பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு. நரேந்திர மோடி, எழுச்சி பெறும் வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2025-ஐ தொடங்கி வைத்தார்

வடகிழக்கு பகுதி நாட்டின் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட பகுதி: பிரதமர்

எங்களைப் பொறுத்தவரை, கிழக்கு என்பது - அதிகாரம் அளித்தல், செயல்படுதல், வலுப்படுத்துதல், மாற்றத்தை ஏற்படுத்துதல்: பிரதமர்

வடகிழக்கு என்பது ஒரு எல்லைப் பகுதி என்று மட்டுமே அழைக்கப்பட்ட ஒரு காலம் இருந்தது. இப்போது, அது 'வளர்ச்சியில் முன்னோடியாக' உருவாகி வருகிறது: பிரதமர்

வடகிழக்குப் பகுதி சுற்றுலாவிற்கான ஒரு முழுமையான தொகுப்பு: பிரதமர்

அமைதியைக் குலைக்கும் பயங்கரவாதமாக இருந்தாலும் சரி, அல்லது மாவோயிஸ்ட் அம்சங்களாக இருந்தாலும் சரி, இந்த அரசு பூஜ்ய சகிப்புத்தன்மை கொள்கையைப் பின்பற்றுகிறது: பிரதமர்

வடகிழக்குப் பகுதி எரிசக்தி, குறைக்கடத்திகள் போன்ற துறைகளுக்கு ஒரு முக்கிய மையமாக மாறி வருகிறது: பிரதமர்

Posted On: 23 MAY 2025 12:57PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று புதுதில்லியின் பாரத் மண்டபத்தில் எழுச்சி பெறும் வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2025-ஐ தொடங்கி வைத்தார். இந்த நிகழ்விற்கு வருகை தந்த அனைத்து பிரமுகர்களையும் அன்புடன் வரவேற்ற பிரதமர், வடகிழக்கு பிராந்தியத்தின் எதிர்காலம் குறித்து மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தினார். பாரத் மண்டபத்தில் சமீபத்தில் நடைபெற்ற அஷ்டலட்சுமி மஹோத்சவத்தை நினைவு கூர்ந்த அவர், இன்றைய நிகழ்வு வடகிழக்கில் முதலீட்டின் கொண்டாட்டத்தைக் குறிக்கிறது என்பதை சுட்டிக் காட்டினார். இந்த உச்சிமாநாட்டிற்கு தொழில்துறை தலைவர்களின் குறிப்பிடத்தக்க வருகையை பிரதமர் எடுத்துரைத்தார். இந்தப் பிராந்தியத்தில் உள்ள வாய்ப்புகளையும் அவர் சுட்டிக் காட்டினார். அனைத்து அமைச்சகங்களுக்கும் மாநில அரசுகளுக்கும் அவர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து, ஒரு செழிப்பான முதலீட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதில் அவர்கள்  மேற்கொண்டுள்ள முயற்சிகளைப் பாராட்டினார். வடகிழக்குப் பிராந்தியத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும், செழிப்புக்குமான தமது உறுதிப்பாட்டை மீண்டும் அவர் எடுத்துரைத்தார்.

உலகின் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட நாடாக உள்ள இந்தியாவின் நிலையை சுட்டிக் காட்டிய திரு நரேந்திர மோடி, வடகிழக்குப் பகுதி மிகவும் பன்முகத்தன்மை கொண்ட பகுதி என்றார். வர்த்தகம், பாரம்பரியம், ஜவுளி, சுற்றுலா ஆகியவற்றில் இப்பிராநதியம் பரந்த ஆற்றலைக் கொண்டுள்ளதை அவர் எடுத்துரைத்தார். பிராந்தியத்தின் பன்முகத்தன்மை அதன் மிகப்பெரிய பலமாகும் என்று அவர் கூறினார். வடகிழக்குப் பகுதி ஒரு செழிப்பான உயிரிப் பொருளாதாரம், மூங்கில் தொழில், தேயிலை உற்பத்தி, பெட்ரோலியம், விளையாட்டு, திறன், சுற்றுச்சூழல் சுற்றுலா ஆகியவற்றுக்கான வளர்ந்து வரும் மையமாக உள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டார். இந்தப் பிராந்தியம் கரிம பொருட்களின் உற்பத்திக்கு வழி வகுத்து வருவதாகவும், ஆற்றலின் சக்தியாக இவை திகழ்கின்றன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். வடகிழக்குப் பகுதி அஷ்டலட்சுமியின் சாரத்தை உள்ளடக்கியது எனவும், இது செழிப்பையும் வாய்ப்பையும் தருகிறது என்பதையும் அவர் எடுத்துரைத்தார். இந்த வலிமையுடன், ஒவ்வொரு வடகிழக்கு மாநிலமும் முதலீட்டுக்கும், தலைமைத்துவத்திற்குமான தனது தயார்நிலையை எடுத்துரைத்து வருவதாக அவர் கூறினார்.

வெற்றிகரமான இந்தியாவை அடைவதில் நாட்டின் கிழக்குப் பகுதியின் முக்கியப் பங்கை வலியுறுத்திய பிரதமர், வடகிழக்குப் பகுதி மிக முக்கியமான அங்கமாக உள்ளது என்று தெரிவித்தார். இந்த அரசைப் பொறுத்தவரை, கிழக்கு என்பது ஒரு திசை மட்டுமல்ல எனவும், பிராந்தியத்திற்கான கொள்கைக் கட்டமைப்பை வரையறுக்கும் ஒரு வலுவான அம்சம் என்றும் அவர் கூறினார். இந்த அணுகுமுறை கிழக்கு இந்தியாவை, குறிப்பாக வடகிழக்கு பகுதியை, இந்தியாவின் வளர்ச்சிப் பாதையின் மையத்தில் வைத்துள்ளது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

கடந்த 11 ஆண்டுகளில் வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள சிறப்பான மாற்றங்களைப் பிரதமர் எடுத்துரைத்தார். முன்னேற்றம் புள்ளிவிவரங்களில் மட்டும் பிரதிபலிக்கவில்லை எனவும், அவை களத்தில் உறுதியாக பிரதிபலிப்பதாகவும் அவர் கூறினார். இந்தப் பிராந்தியத்துடனான அரசின் ஈடுபாடு கொள்கை நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டது என்று அவர் தெரிவித்தார். வடகிழக்குப் பகுதியின் மக்களுடன் ஒரு இதயப்பூர்வமான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று அவர் கூறினார். இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர் மத்திய அமைச்சர்கள் வடகிழக்குப் பகுதிக்கு 700-க்கும் மேற்பட்ட முறை பயணித்து நலத்திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பிரதமர் கூறினார். இந்தப் பகுதியின் தன்மையைப் புரிந்துகொள்வதற்கும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கும், இந்த அரசு கொண்டுள்ள உறுதிப்பாட்டை அவர் வெளிப்படுத்தினார். உள்கட்டமைப்புத் திட்டங்கள் வெறும் செங்கல், சிமெண்ட் மட்டுமல்ல எனவும், உணர்ச்சிபூர்வமான இணைப்பிற்கான வழிமுறையாக அவை உள்ளன என்றும் அவர் எடுத்துரைத்தார். கிழக்குப் பகுதியை பாருங்கள் என்பதிலிருந்து கிழக்குப் பகுதியில் ச செயல்படுங்கள் என்று மாறியுள்ளதாக அவர் மீண்டும் எடுத்துரைத்தார். இந்த அணுகுமுறை சிறந்த முடிவுகளைத் தருகிறது என்று அவர் கூறினார். வடகிழக்குப் பகுதி ஒரு காலத்தில் ஒரு எல்லைப் பகுதியாக மட்டுமே கருதப்பட்டது என்றும், அது இப்போது இந்தியாவின் வளர்ச்சியில் முன்னணியில் உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

சுற்றுலாத் துறையை கவர்ச்சிகரமானதாக மாற்றுவதிலும் முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதிலும் வலுவான உள்கட்டமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை சுட்டிக் காட்டிய திரு நரேந்திர மோடி, நல்ல தரமான சாலைகள், மின்சார உள்கட்டமைப்பு, சரக்குப் போக்குவரத்து கட்டமைப்புகள் ஆகியவை எந்தவொரு தொழிலுக்கும் முதுகெலும்பாக அமைகின்றன என்று கூறினார். இது தடையற்ற வர்த்தகம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை எளிதாக்குகிறது என்பதைப் பிரதமர் எடுத்துரைத்தார். உள்கட்டமைப்புதான் வளர்ச்சியின் அடித்தளம் என்றும், அரசு வடகிழக்கில் ஒரு உள்கட்டமைப்பு புரட்சியைத் தொடங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தப் பிராந்தியத்தின் கடந்த கால சவால்களையும் அவர் விளக்கினார். ஆனால் இப்பகுதி இப்போது வாய்ப்புகளின் பூமியாக உருவெடுத்து வருவதாகப் பிரதமர் கூறினார். அருணாச்சலப் பிரதேசத்தில் சேலா சுரங்கப்பாதை, அசாமில் பூபேன் ஹசாரிகா பாலம் போன்ற திட்டங்களை மேற்கோள் காட்டி, இப்பகுதியில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்  முதலீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். கடந்த பத்து ஆண்டுகளில் 11,000 கிலோமீட்டர் நெடுஞ்சாலைகள் அமைத்தல், விரிவான புதிய ரயில் பாதைகள், விமான நிலையங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குதல், பிரம்மபுத்திரா, பராக் நதிகளில் நீர்வழிகளை மேம்படுத்துதல், நூற்றுக்கணக்கான மொபைல் கோபுரங்களை நிறுவுதல் உள்ளிட்ட முக்கிய முன்னேற்றங்களையும் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். மேலும், 1,600 கிலோமீட்டர் நீளமுள்ள வடகிழக்கு எரிவாயு  விநியோக அமைப்புத் திட்டம் நிறுவப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார். இது தொழில்களுக்கு நம்பகமான எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்கிறது என அவர் கூறினார். நெடுஞ்சாலைகள், ரயில்வேக்கள், நீர்வழிகள், டிஜிட்டல் இணைப்பு என அனைத்தும் வடகிழக்கு மாநிலங்களின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துகின்றன என்று அவர் கூறினார். இப்பகுதியானது தொழில்களுக்கு ஒரு வளமான நிலமாக உள்ளது என்றும், அடுத்த பத்தாண்டுகளில், இந்தப் பிராந்தியத்தின் வர்த்தகத் திறன் கணிசமாகப் பெருகும் என்றும் அவர் கூறினார். ஆசியான் அமைப்பின் நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தக அளவு தற்போது சுமார் 125 பில்லியன் டாலர்களாக உள்ளது என்றும், வரும் ஆண்டுகளில் இது 200 பில்லியன் டாலர்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இது வடகிழக்குப் பகுதியை ஒரு உத்திசார் வர்த்தக மையமாகவும், ஆசியான் சந்தைகளுக்கான நுழைவாயிலாகவும் நிலைநிறுத்துகிறது என அவர் கூறினார். பிராந்திய இணைப்பை மேம்படுத்த உள்கட்டமைப்பு திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான அரசின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் எடுத்துரைத்தார். இந்தியா-மியான்மர்-தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலையின் முக்கியத்துவத்தையும் பிரதமர் எடுத்துரைத்தார். இது மியான்மரிலிருந்து தாய்லாந்துக்கு நேரடிப் போக்குவரத்தை ஏற்படுத்தும் எனவும் தாய்லாந்து, வியட்நாம், லாவோஸ் ஆகிய நாடுகளுடனான இந்தியாவின் இணைப்பை வலுப்படுத்தும் என்றும் திரு நரேந்திர மோடி தெரிவித்தார். கொல்கத்தா துறைமுகத்தை மியான்மரின் சிட்வே துறைமுகத்துடன் இணைக்கக் கூடிய, மிசோரம் வழியான கலடன் பல்வகைப் போக்குவரத்துத் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கான அரசின் முயற்சிகளைப் பிரதமர் எடுத்துரைத்தார். இந்தத் திட்டம் மேற்கு வங்கம், மிசோரம் இடையேயான பயண தூரத்தை கணிசமாகக் குறைக்கும் எனவும், வர்த்தகம் மற்றும் தொழில்துறை வளர்ச்சியை அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

கௌஹாத்தி, இம்பால், அகர்தலா ஆகிய நகரங்களை பல்வகை சரக்குப் போக்குவரத்து மையங்களாக அரசு மேம்படுத்துவதை எடுத்துரைத்த பிரதமர், மேகாலயா, மிசோரம் மாநிலங்களில் நில சுங்க நிலையங்கள் நிறுவப்படுவது சர்வதேச வர்த்தக வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்தும் என்று குறிப்பிட்டார். இந்த முன்னேற்றங்கள் வடகிழக்குப் பகுதியை இந்தோ-பசிபிக் நாடுகளுடனான வர்த்தகத்தில் வளர்ந்து வரும் சக்தியாக நிலைநிறுத்துகின்றன என அவர் கூறினார். முதலீட்டுக்கும், பொருளாதார வளர்ச்சிக்குமான புதிய வழிகளை உருவாக்குகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலகளாவிய சுகாதாரம், நல்வாழ்வு ஆகியவற்றுக்கான தீர்வுகளை வழங்கும் நாடாக மாறுவதற்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்த பிரதமர், இந்தியாவில் குணப்படுத்துவோம் என்ற முன்முயற்சி உலகளாவிய இயக்கமாக உருவெடுத்து வருவதாகக் கூறினார். வடகிழக்குப் பகுதியின் வளமான பல்லுயிர், இயற்கை சூழல், இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறை ஆகியவற்றை அவர் எடுத்துரைத்தார், இது நல்வாழ்வுக்கு மிகவும் பொருத்தமான இடமாக உள்ளது என்று அவர் விளக்கினார். இந்தியாவில் குணப்படுத்துவோம் என்ற திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக வடகிழக்குப்பகுதியை முன்னிறுத்தி திட்டங்களை செயல்படுத்துமாறு முதலீட்டாளர்களைப் பிரதமர் வலியுறுத்தினார். இந்தப் பிராந்தியத்தின் பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் பன்முகத்தன்மை ஆகியவை நல்வாழ்வை மையமாகக் கொண்ட தொழில்களுக்கு மகத்தான ஆற்றலை வழங்குகின்றன என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

வடகிழக்கின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். இசை, நடனம், கொண்டாட்டங்கள் ஆகியவற்றுடன் இப்பிராந்தியம் ஆழமாக வேரூன்றி நிற்கும் தொடர்பை பிரதமர் எடுத்துரைத்தார். உலகளாவிய மாநாடுகள், இசை நிகழ்ச்சிகள், திருமண நிகழ்வுகளுக்கு இந்தப் பகுதி ஒரு சிறந்த இடமாக உள்ளது என்றும், இது ஒரு முழுமையான சுற்றுலாத் தொகுப்பாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். வடகிழக்கின் ஒவ்வொரு மூலையும் வளர்ச்சி அடையும் போது, சுற்றுலாவில் அதன் நேர்மறையான தாக்கம் தெளிவாகத் தெரியும் என்று அவர் கூறினார். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகி வருகிறது என்றும் அவர் கூறினார். இவை வெறும் புள்ளிவிவரங்கள் மட்டுமல்ல என்று  தெரிவித்த பிரதமர் சுற்றுலாத் துறையின் இந்த எழுச்சியானது கிராமங்களில் தங்குமிடங்களின் அதிகரிப்புக்கும் இளம் சுற்றுலா வழிகாட்டிகளுக்கு புதிய வேலைவாய்ப்புகளுக்கும், சுற்றுலாப் பயணச் சூழல் அமைப்பின் விரிவாக்கத்திற்கும் வழிவகுத்துள்ளது என்று குறிப்பிட்டார். வடகிழக்குப்பகுதியில் சுற்றுலாவை மேலும் அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த அவர், சுற்றுச்சூழல் சுற்றுலா, கலாச்சார சுற்றுலா ஆகியவற்றில் உள்ள பரந்த முதலீட்டு வாய்ப்புகளைச் சுட்டிக்காட்டினார். எந்தவொரு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கும் அமைதியும், சட்டம் ஒழுங்கும் மிக முக்கியமான காரணிகள் என்பதை மீண்டும் உறுதிப்படுத்திய திரு நரேந்திர மோடி, பயங்கரவாதம் மற்றும் வன்முறைக்கு எதிராக இந்த அரசு பூஜ்ய சகிப்புத்தன்மை கொள்கையைக் கொண்டுள்ளது என்றார். வடகிழக்குப் பகுதி ஒரு காலத்தில் மோதல்களுடன் தொடர்புடையதாக இருந்தது என்றும், இது அதன் இளைஞர்களுக்கான வாய்ப்புகளை கடுமையாகப் பாதித்திருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். அமைதி ஒப்பந்தங்களை நோக்கிய இந்த அரசின் தொடர்ச்சியான முயற்சிகளை அவர் சுட்டிக் காட்டினார். கடந்த 10-11 ஆண்டுகளில், 10,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அமைதிப் பாதையை ஏற்று ஆயுதங்களைக் கைவிட்டதாகவும் அவர் கூறினார். இந்த மாற்றம் இந்தப் பிராந்தியத்திற்குள் புதிய வேலைவாய்ப்புகளையும் தொழில்முனைவு வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார். வடகிழக்குப்பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி நிதி உதவியை வழங்கிய முத்ரா கடன் திட்டத்தின் தாக்கத்தை திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். இப்பகுதியில் கல்வி நிறுவனங்களின் எழுச்சி, இளைஞர்களின் எதிர்காலத்திற்கான திறன்களை வளர்க்க உதவுவதை அவர்  எடுத்துக்காட்டினார். வடகிழக்குப் பகுதி இளைஞர்கள் வெறுமனே இணையத்தைப் பயன்படுத்துபவர்களாக மட்டுமல்லாமல், டிஜிட்டல் கண்டுபிடிப்பாளர்களாகவும் உள்ளனர் என்று அவர் கூறினார். 13,000 கிலோமீட்டருக்கும் அதிகமான ஒளி இழை விரிவாக்கம், 4ஜி, 5ஜி விரிவாக்கம், தொழில்நுட்பத் துறையில் வளர்ந்து வரும் வாய்ப்புகள் போன்ற முன்னேற்றங்களையும் அவர் எடுத்துரைத்தார். இளம் தொழில்முனைவோர் இப்போது இந்தப் பிராந்தியத்தில் முக்கிய புத்தொழில் நிறுவனங்களைத் தொடங்கி வருகின்றனர் எனவும், இது இந்தியாவின் டிஜிட்டல் நுழைவாயிலாக வடகிழக்குப் பகுதியின் பங்கை வலுப்படுத்துகிறது என்றும் பிரதமர் கூறினார்.

வளர்ச்சி நடவடிக்கையை முன்னெடுப்பதிலும் பாதுகாப்பான சிறந்த எதிர்காலத்திற்கும் திறன் மேம்பாடு முக்கியப் பங்கு வகிப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  வடகிழக்கு மாநிலங்களின் முன்னேற்றத்திற்கு இத்தகைய நடவடிக்கைகள் சாதகமான சூழலை வழங்குவதாக அவர் கூறினார். இதனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகளில் கணிசமான முதலீடுகளைச் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். கடந்த பத்தாண்டுகளில், வடகிழக்கு மாநிலங்களில் கல்வித் துறையின் மேம்பாட்டிற்காக  ரூ.21,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றும் பிரதமர் எடுத்துரைத்தார்.  800-க்கும் மேற்பட்ட புதிய பள்ளிகள் கட்டப்பட்டுள்ளதாகவும், இப்பிராந்தியத்தில் முதல் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும்  ஒன்பது புதிய மருத்துவக் கல்லூரிகள், இரண்டு புதிய இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன உள்ளிட்ட பல முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து அவர் பட்டியலிட்டார். கூடுதலாக, மிசோரம் மாநிலத்தில் இந்திய மக்கள் தொடர்பு நிறுவன வளாகம் ஒன்றையும் வடகிழக்குப் பகுதிகளில் 200 புதிய திறன் மேம்பாட்டு நிறுவனங்களும்  உருவாக்கப்பட்டுள்ளதை அவர் மேற்கோள் காட்டினார். நாட்டின் முதல் விளையாட்டுப் பல்கலைக்கழகம் வடகிழக்கு மாநிலத்தில் அமைக்கப்பட்டு வருவதாகவும், கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் குறிப்பிடத்தக்க அளவில் முதலீடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். எட்டு  கேலோ இந்தியா சிறப்பு விளையாட்டுப் பயிற்சி  மையங்களும் 250-க்கும்  மேற்பட்ட கேலோ இந்தியா மையங்களும் இப்பகுதியில் நிறுவப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.  இத்தகைய நடவடிக்கைகள் வடகிழக்கு மாநிலங்களில் விளையாட்டுத் திறமைகளை வளர்க்க உதவுகிறது என்று அவர் கூறினார். நாட்டின் வடகிழக்குப் பகுதிகள் பல்வேறு துறைகளில் முத்திரைப் பதித்து வருவதாகவும் திறன் வாய்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறிய அவர், தொழில்துறையினர் மற்றும் முதலீட்டாளர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ள முன் வரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். தற்போதுவடகிழக்கு மாநிலங்கள் முதலீடுகளுக்கு உகந்த பகுதிகளாக உருவெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

இயற்கை உணவுக்கான தேவை அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர் திரு  நரேந்திர மோடி இந்திய உணவு வகைகள் உலகளவில் சென்றடையச் செய்யும் வகையில் அவற்றுக்கு வர்த்தக முத்திரை இருக்க வேண்டும் என்பதே தனது தொலைநோக்குப் பார்வையாக உள்ளது என்று கூறினார். இந்தக் கனவை நனவாக்குவதில் வடகிழக்கு மாநிலங்களின் முக்கியப் பங்களிப்பை அவர் எடுத்துரைத்தார். கடந்த பத்தாண்டுகளில், வடகிழக்கு மாநிலங்களில்  இயற்கை விவசாய உற்பத்தி இரட்டிப்பாகியுள்ளது என்றும், இந்தப் பகுதியில் உயர்தர தேயிலை, அன்னாசி, ஆரஞ்சு, எலுமிச்சை, மஞ்சள் மற்றும் இஞ்சி போன்றவை அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இத்தகைய விவசாயப் பொருட்களின் பிரத்யேக சுவை மற்றும் அவற்றின் தரம் ஆகியவை  சர்வதேச சந்தையில் அவற்றின் தேவையை அதிகரிக்க வழிவகுத்துள்ளது என்றும் அவர் கூறினார். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை உணவு ஏற்றுமதியில் வடகிழக்கு மாநிலங்களின் பங்களிப்பு அதன் உற்பத்தியை ஊக்குவிக்க உதவிடும் என்றும் இத்தகைய பொருட்களுக்கு அதிகரித்து வரும் சந்தை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

வடகிழக்கு மாநிலங்களில் உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை அதிகரிப்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக பிரதமர் தெரிவித்தார். நாட்டின் பிற பகுதிகளுடன் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும் வகையில் முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதே வேளையில், பெரிய அளவிலான உணவு பூங்காக்களை உருவாக்கவும், குளிர்பதன வசதிகளுடன் கூடிய சேமிப்பு கட்டமைப்புகளை விரிவுபடுத்துவதற்கும் உணவுப் பொருட்கள பரிசோதிப்பதற்கான ஆய்வக வசதிகளை ஏற்படுத்துவதற்கும்  உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். வடகிழக்கு மாநிலங்களின் மண் மற்றும் பருவநிலை சார்ந்த பனை எண்ணெய் சாகுபடிக்கு  மிகவும் பொருத்தமான சூழல் நிலவுவதால் பனை எண்ணெய்க்கான இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.  இந்த முயற்சி அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு கூடுதல் வருமான வாய்ப்பை ஏற்படுத்தும் என்றும் அதே நேரத்தில் இந்தியா சமையல் எண்ணெய் இறக்குமதி செய்வதை சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்க உதவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  பனை  எண்ணெய்  உற்பத்தித் தொழிலுக்கு இது உத்வேகம் அளிப்பதாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

"முக்கியத்துவம் வாய்ந்த துறைகளான எரிசக்தி மற்றும் செமிகண்டக்டர்  உற்பத்திக்கு வடகிழக்கு மாநிலங்கள் முக்கிய மையமாக உள்ளன என்று அவர் தெரிவித்தார். வடகிழக்குப் பகுதியில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் புனல் மற்றும் சூரிய மின் உற்பத்தியில் மத்திய அரசு முதலீடுகளை அதிகரித்து வருவதாக பிரதமர் தெரிவித்தார். இதன் ஒரு பகுதியாக பல்லாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் உற்பத்தி ஆலைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பதுடன், சூரிய மின் உற்பத்திக்கான தொகுதிகள், மின்னேற்றிகள், மின்கலங்கள், ஆகியவற்றின் உற்பத்தியில் ஏராளமான வாய்ப்புகள் உருவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தப் பகுதிகளில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய அவர், தற்சார்பு நிலையை எட்டுவதற்ன மூலம் எதிர்காலத்தில் இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்க உதவிடும் என்று எடுத்துரைத்தார். நாட்டில் செமிகண்டக்டர் உற்பத்திக்கான சூழல் அமைப்பை மேம்படுத்துவதில் அசாம் மாநிலத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். வடகிழக்குப் பகுதிகளைத் தளமாகக் கொண்டு செமிகண்டக்டர் உற்பத்தி ஆலையிலிருந்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது சிப் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் அறிவித்தார். இது வடகிழக்குப் பிராந்தியத்தின் முன்னேற்றத்திற்கு  ஒரு முக்கிய படிக்கல்லாக அமையும் என்று அவர் கூறினார். அதிநவீன தொழில்நுட்பத்திற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டின் தொழில்துறை வளர்ச்சியில் வடகிழக்கு  மாநிலங்கள்  நிலையான வளரச்சியை உறுதி செய்ய முடியும் என்று அவர் கூறினார்.

“வடகிழக்கு மாநிலங்களின் எழுச்சி என்பது முதலீட்டாளர்களின் உச்சிமாநாடு மட்டுமின்றி மக்கள் இயக்கமாகவும் செயல்பாட்டுக்கான அழைப்பாகவும் உள்ளது என்று பிரதமர் கூறினார். வடகிழக்குப் பகுதிகளின் முன்னேற்றம், வளமை, ஆகியவை நாட்டின் எதிர்காலத்தில் புதிய உச்சங்களை எட்ட வழி வகுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள் மீதான தனது நம்பிக்கையை பிரதமர் வெளிப்படுத்தினார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் வர்த்தகம் மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தனது உரையை நிறைவு செய்த பிரதமர் வடகிழக்கு மாநிலங்களின் ஆற்றலுக்கு அடையாளமான அஷ்டலட்சுமியை வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வழிகாட:டும் சக்தியாக மாற்றுவதில் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று பன வேண்டுகோள் விடுத்தார். நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெடுப்புகள் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு வித்திடும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மத்திய வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம். சிந்தியா, மணிப்பூர் மாநில ஆளுநர் திரு அஜய் குமார் பல்லா, அசாம் மாநில முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வா சர்மா, அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு பெமா காண்டு, மேகாலயா மாநில முதலமைச்சர் திரு கான்ராட் சங்மா, மிசோரம் மாநில முதலமைச்சர் திரு லால்துஹோமா, நாகாலாந்து முதலமைச்சர் திரு. நெஃப்யு ரியோ, சிக்கிம் முதலமைச்சர்  திரு பிரேம் சிங் தமங், திரிபுரா முதலமைச்சர் திரு மாணிக் சாஹா, வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தா உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 

பின்னணி

வடகிழக்கு மாநிலங்களைப் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளின் தளமாக முன்னிலைப்படுத்துவதன் மூலம் சர்வதேச மற்றும் உள்நாட்டு முதலீடுகளை ஈர்த்து, முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் துறை சார்ந்த நிபுணர்கள் ஆகியோரை ஒரே மேடையில் ஒன்றிணைக்கும் நோக்குடன், பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லியில் உள்ள  பாரத் மண்டபத்தில் வடகிழக்கு மாநிலங்களின் எழுச்சிமிகு முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை இன்று தொடங்கி வைத்தார்.

மே 23 முதல் 24-ம் தேதி என இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சிகளாக அமைச்சர்கள் கலந்து கொள்ளும் அமர்வு, வர்த்தகத்தில் இருந்து அரசுக்கு என்ற அமர்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதில் வடகிழக்கு மாநிலங்களின் ஒத்துழைப்புடன் மத்திய அரசால் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த உச்சிமாநாட்டில் அரசு மற்றும் வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்புகள் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டு மேம்பாட்டிற்காக மத்திய, மாநில அமைச்சகங்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் குறித்த கண்காட்சியும் இதில் இடம் பெறும்.

சுற்றுலா, விருந்தோம்பல், இயற்கை உணவு பதப்படுத்துதல், அது சார்ந்த தொழில்கள், ஜவுளி, கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்கள், சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம் அல்லது அது சார்ந்த  சேவைகள், உள்கட்டமைப்பு, பாதுகாப்பு சாதனங்கள்,  எரிசக்தி, பொழுதுபோக்கு விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்தப்படும்.

***

(Release ID: 2130702)
SG/TS/PLM/RR/KR


(Release ID: 2130745)