பிரதமர் அலுவலகம்

ஜூன் 20-21 தேதிகளில் பிரதமர் ஜம்மு காஷ்மீர் பயணம்

ஜம்மு-காஷ்மீரில் ரூ.1,500 கோடிக்கும் அதிக மதிப்பிலான 84 பெரிய வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்

ரூ.1800 கோடி மதிப்பிலான வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளில் போட்டித்திறன் மேம்பாட்டுத் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்

ஸ்ரீநகரில் 10-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு பிரதமர் தலைமை தாங்குகிறார்

"சுயத்திற்கும் சமூகத்திற்கும் யோகா" என்பது 10 வது சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள்

Posted On: 19 JUN 2024 4:26PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி 2024 ஜூன் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்கிறார்.

ஜூன் 20 அன்று மாலை 6 மணியளவில், ஸ்ரீநகரில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெறும் 'இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், ஜம்மு காஷ்மீரை மாற்றியமைத்தல்' நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார். ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். வேளாண்மை மற்றும் வேளாண் சார் துறைகளில் போட்டித்திறன் மேம்பாட்டுத் திட்டத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

ஜூன் 21 அன்று காலை 6.30 மணியளவில், ஸ்ரீநகரில் உள்ள எஸ்.கே.ஐ.சி.சி.யில் நடைபெறும் 10-வது சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் திரண்டிருப்பவர்களிடையே உரையாற்றும் பிரதமர், அதன்பிறகு சிஒய்பி யோகா அமர்வில் பங்கேற்கிறார்.

இளைஞர்களை மேம்படுத்துதல், ஜம்மு காஷ்மீரை மாற்றியமைத்தல்

"இளைஞர்களை மேம்படுத்துதல், ஜம்மு & காஷ்மீரை மாற்றியமைத்தல்" என்ற நிகழ்வு பிராந்தியத்திற்கு ஒரு முக்கிய தருணமாகும். இது முன்னேற்றத்தைக் காட்டுவதுடன் இளம் சாதனையாளர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. இந்த நிகழ்ச்சியின் போது, அரங்குகளைப் பார்வையிடும் பிரதமர், ஜம்மு-காஷ்மீரின் இளம் சாதனையாளர்களுடன் கலந்துரையாடுவார்.

ரூ.1,500 கோடிக்கும் அதிக மதிப்பிலான 84 பெரிய வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, தொடங்கி வைக்கிறார். இந்தத் திறப்பு விழாவில் சாலை உள்கட்டமைப்பு, குடிநீர் விநியோகத் திட்டங்கள், உயர்கல்வியில் உள்கட்டமைப்பு உள்ளிட்ட திட்டங்கள் இடம்பெறும். மேலும், செனானி பட்னிடாப் நஷ்ரி பிரிவை மேம்படுத்துதல், கைத்தொழில் பேட்டைகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் 06 அரசு கல்லூரிகளை நிர்மாணித்தல் போன்ற திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.

ரூ.1,800 கோடி மதிப்பிலான வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளில் போட்டித்திறன் மேம்பாட்டுத் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைப்பார். ஜம்மு காஷ்மீரின் 20 மாவட்டங்களில் உள்ள 90 வட்டாரங்களில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், 15 லட்சம் பயனாளிகளை உள்ளடக்கிய 300,000 குடும்பங்களைச் சென்றடையும்.

அரசுப் பணியில் நியமனம் பெற்ற 2000க்கும் மேற்பட்டோருக்கு நியமனக் கடிதங்களையும் பிரதமர் வழங்குவார்.

இந்தத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படுவது/தொடங்கி வைப்பது ஆகியவை ஜம்மு-காஷ்மீரில் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதுடன், உள்கட்டமைப்பை மேம்படுத்தும்.

சர்வதேச யோகா தினம்

ஜூன் 21, 2024 அன்று 10வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஸ்ரீநகரில் உள்ள எஸ்கேஐசிசி-யில் நடைபெறும் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு பிரதமர் தலைமை தாங்குவார். இளம் மனங்கள் மற்றும் உடல்களில் யோகாவின் ஆழமான தாக்கத்தை இந்த ஆண்டு நிகழ்வு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த கொண்டாட்டம் யோகா பயிற்சியில் ஆயிரக்கணக்கானவர்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது உலகளாவிய அளவில் ஆரோக்கியத்தையும், உடல்நலத்தையும் மேம்படுத்துகிறது.

2015 முதல், தில்லி, சண்டிகர், டேராடூன், ராஞ்சி, லக்னோ, மைசூரு மற்றும் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களுக்கு பிரதமர் தலைமை தாங்கினார்.

இந்த ஆண்டு கருப்பொருள் "சுயம் மற்றும் சமூகத்திற்கான யோகா" என்பது தனிநபர் மற்றும் சமூக நல்வாழ்வை வளர்ப்பதில் இரட்டைப் பங்கை எடுத்துக்காட்டுகிறது. கிராமப்புறங்களில் அடிமட்டத்தில் உள்ளவர்கள் பங்கேற்பதையும், யோகா பரவுவதையும் இந்த நிகழ்ச்சி ஊக்குவிக்கும்.

***

(Release ID: 2026595)

PKV/AG/RR



(Release ID: 2026628) Visitor Counter : 70