பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மத்தியப் பிரதேச மாநிலம் அனந்த்பூர் தாமில் கூடியிருந்தவர்களிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

'வளர்ச்சி மற்றும் பாரம்பரியம்' என்ற தாரக மந்திரத்துடன் புதிய இந்தியா முன்னேறி வருகிறது: பிரதமர்

நமது நாடு ஞானிகள், அறிஞர்கள், துறவிகள் நிறைந்த பூமி, நமது சமூகம் ஒரு கடினமான கட்டத்தை கடந்து செல்லும்போதெல்லாம், யாராவது ஒரு துறவி அல்லது ஞானி இந்த மண்ணில் தோன்றி சமூகத்திற்கு ஒரு புதிய திசையைக் காட்டுகிறார்: பிரதமர்

ஏழைகளையும், வஞ்சிக்கப்பட்டவர்களையும் மேம்படுத்துவதற்கான உறுதிப்பாடு, 'அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்' என்ற மந்திரம், சேவை உணர்வு ஆகியவை அரசின் கொள்கையும், உறுதிப்பாடும் ஆகும்: பிரதமர்

இந்தியா போன்ற ஒரு நாட்டில், நமது கலாச்சாரம் நமது அடையாளத்துடன் இணைக்கப்பட்டிருப்பது மட்டுமின்றி, நமது கலாச்சாரம் நமது திறனையும் வலுப்படுத்துகிறது: பிரதமர்

Posted On: 11 APR 2025 6:04PM by PIB Chennai

இந்தியாவின் கலாச்சார மற்றும் ஆன்மீகப் பாரம்பரியத்தை மேம்படுத்துவதில் உள்ள உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, மத்தியப் பிரதேச மாநிலம் அசோக்நகர் மாவட்டம் இசாகர் வட்டத்தில் உள்ள அனந்த்பூர் தாமில் பிரதமர் இன்று பயணம் மேற்கொண்டார். குருஜி மகராஜ் கோயிலில் தரிசனமும் பூஜையும் செய்த அவர், அனந்த்பூர் தாமில் உள்ள கோயில் வளாகத்தை பார்வையிட்டார். பின்னர் அங்கு கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், தில்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்களை வரவேற்றார். ஸ்ரீ அனந்த்பூர் தாமிற்கு வருகை தந்த பிரதமர், குருஜி மகராஜின் ஆலயத்தில் பிரார்த்தனை செய்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். இது அவரது இதயத்தை ஆனந்தத்தால் நிரப்பியது.

துறவிகளின் தவத்தால் வளர்க்கப்பட்ட நிலத்தின் புனிதத்தன்மை, கருணை என்பவை ஒரு பாரம்பரியமாக மாறியுள்ளது என்றும், சேவைக்கான மனவுறுதி மனிதகுலத்தின் நலனுக்கு வழி வகுக்கும் என்றும் குறிப்பிட்ட திரு மோடி, இந்த நிலத்தின் தனித்துவத்தை எடுத்துரைத்தார். அசோக் நகருக்குள் நுழைய துக்கம் அஞ்சுகிறது என்று கூறிய துறவிகளை அவர் மேற்கோள் காட்டினார். பைசாகி கொண்டாட்டங்களிலும் ஸ்ரீ குரு மகராஜ் பிறந்த நாள் விழாவிலும் பங்கேற்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், பிரதம் பாத்ஷாஹி ஸ்ரீ ஸ்ரீ 108 ஸ்ரீ சுவாமி அத்வைத் ஆனந்த் மகராஜ் மற்றும்  இதர பாத்ஷாஹி துறவிகளுக்கு மரியாதை செலுத்தினார். 1936-ம் ஆண்டு ஸ்ரீ துவிதியா பாத்ஷாஹி மகாசமாதி அடைந்ததையும், 1964-ம் ஆண்டு ஸ்ரீ திரிதிய பாத்ஷாஹி தமது உண்மையான ரூபத்துடன் இணைந்ததையும் குறிக்கும் வகையில் இந்த நாளின் வரலாற்று முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். மதிப்பிற்குரிய இந்த குருக்களுக்கு மரியாதை செலுத்திய பிரதமர், மா ஜெகேஸ்வரி தேவி, மா பிஜாசன், மா ஜானகி கரிலா மாதா தாம் ஆகியோருக்கு மரியாதை செலுத்தினார். பைசாகி, ஸ்ரீ குரு மகராஜ் ஆகியோரின் பிறந்த நாள் கொண்டாட்டங்களை முன்னிட்டு அனைவருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.

"இந்தியா ஞானிகள், அறிஞர்கள் மற்றும் துறவிகளின் நிலம் ஆகும், அவர்கள் எப்போதும் சவாலான காலங்களில் சமூகத்தை வழிநடத்தியுள்ளனர்" என்று கூறிய  அவர், பூஜ்ய சுவாமி அத்வைத் ஆனந்த் மகாராஜின் வாழ்க்கை இந்த பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது என்றார். ஆதி சங்கராச்சாரியார் போன்றவர்கள் அத்வைத தத்துவத்தின் ஆழமான அறிவை விளக்கிய சகாப்தத்தை அவர் நினைவு கூர்ந்தார். காலனித்துவ காலத்தில், சமூகம் இந்த ஞானத்துடன் தொடர்பை இழக்கத் தொடங்கியது என்று அவர் குறிப்பிட்டார். இருப்பினும், இந்த நேரத்தில்தான் அத்வைதத்தின் கொள்கைகள் மூலம் தேசத்தின் ஆன்மாவை விழிப்படையச் செய்ய முனிவர்கள் தோன்றினர் என்று கூறிய பிரதமர், பூஜ்ய அத்வைத ஆனந்த் மகாராஜ் அத்வைத அறிவை சாதாரண மக்களுக்கும் அணுகக்கூடியதாகவும், எளிமையாகவும் மாற்றியதன் மூலம் இந்த பாரம்பரியத்தை முன்னெடுத்துச் சென்றார் என்று கூறினார்.

போர், மோதல்கள், மனித மாண்புகளின் வீழ்ச்சி போன்ற உலகளாவிய கவலைகள் குறித்து பேசிய திரு மோடி, இந்த சவால்களுக்கான மூல காரணம் மனிதர்களை ஒருவரிடமிருந்து மற்றொருவரை அந்நியப்படுத்தும் "சுயம் மற்றும் பிறர்" என்ற பிரிவினை மனப்பான்மையே என்று அடையாளப்படுத்தினார். "இந்த பிரச்சினைகளுக்கான தீர்வு அத்வைத தத்துவத்தில் உள்ளது, இது எந்த இருமையையும் கற்பனை செய்யவில்லை", என்று அவர் கூறினார். அத்வைதம் என்பது ஒவ்வொரு உயிரினத்திலும் தெய்வீகத்தைக் காண்பதுடன், முழு படைப்பையும் தெய்வீகத்தின் வெளிப்பாடாக உணர்தல் ஆகும் என்று விளக்கினார். இந்த கோட்பாட்டை அழகாக எளிமைப்படுத்திய பரமஹன்ஸ் தயாள் மகராஜை அவர் மேற்கோள் காட்டினார். 'நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ, நான் அதுவாக இருக்கிறேன்'. "என்னுடையது, உங்களுடையது" என்ற பிளவை அகற்றும் இந்த சிந்தனையின் ஆழமான தன்மை பற்றி அவர் குறிப்பிட்டார். மேலும் இது உலக அளவில் ஏற்கப்பட்டால், அனைத்து மோதல்களையும் தீர்க்க முடியும் என்று அவர் கூறினார்.

பாத்ஷாஹி சுவாமி ஸ்ரீ விசார் பூர்ண ஆனந்த் மகராஜ் உடனான தனது முந்தைய கலந்துரையாடலைப் பிரதமர் பகிர்ந்து கொண்டார். பிரதம் பாத்ஷாஹி பரமஹம்ஹன்ஸ் தயாள் மகராஜின் போதனைகள் மற்றும் ஆனந்த் தாமின் சேவை முன்முயற்சிகள் குறித்து அவர் பேசினார். ஆனந்த் தாமில் நிறுவப்பட்ட தியானத்தின் ஐந்து கொள்கைகளை எடுத்துரைத்த அவர், தன்னலமற்ற சேவையை அவற்றில் ஒன்றாக வலியுறுத்தினார். தன்னலமற்ற மனப்பான்மையுடன் பின்தங்கியவர்களுக்கு சேவை செய்யும் உணர்வும் மனிதகுலத்திற்கு சேவை செய்யும் செயலில் நாராயணனைக் கண்டதும் இந்தியக் கலாச்சாரத்தின் அடித்தளத்தை உருவாக்குகிறது என்று அவர் குறிப்பிட்டார். அனந்த்பூர் அறக்கட்டளை இந்த சேவை கலாச்சாரத்தை அர்ப்பணிப்புடன் முன்னெடுத்து வருவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த அறக்கட்டளை ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளை இயக்குகிறது, இலவச மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்கிறது, பசு நலனுக்காக நவீன மாட்டுத் தொழுவத்தை நடத்துகிறது மற்றும் புதிய தலைமுறையின் வளர்ச்சிக்காக பள்ளிகளை நிர்வகிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மூலம் மனிதகுலத்திற்கு ஆனந்த்பூர் தாமின் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் அவர் பாராட்டினார், ஆயிரக்கணக்கான ஏக்கர் தரிசு நிலத்தை பசுமையாக மாற்றுவதில் ஆசிரமத்தைப் பின்பற்றுபவர்களின் முயற்சிகளை பிரதமர் எடுத்துரைத்தார். ஆசிரமத்தால் நடப்பட்ட ஆயிரக்கணக்கான மரங்கள் இப்போது பரோபகார நோக்கங்களுக்காக சேவை செய்கின்றன.

"அரசு மேற்கொள்ளும் ஒவ்வொரு முன்முயற்சியிலும் சேவை மனப்பான்மை உள்ளது" என்று கூறிய திரு மோடி, பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஏழை நபரும் உணவு குறித்த கவலையிலிருந்து விடுபட்டுள்ளனர் என்பதை எடுத்துரைத்தார். இதேபோல், ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஏழைகளையும் முதியவர்களையும் சுகாதாரம் குறித்த கவலைகளிலிருந்து விடுவித்துள்ளது, அதே நேரத்தில் பிரதமர் வீட்டுவசதி திட்டம் பின்தங்கியவர்களுக்கு பாதுகாப்பான வீட்டுவசதி கிடைப்பதை உறுதி செய்கிறது. ஜல் ஜீவன் இயக்கம் கிராமங்களில் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு வருவதாகவும், சாதனை எண்ணிக்கையில் புதிய எய்ம்ஸ், ஐஐடி மற்றும் ஐஐஎம்கள் நிறுவப்பட்டிருப்பது ஏழைக் குழந்தைகளின் கனவுகளை நனவாக்க உதவுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். தாயின் பெயரில் ஒரு மரக்கன்று இயக்கத்தின்  மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான அரசின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார். இதன் கீழ் நாடு முழுவதும் கோடிக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த சாதனைகளின் அளவு, சேவை மனப்பான்மையால் உந்தப்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டார். 'அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்' என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் ஏழைகள் மற்றும் விளிம்புநிலையில் உள்ளவர்களின் மேம்பாட்டுக்கான அரசின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார். "இந்த சேவை உணர்வே அரசின் கொள்கை மற்றும் உறுதிப்பாடு" என்று அவர் வலியுறுத்தினார்.

சேவை மனதை ஏற்றுக்கொள்வது மற்றவர்களுக்கு பயனளிப்பது மட்டுமின்றி, ஒருவரின் ஆளுமையை மேம்படுத்தி, கண்ணோட்டங்களை விரிவுபடுத்துகிறது என்ற உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர், சேவை உணர்வு, சமூகம், தேசம், மனிதகுலம் ஆகிய பெரிய நோக்கங்களுடன் தனிநபர்களை இணைக்கிறது என்று குறிப்பிட்டார். சேவையில் ஈடுபட்டுள்ளவர்களின் அர்ப்பணிப்பை சுட்டிக்காட்டிய பிரதமர், தன்னலமற்ற சேவையின் மூலம் இன்னல்களை வெல்வது எவ்வாறு இரண்டாவது இயல்பாக மாறுகிறது என்பதையும் எடுத்துரைத்தார். சேவையை ஓர் ஆன்மீகப் பயிற்சி என்று விவரித்த பிரதமர், அதை அனைவரும் நீராட வேண்டிய புனிதமான கங்கையுடன் ஒப்பிட்டு பேசினார். தேசத்திற்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய அசோக் நகர், அனந்த்பூர் தாம் போன்ற பிராந்தியங்களை மேம்படுத்துவதன் பொறுப்பு பற்றி குறிப்பிட்ட அவர், இந்தப் பகுதிகளில் கலை, கலாச்சாரம், இயற்கை அழகு ஆகியவற்றின் வளமான பாரம்பரியத்தை சுட்டிக்காட்டி, வளர்ச்சி, பாரம்பரியத்திற்கான பரந்த திறனை எடுத்துரைத்தார். மத்தியப் பிரதேசம் மற்றும் அசோக் நகரில் சந்தேரி புடவைகளுக்கு புவிசார் குறியீடு மூலம் சந்தேரி கைத்தறித் தொழிலை உயர்த்துவது, இந்தப் பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த பிரான்பூரில் கைவினைக் கைத்தறி சுற்றுலா கிராமத்தை உருவாக்குவது உள்ளிட்ட வளர்ச்சிக்கான முயற்சிகளை பிரதமர் எடுத்துரைத்தார். உஜ்ஜைன் சிம்ஹஸ்தாவுக்கான ஏற்பாடுகளை மத்திய பிரதேச அரசு ஏற்கனவே தொடங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் நடைபெற்ற ராம நவமி பண்டிகையின் பிரம்மாண்டமான கொண்டாட்டம் பற்றி குறிப்பிட்ட திரு மோடி, "ராம வனம் பயணப் பாதை" என்பதற்கு தற்போது நடைபெற்று வரும் பணிகள் பற்றி எடுத்துரைத்தார். இந்தப் பாதையின் கணிசமான பகுதி மத்தியப் பிரதேசம் வழியாக செல்லும் என்று அவர் குறிப்பிட்டார். மத்தியப் பிரதேசத்தின் குறிப்பிடத்தக்க மற்றும் தனித்துவமான அடையாளம் பற்றி குறிப்பிட்ட அவர், இந்த முயற்சிகள் அதன் தனித்துவத்தை மேலும் வலுப்படுத்தும் என்றார்.

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவாக மாற வேண்டும் என்ற நாட்டின் இலக்கை வலியுறுத்திய பிரதமர், அதை அடைவது குறித்த தனது நம்பிக்கையையும் தெரிவித்தார். இந்தப் பயணத்தின் போது இந்தியாவின் பண்டைய கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், வளர்ச்சியை பின்தொடர்வதில் பல நாடுகள் தங்கள் பாரம்பரியத்துடன் தொடர்பை இழந்தாலும், இந்தியா தனது பாரம்பரியத்தை பராமரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். "இந்தியாவின் கலாச்சாரம் அதன் அடையாளத்துடன் மட்டும் பிணைக்கப்படவில்லை, அதன் திறன்களையும் வலுப்படுத்துகிறது" என்று எடுத்துரைத்த பிரதமர், இந்த விஷயத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காக அனந்த்பூர் தாம் அறக்கட்டளையைப் பாராட்டினார். மேலும் அறக்கட்டளையின் சேவை முயற்சிகள் வளர்ச்சியடைந்த இந்தியாவின் பார்வைக்கு புதிய சக்தியை அளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். பைசாகி பண்டிகை மற்றும் ஸ்ரீ குரு மகராஜ் பிறந்த நாள் கொண்டாட்டங்களை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து அவர் தமது உரையை நிறைவு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் படேல், மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு மோகன் யாதவ், மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னணி

அனந்த்பூர் தாம் ஆன்மீகம் மற்றும் பிறருக்கு உதவி செய்யும் நோக்கங்களுக்காக நிறுவப்பட்டுள்ளது. 315 ஹெக்டேர் பரப்பளவில், 500-க்கும் மேற்பட்ட பசுக்களுடன் நவீன கோசாலை உள்ளது. ஸ்ரீ ஆனந்த்பூர் அறக்கட்டளை வளாகத்தின் கீழ் விவசாய செயல்பாடுகள் இடம்பெறுகின்றன. இந்த அறக்கட்டளை சுக்பூர் கிராமத்தில் ஒரு தொண்டு மருத்துவமனையும், சுக்பூர் மற்றும் அனந்த்பூரில் பள்ளிகளையும், நாடு முழுவதும் பல்வேறு சத்சங் மையங்களையும் நடத்தி வருகிறது.

****

(Release ID: 2121014)

TS/SMB/AG/DL


(Release ID: 2121072) Visitor Counter : 29