பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்குப் பிரதமர் பிரியாவிடை

"நமது நாட்டின் ஜனநாயகம் குறித்த ஒவ்வொரு விவாதத்திலும் டாக்டர் மன்மோகன் சிங் இடம்பெறுவார்"

"இந்த சபை பலதரப்பட்ட அனுபவங்களால் வடிவமைக்கப்பட்ட ஆறு ஆண்டுப் பல்கலைக்கழகம்

Posted On: 08 FEB 2024 12:06PM by PIB Chennai

மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்குப் பிரியாவிடை அளித்துப் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

மக்களவை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாறுகிறது என்றும், மாநிலங்களவை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய உயிர்ச் சக்தி பெறுகிறது என்றும் பிரதமர் கூறினார். அதேபோல், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பிரியாவிடை நிகழ்ச்சி, புதிய உறுப்பினர்களுக்கு அழியாத நினைவுகளையும், விலைமதிப்பற்ற பாரம்பரியத்தையும் விட்டுச் சென்றுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.

டாக்டர் மன்மோகன் சிங்கின் பங்களிப்பை நினைவுகூர்ந்த பிரதமர், "நீண்ட காலமாக அவையையும், நாட்டையும் வழிநடத்தி வருவதால், நமது நாட்டின் ஜனநாயகம் குறித்த ஒவ்வொரு விவாதத்திலும் அவர் இடம்பெறுவார்" என்று கூறினார். வழிகாட்டும் விளக்குகளாகத் திகழும் இத்தகைய மதிப்புமிக்க உறுப்பினர்களின் அனுபவங்கள் மற்றும் நன்னடத்தையை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என்று பிரதமர் ஆலோசனை கூறினார். முன்னாள் பிரதமர் சக்கர நாற்காலியில் அமர்ந்து அவையில் வாக்களித்ததை, ஒரு உறுப்பினர் தது கடமைகளில் அர்ப்பணிப்புடன் இருப்பதற்கு ஊக்கமளிக்கும் உதாரணமாக இருந்தது என்று பிரதமர் நினைவு கூர்ந்தார். ஜனநாயகத்திற்கு வலு சேர்க்கவே அவர் வந்தார் என்று நான் நம்புகிறேன் என்று பிரதமர் கூறினார். அவர் நீண்ட, ஆரோக்கியமான ஆயுளுடன் வாழப் பிரதமர் மோடி தது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

மேலும் பொதுத் தளத்திற்குப் புறப்படும் உறுப்பினர்கள் மாநிலங்களவை அனுபவத்திலிருந்து பெரிதும் பயனடைவார்கள் என்று பிரதமர் கூறினார். "இது ஆறு ஆண்டு பன்முகத்தன்மை கொண்ட பல்கலைக்கழகம். இது அனுபவங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து வெளியேறும் எவரும் செழுமைப்படுத்தப்பட்டு தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியை வலுப்படுத்துகிறார்கள்" என்று அவர் கூறினார்.

தற்போதைய தருணத்தின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டிய பிரதமர், இன்று விடைபெறும் உறுப்பினர்களுக்குப் பழைய மற்றும் புதிய கட்டிடத்தில் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது என்றும், அவர்கள் அமிர்த காலம் மற்றும் அரசியலமைப்பின் 75 ஆண்டுகளின் சாட்சியாக அங்கிருந்து திரும்புகிறார்கள் என்றும் கூறினார்.

கொவிட் பெருந்தொற்றின் போது நிச்சயமற்ற தன்மை நிலவியதை நினைவு கூர்ந்த பிரதமர், சபையின் செயல்பாட்டிற்கு எந்தத் தடையும் ஏற்படுத்தாத உறுப்பினர்களின் உறுதிப்பாட்டைப் பாராட்டினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் பெரும் ஆபத்துக்களை எதிர்கொள்வதாக அவர் தெரிவித்தார். கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்த உறுப்பினர்களுக்குப் பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலைத்  தெரிவித்ததோடு, சபை அதை கருணையுடன் ஏற்றுக்கொண்டு தொடர்ந்து முன்னேறி வருவதாகவும் கூறினார்.

எதிர்க்கட்சியினரால் கருப்பு நிற டைகள் அணியப்பட்ட சம்பவத்தை நினைவு கூர்ந்த பிரதமர், நாடு செழிப்பின் புதிய உயரங்களை எட்டி வருவதாகவும், இந்தச் சம்பவம் நாட்டின் முன்னேற்றத்திற்கான பயணத்திற்குக் 'கருப்புப் பொட்டு' மூலம் கண் திருஷ்டியை விரட்டும் முயற்சியாகப் பார்க்கப்படலாம் என்றும் குறிப்பிட்டார்.

பண்டைய புனித நூல்களை மேற்கோள் காட்டிய பிரதமர், நல்ல சகவாசத்தை வைத்திருப்பவர்கள் ஒரே மாதிரியான குணங்களை வளர்த்துக் கொள்கிறார்கள் என்றும், கெட்ட சகவாசத்தால் சூழப்பட்டவர்கள் குறைபாடுடையவர்களாக ஆகிறார்கள் என்றும் விளக்கினார். ஒரு நதியின் நீர் ஓடும்போது மட்டுமே குடிக்கத் தகுதியானதாக இருக்கும், அது கடலில் கலக்கும்போது உப்பாக மாறும் என்று அவர் மேலும் கூறினார். இந்த நம்பிக்கையுடன், து உரையை நிறைவு செய்த பிரதமர், ஓய்வு பெறும் உறுப்பினர்களின் அனுபவம் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று கூறினார். அவர்களுக்குப் பிரதமர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

***

(Release ID: 2003846)

ANU/SMB/PKV/AG/RR


(Release ID: 2003879) Visitor Counter : 120