பிரதமர் அலுவலகம்
இளைஞர்களை மையமாகக் கொண்ட ரூ.62,000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்து திறன் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் உரையாற்றினார்
ஞானம் மற்றும் திறன் நிறைந்த நாடாக இந்தியா உள்ளது, இந்த அறிவு சார் வலிமைதான் நமது மிகப்பெரிய ஆற்றல்: பிரதமர்
தொழிற்பயிற்சி நிறுவனங்கள், தொழிற்கல்வியின் முன்னணி நிறுவனங்கள் மட்டுமல்ல தற்சார்பு இந்தியாவின் பயிற்சிப் பட்டறைகளாகவும் அவை செயல்படுகின்றன: பிரதமர்
பி.எம்-சேது திட்டம் இந்தியாவின் இளைஞர்களை உலகளாவிய திறன் தேவைகளுடன் இணைக்கும்: பிரதமர்
பாரத ரத்னா கர்பூரி தாக்கூர் அவர்கள் சமூக சேவை மற்றும் மேம்பட்ட கல்விக்காக தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அர்ப்பணித்தார், அவரது பெயரில் உருவாகி வரும் திறன் பல்கலைக்கழகம் அந்த தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லும் ஆற்றல் சக்தியாக விளங்கும்: பிரதமர்
இளைஞர்களின் ஆற்றல் அதிகரிக்கும் போது, நாடும் வலிமைப் பெறும்: பிரதமர்
Posted On:
04 OCT 2025 1:42PM by PIB Chennai
புதுதில்லியின் விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற திறன் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி, இளைஞர்களை மையமாகக் கொண்ட ரூ.62,000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் உள்ள தொழிற்பயிற்சி நிறுவனங்களுடன் தொடர்புடைய லட்சக்கணக்கான மாணவர்களுக்கும், பீகார் மாநிலத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட பிரதமர், தொழிற்பயிற்சி நிறுவனங்களின் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழாவை மிகப்பெரிய அளவில் நடத்தும் புதிய பாரம்பரியத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு தொடங்கியதை நினைவு கூர்ந்தார்.
திறன் மேம்பாட்டிற்கு இந்தியா வழங்கும் முன்னுரிமையை இன்றைய விழா உணர்த்துகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். கல்வி மற்றும் திறன் வளர்ச்சித் துறைகளில் நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கான இரண்டு முக்கிய முன்முயற்சிகளின் துவக்கத்தை பிரதமர் அறிவித்தார். 60,000 கோடி ரூபாய் மதிப்பிலான பி.எம் சேது திட்டத்தின் கீழ் இனி தொழிற்பயிற்சி நிறுவனங்கள் தொழில்துறைகளுடன் ஆழமாக ஒருங்கிணைக்கப்படும் என்று திரு மோடி கூறினார். மேலும் நாடு முழுவதும் உள்ள நவோதயா வித்யாலயாக்கள் மற்றும் ஏகலைவா மாதிரி பள்ளிகளில் 1200 திறன் ஆய்வகங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியா, ஞானம் மற்றும் திறன் நிறைந்த நாடு என்பதை வலியுறுத்திய பிரதமர், இந்த அறிவுசார் ஆற்றல் தான் நமது மிகப் பெரிய சொத்து என்றும், திறன்களும் ஞானமும் நாட்டின் தேவைகளுடன் இணையும் போது, அவற்றின் தாக்கம் பன்மடங்கு பெருகுகிறது என்று குறிப்பிட்டார். உள்ளூர் திறன்களையும், வளங்களையும், திறமைகளையும் ஞானத்தையும் நாட்டின் தேவைக்கு ஏற்ப வேகமாக மேம்படுத்துவது தான் 21 வது நூற்றாண்டின் தேவை என்று அவர் வலியுறுத்தினார்.
“இந்தியாவின் தொழிற்பயிற்சி நிறுவனங்கள், தொழிற் கல்வியைப் பயிற்றுவிக்கும் முன்னணி நிறுவனங்கள் மட்டுமல்ல, தற்சார்பு இந்தியாவை கட்டமைப்பதற்கான பட்டறைகளாகவும் அவை செயல்படுகின்றன”, என்று கூறிய பிரதமர், இத்தகைய நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும், அவற்றின் தரத்தை உயர்த்துவதிலும் அரசு முனைப்புடன் செயல்படுகிறது, என்றார். பி.எம் சேது திட்டம் நாடு முழுவதும் சுமார் 1000 தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் என்றும், இந்தத் திட்டம் இந்தியாவின் இளைஞர்களை சர்வதேச திறன்களின் தேவையுடன் இணைக்கும் என்றும் திரு மோடி குறிப்பிட்டார்.
பீகாரில் புதிய திறன் பல்கலைக்கழகம் உருவாகி வருவதற்கு மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், பாரத ரத்னா ஜனநாயக் கர்பூரி தாக்கூரின் பெயரில் இந்தப் பல்கலைக்கழகம் அமையவிருப்பதை சுட்டிக்காட்டினார். சமூக சேவைக்கும், கல்வியை விரிவுபடுத்துவதற்கும், சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்குத் தொடர்ந்து குரல் கொடுப்பதிலும் தமது வாழ்நாளை பாரத ரத்னா கர்பூரி தாக்கூர் அர்ப்பணித்ததாக பிரதமர் தெரிவித்தார். அவரது பெயரில் உருவாகி வரும் திறன் பல்கலைக்கழகம், அதே தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லும் சக்தி வாய்ந்த ஊடகமாக சேவை புரியும் என்று உறுதியளித்தார்.
நாட்டில் உள்ள ஒவ்வொரு இளைஞருக்கும் இது வாய்ப்புகள் நிறைந்த காலம் என்பதை உறுதிப்படுத்திய பிரதமர், பல விஷயங்களுக்கு மாற்று வழிகள் இருந்தாலும், திறமை, புதுமை மற்றும் கடின உழைப்புக்கு மாற்று எதுவும் இல்லை என்பதை வலியுறுத்தினார். இந்த குணங்கள் அனைத்தும் இந்திய இளைஞர்களிடம் உள்ளன என்றும், அவர்களின் வலிமை ஒரு வளர்ச்சியடைந்த இந்தியாவின் ஆற்றலாக மாறும் என்றும் குறிப்பிட்டு பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு ஜெயந்த் சவுத்ரி நேரடியாகவும், பீகார் முதலமைச்சர் திரு நிதீஷ் குமார், மத்திய அமைச்சர்கள் திரு ஜுவல் ஓரம், திரு ராஜீவ் ரஞ்சன் சிங், திரு சுகந்தா மஜூம்தார் மற்றும் இதர பிரமுகர்கள் காணொலிக் காட்சி வாயிலாகவும் கலந்து கொண்டார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2174736
*****
AD/BR/SG
(Release ID: 2174807)
Visitor Counter : 21
Read this release in:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam