பிரதமர் அலுவலகம்
அரசியல் சாசன தினத்தை முன்னிட்டுக் குடிமக்களுக்குப் பிரதமர் கடிதம் எழுதியுள்ளார்
வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நோக்கி இந்தியா முன்னேறும் நிலையில் குடிமக்கள் தங்கள் மனதில் கடமைகளை முதன்மையாக வைக்க வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்
Posted On:
26 NOV 2025 9:00AM by PIB Chennai
அரசியல் சாசன தினமான நவம்பர் 26 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். 1949-ம் ஆண்டு அரசியல் சாசனம் வரலாற்றுச் சிறப்புமிக்க முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அதில் நினைவுகூர்ந்து, நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவதில் அதன் நீடித்த பங்களிப்பை சுட்டிக்காட்டியுள்ளார். புனிதமான இந்த ஆவணத்தை மதிக்கும் வகையில், 2015-ம் ஆண்டு நவம்பர் 26 அன்று அரசியல் சாசன தினமாக அரசு அறிவித்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், அரசியல் சாசனத்தை செழுமைப்படுத்திய டாக்டர் ராஜேந்திர பிரசாத், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் பல புகழ்பெற்ற பெண் உறுப்பினர்களைப் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார். சர்தார் வல்லபாய் படேல், பகவான் பிர்சா முண்டா ஆகியோரின் 150-வது பிறந்தநாள், வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு, ஸ்ரீ குரு தேக் பகதூர் அவர்களின் 350-வது தியாக ஆண்டு ஆகியவற்றுடன் இந்த ஆண்டு அரசியல் சாசன தினம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை வலியுறுத்தியுள்ள திரு மோடி, இந்த ஆளுமைகளும் வரலாறுகளும் அரசியல் சட்டத்தின் 51ஏ பிரிவில் குறிப்பிட்டுள்ளபடி நமது கடமைகளின் முதன்மையை நமக்கு நினைவூட்டுகின்றன என்று கூறியுள்ளார். கடமைகளை நிறைவேற்றுவதிலிருந்தே உரிமைகள் பிறக்கின்றன என்ற மகாத்மா காந்தியின் நம்பிக்கையை நினைவு கூர்ந்து, கடமைகளை நிறைவேற்றுவது சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கு அடித்தளம் என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் எழுதியுள்ள முழுமையான கடிதத்தைத் தமிழில் படிக்க இந்த இணைப்பைக் க்ளிக் செய்யவும்: https://www.narendramodi.in/ta/letter-from-the-prime-minister-on-samvidhan-diwas-599927
***
SS/SMB/KR
(Release ID: 2194547)
Visitor Counter : 8