உள்துறை அமைச்சகம்

இந்தி தினம் 2024 குறித்த மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் செய்தி

Posted On: 14 SEP 2024 9:15AM by PIB Chennai

இந்தி தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தி தினம் குறித்த தமது செய்தியில், இந்தப் புனிதமான நாள் நம் அனைவருக்கும் மிகவும் முக்கியமானது. ஏனென்றால்  1949-ம் ஆண்டு இதேநாளில் , இந்திய அரசியல் நிர்ணய  சபை இந்தியை ஒன்றியத்தின் அலுவல்  மொழியாக ஏற்றுக்கொண்டது.  75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில்இந்த ஆண்டு நாம் ஆட்சி மொழியின் வைர விழாவைக் கொண்டாட உள்ளதாக திரு அமித் ஷா கூறினார். இந்த 75 ஆண்டுகாலப் பயணம்இந்தி மற்றும் அனைத்து மாநிலங்களின் அந்தந்த மொழிகளுக்கும் மிகவும் முக்கியமானது. இந்தி பல ஏற்ற தாழ்வுகளைக் கண்டுள்ளது. ஆனால் இன்று இந்தக் கட்டத்தில் நிற்கும்போது, இந்தி எந்த உள்ளூர் மொழியுடனும் போட்டியிடவில்லை என்று உறுதியாகக் கூற முடியும் என்று அவர் கூறினார்.

இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நட்பு மொழி  என்றும், அவை இரண்டும் ஒன்றுக்கொன்று நிறைவு செய்கின்றன என்றும் திரு அமித் ஷா கூறினார். குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ் அல்லது வங்காளமாக இருந்தாலும், ஒவ்வொரு மொழியும் இந்தியை வலுப்படுத்துகிறது என்றும், இந்தி ஒவ்வொரு மொழியையும் வலுப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார். இந்தி இயக்கத்தை நாம் கவனமாகப் பார்த்தால், அது ராஜகோபாலாச்சாரி, மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், லாலா லஜபதி ராய், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அல்லது ஆச்சார்யா கிருபளானி என அனைவருமே இந்தி பேசாத பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். திரு. ஐயங்கார் மற்றும் திரு. கே.எம். முன்ஷி ஆகியோரின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, இந்தியை அலுவல்  மொழியாக அங்கீகரிப்பதற்கும், இந்தி மற்றும் நமது பிற அனைத்து மொழிகளுக்கும் வலு சேர்ப்பதற்கும் அரசியல் நிர்ணய சபையிடம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது என்று அவர் கூறினார். இந்த இரு தலைவர்களும் இந்தி பேசாத பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், கடந்த 10 ஆண்டுகளில் இந்தி மற்றும் உள்ளூர் மொழிகளை வலுப்படுத்த ஏராளமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். பிரதமர் பெருமையுடன் பல சர்வதேச மன்றங்களில் இந்தியில் உரையாற்றியுள்ளார். மேலும் நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இந்தியின் முக்கியத்துவத்தை முன்வைத்துள்ளார். இதனுடன், பிரதமர் மோடி நாட்டிற்குள் நமது மொழிகளின் மீதான பெருமை உணர்வையும் அதிகரித்துள்ளார். இந்த 10 ஆண்டுகளில், பல இந்திய மொழிகளை வலுப்படுத்த நாங்கள் நிறைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். புதிய கல்விக் கொள்கையில் தாய்மொழியில் ஆரம்பக் கல்வியை வழங்குவதற்கு முக்கிய இடம் அளித்ததன் மூலம் நமது அனைத்து மொழிகளுக்கும் இந்திக்கும் புதுவாழ்வு அளித்துள்ளார் பிரதமர் திரு நரேந்திர மோடி என்று அவர் தெரிவித்தார்.

இந்த 10 ஆண்டுகளில் 'கந்தஸ்த்' என்ற கருவியை நாங்கள் உருவாக்கியுள்ளோம் என்று திரு அமித் ஷா கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் நான்கு அறிக்கைகளை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம் மேலும் அரசுப் பணிகளில் இந்தியை முதன்மையாக நிலைநிறுத்துவதற்கான பணிகள் செய்யப்பட்டுள்ளன. வரவிருக்கும் நாட்களில், எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளுக்கும் இந்தியிலிருந்து மொழிபெயர்ப்பதற்கான தளத்தையும்அலுவல் மொழித் துறை கொண்டு வரவிருக்கிறது. இதன் மூலம் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மிகக் குறுகிய காலத்தில் அனைத்து மொழிகளிலும் எந்த ஒரு கடிதத்தையும் உரையையும் மொழிபெயர்க்க முடியும். இது இந்தி மற்றும் உள்ளூர் மொழிகளை பெரிதும் வலுப்படுத்தும் என்று நம்புவதாக உள்துறை அமைச்சர் கூறினார்.

நமது மொழிகள் உலகின் வளமான மொழிகளில் ஒன்றாக உள்ளன என்பதை இன்று மீண்டும் அனைவருக்கும் சொல்ல விரும்புவதாக உள்துறை அமைச்சர் கூறினார். இந்தி நம்மையும் நமது அனைத்து மொழிகளையும் இணைக்கிறது. நாட்டின் குடிமக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் இந்திய மொழியில், அது இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் அல்லது குஜராத்தியாக இருந்தாலும், தொடர்பு கொள்ள வேண்டும் என்பது அரசியல் நிர்ணய சபையின் உணர்வு என்று அவர் கூறினார். இந்தியை வலுப்படுத்துவதன் மூலம், இந்த அனைத்து மொழிகளும் நெகிழ்வானதாகவும், வளமானதாகவும் மாறும், ஒருமைப்பாட்டைக் கடைப்பிடிப்பதன் மூலம், அனைத்து மொழிகளும் நமது கலாச்சாரம், வரலாறு, இலக்கியம், இலக்கணம் மற்றும் நமது குழந்தைகளின் கலாச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் என்றார் அவர்.

எனவே, இந்தி தினத்தை முன்னிட்டு, நாம் ஒரு உறுதிமொழி ஏற்பாட்டை மேற்கொள்வோம், இந்தி மற்றும் நமது உள்ளூர் மொழிகளை வலுப்படுத்துவோம், அலுவல் மொழித் துறையின் இந்தப் பணிக்கு ஆதரவளிப்போம் என்று நாட்டுமக்கள் அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்க விரும்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். மீண்டும் ஒருமுறை நாட்டுமக்கள் அனைவருக்கும் இந்தி தினத்தை முன்னிட்டு  நல்வாழ்த்துக்கள். ஆட்சி மொழியை வலுப்படுத்துவோம். வந்தே மாதரம் என திரு அமித் ஷா கூறியுள்ளார்..

*****

PKV/ KV

 

 

 



(Release ID: 2054886) Visitor Counter : 25