பிரதமர் அலுவலகம்
சத்தீஸ்கர் மாநிலம் நவ ராய்ப்பூரில் அம்மாநில சட்டப்பேரவையின் புதிய கட்டிடத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார்
இன்று, சத்தீஸ்கர் மாநிலம் அதன் லட்சியங்களின் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்த பெருமைமிக்க தருணத்தில், இந்த மாநிலம் உருவாவதற்கு வழிவகுத்த, தொலைநோக்குப் பார்வை கொண்ட, கருணையுள்ளம் கொண்ட தலைவரான மதிப்பிற்குரிய பாரத ரத்னா, அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்:பிரதமர்
இன்று, நாடு பாரம்பரியத்தையும், வளர்ச்சியையும் ஒருசேர ஏற்றுக்கொண்டு முன்னேறி வருகிறது: பிரதமர்
ஜனநாயகத்தின் அன்னையாக இந்தியா திகழ்கிறது: பிரதமர்
இந்தியா தற்போது நக்சல் மற்றும் மாவோயிஸ்ட் பயங்கரவாத செயல்களை முற்றிலும் ஒடுக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது: பிரதமர்
இந்த சட்டப்பேரவைக் கட்டிடம் சட்டம் இயற்றுவதற்கான இடமாக மட்டுமின்றி, சத்தீஸ்கர் மாநிலத்தின் இலக்கை நிர்ணயிக்கும் ஒரு சிறப்பான மையமாகும்: பிரதமர்
Posted On:
01 NOV 2025 2:59PM by PIB Chennai
சத்தீஸ்கர் மாநிலம் நவ ராய்ப்பூரில் அம்மாநில சட்டப்பேரவைக்கான புதிய கட்டிடத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், சத்தீஸ்கர் மாநிலத்தின் வளர்ச்சிப் பயணத்திற்கு இன்று ஒரு பொன்னான வாய்ப்பிற்கானத் தொடக்கத்தைக் குறிக்கிறது என்று கூறினார். தனிப்பட்ட முறையில், இது தனக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான மற்றும் குறிப்பிடத்தக்க நாள் என்று அவர் கூறினார். பல தசாப்தங்களாக இந்த மாநிலத்துடனான தனது ஆழமான உணர்ச்சிப் பிணைப்பை அவர் எடுத்துரைத்தார். ஒரு கட்சித் தொண்டராக தாம் செலவிட்ட தருணங்களை நினைவு கூர்ந்த திரு மோடி, சத்தீஸ்கர் மாநிலத்தில் கணிசமான நேரத்தைச் செலவிட்டதாகவும், அதன் வாயிலாக ஏராளமான அனுபவங்களைக் கற்றுக்கொண்டதாகவும் கூறினார். சத்தீஸ்கர் மாநிலத்தின் தொலைநோக்குப் பார்வை, அம்மாநிலம் உருவாக்கப்படுவதற்கான உறுதிப்பாடு மற்றும் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டத் தருணம் ஆகியவற்றை நினைவு கூர்ந்த அவர், அம்மாநிலத்தின் மாற்றத்திற்கான ஒவ்வொரு தருணத்திற்கும் தான் சாட்சியாக இருந்ததை உறுதிப்படுத்தினார். இம்மாநிலத்தில் தாம் மேற்கொண்ட 25 ஆண்டு காலப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி தெரிவித்தார். இம்மாநிலத்தின் 25 ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டத்தின் போது, மாநில மக்களுக்காக புதிய சட்டப்பேரவைக் கட்டிடத்தைத் திறந்து வைக்கும் பாக்கியம் தனக்கு கிடைத்துள்ளதாக பிரதமர் கூறினார். இந்த தருணத்தில், சத்தீஸ்கர் மாநில மக்களுக்கும், மாநில அரசுக்கும் தனது பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.
“இந்த ஆண்டு, 2025 இந்தியக் குடியரசின் அமிர்த காலத்தைக் குறிக்கிறது, இது இந்தியா தனது அரசியலமைப்புச் சட்டத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்த 75 ஆண்டுகளை நினைவுகூரும்” என்று திரு. மோடி கூறினார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தருணத்தில், அப்பகுதியைச் சேர்ந்த அரசியல் நிர்ணய சபையின் புகழ்பெற்ற உறுப்பினர்களான திரு ரவிசங்கர் சுக்லா, வழக்கறிஞர் தாக்கூர் செடிலால், திரு கன்ஷ்யாம் சிங் குப்தா, திரு கிஷோரி மோகன் திரிபாதி, திரு ராம்பிரசாத் பொட்டாய் மற்றும் திரு ரகுராஜ் சிங் ஆகியோருக்கு அவர் அஞ்சலி செலுத்தினார். அந்த நேரத்தில் இப்பகுதி பின்தங்கிய நிலையில் இருந்தபோதிலும், அவர்கள் தில்லியை அடைந்து, பாபாசாகேப் அம்பேத்கரின் தலைமையில் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநில வரலாற்றில் இன்று ஒரு பொன்னான அத்தியாயம் என்று பிரதமர் குறிப்பிட்டார். பிரமாண்டமான, நவீன சட்டப்பேரவைக் கட்டிடம் திறக்கப்படும் நிலையில், இது ஒரு கட்டிடத்திற்கான விழா அல்ல, மாறாக 25 ஆண்டு கால மக்களின் பொதுவான விருப்பங்கள், போராட்டம் மற்றும் பெருமையின் கொண்டாட்டம் என்று அவர் குறிப்பிட்டார். “இன்று, சத்தீஸ்கர் மாநிலம் அம்மாநில மக்களின் விருப்பங்களுக்கான புதிய உச்சத்தில் நிற்கிறது. இந்த பெருமைமிக்க தருணத்தில், தொலைநோக்குப் பார்வை மற்றும் கருணையுள்ளம் கொண்ட தலைவர் மதிப்பிற்குரிய பாரத ரத்னா, அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன்” என்று திரு மோடி கூறினார். 2000 -வது ஆண்டில் அடல் பிஹாரி வாஜ்பாய் சத்தீஸ்கர் மாநிலத்தை உருவாக்கியபோது, அது வெறும் நிர்வாக முடிவாக மட்டுமின்றி, வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புக்களை உருவாக்கும் அம்மாநில மக்களின் ஆன்மாவை அங்கீகரிப்பதற்கும் ஒரு படியாக இருந்தது என்பதை அவர் நினைவு கூர்ந்தார். இன்று, சட்டப்பேரவைக் கட்டிடத்தின் திறப்பு விழாவுடன், அடல் பிஹாரி வாஜ்பாயின் திருவுருவச் சிலை திறப்பு விழாவும் நடைபெற்றுள்ளது என்றும், 'அடல் ஜி, உங்கள் கனவு நனவாகி வருகிறது என்பதைக் காணுங்கள் என்று மனம் இயல்பாகவே கூறுவதை உணர முடியும் என்றார். நீங்கள் கற்பனை செய்த சத்தீஸ்கர் மாநிலம் தற்போது தன்னம்பிக்கையால் நிரம்பியுள்ளதுடன், வளர்ச்சியின் புதிய உயரங்களை எட்டுகிறது' என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவையின் வரலாறு அதன் உத்வேகத்தை ஆதாரமாகக் கொண்டுள்ளது என்று கூறிய திரு மோடி, 2000 - ஆவது ஆண்டில், இந்த அழகான மாநிலம் உதயமான போது, முதல் சட்டப்பேரவைக் கூட்டம், ராய்ப்பூரில், ராஜ்குமார் கல்லூரியில் உள்ள ஜஷ்பூர் மண்டபத்தில் நடைபெற்றது என்பதை நினைவு கூர்ந்தார். அந்தக் காலம் வரையறுக்கப்பட்ட வளங்களை மட்டுமே கொண்டிருந்த போதும், எல்லையற்ற கனவுகளால் நிரம்பியிருந்தது என்றும், அந்த நேரத்தில் ஒரே ஒரு உணர்வு மட்டுமே இருந்தது என்று அவர் குறிப்பிட்டார். "நாங்கள் எங்கள் நிலையை விரைவாக பிரகாசமாக்குவோம்." என்பதுதான். பின்னர் எழுந்த சட்டப்பேரவைக் கட்டிடம் முதலில் மற்றொரு துறையின் வளாகமாக இருந்தது என்று பிரதமர் குறிப்பிட்டார். அங்கிருந்து, சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜனநாயகப் பயணம் புதுப்பிக்கப்பட்ட சக்தியுடன் தொடங்கியது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று அதே ஜனநாயகம் நவீன, டிஜிட்டல் வசதிகளுடன் கூடிய தன்னிறைவு பெற்ற சட்டப்பேரவைக் கட்டிடமாகத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதை அவர் எடுத்துரைத்தார்.
ஜனநாயகத்தின் புனித யாத்திரைக்கான தளமாக அமைந்திருக்கும் சட்டப்பேரவைக் கட்டிடத்தைக் குறிப்பிட்ட பிரதமர், சட்டப்பேரவைக் கட்டிடத்தில் உள்ள ஒவ்வொரு தூணும் வெளிப்படைத்தன்மையைக் குறிக்கிறது என்றும், ஒவ்வொரு நடைபாதையும் நமக்கு பொறுப்புணர்வை நினைவூட்டுகிறது என்றும், ஒவ்வொரு அறையும் மக்களின் குரலைப் பிரதிபலிக்கிறது என்றும் குறிப்பிட்டார். இங்கு மேற்கொள்ளப்படும் முடிவுகள் வரும் பல தசாப்தங்களுக்கு சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைவிதியை வடிவமைக்கும் என்றும், இந்தச் சுவர்களுக்குள் பேசப்படும் ஒவ்வொரு வார்த்தையும், மாநிலத்தின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார். இந்த கட்டிடம் வரும் பல தசாப்தங்களுக்கு அம்மாநிலத்தின் கொள்கை, விதி மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் மையமாக செயல்படும் என்று திரு மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
"இன்று, முழு தேசமும் பாரம்பரியம், மேம்பாடு ஆகிய இரண்டையும் ஒருசேர ஏற்றுக்கொண்டு முன்னேற்றம் கண்டு வருகிறது" என்று பிரதமர் சுட்டிக் காட்டினார், இந்த உணர்வு அரசின் ஒவ்வொரு கொள்கை மற்றும் முடிவிலும் பிரதிபலிக்கிறது என்பதை அவர் வலியுறுத்தினார். புனிதமான செங்கோல் தற்போது இந்திய நாடாளுமன்றத்திற்கு உத்வேகம் அளித்து ஊக்குவிக்கிறது என்றும், நாடாளுமன்றத்தின் புதிய காட்சியகங்கள் இந்திய ஜனநாயகத்தின் பண்டைய கால வேர்களுடன் உலகை இணைக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்ற வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள சிலைகள், இந்தியாவில் ஜனநாயக மரபுகளின் ஆழமான வலிமையை உலகிற்கு உணர்த்துவதாக உள்ளன. சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய சட்டப்பேரவையிலும் இந்த நெறிமுறைகளும் உணர்வும் பிரதிபலிக்கச் செய்வதில் திரு மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். புதிய சட்டப்பேரவை வளாகம், மாநிலத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்தின் பிரதிபலிப்பாகும் என்று அவர் கூறினார். இந்த சட்டப்பேரவையின் ஒவ்வொரு அம்சங்களும் அம்மாநிலத்தின் நிலத்தில் பிறந்த சிறந்த ஆளுமைகளின் உத்வேகத்தைக் கொண்டுள்ளன. தாழ்த்தப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதும், 'அனைவருக்காகவும், அனைவரது வளர்ச்சிக்காகவும்' என்ற கொள்கையும், மத்திய அரசின் நல்லாட்சிக்கான அடையாளங்கள் என்பதை அவர் திட்டவட்டமாகக் கூறினார். இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வு மற்றும் நாட்டின் சிறந்த தலைவர்கள், முனிவர்கள் மற்றும் சிந்தனையாளர்களால் வழங்கப்பட்ட மதிப்பு வாய்ந்த பொக்கிஷம் என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.
புதிய சட்டப்பேரவைக் கட்டிடத்தை கூர்ந்து கவனித்தபோது, பஸ்தார் கலையின் அழகிய காட்சியைக் கண்டதாக பிரதமர் திரு மோடி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். சில மாதங்களுக்கு முன்பு தாய்லாந்து நாட்டின் பிரதமருக்கு அதே பஸ்தார் கலைப்படைப்பை வழங்கியதை அவர் அப்போது நினைவு கூர்ந்தார். இது இந்தியாவின் படைப்பாற்றல் திறன் மற்றும் கலாச்சார வலிமையின் சின்னமாக உள்ளது என்று புகழாரம் சூட்டினார்.
கட்டிடத்தின் சுவர்கள் பாபா குரு காசிதாஸ் - ஜியின் போதனைகளைக் கொண்டுள்ளன என்றும், இதன் மதிப்புமிக்க உள்ளடக்கம், அனைவருக்கும் வளர்ச்சி மற்றும் அனைவருக்கும் மரியாதை ஆகியவற்றின் மாண்புகளை கற்பிக்கிறது என்றும் திரு மோடி குறிப்பிட்டார். ஒவ்வொரு வாசலும் மாதா ஷபரி கற்பித்த அரவணைப்பை பிரதிபலிக்கிறது என்றும், ஒவ்வொரு விருந்தினரையும், குடிமகனையும் பாசத்துடன் வரவேற்பதை நினைவூட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். சட்டப்பேரவையில் உள்ள ஒவ்வொரு இருக்கையும், துறவி கபீர் போதித்த வாய்மை, அச்சமின்மை போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துவதாக உள்ளது என்று அவர் கூறினார். இந்தக் கட்டிடத்தின் அடித்தளம் மகாபிரபு வல்லபாச்சாரியாரின் கொள்கையான "மனிதர்களுக்கு செய்யும் சேவை, நாராயண சேவை" என்ற உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
"ஜனநாயகத்தின் அன்னையாக இந்தியா திகழ்கிறது" என்று கூறிய திரு மோடி, இந்தியாவின் பழங்குடியின சமூகங்கள் பல்வேறு தலைமுறைகளாக ஜனநாயக மரபுகளை கட்டிக்காத்து வாழ்ந்து வருவதை சுட்டிக்காட்டினார். பஸ்தாரின் முரியா தர்பாரை ஒரு வாழும் உதாரணமாக மேற்கோள் காட்டிய பிரதமர், இது ஜனநாயக நடைமுறைகளின் அடித்தளத்தை பிரதிபலிக்கும் ஒரு 'பண்டைய கால நாடாளுமன்றம்' என்று பெருமிதம் தெரிவித்தார். பல ஆண்டுகளாக, இந்தியாவில் சமூகமும், நிர்வாகமும் சவால்களை எதிர்கொண்டு, அவற்றிற்குத் தீர்வு காணும் வகையில் இணைந்து செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். புதிய சட்டப்பேரவைக் கட்டிடத்தில் முரியா தர்பாரின் பாரம்பரியமும் இடம் பெற்றிருப்பதில் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
நமது நாட்டின் சிறந்த தலைவர்களின் கொள்கைகளை சட்டப்பேரவையின் ஒவ்வொரு பகுதியிலும் பிரதிபலிக்கும் அதே வேளையில், சட்டப்பேரவைத் தலைவரின் இருக்கை, டாக்டர் ராமன் சிங்கின் அனுபவம் வாய்ந்த தலைமையால் அலங்கரிக்கப்பட்டுள்ளது என்று திரு மோடி கூறினார். அர்ப்பணிப்புணர்வுள்ள கட்சித் தொண்டர்கள், கடின உழைப்பு ஆகியவற்றின் மூலம், ஜனநாயக அமைப்புக்களை எவ்வாறு வலுப்படுத்த முடியும் என்பதற்கு டாக்டர் ராமன் சிங் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று அவர் குறிப்பிட்டார்.
தேசியக்கவி நிராலாவின் பிரார்த்தனையை மேற்கோள் காட்டிப் பேசிய பிரதமர், இது கவிதை மட்டுமின்றி, சுதந்திர இந்தியாவின் மறுபிறப்பிற்கான தாரக மந்திரம் என்றும் குறிப்பிட்டார். பாரம்பரியத்தில் வேரூன்றிய இந்தியாவை அடையாளப்படுத்தும் "நவ கதி, நவ லே, நவ ஸ்வர்" என்ற நிராலாவின் அழைப்பை எடுத்துரைத்த அவர், நம்பிக்கையுடன் எதிர்காலத்தை நோக்கி முன்னேறி வரும் சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய சட்டப்பேரவையில் இந்த உணர்வு இங்கும் சம அளவில் பொருத்தமானது என்று திரு மோடி தெரிவித்தார். கடந்த கால அனுபவங்களின் எதிரொலிகள், புதிய கனவுகளின் ஆற்றலை எதிர்கொள்ளும் 'நவ ஸ்வர்' என்பதன் அடையாளச் சின்னமாக இந்த கட்டிடத்தை அவர் விவரித்தார். இத்தகைய ஆற்றலுடன், நாம் ஒரு வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றும், வளர்ச்சிப் பாதையில் முன்னேறிச் செல்லும் போது, அதன் பாரம்பரியத்துடன் இணைக்கப்பட்ட ஒரு சத்தீஸ்கர் மாநிலத்தின் அடித்தளத்தை அமைக்க வேண்டும் என்றார்.
"நகரிக் தேவோ பவ" என்ற "விருந்தினர்களை மரியாதையுடன் நடத்துவது என்பது நல்லாட்சிக்கான வழிகாட்டும் மந்திரம் என்பதை சுட்டிக்காட்டிய திரு மோடி, சட்டப்பேரவையில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முடிவும், மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இங்கு இயற்றப்படும் சட்டங்கள், சீர்திருத்த நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும், மக்களின் வாழ்க்கையை எளிமைப்படுத்த வேண்டும் என்றும், அரசின் தேவையற்றத் தலையீடுகளை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நிர்வாகம் நடைமுறைகள் முற்றிலும் இல்லாமலோ அல்லது அளவிற்கு அதிகமாகவோ இருத்தல் கூடாது என்று அவர் வலியுறுத்தினார். இந்த சமநிலை தான் விரைவான முன்னேற்றத்திற்கான உண்மையான ஒரே சூத்திரம் என்று அவர் தெரிவித்தார்.
சத்தீஸ்கர் மாநிலம் பகவான் ஸ்ரீ ராமரின் தாய்வழி வீடு என்பதை எடுத்துரைத்த பிரதமர், மேலும் பகவான் ஸ்ரீ ராமர் இந்த மண்ணின் மருமகன் என்று குறிப்பிட்டார். இந்த புதிய சட்டப்பேரவை வளாகத்தில் ஸ்ரீ ராமரின் கொள்கைகளை நினைவுகூர இன்றைய தினத்தை விட சிறந்த தருணம் இருக்க முடியாது என்று அவர் கூறினார். பகவான் ஸ்ரீ ராமரின் மதிப்புமிக்க நல்லாட்சி, காலத்தால் அழியாத பாடங்களை வழங்குகின்றன என்பதை அவர் எடுத்துரைத்தார்.
அயோத்தியில், ராமர் கோவிலின் பிரதிஷ்டையின் போது, பக்தியிலிருந்து தேசத்தைக் கட்டமைப்பதற்கு "கடவுள் என்பதிலிருந்து தேசம்" மற்றும் "ராமர் என்பதிலிருந்து நாடு" என்று கூட்டாகத் தீர்மானித்ததாக திரு மோடி கூறினார். "ராமர் என்பதிலிருந்து நாடு" என்பதன் சாராம்சம், சிறந்த நிர்வாகம் மற்றும் பொது நலனில் வேரூன்றிய ஒரு நல்லாட்சியை அடையாளப்படுத்தும் தொலைநோக்குப் பார்வையில் உள்ளது என்றும், இது "அனைவருக்காகவும், அனைவரது வளர்ச்சிக்காகவும்" என்ற தாரக மந்திரத்தை உள்ளடக்கிய வளர்ச்சியின் உணர்வைப் பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார். "ராமர் என்பதிலிருந்து நாடு" என்பது வறுமை மற்றும் துக்கத்திலிருந்து விடுபட்ட சமூகம், பற்றாக்குறையை அகற்றுவதன் வாயிலாக முன்னேற்றம் காணும் ஒரு தேசத்தைக் குறிக்கிறது என்று பிரதமர் விரிவாக எடுத்துரைத்தார். பிணியால் பாதிக்கப்பட்டு எவரும் அகால மரணம் அடையாத நாடு, ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான நாடு என்ற வகையில் இந்தியா கட்டமைக்கப்படுவதை இது குறிக்கிறது என்றும் அவர் கூறினார். இறுதியாக, "ராமர் என்பதிலிருந்து நாடு" என்பது எவ்விதப் பாகுபாடும் இல்லாத சமூகத்தைக் குறிக்கிறது என்றும், அங்கு அனைத்து சமூகங்களிலும் சமூக நீதி நிலவுகிறது என்றும் அவர் கூறினார்.
"ராமர் என்பதிலிருந்து நாடு" என்பது மனிதகுலத்திற்கு எதிரான சக்திகளை ஒழிப்பதற்கான உறுதிப்பாட்டையும், பயங்கரவாதத்தை வேரோடு அழிக்கும் உறுதிமொழியையும் குறிக்கிறது என்று பிரதமர் மேலும் கூறினார். பயங்கரவாத செயல்பாடுகளை முறியடித்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிகைகளில் இந்த உறுதிப்பாடு தெளிவாக நிரூபிக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். "இந்தியா தற்போது நக்சல் மற்றும் மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதை நோக்கி முன்னேறி வருகிறது என்றும், மேலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள வெற்றிகளால் பெருமிதம் கொள்கிறது" என்றும் பிரதமர் கூறினார். மேலும் இந்த பெருமையான உணர்வு சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவையின் புதிய வளாகங்களில் தெளிவாக பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறினார்.
கடந்த 25 ஆண்டுகளில் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது என்றும், இது நம் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது என்பதை எடுத்துரைத்த திரு மோடி, "ஒரு காலத்தில் நக்சல் பயங்கரவாதத்தால் பின்தங்கிய நிலைக்கு பெயர் பெற்ற மாநிலமாக இருந்த நிலையில், தற்போது வளமை, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையின் அடையாளமாக வளர்ந்து வருகிறது" என்றார். பஸ்தார் ஒலிம்பிக் போட்டிகள் தற்போது நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருவதாகவும், நக்சல் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் அமைதி திரும்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சத்தீஸ்கர் மாநில மக்களின் கடின உழைப்பும், மாநில அரசின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையும் இத்தகைய மாற்றத்திற்குக் காரணம் என்று பிரதமர் தெளிவுபட எடுத்துரைத்தார்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் வெள்ளி விழா கொண்டாட்டங்கள் தற்போது ஒரு பெரிய தேசிய இலக்கிற்கான தொடக்கப் புள்ளியாக மாறி வருகின்றன என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர், 2047 - ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை அடைவதில் சத்தீஸ்கர் மாநிலம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்றும் தெரிவித்தார். நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் புதுமைகளைப் படைத்து, வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளை எட்ட உதவிடும் வகையில் ஒரு அமைப்பை உருவாக்கி, சட்டப்பேரவை மூலம் முன் மாதிரியாக செயல்பட வேண்டும் என்று திரு மோடி வலியுறுத்தினார். இங்கு நடைபெறும் உரையாடல்களிலும், எழுப்பப்படும் கேள்விகளிலும், சபை நடவடிக்கைகளிலும் சிறந்து விளங்கும் வகையில் உறுப்பினர்கள் செயல்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு வடிவத்திலும், வளர்ச்சியடைந்த ,மாநிலம் என்பதையும், வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைப்பதில் போதிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய சட்டப்பேரவையின் உண்மையான மகத்துவம், அதன் பிரம்மாண்டமான கட்டுமானத்தில் இல்லை என்றும் , மாறாக, அவைக்குள் மேற்கொள்ளப்படும் மக்கள் நலன்சார்ந்த முடிவுகளில் தான் உள்ளது என்றும் பிரதமர் உறுதிபடக் கூறினார். சத்தீஸ்கர் மாநில மக்களின் கனவுகள் மற்றும் விருப்பங்களை சட்டப்பேரவை எவ்வளவு ஆழமாகப் புரிந்துகொள்கிறது என்பதையும், அவற்றை நிறைவேற்ற எவ்வளவு தூரம் செல்கிறது என்பதையும் பொறுத்ததே இது அமையும் என்று அவர் கூறினார். ஒவ்வொரு முடிவும், விவசாயிகளின் கடின உழைப்பை மதிப்பதாகவும், இளைஞர்களின் கனவுகளை வழிநடத்துவதாகவும் இருக்க வேண்டும் என்றும், பெண்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்றும், சமூகத்தில் மிகவும் பின்தங்கியுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு ஊடகமாக செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். "இந்த சட்டப்பேரவை வெறும் சட்டம் இயற்றுவதற்கான இடமாக மட்டுமின்றி, சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைவிதியை வடிவமைப்பதற்கான ஒரு அறிவுசார் மையமாகத் திகழ வேண்டும்" என்று திரு மோடி கூறினார். மேலும் இந்த சபையிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு யோசனையும், பொது சேவைக்கான உணர்வையும், வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டையும், இந்தியாவை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்வதற்கான நம்பிக்கையையும் கொண்டிருக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். இது எங்கள் கூட்டு விருப்பம் என்றும் அவர் கூறினார்.
புதிய சட்டப்பேரவைக் கட்டிடத்தைத் திறந்து வைப்பதன் உண்மையான முக்கியத்துவம், ஜனநாயக நடைமுறைகளில் அனைத்திற்கும் மேலாக கடமையை நிலைநிறுத்துவதற்கும், பொது வாழ்வில் நமது பங்களிப்பை அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவதற்கும் ஒரு உறுதிமொழி எடுப்பதில் தான் உள்ளது என்பதை சுட்டிக் காட்டிய பிரதமர், குறிப்பாக இந்தியக் குடியரசின் இந்த அமிர்த காலத்தில், மக்கள் சேவைக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் உறுதியுடன் இந்த வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று அனைவரையும் வலியுறுத்தினார். ஜனநாயகத்தின் இந்த அழகான புதிய கோயிலின் திறப்பு விழாவிற்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் தனது மனமார்ந்த பாராட்டுதல்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டு பிரதமர் தனது உரையை முடித்தார்.
சத்தீஸ்கர் மாநில ஆளுநர் திரு ராமன் தேகா, மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா, சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தலைவர் டாக்டர் ராமன் சிங், சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் திரு விஷ்ணு தியோ சாய், மத்திய அமைச்சர் திரு டோகன் சாஹு உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னணி:
சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைக்கான புதிய கட்டிடம், பசுமைக் கட்டிடக் கருத்தாக்கத்தின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளதுடன், முழுமையான சூரிய மின்சக்தி மற்றும் மழைநீர் சேகரிப்பு போன்ற அமைப்புடன் கட்டப்பட்டுள்ளது.
***
(Release ID: 2185149)
AD/SV/RJ
(Release ID: 2185339)
Visitor Counter : 5
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam