பிரதமர் அலுவலகம்
ஜப்பான் பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் வெளியிட்ட கருத்துக்களின் தமிழாக்கம்
Posted On:
29 AUG 2025 5:08PM by PIB Chennai
மாண்புமிகு பிரதமர் திரு இஷிபா அவர்களே,
இரு நாடுகளின் பிரதிநிதிகளே,
ஊடக நண்பர்களே,
வணக்கம்!
கொன்பன்வா!
முதலில், பிரதமர் திரு இஷிபாவின் அன்பான வார்த்தைகளுக்கும் வரவேற்புக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைய எங்கள் கலந்துரையாடல், ஆக்கப்பூர்வமானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருந்தது. இரண்டு பெரிய பொருளாதாரங்கள் மற்றும் துடிப்பான ஜனநாயக நாடுகள் என்ற வகையில், எங்கள் கூட்டாண்மை, இரு நாடுகளுக்கும் மட்டுமல்ல, உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கும் மிகவும் முக்கியமானது என்பதை நாங்கள் இருவரும் ஒப்புக்கொள்கிறோம்.
மேம்பட்ட உலகை உருவாக்குவதில் வலுவான ஜனநாயகங்கள் இயற்கையான பங்காளிகளாக விளங்குகின்றன.
நண்பர்களே,
இன்று, எங்கள் சிறப்புவாய்ந்த உத்திசார் மற்றும் உலகளாவிய கூட்டாண்மையில் ஒரு புதிய மற்றும் பொன்னான அத்தியாயத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளோம். அடுத்த தசாப்தத்திற்கான ஒரு செயல்திட்டத்தை நாங்கள் அமைத்துள்ளோம். முதலீடு, புதுமை, பொருளாதார பாதுகாப்பு, சுற்றுச்சூழல், தொழில்நுட்பம், சுகாதாரம், இயக்கம், மக்களுக்கிடையேயான உறவுகள் மற்றும் மாநில-மாகாண ஒத்துழைப்பு ஆகியவற்றில் எங்கள் தொலைநோக்குப் பார்வை கவனம் செலுத்துகிறது. அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் ஜப்பானில் இருந்து 10 ட்ரில்லியன் யென் முதலீட்டை நாங்கள் நிர்ணயித்துள்ளோம். இரு நாடுகளிலிருந்தும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களை இணைப்பதிலும் நாங்கள் சிறப்பு கவனம் செலுத்துவோம்.
இந்திய-ஜப்பான் வணிக மன்றத்திலும், ஜப்பானிய நிறுவனங்களை, "இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள், உலகத்திற்காக உற்பத்தி செய்யுங்கள்" என்று வலியுறுத்தினேன்.
நண்பர்களே,
எங்கள் கூட்டு கடன் வழிமுறை, எரிசக்திக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். இது, எங்கள் பொருளாதார கூட்டாண்மையைப் போலவே எங்கள் பசுமைக் கூட்டாண்மையும் வலுவானது என்பதைக் காட்டுகிறது. இந்த வகையில், நாங்கள் நிலையான எரிபொருள் முயற்சி மற்றும் பேட்டரி விநியோகச் சங்கிலி கூட்டாண்மையையும் தொடங்குகிறோம்.
நாங்கள் பொருளாதார பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சியைத் தொடங்குகிறோம். இதன் கீழ், முக்கியமான மற்றும் உத்திசார் பகுதிகளில் ஒரு விரிவான அணுகுமுறையுடன் முன்னேறுவோம்.
உயர் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பிற்கு, இருதரப்பும் முன்னுரிமை அளிக்கின்றன. இந்தச் சூழலில், டிஜிட்டல் கூட்டாண்மை 2.0 மற்றும் செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறைக்கடத்திகள் மற்றும் அரிய வகை கனிம தாதுக்களுக்கு முக்கியத்துவம் அளிப்போம்.
நண்பர்களே,
ஜப்பானிய தொழில்நுட்பமும் இந்திய திறமையும் ஒரு வெற்றிகரமான கலவை என்று நாங்கள் நம்புகிறோம். ஒரு முனையில் அதிவேக ரயில் பயணத்தில் நாங்கள் கவனம் செலுத்தி வரும் அதே வேளையில், அடுத்த தலைமுறை இயக்க கூட்டாண்மையின் கீழ் துறைமுகங்கள், விமானப் போக்குவரத்து மற்றும் கப்பல் கட்டுமானம் போன்ற துறைகளிலும் விரைவான முன்னேற்றத்தை அடைந்து வருகிறோம்.
சந்திரயான்-5 திட்டத்தில் இணைந்து பணியாற்ற, இஸ்ரோ மற்றும் ஜாக்ஸா இடையே எட்டப்பட்ட ஒப்பந்தத்தை நாங்கள் வரவேற்கிறோம். பூமியின் எல்லைகளுக்கு அப்பால், விண்வெளியிலும் மனிதகுலத்தின் முன்னேற்றத்தை எங்கள் தீவிர பங்கேற்பு குறிக்கும்!
நண்பர்களே,
மனிதவள பரிமாற்றத்தின் செயல் திட்டத்தின் கீழ், அடுத்த ஐந்து ஆண்டுகளில், இரு தரப்பினரும் வெவ்வேறு துறைகளில் 5 லட்சம் நபர்களின் பரிமாற்றத்தை ஊக்குவிப்போம். இதன் கீழ் 50,000 திறமையான இந்தியர்கள் ஜப்பானின் பொருளாதாரத்திற்கு தீவிரமாக பங்களிப்பார்கள்.
இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான கூட்டாண்மை, தில்லி மற்றும் டோக்கியோவுடன் மட்டும் நின்றுவிடாது. இந்திய மாநிலங்களுக்கும் ஜப்பான் மாகாணங்களுக்கும் இடையிலான நிறுவன ஒத்துழைப்பு மூலம் எங்கள் ஈடுபாடு வலுப்பெறும். இது வர்த்தகம், சுற்றுலா, கல்வி மற்றும் கலாச்சார பரிமாற்றங்களுக்கான புதிய வாய்ப்புகளுக்கு வித்திடும்
நண்பர்களே,
தடையில்லாத, வெளிப்படையான, அமைதியான, வளமான மற்றும் விதிகளின் அடிப்படையிலான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை நோக்கி இந்தியாவும் ஜப்பானும் முழுமையாக உறுதிபூண்டுள்ளன.
பயங்கரவாதம் மற்றும் சைபர் பாதுகாப்பு குறித்த கவலைகளை நாங்கள் பகிர்ந்து கொண்டுள்ளோம். பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்புத் துறைகளிலும் எங்களுக்கு பொதுவான ஆர்வங்கள் உள்ளன. பாதுகாப்புத் தொழில் மற்றும் புத்தாக்கத் துறைகளில் எங்கள் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த நாங்கள் இணைந்து முடிவு செய்துள்ளோம்.
நண்பர்களே,
இந்தியா மற்றும் ஜப்பான் கூட்டாண்மை, பரஸ்பர நம்பிக்கையில் வேரூன்றியுள்ளது. எங்கள் தேசிய முன்னுரிமைகளை பிரதிபலிப்பதுடன், பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் நம்பிக்கைகளால் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒன்றாக, இரு நாட்டு மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்பு மற்றும் உலகத்திற்கான பொதுவான கனவை நாங்கள் முன்னெடுத்துச் செல்கிறோம்.
மாண்புமிகு பெருமக்களே,
மீண்டும் ஒருமுறை, உங்கள் நட்புக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அடுத்த வருடாந்திர உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வருமாறு உங்களை அன்புடன் அழைக்கிறேன்.
அரிகாடோ கோசைமாசு.
நன்றி
பொறுப்பு துறப்பு - இது பிரதமர் கருத்துக்களின் தோராயமான மொழிபெயர்ப்பு. பிரதமர் தமது கருத்துக்களை இந்தியில் வழங்கியிருந்தார்.
***
AD/RB/DL
(Release ID: 2162112)
Visitor Counter : 14