வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

பொது முடக்க காலத்தில், தொழில் மற்றும் வர்த்தகத் துறையில் நிலவும் பிரச்சினைகளைக் கண்காணிக்கவும், பல்வேறு தரப்பினரும் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளை சமாளிக்கவும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையின் கட்டுப்பாட்டு அறை முக்கிய பங்கு வகிக்கிறது

Posted On: 30 APR 2020 2:04PM by PIB Chennai

வர்த்தகம் மற்றும் தொழில் துறையின் கீழ் செயல்படும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை, 26.3.2020 முதல் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. தொழில் மற்றும் வர்த்தகத்தில் நிலவும் பிரச்சினைகளைக் கண்காணித்து, அதனை மாநில அரசு, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் மற்றும் பிற அமைப்புகளிடம் எடுத்துச் செல்கிறது. கீழ்க்காணும் விவகாரங்களை கட்டுப்பாட்டு அறை கண்காணிக்கிறது.

அ. அத்தியாவசியப் பொருள்களின் உள்நாட்டு வர்த்தகம், உற்பத்தி, விநியோகம் மற்றும் சரக்குகளை கொண்டு செல்வதில் உள்ள பிரச்சினைகள்

ஆ. பொது முடக்க காலத்தில், விநியோகக் கட்டமைப்பில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில், பல்வேறு தரப்பினரும் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளைக் கண்காணித்தல்.

ஏப்ரல் 28, 2020 வரை கவனத்தில் கொண்டு வரப்பட்ட 1962 புகார்களில், 1739 விவகாரங்களுக்கு தீர்வுகாணப்பட்டது. 223 விவகாரங்களுக்கு தீர்வுகாணும் பணி நடைபெற்று வருகிறது. ஒட்டு மொத்தமாக கவனத்தில் கொண்டு வரப்பட்ட 1962 பிரச்சினைகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்டவை, டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ஹரியானா, குஜராத் ஆகிய 5 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலிருந்து வந்தவை.

பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுவதைக் கண்காணிக்க தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர், தினசரி விரிவான அறிக்கை தயாரித்து, துறையில் உள்ள மூத்த அதிகாரிகளுக்கு அனுப்பிவைப்பர். முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளுக்கு பாதிக்கப்பட்ட மக்களை அழைத்துப் பேசி உன்னிப்பாக கண்காணிப்பார்கள். அவர்களின் கருத்துக்களைப் பெற்று, அதனடிப்படையில், உரிய அமைப்புகளிடம் கொண்டு சேர்ப்பார்கள்.

கட்டுப்பாட்டு அறைக்கான கோரிக்கைகள் மற்றும் சந்தேகங்களை தொலைபேசி அழைப்புகள் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம். பொருள்களைக் கொண்டு செல்வது மற்றும் பகிர்வது அல்லது விநியோகிப்பதற்குத் தேவையானவற்றை ஒன்று சேர்ப்பது ஆகியவற்றில் அடிமட்ட அளவில் பிரச்சினை ஏற்பட்டால், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையை, உற்பத்தி நிறுவனங்கள், போக்குவரத்து நிறுவனங்கள், விநியோகிப்பவர், ஒட்டுமொத்த விற்பனையாளர் அல்லது மின்னணு வர்த்தக நிறுவனங்கள், கீழ்க்காணும் தொலைபேசி எண்/மின்அஞ்சலில் தொடர்புகொள்ளலாம்:-

தொலைபேசி எண்: +91 11 23062487

மின்அஞ்சல் : controlroom-dpiit[at]gov[dot]in

தொலைபேசி எண் காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரை செயல்படும். அடிமட்ட அளவில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும், வழிமுறைகள் மற்றும் கொள்கை விவகாரங்கள் தொடர்பாகவும் உற்பத்தியாளர்கள், போக்குவரத்து நிறுவனங்கள், விநியோகஸ்தர்கள், ஒட்டுமொத்த விற்பனையாளர்கள் மற்றும் மின்னணு வர்த்தக நிறுவனங்களிடமிருந்து புகார்களை கட்டுப்பாட்டு அறை பெறும். புகார்களை பதிவு செய்த பிறகு, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையின் கட்டுப்பாட்டு அறையில் உள்ள பணியாளர்கள் மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் மாநில தலைமைச் செயலாளருக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுப்பார்கள். புகார் தெரிவித்தவர்களுக்கு விரைவில் உரிய நிவாரணம் கிடைப்பதையும் உறுதிப்படுத்துவார்கள்.

கட்டுப்பாட்டு அறைக்கு வரும் கோரிக்கைகள், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையின் மூத்த அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் இந்த விவகாரங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவார்கள். அவசர நடவடிக்கை தேவைப்படும் சூழல் இருந்தால், அவை குறிப்பிட்ட மாவட்ட ஆட்சியர் அல்லது காவல் துறையினர் உள்ளிட்ட மாநில அரசின் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையின் மூத்த அதிகாரிகள் அனைவருக்கும் குறிப்பிட்ட மாநிலங்களைக் கண்காணிக்கும் பொறுப்புகள் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பார்கள். மேலும், நிலுவையில் உள்ள புகார்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, மாநில அரசு நிர்வாகங்களைக் கேட்டுக் கொள்வார்கள். இந்தப் புகார்களுக்குத் தீர்வு காண்பது குறித்து மாநில அரசின் தொழில், போக்குவரத்து, நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவு மற்றும் பொது விநியோகத் துறை அதிகாரிகளும் தனியாக கண்காணிப்பார்கள்.


(Release ID: 1619693) Visitor Counter : 199