பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சி மாநாட்டில் பிரதமர் நிகழ்த்திய ஆங்கில உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 06 DEC 2025 8:14PM by PIB Chennai

அனைவருக்கும் வணக்கம்

இந்துஸ்தான் டைம்ஸ் உச்சி மாநாட்டில் இந்தியாவின் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல விசேஷமான விருந்தினர்கள் இங்கே இருக்கிறார்கள். அமைப்பாளர்களுக்கும், தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சற்று முன்பு ஷோபனா அவர்கள் இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டார், அதை நான் கவனித்தேன். முதலாவதாக, மோடி அவர்கள் கடந்த முறை இங்கு வந்தபோது இதைத்தான் பரிந்துரைத்தார் என்று அவர் கூறினார். இந்த நாட்டில் உள்ள ஊடக நிறுவனங்களிடம், 'உங்கள் வேலையைச் செய்யுங்கள்' என்று சொல்ல யாருக்கும் தைரியம் இல்லை. ஆனால் நான் சொன்னேன், ஷோபனா அவர்களும் அவரது குழுவும் இந்த வேலையை மிகுந்த உற்சாகத்துடன் செய்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும், நான் இப்போதுதான் கண்காட்சியைப் பார்த்துவிட்டுத் திரும்பியதால், இந்த நாட்டைப் பொறுத்தவரை, அனைவரும் நிச்சயமாக அதைப் பார்க்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த புகைப்பட நண்பர்கள் இந்தத் தருணத்தை அழியாததாக மாற்றுவது போல் படம்பிடித்துள்ளனர். அவர் சொன்ன இரண்டாவது விஷயம், நான் அந்த வார்த்தைகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன், அவர், "நீங்கள் தொடர்ந்து நாட்டிற்கு சேவை செய்யுங்கள்" என்று சொல்லியிருக்கலாம், ஆனால் அதற்குப் பதிலாக, இந்துஸ்தான் டைம்ஸ் "நீங்கள் தொடர்ந்து நாட்டிற்கு சேவை செய்யுங்கள்" என்று சொன்னது. அதற்காகவும் நான் எனது சிறப்பு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இந்த முறை உச்சி மாநாட்டின் மையக்கருத்து எதிர்காலத்தை மாற்றுதல் என்பதாகும். 101 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட, மகாத்மா காந்தி அவர்கள். மதன் மோகன் மாளவியா அவர்கள், கன்ஷ்யாம் தாஸ் பிர்லா அவர்கள் மற்றும் எண்ணற்ற பிற மாமனிதர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்ற இந்துஸ்தான் செய்தித்தாள், எதிர்காலத்தை மாற்றுவதைப் பற்றி பேசும்போது, இந்தியாவில் நிகழும் மாற்றம் வெறும் சாத்தியக்கூறுகள் மட்டுமல்ல, அது வாழ்க்கையை மாற்றுவது, சிந்தனையை மாற்றுவது மற்றும் திசையை மாற்றுவது ஆகியவற்றின் உண்மையான கதை என்ற உறுதிப்பாட்டை நாடு பெறுகிறது என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

இன்று, நமது அரசியலமைப்பின் தலைமைச் சிற்பி, டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் அவர்கள் மகா பரிநிர்வாண தினம் கூட ஆகும். அனைத்து இந்தியர்கள் சார்பாகவும் அவருக்கு எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன்.

நண்பர்களே,

இன்று, நாம் 21-ம் நூற்றாண்டின் கால் பகுதியைக் கடந்துவிட்ட ஒரு காலகட்டத்தில் நிற்கிறோம். இந்த 25 ஆண்டுகளில், உலகம் பல ஏற்ற இறக்கங்களைக் கண்டுள்ளது. நாம் நிதி நெருக்கடிகள், உலகளாவிய பெருந்தொற்றுகள், தொழில்நுட்ப இடையூறுகள், உடைந்துபோகும் ஒரு உலகம் ஆகியவற்றைக் கண்டிருக்கிறோம், மேலும் நாம் போர்களையும் கண்டு வருகிறோம். இந்தச் சூழ்நிலைகள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் உலகிற்கு சவால் விடுகின்றன. இன்று உலகம் நிச்சயமற்ற தன்மைகளால் நிறைந்துள்ளது. ஆனால் இந்த நிச்சயமற்ற தன்மைகள் நிறைந்த சகாப்தத்தில், நமது இந்தியா ஒரு வித்தியாசமான நிலையில் காணப்படுகிறது, இந்தியா நம்பிக்கையுடன் நிறைந்துள்ளது. உலகில் பொருளாதார மந்தநிலை பற்றி பேசப்படும் போது, இந்தியா வளர்ச்சியின் கதையை எழுதுகிறது. உலகில் நம்பிக்கையின் நெருக்கடி இருக்கும்போது, இந்தியா நம்பிக்கையின் தூணாக மாறுகிறது. உலகம் துண்டு துண்டாக பிரியும் என்பதை நோக்கிச் சென்று கொண்டிருக்கும்போது, இந்தியா ஒரு இணைப்பு பாலத்தைக் கட்டுபவராக மாறுகிறது.

நண்பர்களே,

சில நாட்களுக்கு முன்பு, இந்தியாவின் இரண்டாவது காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிவரங்கள் வெளியாகின. 8 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சி விகிதம், நமது முன்னேற்றத்தின் புதிய உத்வேகத்தைப் பிரதிபலிக்கிறது.

நண்பர்களே,

இது வெறும் எண் அல்ல; இது ஒரு வலுவான பேரியல் பொருளாதார சமிக்ஞை ஆகும். இன்று இந்தியா உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக் காரணியாக மாறி வருகிறது என்ற செய்தியே இதுதான். மேலும், நமது இந்த புள்ளிவிவரங்கள், உலகளாவிய வளர்ச்சி சுமார் 3 சதவீதமாக இருக்கும் நேரத்தில் வந்துள்ளது. ஜி-7 நாடுகளின் பொருளாதாரங்கள் சராசரியாக சுமார் 1.5 சதவீதம், என்ற அளவில் வளர்ந்து வருகின்றன. இத்தகைய சூழ்நிலைகளில், இந்தியா அதிக வளர்ச்சி மற்றும் குறைந்த பணவீக்கத்திற்கான ஒரு முன்மாதிரியாக மாறியுள்ளது. ஒரு காலத்தில், பொருளாதார வல்லுநர்கள், குறிப்பாக நமது நாட்டில், அதிக பணவீக்கம் குறித்து கவலைகளை வெளிப்படுத்துவார்கள். இன்று, அதே நபர்கள் குறைந்த பணவீக்கம் பற்றி பேசுகிறார்கள்.

நண்பர்களே,

இந்தியாவின் இந்த சாதனைகள் சாதாரணமானவை அல்ல. இது வெறும் புள்ளிவிவரங்கள் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல; இது கடந்த பத்தாண்டுகளில் இந்தியா கொண்டு வந்த ஒரு அடிப்படை மாற்றம் ஆகும். இந்த அடிப்படை மாற்றம் நெகிழ்ச்சி பற்றியது, இந்த மாற்றம் சிக்கல்களைத் தீர்க்கும் போக்கு பற்றியது, இந்த மாற்றம் அச்சத்தின் மேகங்களை அகற்றி, விருப்பங்களை விரிவுபடுத்துவது பற்றியது, இதன் காரணமாகவே, இன்றைய இந்தியா தன்னைத்தானே உருமாற்றம் செய்து கொள்வதுடன், எதிர்காலத்தையும் மாற்றுகிறது.

நண்பர்களே,

இன்று, நாம், நாளைக்கான மாற்றம் பற்றி விவாதிக்கும் போது, இந்த மாற்றத்தில் ஏற்பட்டுள்ள நம்பிக்கை, நிகழ்காலத்தில், இன்று செய்யப்படும் பணிகளின் வலுவான அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இன்றைய சீர்திருத்தங்களும், இன்றைய செயல்பாடுகளும்தான் நமது நாளைய மாற்றத்திற்கு வழி வகுக்கின்றன. நாம் என்ன மனநிலையுடன் செயல்படுகிறோம் என்பதற்கு நான் உங்களுக்கு ஒரு உதாரணம் தருகிறேன்.

நண்பர்களே,

இந்தியாவின் ஆற்றலின் பெரும் பகுதி நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் இருந்தது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இந்த பயன்படுத்தப்படாத ஆற்றலுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் போது, அது முழு ஆற்றலுடன், எந்தத் தடையுமின்றி நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்கும்போது, நாடு உருமாற்றம் அடைவது உறுதி. நமது கிழக்கு இந்தியா, நமது வடகிழக்கு நமது கிராமங்கள், நமது 2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை நகரங்கள், நமது பெண் சக்தி இந்தியாவின் புதுமையான இளைஞர் சக்தி இந்தியாவின் கடல்சார் சக்தி நீலப் பொருளாதாரம், இந்தியாவின் விண்வெளித் துறை என்று இவ்வளவு விஷயங்கள் உள்ளன. இதன் முழு ஆற்றலும் முந்தைய தசாப்தங்களில் பயன்படுத்த முடியவில்லை. இப்போது இன்று இந்த பயன்படுத்தப்படாத ஆற்றலைத் தட்டி எழுப்பும் பார்வையுடன் இந்தியா முன்னேறிச் செல்கிறது. இன்று கிழக்கு இந்தியாவில் நவீன உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் தொழில்துறையில் முன்னோடியில்லாத முதலீடு செய்யப்படுகிறது. இன்று நமது கிராமங்களும், நமது சிறு நகரங்களும் நவீன வசதிகளுடன் சமமாக வளர்ச்சிப்பாதையில் பயணிக்கின்றன. நமது சிறு நகரங்கள் புத்தொழில்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு புதிய மையங்களாக மாறி வருகின்றன. நமது கிராமங்களில் உள்ள உழவர்கள் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்கி, நேரடியாக சந்தையுடன் இணைகிறார்கள், மேலும் சில உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் உலகளாவிய சந்தையுடனும் இணைகின்றன.

நண்பர்களே,

இந்தியாவில் மகளிர் சக்தி இன்று அற்புதங்களை நிகழ்த்தி வருகிறது. இன்று நமது மகள்கள் ஒவ்வொரு துறையிலும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இந்த மாற்றம் இனி பெண்களின் அதிகாரமளித்தலுடன் மட்டும் நின்றுவிடவில்லை; இது சமுதாயத்தின் சிந்தனையையும் திறன்களையும் மாற்றுகிறது.

நண்பர்களே,

புதிய வாய்ப்புகள் எழும்போது, தடைகள் நீக்கப்படும்போது, வானத்தில் பறக்க புதிய இறக்கைகளும் வளரும். இந்தியாவின் விண்வெளித் துறை இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. முன்னதாக விண்வெளித் துறை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால், நாம் விண்வெளித் துறையில் சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு அதைத் தனியார் பங்களிப்புக்கு திறந்து விட்டோம், இன்று நாடு அதன் பலன்களைப் பெறுகிறது. சரியாக 10-11 நாட்களுக்கு முன்பு, நான் ஹைதராபாத்தில் ஸ்கைரூட்-ன் 'இன்ஃபினிட்டி வளாகத்தை' திறந்து வைத்தேன். ஸ்கைரூட் என்பது இந்தியாவின் ஒரு தனியார் விண்வெளி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் மாதந்தோறும் ஒரு ராக்கெட்டை உற்பத்தி செய்யும் திறனோடு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், செயற்கைக்கோள் செலுத்து வாகனத்துக்குத் தயாரான விக்ரம்-ஒன் ஐ உருவாக்கி வருகிறது. அரசாங்கம் ஒரு தளத்தை வழங்கியது, அதில் இந்தியாவின் இளைஞர்கள் ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்கி வருகிறார்கள், இதுவே உண்மையான மாற்றம் ஆகும்.

நண்பர்களே,

இன்றைய இந்தியாவின் இந்த பயணம் வெறும் வளர்ச்சி பற்றியது மட்டுமல்ல. இது சிந்தனையில் மாற்றம் காணும் ஒரு பயணமும் கூட, இது ஒரு உளவியல் மறுமலர்ச்சியின் பயணமும் கூட. தன்னம்பிக்கை இல்லாமல் எந்த நாடும் முன்னேற முடியாது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவின் நீண்ட கால அடிமைத்தனம் இந்த தன்னம்பிக்கையை அசைத்துப் பார்த்தது. மேலும், இதற்கு அடிப்படைக் காரணம் அடிமை மனப்பான்மை ஆகும். இந்த அடிமை மனப்பான்மை, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்கு ஒரு பெரிய தடையாக உள்ளது. எனவே, இன்றைய இந்தியா அடிமை மனப்பான்மையில் இருந்து விடுதலை பெற பாடுபடுகிறது.

நண்பர்களே,

பிரிட்டிஷ்காரர்கள், தாங்கள் இந்தியாவில் நீண்ட காலம் ஆட்சி செய்ய விரும்பினால், இந்தியர்களின் தன்னம்பிக்கையைப் பறித்து, அவர்களுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மையை புகுத்த வேண்டும் என்பதை நன்கு அறிந்திருந்தனர். மேலும், பிரிட்டிஷ்காரர்கள் அந்தக் காலகட்டத்தில் அதைத்தான் சரியாகச் செய்தார்கள். எனவே, இந்தியக் குடும்ப அமைப்பு பழமையானது என்று கூறப்பட்டது, இந்திய உடை தொழில்முறை அற்றது என்று அறிவிக்கப்பட்டது, இந்திய பண்டிகைகள் மற்றும் கலாச்சாரம் அறிவுக்கு ஒவ்வாதது என்று கூறப்பட்டது, யோகா மற்றும் ஆயுர்வேதம் அறிவியல் பூர்வமற்றது என்று கூறப்பட்டது, இந்தியக் கண்டுபிடிப்புகள் கேலி செய்யப்பட்டன, மேலும் இந்த விஷயங்கள் பல தசாப்தங்களாகத் தொடர்ந்து மீண்டும் மீண்டும் கூறப்பட்டன, இது தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்தது. அதே விஷயம் கற்பிக்கப்பட்டது. அப்படியே, இந்தியர்களின் தன்னம்பிக்கையும் தகர்க்கப்பட்டது.

நண்பர்களே,

இந்த அடிமை மனப்பான்மையின் தாக்கம் எவ்வளவு பரவலாக இருந்தது என்பதற்கு சில உதாரணங்களை உங்களுக்குத் தர விரும்புகிறேன். இன்று, இந்தியா உலகின் மிக வேகமாக வளரும் முக்கியப் பொருளாதாரம் ஆகும். சிலர் இந்தியாவை உலகளாவிய வளர்ச்சியின் இயந்திரம் என்றும், மற்றவர்கள் உலகளாவிய எரிசக்தி மையம் என்றும் அழைக்கிறார்கள். இன்று பல குறிப்பிடத்தக்க விஷயங்கள் நடந்து வருகின்றன.

ஆனால் நண்பர்களே,

இன்று இந்தியா அனுபவித்து வரும் இந்த அதிவேக வளர்ச்சி பற்றி நீங்கள் எங்கேயாவது படித்திருக்கிறீர்களா? இதைப் பற்றி நீங்கள் எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? யாராவது இதை இந்து வளர்ச்சி என்று அழைக்கிறார்களா? உலகின் வேகமான பொருளாதாரம், வேகமான வளர்ச்சி, என்று யாராவது ஏதாவது சொல்கிறார்களா? இது எப்போது இந்து வளர்ச்சி விகிதம் என்று அழைக்கப்பட்டது? இந்தியா இரண்டு முதல் மூன்று சதவீத பொருளாதார வளர்ச்சிக்காக ஏங்கிக் கொண்டிருந்தபோது, ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, அதில் வாழும் மக்களின் நம்பிக்கையுடனும், அவர்களின் அடையாளத்துடனும் இணைப்பது, இது தற்செயலாக நடந்திருக்க முடியுமா என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லை, இது அடிமை மனப்பான்மையின் பிரதிபலிப்பு. ஒரு முழு சமூகமும், ஒரு முழு பாரம்பரியமும், உற்பத்தித்திறன் அற்றது மற்றும் வறுமைக்கு ஒப்பாக ஆக்கப்பட்டது. இதன் பொருள், இந்தியாவின் பின்தங்கிய வளர்ச்சி விகிதத்திற்குக் காரணம் நமது இந்து நாகரிகம் மற்றும் இந்து கலாச்சாரம் என்பதை நிரூபிக்க ஒரு முயற்சி நடைபெற்றது. மேலும், எல்லையைப் பாருங்கள், எல்லாவற்றிலும் மதவாதத்தைக் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கும் இன்றுள்ள அறிவு ஜீவிகள் இந்திய வளர்ச்சி விகிதத்தில் மதவாதத்தைக் காணவில்லை. இந்த வார்த்தை அவர்களின் காலத்தில்தான் புத்தகங்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளில் சேர்க்கப்பட்டது.

நண்பர்களே,

அடிமை மனப்பான்மை இந்தியாவில் உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பை எவ்வாறு அழித்தது, மேலும் அதை நாம் எவ்வாறு மீட்டெடுத்து வருகிறோம் என்பதற்கும் சில உதாரணங்களை நான் உங்களுக்குத் தருகிறேன். அடிமைத் தனத்தின் காலத்திலும்கூட இந்தியா ஒரு பெரிய ஆயுத உற்பத்தி நாடாக இருந்தது. எங்களிடம் வெடிமருந்து தொழிற்சாலைகளின் வலுவான வலைப்பின்னல் இருந்தது. இந்தியாவில் இருந்து ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்பட் டன. உலகப் போர்களின் போது கூட, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன. ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு, நமது பாதுகாப்பு உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பு அழிக்கப்பட்டது. அடிமை மனப்பான்மை மிகவும் மேலோங்கியதால், அரசாங்கத்தில் இருந்தவர்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை குறைத்து மதிப்பிடத் தொடங்கினர்.  மேலும் இந்த மனப்பான்மை இந்தியாவை உலகின் மிகப்பெரிய பாதுகாப்பு இறக்குமதியாளர்களில் ஒன்றாக மாற்றியது.

நண்பர்களே,

அடிமை மனப்பான்மை கப்பல் கட்டும் தொழிலுக்கும் அதையே செய்தது. இந்தியா பல நூற்றாண்டுகளாக கப்பல் கட்டும் ஒரு முக்கிய மையமாக இருந்தது. 5-6 தசாப்தங்களுக்கு முன்பு, அதாவது 50-60 ஆண்டுகளுக்கு முன்பு கூட, இந்தியாவின் 40 சதவீத வர்த்தகம் இந்தியக் கப்பல்களில்தான் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அடிமை மனப்பான்மை வெளிநாட்டு கப்பல்களுக்கு முன்னுரிமை கொடுக்கத் தொடங்கியது. இதன் விளைவு அனைவரின் முன்பும் உள்ளது. ஒரு காலத்தில் கடல்சார் சக்தியாக இருந்த நாடு, அதன் 95 சதவீத வர்த்தகத்திற்காக வெளிநாட்டுக் கப்பல்களைச் சார்ந்து இருக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளது. இதன் காரணமாக, இன்று இந்தியா ஆண்டுதோறும் சுமார் 75 பில்லியன் டாலர்கள், அதாவது சுமார் 6 லட்சம் கோடி ரூபாயை, வெளிநாட்டுக் கப்பல் நிறுவனங்களுக்குச் செலுத்தி வருகிறது.

நண்பர்களே,

கப்பல் கட்டுவது ஆகட்டும் அல்லது பாதுகாப்பு உற்பத்தி ஆகட்டும், இன்று ஒவ்வொரு துறையிலும், அடிமைத்தனத்தின் மனப்பான்மையை விட்டு விலகி, புதிய புகழை அடைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நண்பர்களே,

அடிமை மனப்பான்மை இந்தியாவின் நிர்வாக அணுகுமுறைக்கும் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட காலமாக, அரசாங்க அமைப்பு அதன் குடிமக்கள் மீது அவநம்பிக்கை கொண்டிருந்தது. உங்களுக்கு நினைவிருக்கலாம், முன்பு ஒருவர் தனது சொந்த ஆவணங்களை அரசாங்க அதிகாரியிடம் சான்றொப்பம் பெற வேண்டியிருந்தது. அவர்கள் முத்திரையிட்டால் ஒழிய, அனைத்தும் பொய் என்று கருதப்பட்டது. உங்கள் கடின உழைப்புக்கான சான்றிதழ். இந்த அவநம்பிக்கை உணர்வை நாங்கள் தகர்த்தெறிந்து, சுய-சான்றொப்பம் போதுமானது என்று கருதினோம். என் நாட்டின் குடிமகன் சொல்கிறான், சகோதரா, இதுதான் நான் சொல்கிறேன், நான் அவரை நம்புகிறேன்.

நண்பர்களே,

நமது நாட்டில் சிறிய தவறுகள் கூட கடுமையான குற்றங்களாகக் கருதப்படும் விதிகள் இருந்தன. நாங்கள் மக்கள் நம்பிக்கைக்கு ஏற்ப சட்டம் கொண்டு வந்து, நூற்றுக்கணக்கான விதிகளை குற்றமற்றதாக்கினோம்

நண்பர்களே,

முன்னர், ஒரு வங்கியிலிருந்து ஆயிரம் ரூபாய் கடன் தேவைப்பட்டாலும், அதிக அளவிலான அவநம்பிக்கை காரணமாக வங்கி ஒரு உத்தரவாதத்தைக் கேட்கும். முத்ரா திட்டத்தின் மூலம், இந்த அவநம்பிக்கையின் விஷச் சங்கிலியை நாங்கள் உடைத்தோம். இந்தத் திட்டத்தின் கீழ், நாங்கள் ஏற்கனவே நமது நாட்டு மக்களுக்கு 37 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பிணையில்லாக் கடன்களை வழங்கியுள்ளோம். இந்த பணம் இந்த குடும்பங்களின் இளைஞர்களுக்கு தொழில்முனைவோராக மாறுவதற்கான நம்பிக்கையை அளித்துள்ளது. இன்று, நடைபாதை வியாபாரிகள் மற்றும் தள்ளுவண்டி இழுப்பவர்களுக்கும் கூட பிணையின்றி வங்கிகளிடமிருந்து கடன் வழங்கப்படுகிறது.

நண்பர்களே,

நமது நாட்டில், அரசாங்கத்திடம் ஏதேனும் ஒன்று கொடுக்கப்பட்டால், அது ஒரு வழி போக்குவரத்து என்று எப்போதும் நம்பப்படுகிறது. ஒருமுறை கொடுத்தால், கொடுத்ததுதான், அது ஒருபோதும் திரும்பி வராது. போனது, போய்விட்டது இதுதான் அனைவரின் அனுபவம். ஆனால் அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையே நம்பிக்கை பலமாக இருக்கும்போது, வேலைகள் எப்படி நடக்கின்றன? நாளை நீங்கள் ஏதேனும் ஒரு நல்லதைச் செய்ய விரும்பினால், இன்று நீங்கள் ஏதேனும் ஒரு நல்லதைச் செய்ய முடிவெடுக்க வேண்டும். மனது நல்லதாக இருந்தால், நாளையும் நன்றாக இருக்கும். அதனால்தான் நாங்கள் மற்றொரு இயக்கத்துடன் வந்துள்ளோம். அதைப் பற்றிக் கேட்கும்போது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இதுவரை செய்தித்தாள்கள், செய்தித்தாள் ஆட்கள் அதைக் கவனிக்கவில்லை. அவர்கள் கவனிப்பார்களா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை, ஒருவேளை இன்றைக்குப் பிறகு நடக்கலாம்.

 

இன்று, நம்முடைய சொந்த குடிமக்களின் 78 ஆயிரம் கோடி ரூபாய் நாட்டின் வங்கிகளில் உரிமை கோரப்படாமல் இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். அதன் உரிமையாளர் யார், யாருடையது, அது எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை. இந்த பணத்தைப் பற்றிக் கேட்க யாரும் இல்லை. அதேபோல், காப்பீட்டு நிறுவனங்களிடம் சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் உள்ளது. பரஸ்பர நிதி நிறுவனங்களிடம் சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் உள்ளது. 9 ஆயிரம் கோடி ரூபாய் ஈவுத்தொகை அவர்களிடமே உள்ளது. இவை அனைத்தும் உரிமை கோரப்படாமல் உள்ளன, யாருக்கும் சொந்தமில்லை. இந்த பணம் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்குச் சொந்தமானது, அதனால்தான், அது யாருக்குச் சொந்தமோ, அவர்கள் அதை மறந்துவிட்டனர். எங்கள் அரசாங்கம் இப்போது நாடு முழுவதும் அவர்களைத் தேடுகிறது. சொல்லுங்கள், அந்தப் பணம் உங்களுடையது இல்லையா, உங்கள் பெற்றோருடையது இல்லையா?

எங்களுடைய அரசு அதன் உண்மையான உரிமையாளர்களைச் சென்றடைவதில் மும்முரமாக உள்ளது. இதற்காக, அரசாங்கம் சிறப்பு முகாம்களை அமைக்கத் தொடங்கியுள்ளது, "சகோதரா, பாருங்கள், யாராவது அப்படி இருந்தால், அவர்களின் இருப்பிடத்தை தெரியப்படுத்தப்பட வேண்டும். உங்களுடைய பணம் எங்காவது இருக்கிறதா, அது எங்கேயோ போய்விட்டதா? இல்லையா என்று மக்களுக்கு விளக்கிக் கொண்டிருக்கிறது. இதுவரை, சுமார் 500 மாவட்டங்களில் இதுபோன்ற முகாம்களை அமைத்ததன் மூலம், நாங்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை உண்மையான உரிமையாளர்களிடம் வழங்கியுள்ளோம். பணம் அங்கேயே இருந்தது, யாரும் கேட்கவில்லை, ஆனால் இது உன்னுடைய பணம், எடுத்துக்கொள்ளுங்கள்.

நண்பர்களே,

இது வெறும் சொத்துக்களைத் திருப்பித் தரும் விஷயம் மட்டுமல்ல, இது நம்பிக்கை பற்றிய விஷயம். இது மக்களின் நம்பிக்கையை, தொடர்ந்து பெறுவதற்கான ஒரு உறுதிப்பாடு மேலும் மக்களின் நம்பிக்கைதான் நமது மிகப்பெரிய சொத்து. அடிமைத்தனத்தின் மனப்பான்மை இருந்திருந்தால், அரசாங்கம் - மனதளவில் முதலாளித்துவ மனப்பான்மை கொண்டதாக இருந்திருக்கும், மேலும் இதுபோன்ற இயக்கங்கள் ஒருபோதும் நடத்தப்பட்டிருக்காது.

நண்பர்களே,

ஒவ்வொரு துறையிலும் நமது நாட்டை அடிமை மனப்பான்மையிலிருந்து முற்றிலும் விடுவிக்க வேண்டும். சில நாட்களுக்கு முன்புதான், நான் தேசத்திடம் ஒரு வேண்டுகோள் வைத்தேன். அடுத்த 10 ஆண்டுகளுக்கான காலக்கெடுவுடன் நாட்டு மக்கள் செயல்படவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இது குறித்த எனது வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளுங்கள்.  140 கோடி நாட்டு மக்களின் உதவி இல்லாமல் என்னால் இதைச் செய்ய முடியாது, அதனால்தான் நான் மீண்டும் மீண்டும் நாட்டு மக்களிடம் கைகூப்பிச் சொல்கிறேன்.  இந்த 10 ஆண்டுகால காலக்கெடுவில் நான் என்ன கேட்கிறேன் என்றால்  இந்தியாவில் மனதளவில் அடிமைத்தனத்தின்  விதைகளை விதைத்த மெக்காலேயின் கல்விக் கொள்கை அமல்படுத்தி 2035 ஆம் ஆண்டில் 200 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அதாவது, இன்னும் 10 ஆண்டுகள் மட்டுமே உள்ளன. எனவே, இந்த பத்து ஆண்டுகளில், நமது நாட்டை அடிமை மனப்பான்மையிலிருந்து விடுவிக்க நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

நண்பர்களே,

நான் அடிக்கடி சொல்வேன், நாங்கள் வழக்கமான பாதையைப் பின்பற்றும் ஆட்கள் அல்ல. ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்க, நாம் நமது எல்லைகளை விரிவாக்க வேண்டும். நாட்டின் எதிர்காலத் தேவைகளைப் புரிந்துகொண்டு நிகழ்காலத்தில் தீர்வுகளைக் காண வேண்டும். நான் தொடர்ந்து இந்தியாவுக்கான உற்பத்தி இயக்கம் மற்றும் சுயசார்பு இந்தியா இயக்கம் பற்றி விவாதிப்பதைப் பார்க்கிறீர்கள். ஷோபனா அவர்களும் தனது உரையில் அதைக் குறிப்பிட்டார். இத்தகைய இயக்கங்கள் 40 அல்லது 45 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியிருந்தால், நாட்டின் இன்றைய நிலை வேறுவிதமாக இருந்திருக்கும். ஆனால் அப்போது அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்களுக்கு வெவ்வேறு முன்னுரிமைகள் இருந்தன. உங்களுக்கு செமிகண்டக்டர் கதை தெரியும். சுமார் 50-60 ஆண்டுகளுக்கு முன்பு, ஐந்து முதல் ஆறு தசாப்தங்களுக்கு முன்பு, ஒரு செமிகண்டக்டர் ஆலையை அமைக்க ஒரு நிறுவனம் இந்தியாவிற்கு வந்தது, ஆனால் அது புறக்கணிக்கப்பட்டது. இதனால் செமிகண்டக்டர் உற்பத்தியில் நாடு வெகுவாகப் பின்தங்கியது.

நண்பர்களே,

எரிசக்தித் துறையிலும் அதே நிலைதான். இன்று, இந்தியா ஒவ்வொரு ஆண்டும் சுமார் 12.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்கிறது. 12.5 லட்சம் கோடி ரூபாய்!  என்பது எவ்வளவு பெரிய தொகை. ஆனால் நமது நாட்டிற்கு சூரிய பகவானின் பெரும் ஆசிகள் உள்ளன.  இருந்தபோதிலும் 2014 வரை, இந்தியாவில் சூரியசக்தி உற்பத்தி திறன்  வெறும் 3 ஜிகாவாட் மட்டுமே. நீங்கள் என்னை பிரதமராக தேர்ந்தெடுக்கும் வரை, 2014-ஐப் பற்றி நான் பேசுகிறேன். 3 ஜிகாவாட், ஆனால் கடந்த 10 ஆண்டுகளில், அது இப்போது சுமார் 130 ஜிகாவாட்டாக வளர்ந்துள்ளது. மேலும் அதில், மேற்கூரை சூரியசக்தித் திட்டத்தின்  மூலமாக மட்டும் இந்தியா 22 ஜிகாவாட் எரிசக்தி திறனை சேர்த்துள்ளது.

நண்பர்களே,

வீடுகளுக்கான பிரதமரின் இலவச சூரிய மின்சாரத் திட்டம். நாட்டின் மக்களுக்கு எரிசக்தி பாதுகாப்புக்கான இந்த இயக்கத்தில் நேரடியாகப் பங்கேற்க ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. நான் காசியின் நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி). நான் பிரதமராக என்னுடைய வேலையைச் செய்கிறேன், ஆனால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவும் எனக்குச் சில வேலைகள் உள்ளன. காசியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நான் உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். மேலும் உங்களது இந்திச் செய்தித்தாள் சக்தி வாய்ந்தது, எனவே இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். வீடுகளுக்கான பிரதமரின் இலவச சூரிய மின்சாரத் திட்டத்தின் கீழ் காசியில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் சூரியசக்தி ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. இதன் காரணமாக, தினமும் மூன்று லட்சம் அலகுகளுக்கு மேல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது, மேலும் மக்கள் ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ. 5 கோடி சேமிக்கிறார்கள். அதாவது, ஒரு வருடத்தில் 60 கோடி ரூபாய்.

நண்பர்களே,

இவ்வளவு சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 90 ஆயிரம் மெட்ரிக் டன் கார்பன் உமிழ்வு குறைக்கப்பட்டு வருகிறது. இவ்வளவு கார்பன் உமிழ்வை உறிஞ்சுவதற்கு, நாம் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களை நட வேண்டியிருக்கும். மேலும் நான் மீண்டும் சொல்கிறேன், நான் வழங்கிய இந்த புள்ளிவிவரங்கள் காசி, பனாரஸுக்கு மட்டும்தான்; நான் நாடு முழுவதைப் பற்றி பேசவில்லை. வீடுகளுக்கான பிரதமரின் இலவச சூரிய மின்சாரத் திட்டம் நாட்டிற்கு எவ்வளவு பெரிய பலனை அளிக்கிறது என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம். எதிர்காலத்தை மாற்றியமைக்க இன்றைய ஒரு திட்டத்திற்கு எவ்வளவு சக்தி உள்ளது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

நண்பர்களே,

மொபைல் உற்பத்தி புள்ளிவிவரங்களை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். 2014 க்கு முன், நமது மொபைல் ஃபோன்களில் 75 சதவிகிதம் இறக்குமதி செய்தோம், இப்போது, இந்தியாவின் மொபைல் ஃபோன் இறக்குமதிகள் கிட்டத்தட்ட பூஜ்ஜியத்திற்கு வந்துவிட்டன. நாம் இப்போது ஒரு பெரிய மொபைல் ஃபோன் ஏற்றுமதியாளராக மாறி வருகிறோம். 2014 க்குப் பிறகு, நாங்கள் ஒரு சீர்திருத்தத்தைச் செய்தோம், நாடு செயல்பட்டது, அதன் மாற்றத்தை ஏற்படுத்தும் முடிவுகளை உலகம் இன்று பார்த்துக்கொண்டிருக்கிறது.

நண்பர்களே,

எதிர்காலத்திற்கான இந்தப் பயணம், பல திட்டங்கள், பல கொள்கைகள் பல முடிவுகள், மக்களின் விருப்பங்கள் மற்றும் மக்கள் பங்கேற்பு ஆகியவற்றின் பயணம். இது ஒரு தொடர்ச்சியான பயணம். இது ஒரு உச்சி மாநாட்டின் விவாதங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை; இந்தியாவைப் பொறுத்தவரை, இது ஒரு தேசிய தீர்மானம். இந்தத் தீர்மானத்தில் அனைவரின் ஆதரவும் அவசியம், அனைவரின் முயற்சியும் அவசியம். கூட்டு முயற்சிகள் இந்த மாற்றத்தின் உயரத்தை அடைய நமக்கு நிச்சயமாக ஒரு வாய்ப்பை அளிக்கும்.

நண்பர்களே,

இன்னொரு முறை, என்னுடன் இருப்பதற்கு எனக்கு வாய்ப்பளித்ததற்கும், நீங்கள் சில சமயங்களில் பரிந்துரைக்கும் விஷயங்களை நிறைவேற்றியதற்கும் ஷோபனா அவர்கள் மற்றும் இந்துஸ்தான் டைம்ஸ் இதழுக்கு நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சி நாட்டின் புகைப்படக் கலைஞர்களுக்கு ஒரு புதிய சக்தியாக மாறும் என்று நான் நம்புகிறேன். இதுபோல பல புதிய நிகழ்ச்சிகளை நீங்களும் எதிர்காலத்திற்காகக் கருத்தில் கொள்ளலாம். உங்களுக்கு என்னுடைய உதவி தேவைப்பட்டால், தயவுசெய்து எனக்குத் தெரியப்படுத்துங்கள், நான் கருத்து கொடுக்க ராயல்டி எதுவும் வாங்குவதில்லை. இது ஒரு இலவச மற்றும் இது ஒரு மார்வாடி குடும்பம் அதனால் இந்த வாய்ப்பை அது தவறவிடாது. உங்கள் அனைவருக்கும் நன்றி. வணக்கம்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2199893&reg=3&lang=1  

***

SS/VK/KR

 


(வெளியீட்டு அடையாள எண்: 2250100) வருகையாளர் எண்ணிக்கை : 25