தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

உணவுப் பொருள்களின் அவசரத் தேவை குறித்து கவனம் செலுத்துமாறு தபால் துறைக்கு திரு. ரவிசங்கர் பிரசாத் அறிவுறுத்தல்

Posted On: 18 APR 2020 5:02PM by PIB Chennai

கோவிட்-19 நோய்த் தாக்குதல் பாதிப்பின் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் நாடு முழுக்க தங்களுக்கு உள்ள நெட்வொர்க் தொடர்புகளை தபால் துறை அலுவலகங்கள் மக்களுக்கு உதவும் வகையில் பயன்படுத்தி வருகின்றன. தொலைத் தொடர்பு, சட்டம் மற்றும் நீதி மற்றும் மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத் ஒவ்வொரு மாநில முதன்மை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல்கள், முதன்மைப் பொது மேலாளர்களுடன் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். தபால் துறையின் விரிவான நெட்வொர்க் தொடர்புகளைப் பயன்படுத்தி, நாடு முழுக்க உதவி தேவைப்படும் நிலையில் இருப்போருக்கு உதவிகள் செய்ய ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று அப்போது அமைச்சர் கேட்டுக்கொண்டார். தொலைதூரப் பகுதியில் உள்ள பல லட்சக்கணக்கான மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை கொண்டு போய் சேர்ப்பதில் நம்பிக்கை நட்சத்திரமாக இந்திய அஞ்சல் துறையினர் செயல்படுவதன் மூலம், உண்மையான கொரோனா எதிர்ப்பு போர் வீரர்களாக இருக்கிறார்கள்.

உணவுப் பொருட்கள் அவசரத் தேவையில் இருக்கும் கீழ்த்தட்டு மக்களுக்கு உதவி செய்வதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத் அறிவுறுத்தினார்.

குடிசைப் பகுதிகளில் வாழ்பவர்கள், குடிபெயர்ந்த தொழிலாளர்கள், தினக்கூலி தொழிலாளர்களில் உதவி தேவைப்படும் நிலையில் இருப்போருக்கு உணவு வழங்குதல், ரேஷன் பொருள்கள் மற்றும் முகக்கவச உறை வழங்குவதற்கு, தபால் துறை ஊழியர்கள் தங்களின் சேமிப்புகளை செலவிட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களில் 1 லட்சம் பேருக்கு உணவு / ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

முடக்கநிலை அமல் காலத்தில், சாதாரணமான மருந்துகள் கிடைக்கிற நிலையில், புற்றுநோய், சிறுநீரக சிகிச்சை போன்றவற்றுக்கான சிறப்பு மருந்துகளும், உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கான மருந்துகளும் கிடைக்கவில்லை. இதுவரை அவற்றை பெரிய நகரங்களில் வாழும் உறவினர்கள், குடும்பத்தினர் மூலம் நோயாளிகள் பெற்று வந்தனர். இதுதொடர்பாக அமைச்சருக்கு ட்விட்டர் மற்றும் இதர தொடர்பு வழிகள் மூலம் யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கருத்தில் கொண்டு, தபால் நிலையங்களின் துரித அஞ்சல் சேவையை பயன்படுத்தி, தபால் பட்டுவாடா ஊழியரின் கடைசிநிலை தொடர்பு மூலமாக அந்த உயிர்காக்கும் மருந்துகளை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

தபால் நிலையங்களில் வங்கிக் கணக்கு தொடங்கும் வசதிகளையும் இந்தத் துறை அளிக்கிறது. மிக முக்கியமாக ஆதார் அடிப்படையில் பட்டுவாடா செய்யும் நடைமுறையில் ஏழை மக்களின் வீட்டு வாசலிலேயே பணம் கிடைக்கச் செய்யும் வசதியும் அளிக்கப்படுகிறது. பல்வேறு ஓய்வூதியத் திட்டங்கள், 100 நாள் வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டங்கள், பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் சமீபத்தில் அறிவித்த நிவாரண உதவித் திட்டங்கள் மூலம் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் தொகைகளை இதன் மூலம் மக்கள் பெற்றுக் கொள்ளலாம். ஏப்ரல் 13 ஆம் தேதியன்று இந்திய தபால் துறை பட்டுவாடா வங்கி மூலம் அதிகபட்ச பரிவர்த்தனைகள், அதாவது ரூ.22.82 கோடி அளவிற்கான 1.09 லட்சம் பரிவர்த்தனைகள் நடந்திருப்பதன் மூலம், சாமானிய மக்கள் இதற்கு நல்ல வரவேற்பு கொடுத்திருப்பது வெளிப்பட்டிருக்கிறது.


 



(Release ID: 1616021) Visitor Counter : 189