்தப்படும். அதற்கும் மேலாக, மூங்கில் மற்றும் இயற்கை தயாரிப்புப் பொருட்களுக்கான தொகுப்புகளும் ஏற்படுத்தப்படும். சிக்கிம் போன்ற ஒட்டுமொத்த வடகிழக்குப் பகுதியும் இயற்கை விவசாயத்துக்கான மிகப்பெரும் முனையமாக மாறும். இயற்கை பொருட்களுக்கான தலைநகரமும் உருவாக்கப்படும்.
இந்திய வர்த்தக சபையுடன் தொடர்புடைய அனைத்து வர்த்தகர்களும் உறுதியுடன் இருந்தால், வடகிழக்குப் பகுதியில் மிகப்பெரும் இயக்கமாக இயற்கை வேளாண்மை மாறும். சர்வதேச அடையாளத்தை உங்களால் பெற முடியும். மேலும், சர்வதேச சந்தையில் ஆதிக்கம் செலுத்த முடியும்.

நண்பர்களே,

கடந்த பல தசாப்தங்களாக இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் நீங்கள் அனைவரும் பணியாற்றி வருகிறீர்கள். அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் அனைத்துமே கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைந்துள்ளன.

கல்கத்தா நகரமே கூட மீண்டும் ஒரு மிகப்பெரிய தலைமைப் பீடமாக மாற முடியும் என்றே நான் நினைக்கிறேன். அதன் கடந்த காலப் பெருமையிலிருந்து உத்வேகம் பெற்று இந்தப் பகுதி முழுவதின் வளர்ச்சிக்கு எதிர்காலத்தில் கல்கத்தா பெருநகரம் தலைமை தாங்கவும் கூடும்.

நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள உழைப்பாளர்கள், சொத்து மற்றும் வள ஆதாரங்கள் ஆகியவற்றின் உதவியோடு எந்த அளவு வேகத்தில் இந்தப் பகுதியினால் வளர முடியும் என்பது உங்களை விட வேறு யாருக்கு நன்றாகத் தெரிந்திருக்க முடியும்?

நண்பர்களே, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2025ஆம் ஆண்டில் உங்கள் அமைப்பு, நூறாண்டுகளை நிறைவு செய்யவிருக்கிறது. மறுபுறத்தில் 2022ஆம் ஆண்டில் இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகளை நிறைவு செய்யவிருக்கிறது. உங்கள் அமைப்பும், உங்கள் உறுப்பினர்கள் ஒவ்வொருவருமே மிகப் பெரியதொரு தீர்மானத்தை மேற்கொள்வதற்கான மிகச் சிறந்த தருணம் இதுவாகத்தான் இருக்கும். ‘சுயச் சார்புமிக்க இந்தியா’ என்ற பிரச்சாரத்திற்கு தனதளவில் 50 முதல் 100 வரையிலான புதிய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டுமென இந்திய வர்த்தக சம்மேளனத்தை நான் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த இலக்குகள் வரலாற்றுச் சிறப்புமிக்க உங்கள் நிறுவனத்தின், அதனோடு தொடர்புடைய தொழில்கள், வர்த்தக நிறுவனங்கள், ஒவ்வொரு தனிநபரின் இலக்காகவும் இருக்க வேண்டும். உங்கள் இலக்குகளை எவ்வளவு நெருக்கமாக அடைகிறீர்களோ அந்த அளவிற்கு அதிகமான அளவில் நாட்டின் சுயச்சார்பு குறித்த இந்தப் பிரச்சாரமானது இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் அதிகமான அளவில் முன்னேற முடியும்.

நண்பர்களே, உற்பத்தித் துறையில் வங்காளத்தின் வரலாற்று ரீதியான மேல்நிலைக்கு நாம் புத்துயிர் ஊட்ட வேண்டியது அவசியம்.  “வங்காளம் இன்று என்ன நினைக்கிறதோ, அதையே ஒட்டுமொத்த இந்தியாவும் நாளை சிந்திக்கும்!” என்ற வாக்கியத்தை நாம் எப்போதும் கேட்டு வந்திருக்கிறோம். அதிலிருந்து நாம் உற்சாகம் பெற்று மேலும் முன்னேறிச் செல்ல வேண்டும். கட்டளை மற்றும் கட்டுப்பாடு என்ற நிலையிலிருந்து இந்தியப் பொருளாதாரத்தை எந்த இடத்தில் வேண்டுமானாலும் இணைத்து அதை செயல்படுத்துவது என்ற நிலையை நோக்கிக் கொண்டு செல்வதற்கான தருணம் இதுவே ஆகும். பழமைவாத அணுகுமுறைக்கு இது உரிய தருணமல்ல. மாறாக இது உறுதியான முடிவுகள், உறுதியான முதலீடுகள் ஆகியவற்றை மேற்கொள்வதற்கான தருணம் ஆகும்.

இந்தியாவில் உலக அளவில் போட்டியிடுவதற்கான திறன் மிக்க ஒரு உள்நாட்டு வழங்கல் சங்கிலியை நிறுவுவதற்கான தருணம் இதுவே.

இதற்கு, தற்போதுள்ள தொழில் விநியோகச் சங்கிலியின் அனைத்து பங்குதாரர்களும் நெருக்கடியிலிருந்து வெளியே வர நாம் உதவ வேண்டும், மேலும் மதிப்பு கூட்டலில் நாம் அவர்களுக்குக் கைகொடுக்க வேண்டும்.

நண்பர்களே,

சுயச்சார்பு மிக்க இந்தியாவிற்கான பிரச்சாரத்தில் முன்னேறி, கொரோனா காலத்துடன் போராடி வரும் நீங்கள், இந்தபொதுக் குழுக் கூட்டத்தில்  நீங்கள் இன்று முன்வைத்துள்ள மக்கள், (பூமி)கிரகம் மற்றும் லாபம் என்ற தலைப்பும் கூட மிகுந்த முக்கியத்துவம் உடையதாகும். இந்த மூன்றுமே ஒன்றுக்கொன்று எதிர்மாறானதாக, முரண்பட்டதாக இருப்பதாக சிலர் நினைக்கிறார்கள். ஆனால் அது அவ்வாறு இல்லை. மக்களும், இந்த பூமிக் கிரகமும் லாபமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த ஒன்றே ஆகும். இவை மூன்றுமே ஒரே நேரத்தில் செழிப்போடு இருக்கமுடியும் என்பதோடு சமமான  அளவில் நிலைத்திருக்கவும் முடியும்.

இதற்கு ஒரு சில உதாரணங்களைக் கொடுக்க விரும்புகிறேன். உதாரணமாக, எல் இ டி பல்புகளையே எடுத்துக் கொள்வோம். 5-6 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு எல் இ டி பல்பின் விலை ரூ. 350க்கும் அதிகமாக இருந்தது. ஆனால் இன்று அதே பல்ப் அதிகபட்சமாக ரூ. 50க்கும் கிடைக்கிறது. சற்றே கற்பனை செய்து பாருங்கள்! எல் இ டி பல்புகளின் விலையை குறைத்ததன் விளைவாக நாடு முழுவதிலும் கோடிக்கணக்கான இல்லங்களை அது சென்றடைய முடிந்துள்ளது. இப்போது தெரு விளக்குகளாகவும் அது பொருத்தப்பட்டு வருகிறது. இதற்குத் தேவைப்படும் பல்புகளின் அளவு என்பது மிக மிக பிரம்மாண்டமானது. அதன் விளைவாக உற்பத்தி செலவை அது குறைத்துள்ளது. அதே நேரத்தில் லாபத்தையும் அதிகரித்துள்ளது. இதிலிருந்து யார் பயன் அடைந்துள்ளார்கள்?

மக்கள்தான் பயன் அடைந்துள்ளார்கள். சாதாரண மக்கள் மின்சார கட்டணம் குறைந்துள்ளதால் பயனடைந்துள்ளனர். எல் இ டி பல்புகளின் விளைவாக, மின்சாரக் கட்டணம் குறைந்துள்ளதன் விளைவாக, ஒவ்வோர் ஆண்டும் ரூ. 19,000 கோடி அளவிற்கு மக்களால் இன்று சேமிக்க முடிந்துள்ளது. இத்தகைய சேமிப்பினால் நாட்டின் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் பயன் அடைந்துள்ளனர்.

இந்த மாற்றத்தில் இருந்து இந்த பூமிக் கிரகமும் கூட பயன் அடைந்துள்ளது. அரசாங்க முகமைகளால் குறைந்த விலைக்கு விற்கப்பட்டு வரும் இந்த எல் இ டி பல்புகள் மட்டுமே ஒவ்வோர் ஆண்டும் அண்ட வெளியில் சென்று கலக்கும் கரியமில வாயுவின் அளவில் சுமார் 40 மில்லியன் டன்களை குறைத்துள்ளது.

அதாவது மக்கள், பூமிக் கிரகம் ஆகிய இருவருமே இதனால் பயனடைந்துள்ளனர். இருவருக்குமே இது வெற்றிதான். அரசின் மற்ற திட்டங்கள், முடிவுகள் ஆகியவற்றையும் நீங்கள் பார்த்தீர்களெனில், மக்கள், (பூமி)கிரகம், லாபம் என்ற இந்த கருத்தாக்கம் கடந்த 5-6 ஆண்டுகளில் கள அளவில் மிக வலுவாக அமலாக்கப்பட்டுள்ளதை காண முடியும்.

உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை இந்த அரசு எந்த அளவிற்கு வலியுறுத்தி வருகிறது என்பதையும் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். ஹால்டியாவில் இருந்து வாரணாசி வரையிலான நீர் வழிப் போக்குவரத்து ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. இப்போது வடகிழக்குப் பகுதியிலும் நீர்வழிப் போக்குவரத்து விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

இந்த நீர்வழிப் போக்குவரத்தின் மூலமாகவும் கூட மக்கள் பெருமளவிற்கு பயன் பெற்று வருகின்றனர். ஏனெனில் தளவாட ஏற்பாடுகளுக்கான செலவை அது பெருமளவிற்குக் குறைக்கிறது.

இந்த பூமிக் கிரகமும் கூட இந்த நீர்வழிப் போக்குவரத்தின் மூலம் பயனடைகிறது. ஏனெனில், இந்த வகையான போக்குவரத்திற்கான எரிபொருள் மிகக் குறைவானதே ஆகும். பெட்ரோல், டீசல் ஆகியவற்றை இறக்குமதி செய்வதை இது குறைக்கும் என்பதோடு, சாலைகளில் பெருமளவிற்கு போக்குவரத்து நெரிசலையும் குறைக்கிறது என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

சரக்குகளின் விலையும் மலிவாகிறது. மிக குறுகிய வழியில் சரக்கு சேருமிடத்தைச் சென்றடைகிறது. இதன் விளைவாக வாங்குபவர்கள், விற்பவர்கள் ஆகிய இருவருமே லாபமடைகின்றனர்.

நண்பர்களே, இந்தியாவில் மற்றொரு பிரச்சாரமும் நடைபெற்று வருகிறது. அதாவது ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களில் இருந்து இந்தியாவை விடுவிப்பதற்கான இயக்கம்தான் அது. மக்கள், பூமிக் கிரகம், லாபம் ஆகிய மூன்றுமே இந்த விஷயத்தில் செயல்பாட்டில் உள்ளன.

குறிப்பாக மேற்கு வங்கத்திற்கு இது மிகவும் பயனுள்ளதாகும். சணல் வர்த்தகத்தை மேலும் வளர்ப்பதற்கான வாய்ப்பை இது அதிகரிக்கிறது. இந்த விஷயத்தை நீங்கள் சாதகமான வகையில் பயன்படுத்திக் கொண்டீர்களா? சணலை அடிப்படையாகக் கொண்ட கட்டும் பொருட்களை தயாரிக்க தொடங்கி விட்டீர்களா? ஒரு வகையில் பார்த்தால், இது உங்களுக்கு மிகவும் சாதகமான ஒரு விஷயமே ஆகும்.

இந்த வாய்ப்பை நீங்கள் இன்னும் கூட அதிகமான அளவிற்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த வாய்ப்பை நீங்கள் நழுவ விட்டீர்களானால், யார் உங்களுக்கு உதவ வருவார்கள்? சற்றே கற்பனை செய்து பாருங்கள். மேற்கு வங்கத்தில் தயாரிக்கப்பட்ட சணல் பைகள் நாட்டிலுள்ள ஒவ்வொருவரின் கைகளிலும் இருக்குமென்றால், மேற்கு வங்க மக்களுக்கு அதனால் கிடைக்கப் போகும் லாபம் எவ்வளவு பெரியதாக இருக்கும்?

நண்பர்களே, மக்களை மையமாகக் கொண்ட, மக்களால் நடத்தப்படுகின்ற, இந்த பூமிக் கிரகத்திற்கு சேதம் ஏதும் விளைவிக்காத வளர்ச்சி என்ற அணுகுமுறையே நாட்டின் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இப்போது மாறியுள்ளது. நமது தொழில் நுட்ப ரீதியான தலையீடுகளும் கூட மக்கள், பூமிக் கிரகம், லாபம் என்ற கருத்தோடு இணைந்த ஒன்றாக அமைகின்றன.

ஒன்றிணைந்த பணம் செலுத்தும் வழிமுறையின் விளைவாக நமது வங்கிச் செயல்பாடு என்பது எதையும் தொட வேண்டிய அவசியமில்லாத, தொடர்பு கொள்ள வேண்டிய அவசியமில்லாத, ரொக்கப் பணம் தேவைப்படாத, நாளின் 24 மணி நேரமும் வாரத்தின் ஏழு நாட்களும் செயல்படக் கூடியதாக மாறியுள்ளது. பீம் செயலியின் மூலம் நடைபெறும் பணப் பரிமாற்றங்கள் புதிய சாதனைகளை இப்போது படைத்து வருகின்றன. ரூபே பணப்பரிமாற்ற அட்டையானது இப்போது ஏழைகள், விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் நாட்டின் ஒவ்வொரு பிரிவினரின் விருப்பத்திற்குரிய அட்டையாக மாறியுள்ளது. சுயச்சார்பு மிக்க இந்தியாவைப் பற்றி நாம் பேசும்போது, ரூபே அட்டையினை நாம் ஏன் பெருமிதத்துடன்  பயன்படுத்தக் கூடாது?

நண்பர்களே, நாட்டின் வங்கிச் சேவையின் வரம்பு மிக நீண்ட நாட்களாக ஏதுமற்றவர்கள் என்ற பிரிவினராகவே வைக்கப்பட்டிருந்த மக்களை சென்றடைவதாக இப்போது மாறியுள்ளது. பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைத்தல், ஜன் தன் ஆதார் மொபைல் போன்றவற்றின் மூலம் எந்தவித சேதாரமும் இன்றி கோடிக்கணக்கான பயனாளிகளுக்கு தேவையான உதவிகள் சென்றடைய இப்போது வாய்ப்பேற்பட்டுள்ளது.

அதேபோன்று அரசுடன் நேரடியாக தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் லாபம் பெறுவதற்கான ஒரு வாய்ப்பும் இப்போது அரசு இணையவழி சந்தையின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. சிறிய சுய உதவிக் குழுக்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்  தங்களது பொருட்களையும் சேவைகளையும் நேரடியாக அரசு இணையவழி சந்தையின் மூலம் அரசுக்கு வழங்க முடியும் என்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். இல்லையெனில், ஒரு சில லட்சங்கள் மட்டுமே வரவு-செலவு செய்யும் தொழில்முனைவர் ஒருவரால் அவர் உற்பத்தி செய்த பொருட்களை நேரடியாக அரசுக்கு விற்பனை செய்வது குறித்து நினைத்துக் கூட பார்த்திருக்க முடியாது.

எனவே, உங்கள் உறுப்பினர்களும் துணை உற்பத்தியாளர்களும் அரசு இணையவழி சந்தையில் அதிகபட்ச எண்ணிக்கையில் சேருவதற்கான ஊக்கத்தை வழங்குமாறு நான் இந்திய வர்த்தக சம்மேளனத்தை கேட்டுக் கொள்கிறேன். உங்களோடு தொடர்புடைய ஒவ்வொரு உற்பத்தியாளரும் அரசு இணையவழி சந்தையில் இணைந்தாரெனில், சிறிய வர்த்தகரும் கூட தங்களது பொருட்களை நேரடியாக அரசுக்கு விற்பனை செய்ய முடியும்.

நண்பர்களே, இந்த பூமிக் கிரகத்தைப் பற்றிப் பேசும்போது சூரிய ஒளியின் மூலமான மின் உற்பத்திக்கான சர்வதேச கூட்டணி மிகப்பெரும் சர்வதேச இயக்கமாக மாறி வருவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சூரிய ஒளியின் மூலமான மின்சார உற்பத்தித் துறையில் இந்தியாவிற்குக் கிடைக்கவிருக்கும் பயன்களை உலகம் முழுவதுடனும் பகிர்ந்து கொள்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டின் மறுசுழற்சியின் அடிப்படையிலான மின்சார உற்பத்தி, சூரிய ஒளியின் மூலமான மின்சார உற்பத்தி ஆகியவற்றுக்கான இலக்குகளை அடையும் வகையில் தங்களது பங்களிப்பையும் முதலீட்டையும் செய்ய வேண்டும் எனவும் இந்திய வர்த்தக சம்மேளனத்தின் உறுப்பினர்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

நாட்டில் உற்பத்தியாகும் சூரிய ஒளியை சேமிக்கும் தகடுகளின் சேமிப்புத் திறனை அதிகரிக்கும் வகையில் மிகச்சிறந்த மின்கலன்களை உற்பத்தி செய்வது, அதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முதலீடு செய்வது ஆகியவற்றையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இந்த விஷயத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுடன், இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டு வரும் ஏனைய நிறுவனங்களுடன்  உங்களால் கைகோர்த்துச் செல்ல முடியும். மாறி வரும் உலகத்தில், சூரிய ஒளியை அடிப்படையாகக் கொண்ட மீள்நிரப்பு மின்கலன்களுக்கு மிகப்பெரும் சந்தை உருவாகவிருக்கிறது. இந்தச் சந்தைக்கு இந்தியா தலைமை வகிக்க முடியுமா? இந்தத் துறையில் மிகப்பெரியதொரு மையமாக இந்தியாவினால் மாற முடியும்.

இந்திய வர்த்தக சம்மேளனமும் அதன் உறுப்பினர்களும் இந்தியா தனது விடுதலையின் 75 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாட இருக்கின்ற 2022ம் ஆண்டோடும், இந்திய வர்த்தக சம்மேளனம் தனது நூறாண்டு விழாவை கொண்டாட இருக்கின்ற 2025ம் ஆண்டோடும் இந்த விஷயங்களை இணைத்து இலக்குகளை நிர்ணயிக்க முடியும்.

நண்பர்களே, வாய்ப்பினை அடையாளம் கண்டு கொண்டு, உங்கள் திறமைகளை பயன்படுத்திக் கொண்டு புதிய உச்சங்களை எட்டிப் பிடிப்பதற்கான தருணம் இதுவே ஆகும். இது மிகப்பெரிய நெருக்கடி எனில், அதிலிருந்து கிடைக்கும் மிகப்பெரும் பாடங்களை உணர்ந்தறிந்து நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்தக் குறிக்கோள் குறித்து அரசு உங்களோடு உறுதிப்பாட்டோடு இருக்கிறது என்று நான் உங்களுக்கு உறுதியளிப்பேன். புதிய தீர்மானங்களுடன் முன்னேற தயாராக இருங்கள். புதிய நம்பிக்கையுடன் முன்னேறுங்கள். தன்னம்பிக்கை மிகுந்த இந்தியா தான் சுயச்சார்பு மிக்க இந்தியாவின் ஆணிவேராக இருக்கிறது.

கவிகுரு தாகூர் தனது கவிதை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்: ”அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிவைப்பும் ஓர் அறிவிப்புதான். முன்னேறிச் செல்லும் ஒவ்வொரு அடிவைப்பும் புதியதொரு பாதையை உருவாக்குகிறது. இனியேனும் தாமதியாதீர்கள்!”

தாகூரின் இந்த தாரக மந்திரம் எவ்வளவு பெரியது என்பதை சற்றே கற்பனை செய்து பாருங்கள் – முன்னேறிச் செல்லும் ஒவ்வொரு அடிவைப்பும் புதியதொரு பாதையை உருவாக்குகிறது. நமக்கு முன்னால் இத்தகைய மிகப்பெரியதொரு அகத்தூண்டுதல்  இருக்கும் போது நம்மை தடுத்து நிறுத்துவது என்ற பேச்சே இல்லை.

உங்கள் அமைப்பின் நூறாண்டு விழாவை நீங்கள் கொண்டாடும் தருணத்திலும் சரி, நமது நாடு அதன் விடுதலையின் 75வது ஆண்டு விழாவை கொண்டாடும் தருணத்திலும் சரி, சுயச்சார்பு மிக்க இந்தியாவிற்கான பாதையில் நமது நாடு முன்னேறிச் சென்று கொண்டிருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

நல்ல உடல்நலத்தோடு வாழுங்கள்! பாதுகாப்பாக வாழுங்கள்!

மிக்க நன்றி!!

உங்கள் நலனைப் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளுங்கள்!!!

********



(Release ID: 1631111) Visitor Counter : 262