பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் 2025-ன் தொடக்கத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் அறிக்கை

நமது கூட்டான சாதனைகளின் உண்மையான கொண்டாட்டம் என்ற முறையில் இந்த மழைக்காலக் கூட்டத்தொடர் நாட்டிற்கு பெருமைமிகு தருணமாக விளங்குகிறது: பிரதமர்

இந்தியாவின் ராணுவ வல்லமையை ஆபரேஷன் சிந்தூரில் உலகம் பார்த்தது; பயங்கரவாதத்தின் மூளைகளாக இருந்தவர்களின் மறைவிடங்களை அழித்து இந்திய வீரர்கள் தங்கள் நோக்கத்தில் 100% வெற்றியை ஈட்டினர்: பிரதமர்

பயங்கரவாதமாக இருந்தாலும் நக்சலிசமாக இருந்தாலும் பல கடுமையான சவால்களை இந்தியா எதிர்கொண்டிருந்தது, ஆனால் இன்று நக்சலிசம் மற்றும் மாவோயிசத்தின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது; வெடிகுண்டுகளையும் துப்பாக்கிகளையும் அரசியல் சட்டம் நிராகரிக்கிறது. கடந்த காலத்தில் சிவப்புத் தடங்களாக இருந்தவை இன்று வளர்ச்சி மற்றும் மேம்பாட்டின் பசுமை மண்டலங்களாக மாறியுள்ளன: பிரதமர்

டிஜிட்டல் இந்தியா உலகளாவிய வரவேற்பை பெற்றுள்ளது, பல நாடுகளில் யுபிஐ பிரபலமாகியுள்ள நிலையில் நிதித் தொழில்நுட்ப உலகில் அங்கீகரிக்கப்பட்ட பெயராக அது மாறியுள்ளது: பிரதமர்

பகல்ஹாமில் நடந்த கொடூரப் படுகொலை ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, பயங்காரவாதம் மற்றும் அதன் குவிமையத்தின் மீது உலகத்தின் கவனத்தை ஈர்த்தது; கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் இந்தியா முழுவதும் உள்ள பிரதிநிதிகள் ஒன்றுபட்டு இத்தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கினை அம்பலப்படுத்தினர்: பிரதமர்

Posted On: 21 JUL 2025 12:31PM by PIB Chennai

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் 2025 தொடங்குவதற்கு முன் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஊடகவியலாளர்களிடையே உரையாற்றினார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடருக்கு அனைவரையும் வரவேற்ற பிரதமர், இந்தக் கூட்டத்தொடர் புதிய கண்டுபிடிப்பு மற்றும் புதுப்பித்தலின் அடையாளமாக உள்ளது என்றார். நாடு முழுவதற்குமான தற்போதைய வானிலை பற்றி எடுத்துரைத்த அவர், இது முன்னேற்றத்திற்கு சாதகமானது என்றும்  விவசாயத்திற்கு பயனளிக்கும் முன்னறிவிப்பைக் கொண்டுவந்துள்ளது என்றும் கூறினார். மழைப் பொழிவானது ஊரகப்  பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பது மட்டுமின்றி, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரக் கட்டமைப்பிற்கும் அனைத்துக் குடும்பங்களின் பொருளாதார நலனுக்கும் பங்களிப்பு செய்கிறது என்றும் அவர் கூறினார். தற்போதைய தகவல் அடிப்படையில், கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது ஏரிகளில் நீர்மட்டம் 3 மடங்கு அதிகரித்திருப்பதாக திரு மோடி கூறினார்.  இந்த அதிகரிப்பு வரும் நாட்களில் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பயனை அளிக்கும் என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.

தற்போதைய மழைக்காலக் கூட்டத்தொடர், நாட்டிற்கு பெருமைமிகு மகத்தான தருணம் என்றும் இந்தியாவிற்கான வெற்றிக் கொண்டாட்டத்தை இது பிரதிநிதித்துவம் செய்கிறது என்றும் குறிப்பிட்ட பிரதமர், முதல் முறையாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் இந்தியாவின் மூவண்ணக் கொடி பறந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை சுட்டிக்காட்டினார். இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் இது பெருமையானது என்று அவர் கூறினார். இந்தச் சாதனை நாடு முழுவதும், அறிவியல், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்பு ஆகியவற்றுக்கு புதிய ஆர்வத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த வெற்றி குறித்து மக்களவை, மாநிலங்களவை என ஒட்டுமொத்த நாடாளுமன்றமும், இந்திய மக்களும் ஒன்றுபட்டு தங்களின் பெருமிதத்தை வெளிப்படுத்துவதாக திரு மோடி தெரிவித்தார். இந்தக் கூட்டான கொண்டாட்டம்,  இந்தியாவின் எதிர்கால விண்வெளி ஆய்வுப் பயணங்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் வழங்கும் என்று அவர் மேலும் கூறினார்.

தற்போதைய  நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர், இந்திய வெற்றிகளின் கொண்டாட்டம் என்று வர்ணித்த திரு மோடி, இந்திய ராணுவத்தின் பலத்தையும், திறனையும் உலகம் கண்டதாக கூறினார். ஆபரேஷன் சிந்தூர் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இந்திய ராணுவம் தனது இலக்குகளில் 100 சதவீத வெற்றியை ஈட்டியதாக தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூர் மூலம் வெறும் 22 நிமிடங்களில்  பயங்கரவாதிகளின் தளங்களை  இந்திய ராணுவம் அழித்ததாக அவர் கூறினார். பீகாரில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில், இது பற்றி தாம் அறிவித்ததை சுட்டிக்காட்டிய அவர், ராணுவத்தினர் தங்களின் தீரத்தை வெகுவேகமாக நிரூபித்தனர் என்றார். இந்தியாவில் பாதுகாப்புத் தளவாடங்களின் உற்பத்தி அதிகரிப்பு உலகளாவிய ஆர்வத்தை அதிகரித்திருப்பதாக தெரிவித்த திரு மோடி, அண்மையில் சர்வதேச தலைவர்களுடன் தமது கலந்துரையாடல்களின் விவரத்தை பகிர்ந்து கொண்டார். உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்திய ராணுவத் தளவாடங்கள் பற்றி உலகத்தலைவர்கள் வியப்பு தெரிவித்ததாக அவர் கூறினார்.

இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் நாடாளுமன்றம் இந்தக் கூட்டத்தொடரின் போது ஒரே குரலில் ஒன்றுபட்டு நிற்கும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், இந்தியாவின் ராணுவ பலத்தை அது மேலும் ஊக்கப்படுத்தும் என்றார். இந்தக் கூட்டான உணர்வு குடிமக்களுக்கு ஈர்ப்பை ஏற்படுத்துவதுடன் பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்திக்கும் உத்வேகத்தை அளிக்கும் என்றும் இந்திய இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் பிரதமர் கூறினார்.

அனைத்து நடவடிக்கையிலும், தொடர்ச்சியான மேம்பாட்டு உணர்வுடன் கைகோர்த்து முன்னேறும் அமைதி மற்றும் வளர்ச்சியை இந்த தசாப்தம் பிரதிபலிக்கிறது என்று பிரதமர் கூறினார். பயங்கரவாதமாக இருந்தாலும் நக்சலிசமாக இருந்தாலும் பல்வேறு தீவிரவாத சம்பவங்களால் நீண்ட காலம் நாடு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை எடுத்துரைத்த அவர், புவியியல் ரீதியாக பரவியிருந்த நக்சலிசமும் மாவோயிசமும் தற்போது வெகுவாக குறைந்துள்ளது என்றார். நக்சலிசத்தையும் மாவோயிசத்தையும் முற்றிலும் ஒழிப்பது என்ற இலக்கை நோக்கி இந்தியாவின் பாதுகாப்புப் படைகள், புது நம்பிக்கையுடனும் அதிகரிகப்பட்ட முயற்சிகளுடனும் வேகமாக முன்னேறி வருகின்றன என்று திரு மோடி கூறினார்.  நக்சலலைட்டுகளின் வன்முறைப் பிடியிலிருந்து விடுபட்ட நூற்றுக்கணக்கான மாவட்டங்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றன என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். ஆயுதங்களையும், வன்முறையையும் ஒழிப்பதை இந்திய அரசியல் சட்டம் வலியுறுத்துகிறது என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். நாட்டின் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தின் அடையாளமாக ஏற்கனவே சிவப்புத் தடமாக இருந்த பகுதிகள் தற்போது பசுமை வளர்ச்சி மண்டலங்களாக மாறி வருவது கண்கூடாக தெரிகிறது என்று அவர் கூறினார். 

இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஒவ்வொரு கௌரவமிக்க நாடாளுமன்ற உறுப்பினருக்கும், தேசபக்தி மற்றும் நாட்டின் நலனுக்கான அர்ப்பணிப்பால் ஏற்பட்டு பெருமை அளிக்கும் தருணங்களைக் குறிக்கின்றன என்று சுட்டிக்காட்டிய திரு மோடி, இந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும், ஒவ்வொரு அரசியல் கட்சியும் குரல் எழுப்பும் தேசியப் பெருமைமிக்க கொண்டாட்டம் நாடு முழுவதும் கேட்கும் என்று தெரிவித்தார்.

தங்களுடைய அரசு 2014-ம் ஆண்டு பொறுப்பேற்ற போது பலவீனமான ஐந்து பொருளாதார நாடுகளில் இந்தியாவும் இடம் பெற்றிருந்ததாகவும், அத்தருணத்தில் உலகளாவிய பொருளாதார தரவரிசைப் பட்டியலில் இந்தியா பத்தாவது இடத்தில் இருந்ததாகவும் சுட்டிக்காட்டிய பிரதமர், இந்தியா தற்போது உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடு என்ற நிலையை நோக்கி விரைவாக சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார். 25 கோடி பேர் ஏழ்மை நிலையிலிருந்து விடுபட்டுள்ளதாகவும், இந்த மாற்றத்தக்க நடவடிக்கையை உலகளாவிய நிறுவனங்கள் அங்கீகரித்து, பாராட்டியுள்ளதாகவும் கூறினார். 2014-ம் ஆண்டுக்கு முன்பாக இந்தியா இரட்டை இலக்க பணவீக்கத்தை கொண்டிருந்ததாக திரு மோடி குறிப்பிட்டார். தற்போது பணவீக்க விகிதம்  2 சதவீதமாக உள்ளதாகவும், மக்கள் சிக்கல்களிலிருந்து விடுபட்டு அவர்களுடைய வாழ்க்கை தரம் எளிதாகியுள்ளதாகவும் கூறினார். குறைந்த பணவீக்கத்துடன் கூடிய அதிக முன்னேற்றமானது வலிமையான, நிலைத்தன்மை மிக்க வளர்ச்சிப் பயணத்தை பிரதிபலிக்கிறது என்று திரு மோடி தெரிவித்தார்.

இந்தியாவில் நிலவும் டிஜிட்டல் சூழலில் உலகளாவிய அங்கீகாரம் மற்றும் ஆர்வம் விரைவாக வளர்ச்சியடைந்து வருவதுடன், டிஜிட்டல் இந்தியா, ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (யூபிஐ) போன்ற முன்முயற்சிகள் இந்தியாவின் வளர்ந்து வரும் திறன்களை உலகிற்கு எடுத்துக்காட்டுவதாக பிரதமர் கூறினார்.  ஃபின்டெக் தளத்தில் யூபிஐ வலிமையுடன் திகழ்வதாக அவர் குறிப்பிட்டார். நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இந்தியா தலைமைத்துவம் வகிப்பதாகவும், உலகளவில் எந்தவொரு நாட்டையும் விட, அதிக அளவு பரிவர்த்தனைகள் பதிவு செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.

அண்மையில் நடைபெற்ற சர்வதேச அமைப்புகளின் உலகளாவிய உச்சிமாநாட்டில் இந்தியாவின் பெரும் சாதனைகள் குறித்து சுட்டிக்காட்டிய திரு மோடி, இந்தியாவில் 90 கோடிக்கும் மேற்பட்ட தனிநபர்கள் தற்போது சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் கீழ் உள்ளதாகவும், இது சமூக நலனில் சிறப்புமிக்க சாதனை என்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை திரு மோடி சுட்டிக்காட்டினார். மழைக்காலங்களில் பொதுவாக ஏற்படும் கண் நோய் இந்தியாவில் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதையும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்த அங்கீகாரம் இந்தியாவின் பொது சுகாதார முயற்சிகளில் சிறப்புமிக்க மைல்கல்லாக குறிப்பிடப்படுகிறது என்று அவர் கூறினார்.

பகல்ஹாமில் நிகழ்ந்த கொடூரமான படு கொலைத் தாக்குதல் உலகை அதிர்ச்சியடையச் செய்ததாகவும், பயங்கரவாதம் மற்றும் அச்செயல்களில் ஈடுபடுவோருக்கு நிதியுதவி செய்வோர் குறித்து உலகின் கவனத்திற்கு எடுத்து சென்றதாக நினைவுகூர்ந்த பிரதமர், இதற்காக பெரும்பாலான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நாட்டின் சேவைக்காக சர்வதேச நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு விளக்கியதாகவும் தெரிவித்தார். இந்த வெற்றிகரமான ஒருங்கிணைந்த ராஜ்ஜிய ரீதியிலான இயக்கத்தின் மூலம் பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் நிதியுதவி அளிக்கிறது என்று உலக நாடுகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது என்று  அவர் சுட்டிக்காட்டினார். இந்த நாடு தழுவிய முன்முயற்சியை மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு திரு மோடி பெரும் பாராட்டை தெரிவித்தார். அவர்களுடைய முயற்சிகள் நாட்டின் நேர்மறையான சூழலை உருவாக்கியுள்ளதாகவும், பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் கண்ணோட்டத்தை சர்வதேச சமுதாயத்தின் மனதை விழிப்படைய செய்ததாகவும், நாட்டின் நலனுக்காக இந்த சிறப்பான பங்களிப்பில் ஈடுபட்ட அனைவரையும் பாராட்டுவது தமது பாக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒற்றுமையின் வலிமை மற்றும் ஒருமித்த குரல் நாட்டிற்கு உத்வேகமும், சக்தி அளிப்பதாகவும் தெரிவித்த பிரதமர், தற்போதைய மழைக்கால கூட்டத் தொடரில் இந்த உத்வேகம் வெற்றிக் கொண்டாட்டமாக பிரதிபலிக்கும் என்றும், இந்திய ராணுவ வலிமை, நாட்டின் திறன் மற்றும் 140 கோடி மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் ஆதாரமாக சேவையாற்றுவோரை கௌரவிப்பதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.  கூட்டு முயற்சிகள் பாதுகாப்பு துறையில் தன்னிறைவு அடைய வேண்டும் என்ற இந்தியாவின் நோக்கத்திற்கு வலிமை சேர்க்கும் என்று திரு மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாதுகாப்பு படையினரின் வலிமையை அங்கீகரிக்குமாறும், பாராட்டுமாறும் நாட்டு மக்களை வலியுறுத்தினார்.

ஒற்றுமையிலிருந்து வெளிப்படும் வலிமையையும், ஒரே குரலில் கருத்துகளை பேசுவதன் தாக்கத்தையும்  மக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்த உணர்வை நாடாளுமன்றத்தில் முன்னெடுக்க அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்தார். அரசியல் கட்சிகளின் பன்முகத்தன்மை மற்றும் அவற்றின் நிகழ்ச்சிகள் குறித்து குறிப்பிட்ட திரு மோடி, கட்சி நலன்களில் கருத்து வேறுபாடு இருந்தாலும், நாட்டின் நலன் சார்ந்த அம்சங்களில் இணக்கமாக இருக்க வேண்டும் என்று கூறினார். இந்த அமர்வில் நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்துதல், மக்களுக்கு அதிகாரம் அளித்தல், நாட்டின் முன்னேற்றத்தை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட பல்வேறு பரிந்துரைக்கப்பட்ட மசோதாக்கள் இடம்பெறும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி  பேச்சை நிறைவுசெய்தார். ஆக்கப்பூர்வமான, உயர்தர விவாதங்களில் பங்கேற்பதற்காக அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர் தமது வாழ்த்துகளை தெரிவித்தார்.

----

(Release ID: 2146316)

AD/TS/SMB/IR/KPG/AG/KR


(Release ID: 2146371)