பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியா – ஜப்பான் பொருளாதார மன்றத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 29 AUG 2025 11:57AM by PIB Chennai

மாண்புமிகு பிரதமர் இஷிபா அவர்களே!

இந்தியா – ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களே,

சகோதர சகோதரிகளே,

வணக்கம்

ஜப்பான் மொழியிலும் வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டார்.

நான் இன்று காலை டோக்கியோ வந்தடைந்தேன். என்னுடைய இந்தப் பயணம் பெரு வர்த்தக நிறுவனத் தலைவர்களுடனான சந்திப்புடன் தொ     டங்கியது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.

உங்களில் பலரை நான் நன்றாக அறிவேன், குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த போதும், பிறகு தில்லியில் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகும், உங்களில் பலருடன் நான் நெருங்கிய நட்பு கொண்டுள்ளேன்.  இன்று உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த பொருளாதார மன்றத்தில் பேசும் வாய்ப்பு கிடைத்ததற்காக பிரதமர் திரு இஷிபாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மதிப்பு வாய்ந்த குறிப்புகளுக்காக அவருக்கு நான் வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் ஜப்பான் எப்போதும் முக்கிய நட்பு நாடாக உள்ளது. மெட்ரோ ரயில் உற்பத்தி, குறை கடத்தி உற்பத்தி அல்லது புத்தொழில் நிறுவனங்கள் என எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு துறையிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பரம் நம்பிக்கை பிரதிபலிக்கிறது.

ஜப்பானிய நிறுவனங்கள் இந்தியாவின் 40 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் தனியார் நிறுவனங்கள் மூலம் 13 பில்லியன் டாலர்கள் முதலீடாக கிடைத்துள்ளன. இந்தியா ஒரு முதலீடு செய்வதற்கு உகந்த நம்பிக்கைக்குரிய நாடாக திகழ்கிறது என்று சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான்  வங்கி தெரிவித்துள்ளது. 80% ஜப்பானிய வர்த்தக நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது நிறுவனங்களை விரிவாக்கம் செய்ய விரும்புவதாகவும் அவற்றின் 75% நிறுவனங்கள் ஏற்கனவே  லாபத்தில் இயங்கி வருவதாகவும் ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது. இது இந்தியாவில் முதலீடுகளுக்கான வாய்ப்புகள் பலமடங்கு அதிகரித்து வருவதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

நண்பர்களே,

கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்கள் குறித்து நீங்கள் அனைவரும் மிகவும் நன்றாக அறிந்ததே. இன்று இந்தியா அரசியல் மற்றும் பொருளாதார ஸ்தரதன்மையுடன் தெளிவான மற்றும் துல்லியமான கொள்கைகளைக் கொண்டுள்ளது.  உலக அளவில் இந்தியா விரைவான பொருளாதார வளர்ச்சிக் கண்டு வரும் நாடாக உருவெடுத்துள்ளது. மேலும், வெகு விரைவில் உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்க உள்ளது.

உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு 18 சதவீதமாக உள்ளது. நாட்டின் மூலதன சந்தை மூலம்  நல்ல வருவாய் கிடைப்பதுடன் வங்கித்துறையின் செயல்பாடுகளும் வலுவாக உள்ளது. பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள் குறைவாகவும், அந்நிய செலாவணிக் கையிருப்பு 700 பில்லியன் டாலராகவும் உள்ளது.

நண்பர்களே,

இத்தகைய மாற்றங்களுக்கு மறுசீரமைப்பு செயல்பாடு மற்றும் மாற்றம் என்ற அணுகுமுறைகளே காரணமாக அமைந்துள்ளது. 2017-ம் ஆண்டில் ஒரே நாடு ஒரே வரி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்த வரிமுறையில் புதிய மற்றும் மிகப் பெரிய அளவிலான சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு சில வாரங்களுக்கு முன்பு இந்திய நாடாளுமன்றத்தில் புதிய மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரிச்சட்டத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டது.

இந்தியாவின் சீர்திருத்த நடவடிக்கைகள் வரிசார்ந்த நடைமுறைகள்  மட்டுமின்றி எளிதாக வர்த்தகம் புரிவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது. வர்த்தக நிறுவனங்களுக்கான அனுமதி பெற ஒற்றைச் சாளர முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 45,000 இணக்க நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதனை நடைமுறைப்படுத்தும் பணிகளை விரைவுபடுத்தும் வகையில், உயர்நிலைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு மற்றும் விண்வெளி போன்ற மிக முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் உள்ள வாய்ப்புகள் தனியார் துறைக்கும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த வாய்ப்புகள் அணுமின் உற்பத்தித் துறைக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 

நண்பர்களே,

வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைப்பதற்கான உறுதியான நிலைபாட்டை இந்தியா கொண்டுள்ளது என்பதை இத்தகைய சீர்திருத்த நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன. உறுதியான, தெளிவான, உத்திசார் நடவடிக்கைகளுடன் கூடிய சீர்திருத்தங்களை மேற்கொள்வதன் மூலமாக உலக நாடுகள், இந்தியாவை அங்கீகரிப்பதுடன் பாராட்டுதல்களையும் தெரிவித்து வருகிறது. 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் பொருளாதார மதிப்பீட்டை எஸ் & பி சர்வதேச மதிப்பீட்டு நிறுவனம் மேம்படுத்தியுள்ளது.  உலக நாடுகள் இந்தியாவின் செயல்பாடுகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றன.

நண்பர்களே,

இந்தியா – ஜப்பான் வர்த்தக மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை இருநாடுகளுக்கும் இடையேயான நிறுவன ஒப்பந்தங்கள் குறித்து விரிவாக குறிப்பிட்டுள்ளது. இத்தகைய குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்காக உங்கள் அனைவருக்கும் நான் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவில் மேலும் சில கருத்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்.  

முதலாவதாக உற்பத்தித் துறை குறித்தக் கருத்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்.  வாகன உற்பத்தித் துறையில் இருநாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு மிகவும் வெற்றிகரமாக உள்ளது. இது குறித்து பிரதமர் விரிவாக எடுத்துரைத்தார். இதனுடன் மின்சார வாகனங்களுக்கான மின்கலங்கள், ரோபோட்டிக்ஸ், குறைகடத்திகள், கப்பல்கட்டுமானம், அணுமின் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இந்த ஒத்துழைப்பு நீடிக்கும். மேலும்,  வளரும் நாடுகளுக்கு குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கான வழிவகைகளும் இதில் அடங்கும்.

உற்பத்திக்கான இந்தியா மற்றும் உலகிற்கான உற்பத்தி ஆகிய இயக்கங்களில் முதலீடு செய்ய முன்வருமாறு உங்கள் அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன். சுசூகி மற்றும் டாய்கின் நிறுவனங்களின் வெற்றிகரமான செயல்பாடுகள் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.

இரண்டாவதாக தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் பற்றி குறிப்பிட விரும்புகிறேன்.  தொழில்நுட்பத் துறையில் சக்தி வாய்ந்த நாடாக ஜப்பான் திகழ்கிறது. அதே சமயம் திறமையில் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா திகழ்கிறது.  செயற்கை நுண்ணறிவு. குறைகடத்தி உற்பத்தி, குவாண்டம் கம்ப்யூட்டிங், உயிரி தொழில்நுட்பம், விண்வெளி போன்ற துறைகளில் இந்தியா உறுதியான மற்றும் இலக்குகளுடன் கூடிய முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஜப்பானிய தொழில்நுட்பம் மற்றும் இந்தியாவின் திறன் ஆகிய இரண்டும் இணைந்து தொழில்நுட்பப் புரட்சியில் உலகின் முன்னணி நாடாக உருவெடுக்கச் செய்யும்.

3-வதாக பசுமை எரிசக்தி மாற்றங்கள் குறித்ததாகும். வரும் 2030-ம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை நோக்கிய இந்தியா பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வரும் 2047-ம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுமின் உற்பத்திக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சூரிய மின் தகடுகள் முதல் பசுமை ஹைட்ரஜன் வரை, இந்தியா – ஜப்பான் நாடுகள் இணைந்து செயல்படுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

இந்தியா – ஜப்பான் இடையே கூட்டுக் கடன் நடைமுறை ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது தூய்மையான, பசுமையான எதிர்காலத்தைக் கட்டைமப்பதற்கான நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுவதற்கு உதவிடும்.

நான்காவதாக அடுத்த தலைமுறையினருக்கான உள்கட்டமைப்பு வசதிகள்:  கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முன் எப்போதும் இல்லாத வகையில் அடுத்த தலைமுறையினருக்கான போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. நாட்டில் உள்ள துறைமுகங்களின் கையாளும் திறன் இரட்டிப்பாகியுள்ளது. நாடு முழுவதிலும் 160-க்கும் அதிகமான விமான நிலையங்கள் உள்ளன. 1,000 கிலோமீட்டருக்கும் கூடுதலான மெட்ரோ ரயில் வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மும்பை – அகமதாபாத் இடையேயான அதிவேக விரைவு ரயில் சேவைக்கான பணிகள் ஜப்பான் நாட்டின் உதவிகளுடன் நடைபெற்று வருகிறது.

ஆனால் இத்துடன் இந்தியாவின் நடவடிக்கைகள் நின்றுவிடவில்லை. ஜப்பானின் சீர்மிகு செயல்பாடுகள் மற்றும் இந்தியாவின் பெரிய அளவிலான நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான சிறந்த நட்புறவை மேலும் வலுப்படுத்த உதவிடும்.

ஐந்தாவதாக திறன் மேம்பாடு மற்றும் மக்கள் தொடர்பு குறித்த ஒப்பந்தங்கள்.  சர்வதேச நாடுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், இந்தியாவின் திறன் மிக்க இளைஞர் சக்தி எராளமாக உள்ளது.  இதன் மூலம் ஜப்பான் பெரிதும் பயனடையும். ஜப்பானிய மொழியில் இந்திய இளைஞர்களுக்கு உரிய பயிற்சி மற்றும் மென்பொருள் திறன் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் ஜப்பானின் தொழிலாளர் சக்திக்குத் தேவையான தயார் நிலையை உருவாக்க முடியும். மனித சக்தியை பரஸ்பரம் பகிர்ந்து கொள்வதன் மூலம், வளங்களையும் பகிர்ந்து கொள்ள முடியும்.

நண்பர்களே,

இறுதியாக நான் ஒன்றை கூற விரும்புகிறேன். இந்தியா – ஜப்பான் நாடுகளிடையேயான ஒத்துழைப்பு உத்தி சார்ந்ததாகவும் திறன் மிக்கதாகவும் உள்ளது. பொருளாதார அடிப்படையில் இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் நலன் சார்ந்த அம்சங்களில் முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.  வளரும் நாடுகளில் ஜப்பானிய வர்த்தக நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கு இந்தியா உதவிடும். இதன் மூலம் ஆசிய நாடுகளில் நூற்றாண்டுகாலமாக இருந்து வரும் ஸ்தரதன்மை, வளர்ச்சி, வளம் ஆகியவற்றில் ஒரு குறிப்பிட்ட நிலையை அடைய முடியும்.

எனது இந்த உரையுடன் ஜப்பான் பிரதமர் திரு இஷிபா மற்றும் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி

-----

(Release ID: 2161765)

AD/SV/KPG/DL


(Release ID: 2161994) Visitor Counter : 9