பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

“வந்தே மாதரம்” தேசிய பாடலின் 150 ஆண்டுகளை நினைவுகூரும் ஓராண்டு கால நிகழ்வை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்

Posted On: 07 NOV 2025 12:17PM by PIB Chennai

வந்தே மாதரம்தேசிய பாடலின் 150 ஆண்டுகளை நினைவுகூரும் ஓராண்டு கால நிகழ்வை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று புதுதில்லியில்  தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் திரண்டிருந்தோரிடையே உரையாற்றிய திரு மோடி, வந்தே மாதரம் என்பது வெறுமனே ஒரு சொல் அல்ல, அது மந்திரம், ஓர் ஆற்றல், ஒரு கனவு, சிறந்ததொரு தீர்மானம் என்று கூறினார். இந்த ஒரு சொல், நமது வரலாற்றுடன் நம்மை இணைக்கிறது. நிகழ்காலத்தை நம்பிக்கையால் நிறைக்கிறது. துணிச்சலுடன் நமது எதிர்காலத்திற்கு ஊக்கமளிக்கிறது.

வந்தே மாதரம் பாடலை கூட்டாக பாடுவது பற்றி குறிப்பிட்ட அவர், உண்மையில் இது கம்பீரமான அனுபவத்தை தருகிறது. ஏராளமான குரல்களுக்கிடையே ஒற்றை சங்கீதம், ஒருங்கிணைந்த குரல், தடையற்ற வேகம் ஆகியவற்றை உருவாக்குகிறது. நல்லிணக்க அலைகளின் எதிரொலி பேராற்றலுடன் மனதை கிளர்ந்தெழச்செய்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டினை தேசம் கொண்டாடும் நவம்பர் 07 என்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும் என்று அவர் கூறினார்.  வரலாற்றின் பக்கங்களில் இந்தநாளினை குறிப்பதற்காக சிறப்பு நினைவு நாணயம் ஒன்றும், அஞ்சல்தலை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளன. அன்னை பாரதத்திற்கு தங்களின் இன்னுயிர் ஈந்த தியாகிகளுக்கு புகழாரம் சூட்டிய திரு மோடி, அங்கு கூடியிருந்த அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்ததோடு வந்தேமாதரத்தின் 150-வது ஆண்டில் அனைத்து குடிமக்களுக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.

பங்கிம் சந்திரரின் ஆனந்தமடம் என்பது வெறும் நாவல் மட்டுமல்ல, இந்திய சுதந்திரத்திற்கான கனவு என்று குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் வார்த்தைகளை நினைவுகூர்ந்த பிரதமர் திரு மோடி, ஆனந்தமடம் நாவலில் உள்ள வந்தே மாதரம் பாடலின் ஒவ்வொரு வரியும், ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு உணர்வும் பங்கிம் பாபுவின் ஆழமான பொருளை கொண்டுள்ளன என்றார். இந்தப் பாடல் காலனி ஆதிக்க காலத்தில் இயற்றப்பட்டது என்றாலும், இதிலுள்ள வார்த்தைகள் அந்த நூற்றாண்டுகளுடன் வரையறுக்கப்பட்டதாக இல்லை என்றும் அனைத்து சகாப்தத்துக்கும் பொருத்தமாக உள்ளன என்றும்  பிரதமர் கூறினார். 

இந்தியாவின் தேசியக் கொடி காலந்தோறும் மாற்றமடைந்து இப்போது மூவண்ணக் கொடியாக உள்ளது. ஆனால் தேசியக் கொடி ஏற்றப்பட்டபோதெல்லாம் ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலிருந்தும் பாரத் மாதாகி ஜே!, வந்தே மாதரம் என்ற முழக்கம் தான் மேலெழுந்தது என்று அவர் தெரிவித்தார். தேச விடுதலைக்கான  போராட்டத்தில் தேசபக்தர்கள் சவுக்கடி பட்டபோதும், உறையும் பனிக்கட்டிகள் மீது படுக்கவைத்து சித்ரவதை செய்தபோதும், தூக்கு கயிற்றை முத்தமிட்டு உயிர்நீத்தபோதும் தியாகிகள் வந்தே மாதரம் என்றே முழங்கியதாக அவர் கூறினார்.  இன்று 140 கோடி இந்தியர்களும் அறியப்பட்ட, அறியப்படாத விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு  புகழஞ்சலி செலுத்துவதாக  பிரதமர் கூறினார்.

இந்திய தாய்க்கு இன்று 140 கோடி  பிள்ளைகள் உள்ளனர். அவர்களுக்கு 280 கோடி கரங்கள் உள்ளன. இவர்களில் 60 சதவீதம் பேர் இளைஞர்கள் இந்நிலையில் இன்று நமக்கு சாத்தியமில்லாதது எது? வந்தே மாதரம் பாடலின் உண்மைக்கனவை நிறைவேற்ற நம்மை எந்த சக்தியால் தடுக்க முடியும் என்று பிரதமர் உணர்ச்சிப் பெருக்குடன் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், தில்லி பிரதேச துணைநிலை ஆளுநர் திரு வினய் குமார் சக்சேனா, தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2187215  

***

SS/SMB/AG/KR


(Release ID: 2187455) Visitor Counter : 9