பிரதமர் அலுவலகம்
நவா ராய்பூரில் கட்டப்பட்டுள்ள சத்தீஸ்கர் சட்டப்பேரவையின் புதிய கட்டிடத் திறப்பு விழாவில் பிரதமர் திரு.நரேந்திரமோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
01 NOV 2025 3:22PM by PIB Chennai
சத்தீஸ்கர் மாநில ஆளுநர், திரு. ரமண் தேகா ஜி அவர்களே, மக்களவை சபாநாயகர், திரு.ஓம் பிர்லா ஜி அவர்களே, சத்தீஸ்கர் சட்டமன்ற சபாநாயகர், எனது நண்பர் திரு.ரமண் சிங் ஜி அவர்களே, மாநில முதலமைச்சர், திரு.விஷ்ணு தியோ சாய் ஜி அவர்களே, மத்திய அரசில் எனது சகா, தோக்கன் திரு.சாகு ஜி அவர்களே, துணை முதல்வர்கள், திரு.விஜய் ஷர்மா ஜி மற்றும் திரு.அருண் சாவ் ஜி அவர்களே, மாநில சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர், திரு.சரண் தாஸ் மஹந்த் ஜி அவர்களே, இங்கு வருகை தந்துள்ள மற்ற சிறப்புமிக்க அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தாய்மார்களே, சகோதரிகளே, பெரியோர்களே!
இன்று சத்தீஸ்கரின் வளர்ச்சி பயணத்தில் ஒரு பொற்காலத் தொடக்கத்தைக் குறிக்கிறது. தனிப்பட்ட முறையில், இது எனக்கும் ஒரு மிகச் சிறப்பான மற்றும் மகிழ்ச்சியான நாள். பல தசாப்தங்களாக இந்த மண்ணுடன் எனக்கு ஒரு ஆழமான உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பு இருந்து வருகிறது. ஒரு தொண்டனாக, நான் சத்தீஸ்கரில் அதிக நேரத்தைச் செலவிட்டேன், இந்த இடத்திலிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். சத்தீஸ்கரின் மக்களும் மண்ணும் என் வாழ்க்கையை மிகவும் ஆசீர்வதித்து வடிவமைத்துள்ளன. சத்தீஸ்கர் என்ற யோசனை மற்றும் கருத்தாக்கம் உருவானது முதல், அதன் உருவாக்கத்திற்கு வழிவகுத்த தீர்மானம் வரையிலும், அந்த கனவு நனவாகும் வரையிலும், மாநிலத்தின் மாற்றத்தின் ஒவ்வொரு கட்டத்திற்கும் நான் ஒரு சாட்சியாக இருந்துள்ளேன். மேலும் இன்று, சத்தீஸ்கர் அதன் 25 ஆண்டுகாலப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ள நிலையில், இந்த வரலாற்றுத் தருணத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நான் மீண்டும் கௌரவிக்கப்பட்டுள்ளேன். இந்த வெள்ளி விழா கொண்டாட்டத்தைக் குறிக்கும் வகையில், மாநில மக்களுக்காக இந்த புதிய சட்டப்பேரவைக் கட்டிடத்தைத் திறந்து வைக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது. இந்த மங்களகரமான சந்தர்ப்பத்தில் நான் சத்தீஸ்கர் மக்களுக்கும், மாநில அரசுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
2025-ம் ஆண்டு இந்தியக் குடியரசின் அமுத காலத்தைக் குறிக்கிறது. எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, பாரதம் தனது அரசியலமைப்பைத் தனது குடிமக்களுக்கு அர்ப்பணித்தது. இந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தில், இந்த மண்ணிலிருந்து, அரசியலமைப்பு நிர்ணய சபையின் புகழ்பெற்ற உறுப்பினர்களான பண்டிட் ரவிசங்கர் சுக்லா ஜி, பாரிஸ்டர் தாக்கூர் சேதிலால் ஜி, கன்ஷ்யாம் சிங் குப்தா ஜி, கிஷோரி மோகன் திரிபாதி ஜி, ராம்ப்ரசாத்போடை ஜி, மற்றும் ரகுராஜ் சிங் ஜி ஆகியோருக்கு எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன். பெரும்பாலும் வளர்ச்சியடையாத இந்தப் பகுதியிலிருந்து வந்த இந்த தொலைநோக்குச் சிந்தனையாளர்கள் டெல்லியை அடைந்து, டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர் தலைமையின் கீழ் நமது அரசியலமைப்பை வடிவமைப்பதில் ஒரு முக்கியமான பாத்திரத்தை வகித்துள்ளனர்.
நண்பர்களே,
இன்று சத்தீஸ்கரின் வரலாற்றில் ஒரு பொன்னான அத்தியாயம். இந்த பிரம்மாண்டமான மற்றும் நவீன சட்டப்பேரவைக் கட்டிடத்தின் திறப்பு விழா வெறும் ஒரு கட்டமைப்பை அர்ப்பணிப்பது மட்டுமல்ல, இது 25 ஆண்டுகால மக்களின் விருப்பங்கள், போராட்டங்கள் மற்றும் பெருமைகளின் கொண்டாட்டமாகும். இன்று, சத்தீஸ்கர் அதன் கனவுகளின் ஒரு புதிய உச்சியில் நிற்கிறது. இந்த பெருமைமிக்க தருணத்தில், இந்த மாநிலத்தை உருவாக்க அவருடைய தொலைநோக்குச் சிந்தனையும் கருணையும் காரணமாக இருந்த, பாரத ரத்னா, வணக்கத்துக்குரிய அடல் பிஹாரி வாஜ்பாய் ஜி என்ற அந்த மாபெரும் தொலைநோக்குச் சிந்தனையாளருக்கு நான் தலைவணங்குகிறேன்.
நண்பர்களே,
அடல் ஜி 2000-ம் ஆண்டில் சத்தீஸ்கர் மாநிலத்தை உருவாக்கியபோது, அவரது முடிவு வெறுமனே ஒரு நிர்வாக முடிவு அல்ல. வளர்ச்சிக்கு புதிய பாதைகளைத் திறப்பதற்கும், சத்தீஸ்கரின் ஆன்மாவிற்கு ஒரு அடையாளம் கொடுப்பதற்கும் ஒரு தொலைநோக்குச் சிந்தனையுடன் கூடிய நடவடிக்கையாகும். அதனால்தான் இன்று, பிரம்மாண்டமான புதிய சட்டப்பேரவைக் கட்டிடம் அடல் ஜியின் சிலை திறப்புடன் சேர்ந்து தொடங்கப்படும்போது, என் இதயம் உணர்ச்சியால் நிரம்பியுள்ளது. நான் இவ்வாறு சொல்ல விரும்புகிறேன்: அடல் ஜி, நீங்கள் எங்கிருந்தாலும், உங்கள் கனவு நனவாகிக் கொண்டிருக்கிறது என்று பாருங்கள். நீங்கள் உருவாக்கிய சத்தீஸ்கர் மாநிலம் இன்று தன்னம்பிக்கையுடன் மிளிர்கிறது, முன்னேற்றத்தின் புதிய உயரங்களை எட்டுகிறது.
நண்பர்களே,
சத்தீஸ்கர் சட்டப்பேரவையின் வரலாறு ஒரு உத்வேகமாகும். இந்த அழகான மாநிலம் 2000-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டபோது, முதல் சட்டப்பேரவை அமர்வு ராய்ப்பூரில் உள்ள ராஜ்குமார் கல்லூரியின் ஜஷ்பூர் மண்டபத்தில் நடைபெற்றது. அவை வரையறுக்கப்பட்ட வளங்கள், ஆனால் வரம்பற்ற கனவுகளைக் கொண்ட நாட்கள். அந்தக் காலத்தில் இருந்த ஒரே உணர்வு என்னவென்றால், நாம் நமது விதியை வடிவமைத்து, அதை விரைவாகப் பிரகாசிக்கச் செய்வோம் என்பதே. பின்னர் வந்த சட்டப்பேரவைக் கட்டிடமும் முதலில் மற்றொரு துறையின் வளாகத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அங்கிருந்துதான் சத்தீஸ்கரின் ஜனநாயகப் பயணம் ஒரு புதிய ஆற்றலுடன் தொடங்கியது. மேலும் இன்று, 25 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே ஜனநாயகமும் அதே மக்களும் ஒரு நவீன, டிஜிட்டல் மற்றும் தற்சார்புள்ள சட்டப்பேரவை வளாகத்தைத் திறந்து வைக்கிறார்கள்.
நண்பர்களே,
இந்த கட்டிடம் ஜனநாயகத்தின் கருவறை ஆகும். இங்குள்ள ஒவ்வொரு தூணும் வெளிப்படைத்தன்மையின் அடையாளமாக நிற்கிறது. ஒவ்வொரு நடைபாதையும் பொறுப்பை நமக்கு நினைவூட்டுகிறது. மேலும் ஒவ்வொரு அறையும் மக்களின் குரலைப் பிரதிபலிக்கிறது. இங்கு எடுக்கப்படும் முடிவுகள் சத்தீஸ்கரின் விதியை அடுத்து வரும் தசாப்தங்களுக்கு தீர்மானிக்கும். இங்கு பேசப்படும் ஒவ்வொரு வார்த்தையும் சத்தீஸ்கரின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறும். இந்தக் கட்டிடம் தலைமுறைகளுக்கு மாநிலத்தின் கொள்கை, விதி மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் மையமாகச் செயல்படும் என்று நான் நம்புகிறேன்.
நண்பர்களே,
இன்று, ஒட்டுமொத்த தேசமும் 'பாரம்பரியம்' (Virasat) மற்றும் 'வளர்ச்சி' (Vikas) இரண்டையும் தழுவி முன்னோக்கி நகர்கிறது. இந்த உணர்வு அரசாங்கத்தின் ஒவ்வொரு கொள்கை மற்றும் முடிவிலும் காணப்படுகிறது. புனிதமான செங்கோல் நமது புதிய நாடாளுமன்றத்திற்கு உத்வேகம் அளிக்கிறது. நாடாளுமன்றத்தின் புதிய காட்சியகங்கள் உலகை இந்திய ஜனநாயகத்தின் பண்டைய வேர்களுடன் இணைக்கின்றன. நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள சிலைகள், இந்தியாவில் ஜனநாயகம் எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதை உலகிற்கு நினைவூட்டுகின்றன.
நண்பர்களே,
பாரதத்தின் அதே தொலைநோக்கும் உணர்வும் சத்தீஸ்கரின் புதிய சட்டப்பேரவைக் கட்டிடத்திலும் பிரதிபலிக்கிறது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
நண்பர்களே,
சத்தீஸ்கரின் புதிய சட்டப்பேரவை வளாகம் மாநிலத்தின் செழுமையான கலாச்சாரத்தின் உண்மையான பிரதிபலிப்பாகும். இந்த சட்டப்பேரவையின் ஒவ்வொரு மூலையும் சத்தீஸ்கரின் புனித மண்ணில் பிறந்த மாபெரும் ஆளுமைகளின் உத்வேகத்தைக் கொண்டுள்ளது. ஒதுக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது, "அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்" (Sabka Saath, Sabka Vikas) என்பது பாஜக அரசாங்கத்தின் கீழ் உள்ள நல்லாட்சியின் சிறப்பம்சங்களாகவும், தேசத்தின் அரசியலமைப்பின் உணர்வை பிரதிபலிக்கின்றன. இந்த மதிப்புகள் நமது ஞானிகள், முனிவர்கள் மற்றும் மாபெரும் தலைவர்களின் நித்திய போதனைகளாகும்.
நண்பர்களே,
இந்த கம்பீரமான கட்டிடத்தை நான் கவனித்தபோது, பஸ்தர் கலையின் அழகான கண்ணோட்டத்தை என்னால் பார்க்க முடிந்தது. சில மாதங்களுக்கு முன்பு நான் தாய்லாந்து பிரதமருக்கு பஸ்தர் கலையின் ஒரு பகுதியை வழங்கியதை நினைவு கூர்கிறேன். பஸ்தரில் இருந்து வந்த இந்தக் கலை வடிவம் நமது படைப்பாற்றல் மற்றும் கலாச்சார வலிமையின் அடையாளமாகும்.
நண்பர்களே,
இந்த சட்டப்பேரவையின் சுவர்கள் பாபா குரு காசிதாஸ் ஜி அவர்களின் "மனிதரெல்லாம் சமம்" (Manikhe-Manikhe Ek Samaan) என்ற செய்தியைக் கொண்டுள்ளன. இது அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் அனைவருக்கும் மரியாதை (Sabka Saath, Sabka Vikas, Sabka Samman) என்ற சாரத்தை நமக்குக் கற்பிக்கிறது. இந்தக் கட்டிடத்தின் ஒவ்வொரு நுழைவாயிலும் மாதா சபரியால் கற்பிக்கப்பட்ட அன்பு மற்றும் பணிவைக் குறிக்கிறது, ஒவ்வொரு விருந்தினரையும், ஒவ்வொரு குடிமகனையும் பாசத்துடன் வரவேற்க வேண்டும் என்பதை இது நினைவூட்டுகிறது. இந்த சட்டப்பேரவையில் உள்ள ஒவ்வொரு இருக்கையும் சாது கபீரால் போதிக்கப்பட்ட உண்மை மற்றும் அச்சமின்மையின் உணர்வைக் கொண்டுள்ளது. மேலும் இந்தக் கட்டிடத்தின் அடித்தளத்தில் மகபிரபு வல்லபாச்சாரியரின் 'மனித சேவை, நாராயண சேவை' (Nar Seva, Narayan Seva) என்ற தீர்மானம் உள்ளது.
நண்பர்களே,
பாரதம் ஜனநாயகத்தின் தாய். நமது பழங்குடியின சமூகம் தலைமுறைகளாக இந்த ஜனநாயக மரபுகளை வாழ்ந்து பயிற்சி செய்து வந்துள்ளது. பஸ்தரின் 'ஆதி சம்சாத்' (பண்டைய நாடாளுமன்றம்) என்று அழைக்கப்படும் முரியா தர்பார், இந்த பாரம்பரியத்திற்கு ஒரு வாழும் எடுத்துக்காட்டு. பல நூற்றாண்டுகளாக, நமது சமூகமும் ஆளுகையும் 'ஆதி சம்சாத்' மூலம் ஒன்றிணைந்து கூட்டுத் தீர்வுகளைக் கண்டுள்ளன. இந்த புதிய சட்டப்பேரவையும் முரியா தர்பாரின் பாரம்பரியத்திற்குத் தகுந்த இடத்தையும் மரியாதையையும் அளிக்கிறது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
நண்பர்களே,
ஒருபுறம், இந்த சட்டப்பேரவையின் ஒவ்வொரு மூலையும் நமது மாபெரும் ஆளுமைகளின் இலட்சியங்களைப் பிரதிபலிக்கிறது, மறுபுறம், அதன் சபாநாயகர் இருக்கை திரு.ரமண் சிங் ஜியின் அனுபவமிக்க தலைமையால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஒரு அர்ப்பணிப்புள்ள கட்சித் தொண்டர், கடின உழைப்பு மற்றும் பக்தியின் மூலம், ஜனநாயக அமைப்பை அதன் உண்மையான உணர்வில் எவ்வாறு பலப்படுத்த முடியும் என்பதற்கான ஒரு பிரகாசமான எடுத்துக்காட்டாக ரமண் ஜி நிற்கிறார்.
நண்பர்களே,
கிரிக்கெட்டில், ஒரு காலத்தில் கேப்டனாக இருந்தவர் பின்னர் ஒரு அணி உறுப்பினராகத் தொடர்ந்து விளையாடுவதை நாம் அடிக்கடி பார்க்கிறோம், ஆனால் அரசியலில் அத்தகைய எடுத்துக்காட்டுகள் அரிதாகவே காணப்படுகின்றன. ஆயினும் திரு.ரமண் சிங் ஜி சரியாக இந்த எடுத்துக்காட்டை அமைக்கிறார். ஒருமுறை கேப்டனாக இருந்த அவர், இப்போது சத்தீஸ்கரின் முன்னேற்றத்திற்காக உண்மை உணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து சேவை செய்கிறார். மாநில சேவைக்கு அர்ப்பணிப்புள்ள ஒவ்வொரு தொண்டருக்கும் அவர் ஒரு உத்வேகமாக இருக்கிறார்.
நண்பர்களே,
தேசியகவி நிரலா ஜி ஒருமுறை தனது செய்யுளில் சரஸ்வதி தேவியிடம் பிரார்த்தனை செய்தார்: प्रिय स्वतंत्र-रव अमृत-मंत्र नव भारत में भर दे (புதிய பாரதத்தில் பிரியமான சுதந்திர ஒலி மற்றும் புதிய அமுத மந்திரத்தை நிரப்புங்கள்). இவை வெறும் கவிதை வரிகள் மட்டுமல்ல, அவை ஒரு புதிய, சுதந்திர பாரதத்தைக் கட்டியெழுப்புவதற்கான மந்திரமாக இருந்தன. அவர் ஒரு புதிய தாளம், புதிய வேகம் மற்றும் புதிய குரலைப் பற்றிப் பேசினார், அதாவது அதன் மரபுகளில் ஆழமாக வேரூன்றிய, இன்னும் எதிர்காலத்தை நோக்கி முழு நம்பிக்கையுடன் நகரும் ஒரு பாரதத்தின் தொலைநோக்கு. இன்று, சத்தீஸ்கரின் இந்த புதிய சட்டப்பேரவைக் கட்டிடத்தில் நாம் நிற்கும்போது, அதே உணர்வு இங்கு உயிர்ப்புடன் இருக்கிறது. இந்தக் கட்டிடமும் அந்த 'புதிய குரலின்' அடையாளமாகும், அங்கு பழைய அனுபவங்களின் எதிரொலி புதிய கனவுகளின் ஆற்றலைச் சந்திக்கிறது. இந்த ஆற்றலுடன், நாம் ஒரு பாரதத்தைக் கட்டியெழுப்ப வேண்டும், மேலும் அதன் 'பாரம்பரியத்துடன்' (Virasat) இணைந்திருக்கும், இன்னும் 'வளர்ச்சி' (Vikas) பாதையில் நம்பிக்கையுடன் அடியெடுத்து வைக்கும் ஒரு சத்தீஸ்கருக்கான அடித்தளத்தை அமைக்க வேண்டும்.
நண்பர்களே,
"குடிமகனே தெய்வம்" (Nagrik Devo Bhava) என்பது நமது நல்லாட்சிக்கு வழிகாட்டும் மந்திரம். அதனால்தான் இந்த சட்டப்பேரவையில் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் மக்களின் நலனில் வேரூன்றியிருக்க வேண்டும். இங்கு, சீர்திருத்தத்தை விரைவுபடுத்தும், மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் மற்றும் தேவையற்ற அரசாங்கத் தலையீட்டைக் குறைக்கும் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். அரசாங்கத்தின் இன்மை அல்லது அதிகப்படியான தன்மை இருக்கக்கூடாது. விரைவான முன்னேற்றத்திற்கான ஒரே உண்மையான மந்திரம் இதுதான்.
நண்பர்களே,
நமது சத்தீஸ்கர் இராம பிரானின் தாய் வீடு. இராமர் இந்தப் பூமிக்கு அன்பான மருமகன். இந்த புதிய சட்டப்பேரவை வளாகத்தில் இராமரின் இலட்சியங்களை நினைவுகூருவதற்கு இன்றுள்ளதைவிட வேறு என்ன ஒரு சுபமான சந்தர்ப்பம் இருக்க முடியும். இராமர் பிரானின் இலட்சியங்கள் நல்லாட்சியின் கொள்கைகளை நமக்குக் கற்பிக்கின்றன.
நண்பர்களே,
அயோத்தியில் உள்ள இராமபிரான் கோவிலின் பிரதிஷ்டை விழாவின்போது, நாம் அனைவரும் "தெய்வத்திடம் இருந்து தேசத்திற்கு" மற்றும் "இராமரிடம் இருந்து தேசத்திற்கு" (Ram to Rashtra) என்ற உறுதிமொழியை எடுத்தோம். நாம் நினைவில் கொள்ள வேண்டும், "இராமரிடம் இருந்து தேசத்திற்கு" என்பது रामराज बैठे त्रैलोका। हरषित भए गए सब सोका அதாவது நல்லாட்சி மற்றும் பொது நலன் கொண்ட ஆட்சியை குறிக்கிறது. இது அனைவரின் பங்களிப்பு, அனைவருக்குமான வளர்ச்சி என்ற வழிகாட்டுதல் கொண்ட ஒரு ஆட்சியை குறிக்கிறது. "இராமரிடம் இருந்து தேசத்திற்கு" என்பது नहिं दरिद्र कोउ, दुखी न दीना, அதாவது ஏழையோ அல்லது துயரப்படுபவனோ எவரும் இல்லை; வறுமையிலிருந்து விடுபட்ட ஒரு செழிப்பான பாரதம். "இராமரிடம் இருந்து தேசத்திற்கு" என்பது अल्पमृत्यु नहिं कवनिउ पीरा அதாவது குறைந்த வயது மரணம் இல்லை, நோயினால் எந்தத் துன்பமும் இல்லை; ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான பாரதத்தை உருவாக்குதல். "இராமரிடம் இருந்து தேசத்திற்கு" என்பது मानउँ एक भगति कर नाता அதாவது பாகுபாடுகளற்ற, சமூக நீதி மற்றும் அனைவருக்கும் சமத்துவத்தின் அடித்தளத்தில் கட்டப்பட்ட ஒரு சமூகம் என்பதாகும்.
நண்பர்களே,
"இராமரிடம் இருந்து தேசத்திற்கு" என்பது "निसिचर हीन करउँ महि भुज उठाइ पन कीन्ह" அதாவது மனிதகுலத்திற்கு எதிரான சக்திகளை ஒழிப்பது, பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவது என்ற உறுதிமொழியையும் குறிக்கிறது. ஆபரேஷன் சிந்தூரில் நாம் கண்டது இதுதான். பயங்கரவாதத்தை ஒழிப்பதாக உறுதிமொழி எடுத்துள்ள பாரதம், பயங்கரவாத வலைப்பின்னல்களின் முதுகெலும்பை உடைத்து வருகிறது. பாரதம் இப்போது நக்சலிசம் மற்றும் மாவோயிஸ்ட் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கி உறுதியாக நகர்கிறது. பாரதம் இன்று இதுவரையில்லாத வெற்றிகளைக் கண்டு பெருமையால் நிரம்பியுள்ளது, மேலும் அதே பெருமையின் உணர்வு இந்த புதிய சத்தீஸ்கர் சட்டப்பேரவை வளாகம் முழுவதும் பரவுகிறது.
நண்பர்களே,
சத்தீஸ்கர் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் ஊக்கமளிக்கும் மாற்றத்தைக் கண்டுள்ளது. ஒரு காலத்தில் நக்சலிசம் மற்றும் பின்தங்கிய தன்மைக்காக அறியப்பட்ட அதே மாநிலம், இன்று செழிப்பு, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையின் அடையாளமாக மாறியுள்ளது. பஸ்தர் ஒலிம்பிக்ஸ் இப்போது நாடு முழுவதும் விவாதிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் நக்சலிசத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் இப்போது வளர்ச்சியின் அலைகளையும் அமைதியின் புன்னகையையும் காண்கின்றன. இந்த மாற்றத்திற்குப் பின்னால் சத்தீஸ்கர் மக்களின் கடின உழைப்பும், பாஜக அரசாங்கங்களின் தொலைநோக்குத் தலைமையும்தான் உள்ளன.
நண்பர்களே,
சத்தீஸ்கரின் வெள்ளி விழா கொண்டாட்டங்கள் ஒரு மைல்கல்லை மட்டுமல்ல, ஒரு சிறந்த பயணத்தின் தொடக்கத்தையும் குறிக்கின்றன. 2047-ம் ஆண்டு, பாரதம் சுதந்திரத்தின் 100 ஆண்டுகளைக் கொண்டாடும்போது, ஒரு 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற தொலைநோக்குப் பார்வையை அடைவதில் சத்தீஸ்கர் ஒரு முக்கியப் பங்கை வகிக்கும். எனவே, இங்குள்ள ஒவ்வொருவரையும், ஒவ்வொரு மக்கள் பிரதிநிதியையும், 'வளர்ச்சியடைந்த இந்தியாவில்' உள்ள ஒவ்வொரு மாநிலமும் புதிய உயரங்களை அடையத் தூண்டும் ஒரு அமைப்பையும், சட்டப்பேரவையையும் கட்டியெழுப்ப நான் அழைக்கிறேன். இந்த அவையில் நடைபெறும் ஒவ்வொரு விவாதத்திலும், எழுப்பப்படும் ஒவ்வொரு கேள்வியிலும், நடைபெறும் ஒவ்வொரு கலந்துரையாடலிலும் சிறந்து விளங்குதல் இருக்கட்டும். நாம் எதைச் செய்தாலும், எந்த வடிவத்தில் செய்தாலும், நமது இறுதி இலக்கு "'வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான ஒரு 'வளர்ச்சியடைந்த சத்தீஸ்கராக இருக்க வேண்டும்.
நண்பர்களே,
இந்தப் புதிய சட்டப்பேரவையின் உண்மையான மகத்துவம் அதன் கட்டிடக்கலை பிரம்மாண்டத்தால் வரையறுக்கப்படாது, மாறாக இங்கு எடுக்கப்படும் நலன் சார்ந்த முடிவுகளால் வரையறுக்கப்படும். மக்களின் கனவுகள் மற்றும் விருப்பங்களை இந்த அவை எவ்வளவு ஆழமாகப் புரிந்துகொள்கிறது, மேலும் அவற்றை நிறைவேற்ற எவ்வளவு உறுதியுடன் செயல்படுகிறது என்பதன் மூலம் அது அளவிடப்படும். இங்குள்ள ஒவ்வொரு முடிவும் விவசாயியின் உழைப்பை மதிக்கும்படி, இளைஞர்களின் விருப்பங்களுக்கு வழிகாட்டும் வண்ணம், பெண் சக்திக்கு புதிய நம்பிக்கையைக் கொண்டுவரும் வண்ணம், மற்றும் சமூகத்தில் உள்ள ஏழைகளை உயர்த்தும் வண்ணம் இருக்க வேண்டும். நாம் நினைவில் கொள்ள வேண்டும், இந்த சட்டப்பேரவை சட்டங்களை இயற்றுவதற்கான இடம் மட்டுமல்ல, சத்தீஸ்கரின் விதியை வடிவமைப்பதற்கான ஒரு வாழும் மையம். இங்கு பிறக்கும் ஒவ்வொரு கருத்தும் பொது சேவை உணர்வையும், வளர்ச்சிக்கான உறுதியையும், பாரதத்தை அதிக உயரங்களுக்குக் கொண்டு செல்வதற்கான நம்பிக்கையையும் கொண்டிருக்க வேண்டும். அதுவே நமது கூட்டுத் தீர்மானம்.
நண்பர்களே,
ஜனநாயகத்தில், கடமை எப்போதும் முதலில் வர வேண்டும். இந்த புதிய சட்டப்பேரவைத் திறப்பு விழாவின் இந்த தருணத்தில், நமது பொது வாழ்க்கையை நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் நமது பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணித்துக்கொள்ள நாம் அனைவரும் உறுதியளிப்போம். நமது குடியரசின் அமுத ஆண்டில், இந்த புனித வளாகத்திலிருந்து, மக்களுக்குச் சேவை செய்வதை நமது வாழ்க்கையின் நோக்கமாக மாற்றியமைப்போம் என்று உறுதியளிப்போம். இந்த அழகான புதிய ஜனநாயகக் கோவிலைத் திறந்து வைத்ததற்கு நான் மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தொலைநோக்குத் திட்டத்தை நனவாக்கியமைக்காக முதலமைச்சருக்கும் எனது நண்பர் திரு.ரமண் சிங் ஜிக்கும் நான் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெய் பாரத்! ஜெய் சத்தீஸ்கர்! மிக்க நன்றி.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2185162
(வெளியீட்டு அடையாள எண்: 2185162)
***
AD/VK/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2249291)
வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam