பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு, ஜனவரி 12 அன்று நடைபெறும் வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் உரையாடல் 2025-ல் பிரதமர் பங்கேற்கிறார்

Posted On: 10 JAN 2025 9:21PM by PIB Chennai


சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை நினைவுகூரும் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு, புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜனவரி 12 அன்று காலை 10 மணியளவில் நடைபெறும் வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் உரையாடல் 2025-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்தியா முழுவதிலும் இருந்து துடிப்புமிக்க  3,000 இளம் தலைவர்களுடன் அவர் உரையாடுவார். இந்த நிகழ்ச்சியில் திரண்டிருப்போரிடையே அவர் உரையாற்றுவார்.
வழக்கமான முறையில் நடத்தப்படும் தேசிய இளைஞர் விழாவின் 25 ஆண்டுகால பாரம்பரியத்தை மாற்றுவதை வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் உரையாடல் நோக்கமாகக் கொண்டுள்ளது. அரசியல் சார்பு இல்லாத 1 லட்சம் இளைஞர்களை அரசியலில் ஈடுபடுத்தவும், வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான அவர்களின் யோசனைகளை நனவாக்க ஒரு தேசிய தளத்தை வழங்கவும் வேண்டும் என்ற பிரதமரின் சுதந்திர தின அழைப்புடன் இது ஒத்துப்போகிறது. அதற்கேற்ப, இந்த தேசிய இளைஞர் தினத்தில், நாட்டின் எதிர்காலத் தலைவர்களை ஊக்குவிக்கவும், அதிகாரம் அளிக்கவும் வடிவமைக்கப்பட்ட பல நடவடிக்கைகளில் பிரதமர் பங்கேற்பார். புதியன கண்டறியும்  இளம் தலைவர்கள், இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியமான, பத்து கருப்பொருள் பகுதிகளை பிரதிநிதித்துவம் செய்யும் பத்து பவர்பாயிண்ட் விளக்கக்காட்சிகளை பிரதமர் முன் வைப்பார். இந்தியாவின் மிக முக்கியமான சவால்களை எதிர்கொள்ள இளம் தலைவர்களால் முன்மொழியப்பட்ட புதுமையான யோசனைகளையும்  தீர்வுகளையும் இந்த விளக்கக்காட்சிகள் பிரதிபலிக்கும்.
பத்து தலைப்புகளில் பங்கேற்பாளர்கள் எழுதிய சிறந்த கட்டுரைகளின் தொகுப்பையும் பிரதமர் வெளியிடுவார். இந்தக் கருப்பொருள்கள் தொழில்நுட்பம், நிலைத்தன்மை, மகளிருக்கு அதிகாரமளித்தல், தொழில் உற்பத்தி, விவசாயம் போன்ற பல்வேறு பகுதிகளை உள்ளடக்கியது.
ஒரு தனித்துவமான சூழலில், இளம் தலைவர்களுடன் மதிய உணவில் பிரதமர் கலந்துகொள்வார். இது அவர்களின் யோசனைகள், அனுபவங்கள் மற்றும் விருப்பங்களை நேரடியாக அவருடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை வழங்கும். இந்த தனிப்பட்ட கலந்துரையாடல், ஆளுகை மற்றும் இளைஞர்களின் விருப்பங்களுக்கு இடையேயான இடைவெளியைக் குறைத்து, பங்கேற்பாளர்களிடையே  பொறுப்புணர்வை ஆழமாக வளர்க்கும்.
ஜனவரி 11 அன்று தொடங்கும் இந்த உரையாடலின் போது, போட்டிகள், செயல்பாடுகள்,  கலாச்சாரம் மற்றும் கருப்பொருள் விளக்கக்காட்சிகளில் இளம் தலைவர்கள் ஈடுபடுவார்கள். வழிகாட்டிகள் மற்றும் துறை வல்லுநர்கள் தலைமையிலான கருப்பொருள்கள் குறித்த விவாதங்களும் இதில் அடங்கும். இந்தியாவின் நவீன முன்னேற்றங்களை அடையாளப்படுத்தும் அதே வேளையில் இந்தியாவின் கலை பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கலாச்சார நிகழ்ச்சிகளையும் இது கொண்டிருக்கும்.
நாடு முழுவதிலுமிருந்து ஆற்றல்மிக்க இளம் குரல்களை அடையாளம் கண்டு வெளிப்படுத்துவதற்காக உன்னிப்பாக வடிவமைக்கப்பட்ட, தகுதி அடிப்படையிலான பல நிலை தேர்வு செயல்முறையான 'விக்சித் பாரத் சேலஞ்ச்' மூலம் வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் உரையாடலில் பங்கேற்க ஆற்றல்மிக்க,  ஊக்கமளிக்கும் 3,000 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் 15 - 29 வயதுக்குட்பட்ட பங்கேற்பாளர்களுடன் மூன்று கட்டங்களில் தேர்வுகள் இருந்தன. முதல் கட்டமான வளர்ச்சியடைந்த இந்தியா  விநாடி வினா, அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்க 12 மொழிகளில் நடத்தப்பட்டது.  இதில் சுமார் 30 லட்சம் இளைஞர்கள் பங்கேற்றனர். தகுதிவாய்ந்த விநாடி வினா பங்கேற்பாளர்கள் 2 வது கட்ட, கட்டுரை சுற்றுக்கு முன்னேறினர். அங்கு அவர்கள் "வளர்ச்சியடைந்த இந்தியா" என்ற பார்வையை நனவாக்குவதற்கு முக்கியமான பத்து முக்கிய கருப்பொருள்களில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர். இதில் 2 லட்சத்துக்கும் அதிகமான கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. மாநில அளவிலான 3-வது சுற்றில், ஒரு கருப்பொருளுக்கு 25 பேர் பங்கேற்று, கடுமையான நேரடிப் போட்டிகளில் பங்கேற்றனர். ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு தடத்திலிருந்தும் அதன் முதல் மூன்று பங்கேற்பாளர்களை அடையாளம் கண்டு, தில்லியில் நடைபெறும் தேசிய நிகழ்வுக்கான அணிகளை உருவாக்கின.
'விக்சித் பாரத் சேலஞ்ச்' தளத்தில் இருந்து 1,500 பங்கேற்பாளர்கள், மாநில சாம்பியன்ஷிப் போட்டியில்  இருந்து முதல் 500 அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி; மாநில அளவிலான இளைஞர் விழாக்கள், கலாச்சார நிகழ்ச்சிகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புதுமை குறித்த கண்காட்சிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 1,000 பங்கேற்பாளர்கள்; பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக அழைக்கப்பட்ட 500 முன்னோடிகள் இந்த உரையாடலில் பங்கேற்க உள்ளனர்.

************* 


SMB/KV


(Release ID: 2092056) Visitor Counter : 13