குடியரசுத் தலைவர் செயலகம்

மாண்புமிகு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரை

Posted On: 31 JAN 2024 12:35PM by PIB Chennai

மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,

1. இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நான் நிகழ்த்தும் முதல் உரை இதுவாகும்.   இந்த அற்புதமான கட்டடம் அமிர்த காலத்தின் தொடக்கத்தில் கட்டப்பட்டுள்ளது.

'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்வுடன் உள்ள இந்தக் கோயில், இந்தியாவின் நாகரிகம் மற்றும் கலாச்சாரத்திற்கு ஒரு சான்றாக விளங்குகிறது.

நமது ஜனநாயக மற்றும் நாடாளுமன்ற மரபுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற தீர்மானம் இதில் எதிரொலிக்கிறது.

மேலும், 21-ம் நூற்றாண்டின் புதிய இந்தியாவுக்கான புதிய பாரம்பரியத்தை உருவாக்கும் உறுதிப்பாட்டை இது உள்ளடக்கியுள்ளது.

நமது சுதந்திரத்தின் அமிர்த காலத்தில் 'வளர்ச்சியடைந்த பாரதம்’ என்ற இலக்கை அடைவதற்கான  கொள்கைகள் குறித்த ஆக்கபூர்வமான விவாதங்களுக்கு இந்தப் புதிய கட்டடம் சாட்சியாக அமையும் என்று நான் நம்புகிறேன்.

உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,

2. இந்த ஆண்டு நமது அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட 75-வது ஆண்டாகும். 

 

 இந்தக் காலகட்டத்தில், சுதந்திரத்தின் 75-வது ஆண்டுக் கொண்டாட்டமான அமிர்தப் பெருவிழா நிறைவடைந்துள்ளது.

இந்தக் காலகட்டத்தில், நாடு முழுவதும் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.

போற்றப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களை நாடு நினைவுகூர்ந்தது.

 75 ஆண்டுகளுக்குப் பின், இளைய தலைமுறையினர் சுதந்திரப் போராட்ட காலத்தை மீண்டும் நினைவுகூர்ந்தனர்.

3.   இந்த இயக்கத்தின் போது:

'எனது மண், எனது தேசம்' இயக்கத்தின் கீழ், நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் மண் அடங்கிய அமிர்த கலசம் தில்லிக்குக் கொண்டு வரப்பட்டது.

2 லட்சத்துக்கும் அதிகமான கல்வெட்டுகள் நிறுவப்பட்டன.

3 கோடிக்கும் அதிகமானோர் ஐந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

70,000 க்கும் அதிகமான அமிர்த நீர்நிலைகள் உருவாக்கப்பட்டன.

இரண்டு லட்சத்துக்கும் அதிகமான "அமிர்தப் பூங்காக்கள்" உருவாக்கப்பட்டன.

இரண்டு கோடிக்கும் அதிகமான மரங்கள் நடப்பட்டன.

16 கோடிக்கும் அதிகமானோர் மூவண்ணக் கொடியுடன் செல்ஃபிப்படம் எடுத்துப் பதிவிட்டனர்.

4.   அமிர்தப் பெருவிழாவின் போது,

"கடமைப் பாதையில்" நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலை நிறுவப்பட்டது.

நாட்டின் அனைத்துப் பிரதமர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகம் தேசியத்  தலைநகரான தில்லியில் திறக்கப்பட்டது.

சாந்திநிகேதன், ஹொய்சள கோயில் ஆகியவை உலகப் பாரம்பரியப் பட்டியலில்  சேர்க்கப்பட்டன.

சாஹிப்ஜாதே நினைவாக  வீர பாலகர் தினம் அறிவிக்கப்பட்டது.

பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாள் பழங்குடியினர் பெருமை தினமாக அறிவிக்கப்பட்டது.

பிரிவினையின் துன்பங்களை நினைவுகூரும் வகையில் ஆகஸ்ட் 14 –ம் தேதி "பிரிவினைத் துயர தினமாக"  அறிவிக்கப்பட்டது.

மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,

5. கடந்த ஆண்டு, இந்தியாவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகள் நிறைந்ததாக அமைந்தது. இந்தக் காலகட்டத்தில், நாட்டுமக்களின் பெருமிதத்தை  மேம்படுத்தும்  பல தருணங்கள் இருந்தன.

கடுமையான உலகளாவிய நெருக்கடிகளுக்கு இடையே, இந்தியா வேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதாரமாக உருவெடுத்தது. தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகளாக  7.5 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சி விகிதத்தைத்  தொடர்ந்து  பராமரித்து வருகிறது.

நிலவின் தென் துருவத்தில் கொடியேற்றிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

ஆதித்யா விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக செலுத்தியது. அது பூமியிலிருந்து 15 லட்சம் கிலோமீட்டர்  தொலைவில்  உள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க ஜி-20 உச்சிமாநாட்டின் வெற்றி இந்தியாவின் உலகளாவிய   நிலையை  வலுப்படுத்தியது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா முதல் முறையாக 100 பதக்கங்களை  வென்றது.

மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 100-க்கும் அதிகமான  பதக்கங்களை  வென்றுள்ளோம்.

இந்தியாவில்  மிகப்பெரிய  கடல்  பாலமான  அடல்  சேது  திறக்கப்பட்டது.

முதல்  நமோ  பாரத்  ரயிலும், முதல் அமிர்த பாரத்  ரயிலும் இயக்கப்பட்டன.

உலகின்  அதிவேக   5- ஜி சேவை கொண்ட நாடாக  இந்தியா  மாறியது.

இந்திய விமான நிறுவனம் உலகின் மிகப்பெரிய விமான ஒப்பந்தத்தை  நிறைவேற்றியது.

கடந்த ஆண்டு, எனது அரசு லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளை  வழங்கியுள்ளது.

மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,

6. கடந்த 12 மாதங்களில், எனது அரசு பல முக்கியமான சட்டங்களை அறிமுகப்படுத்தியது. 

இந்த சட்டங்கள் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் இயற்றப்பட்டுள்ளன.

இந்த சட்டங்கள் 'வளர்ச்சியடைந்த பாரதம்' என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான வலுவான அடித்தளத்தை அமைக்கின்றன.

30 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றியதற்காக உங்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் பெண்களின் பங்கேற்பு அதிகரிக்க இது வழி வகுத்துள்ளது.

இது பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு எனது அரசின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.

சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் என்ற தனது உறுதிப்பாட்டை எனது அரசு தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது.

அடிமைத்தனத்தின் சகாப்தத்தில் வேரூன்றிய குற்றவியல் நீதி அமைப்பு இப்போது வரலாறாக உள்ளது. இப்போது, தண்டனையை விட நீதிக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 'முதலில் நீதி' என்ற கொள்கையின் அடிப்படையில் தேசம் ஒரு புதிய சட்டத்தைப் பெற்றுள்ளது.

டிஜிட்டல் தனியுரிமை தரவு பாதுகாப்பு சட்டம், டிஜிட்டல் நடைமுறைகளை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றும்.

"அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை சட்டம்" நாட்டில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை வலுப்படுத்தும்.

ஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீட்டுச் சட்டம், அங்குப் பழங்குடியினருக்குப் பிரதிநிதித்துவ உரிமையை உறுதி செய்யும்.

 

இந்தக் காலகட்டத்தில் மத்தியப் பல்கலைக்கழகச் சட்டம் திருத்தப்பட்டது. இது தெலங்கானாவில் சம்மக்கா சாரக்கா மத்தியப் பழங்குடிப் பல்கலைக்கழகம் அமைக்க வழி வகுத்தது.

கடந்த ஆண்டு, 76 பழைய சட்டங்களும் ரத்து செய்யப்பட்டன.

தேர்வுகளில் முறைகேடுகள் குறித்த இளைஞர்களின் கவலைகளை எனது அரசு அறிந்துள்ளது.

எனவே, இதுபோன்ற முறைகேடுகளைக் கடுமையாக ஒடுக்க புதிய சட்டம் இயற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,

7 எந்தவொரு நாடும் கடந்த கால சவால்களை முறியடித்து, எதிர்காலத்தில் அதிகபட்ச ஆற்றலை முதலீடு செய்தால் மட்டுமே வேகமாக முன்னேற முடியும்.

கடந்த 10 ஆண்டுகளில், தேச நலனுக்காக இதுபோன்ற பல பணிகள் நிறைவேற்றப்பட்டதை இந்தியா கண்டுள்ளது. இதற்காக நாட்டு மக்கள் பல ஆண்டுகளாகக் காத்திருந்தனர்.

பல நூற்றாண்டுகளாக ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. இன்று அது யதார்த்தமாகி விட்டது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை நீக்கியது குறித்து சந்தேகம் எழுந்தது. அது இப்போது மாறிவிட்டது.

இந்த நாடாளுமன்றம் 'முத்தலாக்’ முறைக்கு எதிராகக் கடுமையான சட்டத்தையும் இயற்றியது.

நமது அண்டை நாடுகளில் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்குக் குடியுரிமை வழங்க இந்த நாடாளுமன்றம் ஒரு சட்டத்தையும் இயற்றியது.

ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் என்ற திட்டத்தையும் எனது அரசு அமல்படுத்தியது.

இது நாற்பது ஆண்டுகளாக காத்திருந்தது. ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் அமல்படுத்தப்பட்ட பிறகு, முன்னாள் படைவீரர்கள் இப்போது சுமார் 1 லட்சம் கோடி ரூபாயைப் பெற்றுள்ளனர்.

இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்கு முதன்முறையாக முப்படைகளின் தலைமைத் தளபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,

8. உத்கல்மணி பண்டிட் கோபபந்து தாஸின் அழியாத வரிகள் எல்லையற்ற தேசபக்தியின் உணர்வைத் தூண்டுகின்றன.  

அவர் கூறிய வரிகள்,

”எனது உடல் இந்த நாட்டின் மண்ணில் கரையும்

நாட்டு மக்கள் என் மீது சவாரி செய்யலாம்

நாட்டின் விடுதலையை நோக்கியே அனைத்தும் செல்கின்றன

அவற்றில் எனது சதையும் எலும்புகளும் நிறைந்துள்ளன.”

அவர் கூறிய இந்த வரிகளில் கடமையையும், தேசமே முதன்மை என்ற உணர்வையும் நாம் காண்கிறோம்

9. இன்று கண்ணுக்குத் தெரியும் சாதனைகள் கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் விளைவுகளாகும். 

குழந்தைப் பருவத்திலிருந்தே, 'வறுமையை ஒழிப்போம்' என்ற முழக்கத்தை நாம் கேட்டு வருகிறோம். இப்போது, நமது வாழ்வில் முதன்முறையாக, பெரிய அளவில் வறுமை ஒழிக்கப்படுவதை நாம் காண்கிறோம்.

நித்தி ஆயோக்கின் தகவல்படி, 10 ஆண்டுகளில், நாட்டு மக்களில்  சுமார் 25 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர்.

இது ஏழை மக்களிடையே மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தும் செய்தியாகும்.

25 கோடி மக்களின் வறுமையை ஒழிக்க முடியும் என்றால், அவர்களை முன்னேற்ற முடிந்துள்ளது என்று பொருள்.

10. இன்று பொருளாதாரத்தின் பல்வேறு பரிமாணங்களை நாம் பார்த்தால், இந்தியா சரியான திசையில், சரியான முடிவுகளை எடுத்து முன்னேறி வருகிறது என்ற நமது நம்பிக்கையை அது அதிகரிக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில்:

இந்தியா "பலவீனமான ஐந்து" பொருளாதாரத்திலிருந்து "முதல் ஐந்து" பொருளாதாரமாக மாறியதை நாம் கண்டோம்.

இந்தியாவின் ஏற்றுமதி 450 பில்லியன் டாலரில் இருந்து 775 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

அந்நிய நேரடி முதலீடு இரு மடங்காக அதிகரித்துள்ளது.

கதர் மற்றும் கிராமத் தொழில் பொருட்களின் விற்பனை 4 மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை சுமார் 3.25 கோடியிலிருந்து சுமார் 8.25 கோடியாக அதிகரித்துள்ளது.

பத்தாண்டுகளுக்கு முன்பு:

நாட்டில் சில நூறு புத்தொழில் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. அவை இன்று ஒரு லட்சத்திற்கும் அதிகமாக வளர்ந்துள்ளன.

ஒரே ஆண்டில் 94 ஆயிரம் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்த எண்ணிக்கை 1 லட்சத்து 60 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

2017 டிசம்பரில் 98 லட்சம் பேர் சரக்கு மற்றும் சேவைவரி செலுத்தி வந்த நிலையில், இன்று அவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 40 லட்சமாக உள்ளது.

2014க்கு முந்தைய 10 ஆண்டுகளில் சுமார் 13 கோடி வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. கடந்த 10 ஆண்டுகளில், நாட்டு மக்கள் 21 கோடிக்கும் அதிகமான வாகனங்களை வாங்கியுள்ளனர்.

2014-15 ஆம் ஆண்டில் சுமார் 2 ஆயிரம் மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. அதேசமயம், 2023-24 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் வரை, சுமார் 12 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,

 

11. கடந்த பத்தாண்டுகளில், எனது அரசு சிறந்த ஆளுமையையும், வெளிப்படைத்தன்மையையும் முக்கிய அடித்தளமாக மாற்றியுள்ளது.

இதன் விளைவாக, பெரிய பொருளாதார சீர்திருத்தங்களை நாம் கண்டுள்ளோம்.

இந்தக் காலகட்டத்தில், நாட்டில் திவால் சட்டம் இயற்றப்பட்டது.

நாட்டில் இப்போது சரக்கு மற்றும் சேவை வரி வடிவில் ‘ஒரே நாடு ஒரே வரி’ சட்டம் உள்ளது.

பருப் பொருளாதார நிலைத்தன்மையையும் எனது அரசு உறுதி செய்துள்ளது.

10 ஆண்டுகளில் மூலதனச் செலவு 5 மடங்கு அதிகரித்து ரூ.10 லட்சம் கோடியாக உள்ளது. நிதிப் பற்றாக்குறையும் கட்டுக்குள் உள்ளது.

இன்று நம்மிடம் 600 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான அந்நியச் செலாவணி கையிருப்பு உள்ளது.

முன்பு மிகவும் மோசமான நிலையில் இருந்த நமது வங்கி அமைப்பு, இன்று உலகின் வலுவான வங்கி அமைப்புகளில் ஒன்றாக மாறியுள்ளது.

கடந்த காலங்களில் இரட்டை இலக்கத்தில் இருந்த வங்கிகளின் வாராக்கடன் இன்று 4 சதவீதமாக மட்டுமே உள்ளது.

இந்தியாவில் உற்பத்தி மற்றும் தற்சார்பு இந்தியா இயக்கங்கள் நமது பலங்களாக மாறிவிட்டன.

இந்தியா இன்று, உலகின் இரண்டாவது பெரிய மொபைல் போன் உற்பத்தியாளராக உள்ளது.

கடந்த பத்தாண்டுகளில், மொபைல் போன் உற்பத்தியில் ஐந்து மடங்கு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன், இந்தியா பொம்மைகளை இறக்குமதி செய்து வந்தது. இன்று இந்தியா, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொம்மைகளை ஏற்றுமதி செய்கிறது.

இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.

இன்று, ஒவ்வொரு இந்தியரும் நாட்டின் உள்நாட்டு விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தைப் பார்க்கும்போது பெருமிதம் கொள்கிறார்கள்.

தேஜஸ் போர் விமானம் நமது விமானப்படையின் பலமாக மாறி வருகிறது.

சி-295 சரக்கு விமானங்களின் உற்பத்தி இந்தியாவில் நடைபெற உள்ளது.

நவீன விமான என்ஜின்களும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்.

உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் பாதுகாப்புத் தொழில் வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

பாதுகாப்புத் துறையில் தனியார் துறையின் பங்களிப்பை எனது அரசு உறுதி செய்துள்ளது.

புத்தொழில் நிறுவனங்களுக்கு விண்வெளித் துறையை எங்கள் அரசு திறந்துள்ளது.

மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,

12. செல்வத்தை உருவாக்குபவர்களின் பங்களிப்பை எனது அரசு அங்கீகரிக்கிறது. இந்தியாவின் தனியார் துறையின் திறன்களில் நம்பிக்கை கொண்டுள்ளது. 

இந்தியாவில் வர்த்தகம் செய்வதற்கு உகந்த சூழலை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.  இதை நோக்கி அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

எளிதாக வர்த்தகம் செய்வதில் நிலையான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் 40,000-க்கும் அதிகமான இணக்கத் தடைகள் அகற்றப்பட்டுள்ளன.

கம்பெனிகள் சட்டம், வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டு ஒத்துழைப்பு ஆகியவற்றில் உள்ள 63 விதிகள் கிரிமினல் குற்றங்கள் பட்டியலில்  இருந்து நீக்கப்பட்டுள்ளன.

 

ஜன் விஸ்வாஸ் (மக்கள் நம்பிக்கை)  சட்டம் பல்வேறு சட்டங்களின் 183 விதிகளை நீக்கியுள்ளது.

நீதிமன்றத்திற்கு வெளியே ஏற்படும் பிரச்சனைகளை சுமூகமாகத் தீர்க்க சமரச சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

வனம் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதிகளுக்கு இப்போது 75 நாட்களுக்கு குறைவாகவே ஆகிறது. இது முன்பு 600 நாட்கள் என்று இருந்தது.

முகமற்ற மதிப்பீட்டுத் திட்டம் வரி நிர்வாகத்தில் அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வந்துள்ளது.

மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,

13.   நமது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறையும் சீர்திருத்தங்களால் பெருமளவில் பயனடைந்து வருகிறது.

இன்று கோடிக்கணக்கான குடிமக்கள் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில்  பணியாற்றி வருவதை நீங்கள் அறிவீர்கள்.

 குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் சிறு தொழில் முனைவோருக்கு அதிகாரம் அளிக்க எங்கள் அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வரையறை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

புதிய வரையறையில் முதலீடு மற்றும் வருவாய் சேர்க்கப்பட்டுள்ளது.

தற்போது, சுமார் 3.5 கோடி எம்எஸ்எம்இ-கள் உத்யம் மற்றும் உத்யம் உதவி போர்ட்டலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ், கடந்த சில ஆண்டுகளில் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

இது, 2014 க்கு முந்தைய பத்தாண்டுகளில் வழங்கப்பட்ட தொகையை விட ஆறு மடங்கு அதிகமாகும்.

மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,

 

14. எனது அரசின் மற்றொரு குறிப்பிடத்தக்க சீர்திருத்தம் டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கியதாகும். டிஜிட்டல் இந்தியா, இந்தியாவில் வாழ்க்கையையும், வர்த்தகத்தையும் மிகவும் எளிதாக்கியுள்ளது.

இன்று ஒட்டுமொத்த உலகமும் இதை இந்தியாவின் மகத்தான சாதனையாக ஒப்புக் கொள்கிறது. வளர்ந்த நாடுகளில் கூட இந்தியாவைப் போல டிஜிட்டல் அமைப்பு இல்லை.

கிராமங்களில் கூட வழக்கமான வாங்குதல் மற்றும் விற்பனை, டிஜிட்டல் முறையில் செய்யப்படும் என்பது சிலரின் கற்பனைக்கு அப்பாற்பட்டது.

இன்று, உலகின் மொத்த நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 46 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகின்றன.

கடந்த மாதம் யுபிஐ மூலம் 1200 கோடி பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன.

இது ரூ.18 லட்சம் கோடி மதிப்பிலான வர்த்தகமாகும்.

உலகின் பிற நாடுகளும் இப்போது யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்யும் வசதியை வழங்குகின்றன.

டிஜிட்டல் இந்தியா, வங்கி சேவையை எளிமையாக்கியுள்ளதுடன், கடன் வழங்குவதை  எளிதாக்கியுள்ளது.

ஜன் தன், ஆதார், மொபைல் போன் என்ற மூன்று அம்சங்கள் ஊழலை ஒழிக்க உதவியுள்ளன.

எனது அரசு இதுவரை ரூ.34 லட்சம் கோடியை நேரடிப் பயன் பரிமாற்றம் மூலம் மாற்றியுள்ளது.

ஜன் தன், ஆதார்,  மொபைல் போன் மூலம் சுமார் 10 கோடி போலிப் பயனாளிகள் நீக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் ரூ.2.75 லட்சம் கோடி தவறான கைகளுக்கு செல்வது தடுக்கப்பட்டுள்ளது.

டிஜிலாக்கரின் வசதியும் வாழ்க்கையை எளிதாக்குகிறது. இதுவரை 6 பில்லியனுக்கும் அதிகமான ஆவணங்கள் அதன் பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

 

ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கணக்கின் கீழ் சுமார் 53 கோடி மக்களுக்கு டிஜிட்டல் சுகாதார அடையாளக் கணக்குகள்  உருவாக்கப்பட்டுள்ளன.

மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,

15. டிஜிட்டலுடன், உள்கட்டமைப்பில் சாதனை அளவாக முதலீடு செய்யப்பட்டுள்ளது.   இன்று, ஒவ்வொரு இந்தியரும் கனவு கண்டதைப் போன்ற உள்கட்டமைப்பு இந்தியாவில் உருவாக்கப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில்:

கிராமங்களில் சுமார் 3.75 லட்சம் கிலோ மீட்டர் புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 90 ஆயிரம் கிலோமீட்டரிலிருந்து 1 லட்சத்து  ஆயிரம் கிலோமீட்டராக அதிகரித்துள்ளது.

நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 2.5 மடங்கு அதிகரித்துள்ளது.

அதிவேக வழித்தடத்தின் நீளம் முன்பு 500 கிலோமீட்டராக இருந்தது. இப்போது 4 ஆயிரம் கிலோமீட்டர் ஆக உள்ளது.

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 என்பதிலிருந்து 149 என இரட்டிப்பாகியுள்ளது.

நாட்டின் முக்கியத் துறைமுகங்களில் சரக்குகள் கையாளும் திறன் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

அகண்ட அலைவரிசையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 14 மடங்கு அதிகரித்துள்ளது.

நாட்டில் உள்ள சுமார் 2 லட்சம் கிராம பஞ்சாயத்துகள் கண்ணாடி இழை கேபிள்  மூலம்  இணைக்கப்பட்டுள்ளன.

கிராமங்களில் 4 லட்சத்துக்கும் அதிகமான பொது சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவை வேலைவாய்ப்பின் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளன.

நாட்டில் 10,000 கிலோ மீட்டர் நீளத்திற்கு எரிவாயு குழாய் பதிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாடு, ஒரே மின் தொகுப்பு நாட்டில் மின் பகிர்மானத்தை மேம்படுத்தியுள்ளது.

 

ஒரே நாடு, ஒரே எரிவாயு தொகுப்பு எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை ஊக்குவிக்கிறது.

5 நகரங்களில் மட்டுமே இருந்த மெட்ரோ வசதி இப்போது 20 நகரங்களில் உள்ளது.

25 ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டன. இது பல வளர்ந்த நாடுகளில் உள்ள ரயில் பாதைகளின் மொத்த நீளத்தை விட அதிகம்.

இந்திய ரயில்வேயை 100% மின்மயமாக்கும் நிலை மிக விரைவில் எட்டப்பட உள்ளது.

இந்தக் காலகட்டத்தில், இந்தியாவில் முதல்  முறையாக மித அதிவேக ரயில்கள்  தொடங்கப்பட்டுள்ளன.

இன்று வந்தே பாரத் ரயில்கள் 39-க்கும் அதிகமான வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.

அமிர்த பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் 1300-க்கும் அதிகமான ரயில் நிலையங்கள்  மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.

மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,

16. 'வளர்ச்சியடைந்த பாரதம்' என்ற பிரம்மாண்ட கட்டடம் 4 வலுவான தூண்களைக் கொண்டு  எழுப்பப்பட வேண்டும் என்று  எனது  அரசு நம்புகிறது. 

அந்த தூண்கள் – இளைஞர் சக்தி, மகளிர் சக்தி, விவசாயிகள் மற்றும் ஏழைகள் .

அவர்களின் நிலைமையும் கனவுகளும் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிலும் ஒரே மாதிரியாக உள்ளன.

எனவே, இந்த நான்கு தூண்களுக்கும் அதிகாரம் அளிக்க எனது அரசு அயராது உழைத்து வருகிறது.

இந்தத் தூண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக எனது அரசு வரி வருவாயில் கணிசமான பகுதியை செலவிட்டுள்ளது.

4 கோடியே 10 லட்சம் ஏழைக் குடும்பங்கள் உறுதியான வீடுகளைப் பெற்றுள்ளன.   இதற்காக  சுமார்  ரூ.6 லட்சம்  கோடி  செலவிடப்பட்டுள்ளது.

 

முதல்முறையாக  சுமார் 11 கோடி கிராமப்புற  குடும்பங்களுக்கு  குழாய்  மூலம் குடிநீர்  சென்றடைந்துள்ளது.

இதற்காக சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.

இதுவரை 10 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தப் பயனாளி சகோதரிகளுக்கு மிகவும் மலிவான விலையில் சமையல் எரிவாயு  வழங்கப்பட்டு  வருகிறது.

இந்தத்  திட்டத்திற்காக  அரசு  சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாயை செலவிட்டுள்ளது.

கொவிட் தொற்றுநோய் காலத்திலிருந்து, நாட்டு மக்களில் 80 கோடி  பேருக்கு இலவச  உணவு தானியங்கள் வழங்கப்பட்டு  வருகிறது.

இந்த  வசதி  தற்போது  மேலும்  5  ஆண்டுகளுக்கு  நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்குக்  கூடுதலாக  ரூ.11 லட்சம்  கோடி  செலவிடப்படும்.

ஒவ்வொரு திட்டமும் பயனாளிகளை முழுமையாக சென்றடைவதை உறுதி செய்வதே எனது அரசின் முக்கிய முயற்சியாகும். தகுதியான எவரும் விடுபடக் கூடாது.

இந்த நோக்கத்துடன், வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான லட்சியப் பயணம் நவம்பர் 15  முதல்  நடைபெற்று வருகிறது. இதுவரை  சுமார் 19 கோடி மக்கள் இந்த யாத்திரையில் பங்கேற்றுள்ளனர்.

மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,

17. கடந்த சில ஆண்டுகளில், உலகம் இரண்டு பெரிய போர்களைக் கண்டது. அத்துடன் கொவிட் போன்ற  உலகளாவிய  தொற்றுநோயையும்   உலகம் எதிர்கொண்டது. 

இத்தகைய உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும், எனது அரசால்  நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடிந்தது,  நாட்டு  மக்கள்   மீது  கூடுதல்  சுமை ஏற்றப்படுவதைத் தடுத்தது.

2014-ம் ஆண்டுக்கு முந்தைய 10 ஆண்டுகளில், சராசரி பணவீக்க விகிதம் 8 சதவீதத்திற்கும்  அதிகமாக  இருந்தது.  இருப்பினும், கடந்த பத்தாண்டுகளில் சராசரி பணவீக்க  விகிதம்  5 சதவீதமாக  பராமரிக்கப்பட்டுள்ளது.

சாதாரண குடிமக்களின் கைகளில் சேமிப்பை அதிகரிப்பதே எனது அரசின் முயற்சியாக உள்ளது.

முன்னதாக, இந்தியாவில் ரூ.2 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட வருமானத்திற்கு வருமான வரி விதிக்கப்பட்டது.

இன்று  இந்தியாவில் ரூ.7 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி  இல்லை.

வரி விலக்குகள் மற்றும் சீர்திருத்தங்கள் காரணமாக, இந்தியாவில் வரி செலுத்துவோர் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் ரூ. 2.5 லட்சம் கோடியை சேமித்துள்ளனர்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன், மத்திய அரசும் பல்வேறு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளித்து வருகிறது. இது நாட்டு மக்களுக்கு சுமார்  மூன்றரை  லட்சம்  கோடி  ரூபாய்  சேமிக்க  உதவியுள்ளது.

மக்கள் மருந்தக மையங்கள் மூலம், மருந்துகள் வாங்குவதில் நாட்டு மக்கள் ரூ.28,000 கோடி  சேமித்துள்ளனர்.

இதய ஸ்டென்ட்டுகள், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, புற்றுநோய் மருந்துகளின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, நோயாளிகள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 27 ஆயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்துகிறார்கள்.

சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் வழங்கும் திட்டத்தையும் எனது அரசு செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 21 லட்சத்துக்கும் அதிகமான நோயாளிகள் இந்த வசதியைப் பயன்படுத்துகின்றனர். இதனால் நோயாளிகளுக்கு  ஆண்டுக்கு  ரூ.1 லட்சம்  மிச்சமாகியுள்ளது.

ஏழை மக்கள் மானிய விலையில் ரேஷன் பொருட்களைத் தொடர்ந்து பெறுவதற்காக  எனது  அரசு  சுமார்  20 லட்சம்  கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.

இந்திய ரயில்வேயில் பயணிக்கும் ஒவ்வொரு பயணிக்கும் ரயில்வே சுமார் 50 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது. இதனால், ஏழை மற்றும் நடுத்தர வர்க்க பயணிகளுக்கு,  ஆண்டுக்கு, 60 ஆயிரம்  கோடி  ரூபாய்  மிச்சமாகிறது.

ஏழை, எளிய மக்களுக்குக் குறைந்த விலையில் விமானப் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது.  உடான் திட்டத்தின் கீழ், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் விமானப் பயணச்சீட்டுகளில் ரூ. 3,000 கோடிக்கு மேல் மிச்சப்படுத்தியுள்ளனர்.

எல்இடி பல்பு திட்டத்தின் காரணமாக, மின்சாரக் கட்டணங்களில் ரூ. 20,000 கோடிக்கு மேல் சேமிக்கப்பட்டுள்ளது.

ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் சுரக்ஷா பீமா யோஜனா ஆகியவற்றின் கீழ், ஏழை மக்கள் ரூ. 16,000 கோடிக்கு மேல் காப்பீட்டுப் பயன்களைப் பெற்றுள்ளனர்.

மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,

18. மகளிர் சக்தியை வலுப்படுத்த எனது அரசு ஒவ்வொரு மட்டத்திலும் பணியாற்றி வருகிறது.

இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பும் பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.

இந்த அணிவகுப்பில், நமது மகள்களின் திறனை உலகம் மீண்டும் ஒருமுறை கண்டது.

நீர், நிலம், வானம் என அனைத்து இடங்களிலும் மகள்களின் பங்களிப்பை எனது அரசு விரிவுபடுத்தியுள்ளது.

பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் என்றால் என்ன என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை அதிகரிக்க எனது அரசு இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இன்று சுமார் 10 கோடி பெண்கள் சுய உதவிக் குழுக்களில் இணைந்துள்ளனர்.

இந்தக் குழுக்களுக்கு ரூ.8 லட்சம் கோடி மதிப்பிலான வங்கிக் கடன்களும், ரூ.40 ஆயிரம் கோடி நிதி உதவியும் வழங்கப்பட்டுள்ளது.

2 கோடி பெண்களை லட்சாதிபதி பெண்களாக மாற்றும் இயக்கத்தை அரசு செயல்படுத்தி  வருகிறது.

 

நமோ ட்ரோன் சகோதரித் திட்டத்தின்கீழ் சுயஉதவிக் குழுக்களுக்கு 15 ஆயிரம் ட்ரோன்கள்  வழங்கப்படுகின்றன.

மகப்பேறு விடுப்பை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்தியது நாட்டின்  லட்சக்கணக்கான  பெண்களுக்குப் பெரிதும் பயனளித்துள்ளது.

எங்கள் அரசு முதல்முறையாக ஆயுதப் படைகளில் பெண்களுக்கு நிரந்தர ஆணையத்தை  உருவாக்கியுள்ளது.

முதல் முறையாக, ராணுவப் பள்ளிகள் மற்றும் தேசியப் பாதுகாப்பு அகாடமியில் பெண்களுக்கு  அனுமதி  வழங்கப்பட்டுள்ளது.

இன்று, பெண்கள் போர் விமானிகளாகவும், முதல் முறையாக கடற்படை கப்பல்களுக்கு  கட்டளையிடுபவர்களாகவும்  உள்ளனர்.

முத்ரா  திட்டத்தின்  கீழ் வழங்கப்பட்ட 46 கோடிக்கும்  அதிகமான கடன்களில், 31 கோடிக்கும்  அதிகமான  கடன்கள்  பெண்களுக்கு  வழங்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற்று கோடிக்கணக்கான பெண்கள் சுயதொழில்  செய்கின்றனர்.

மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,

19.  விவசாயத்தை அதிக லாபம் கொண்டதாக மாற்றுவதற்கு எனது அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. லாபத்தை அதிகரிக்கும் அதே வேளையில் விவசாயச் செலவைக் குறைப்பதே எங்கள் நோக்கம்.

முதல்முறையாக, நாட்டின் வேளாண் கொள்கை மற்றும் திட்டங்களில் 10 கோடிக்கும் அதிகமான சிறு விவசாயிகளுக்கு எனது அரசு முன்னுரிமை அளித்துள்ளது.

பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதித் திட்டத்தின் கீழ், விவசாயிகள் இதுவரை ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் கோடிக்கு மேல் பெற்றுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில், வங்கிகளில் விவசாயிகளுக்கு எளிதாகக் கடன் வழங்குவது  மூன்று  மடங்கு  அதிகரித்துள்ளது.

 

பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், விவசாயிகள் ரூ.30 ஆயிரம் கோடி பிரீமியம் செலுத்தியுள்ளனர். இதற்குக் கைமாறாக அவர்களுக்கு ரூ.1.5 லட்சம்  கோடி  இழப்பீடு  வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில், நெல் மற்றும் கோதுமைப் பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையாக விவசாயிகள் ஏறத்தாழ 18 லட்சம் கோடி ரூபாயைப் பெற்றுள்ளனர்.

இது 2014-ம் ஆண்டுக்கு முந்தைய 10 ஆண்டுகளை விட 2.5 மடங்கு அதிகமாகும்.

முன்னதாக, எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பு வகைகளை அரசு கொள்முதல் செய்வது மிகக் குறைவாகவே இருந்தது.

கடந்த பத்தாண்டுகளில், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பு வகைகளை உற்பத்தி  செய்யும்  விவசாயிகள் ரூ.1.25 லட்சம் கோடிக்கு மேல் குறைந்தபட்ச ஆதரவு  விலையைப்  பெற்றுள்ளனர்.

நாட்டில் முதல்முறையாக வேளாண் ஏற்றுமதிக் கொள்கையை எங்கள் அரசு உருவாக்கியுள்ளது .

இதன் மூலம் வேளாண் ஏற்றுமதி மதிப்பு ரூ.4 லட்சம் கோடியை  எட்டியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில், விவசாயிகளுக்கு மலிவு விலையில் உரங்களை வழங்க ரூ.11 லட்சம் கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது.

எனது அரசு 1.75 லட்சத்துக்கும் அதிகமான பிரதமரின் வேளாண் வள மையத்தை  நிறுவியுள்ளது.

இதுவரை, 8,000 வேளாண்  உற்பத்தியாளர் அமைப்புகள்  உருவாக்கப்பட்டுள்ளன.

விவசாயத்தில் கூட்டுறவு அமைப்புகளை எனது அரசு ஊக்குவித்து வருகிறது. நாட்டிலேயே முதல்முறையாக கூட்டுறவு அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்கள் இல்லாத கிராமங்களில், 2 லட்சம் சங்கங்கள் அமைக்கப்படுகின்றன.

மீன்வளத்துறையில் ரூ. 38,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதால், மீன் உற்பத்தி 95 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 175 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. அதாவது, கடந்த 10 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்ந்துள்ளது.

உள்நாட்டு மீன் உற்பத்தி 61 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 131 லட்சம் மெட்ரிக்  டன்னாக  உயர்ந்துள்ளது.

மீன்வளத் துறையில் ஏற்றுமதி இரு மடங்கிற்கும் மேலாக, அதாவது ரூ.30 ஆயிரம்  கோடியிலிருந்து  ரூ.64  ஆயிரம்  கோடியாக  அதிகரித்துள்ளது.

நாட்டிலேயே முதல்முறையாக கால்நடை விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்குக்  கிசான்  கடன்  அட்டை  வழங்கப்பட்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில், தனிநபருக்குப் பால் கிடைப்பது 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

கால்நடைகளைக் கோமாரி நோய்களில் இருந்து பாதுகாக்க இலவசத் தடுப்பூசி முகாம்  நடைபெற்று  வருகிறது.

இதுவரை, நான்கு கட்டங்களாக 50 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் விலங்குகளுக்கு  வழங்கப்பட்டுள்ளன.

மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,

20. மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் சேவைகள் மட்டுமல்ல.   இவை நாட்டு மக்களின் வாழ்க்கைச் சக்கரத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

 எனது அரசுத் திட்டங்களின் பயன்கள் பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் ஆய்வுப் பொருளாக இருக்கின்றன.

இந்தத் திட்டங்களின் பயன்கள் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, வறுமையை எதிர்த்துப் போராடும் ஒவ்வொரு நாட்டிற்கும் ஊக்கமளிக்கும் எடுத்துக்காட்டாக அமையும்.

சமீப ஆண்டுகளில் பல்வேறு நிறுவனங்கள் நடத்திய ஆய்வுகள் இதைக் கண்டறிந்துள்ளன:

11 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டிருப்பதும், திறந்தவெளி கழிப்பிடத்தை அகற்றியதும் பல நோய்கள் ஏற்படுவதைத் தடுத்துள்ளன.

இதன் விளைவாக, நகர்ப்புறங்களில் உள்ள ஒவ்வொரு ஏழைக் குடும்பமும் மருத்துவச் செலவுகளுக்காக ஆண்டுக்கு ரூ.60,000 வரை சேமிக்கின்றன.

குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படுவதால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான குழந்தைகளின் உயிர் காப்பாற்றப்பட்டு வருகிறது.

பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் உறுதியான வீடுகள் கட்டப்படுவது பயனாளிக் குடும்பங்களின் சமூக நிலையையும், கண்ணியத்தையும் உயர்த்தியுள்ளது.

உறுதியான வீடுகளின் குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் கல்வி மேம்பட்டு, இடைநிற்றல் விகிதம் குறைந்துள்ளது.

பிரதமரின் பாதுகாப்பான மகப்பேறு திட்டத்தின் கீழ், இன்று நாட்டில் 100 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. இதன் விளைவாக பேறுகால இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது.

மற்றொரு ஆய்வின்படி, இலவச சமையல் எரிவாயுத் திட்டப் பயனாளி குடும்பங்களில் கடுமையான நோய்கள் பாதிப்பு குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,

21. எனது அரசு மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது.   ஒவ்வொரு குடிமகனின் கண்ணியமும் எங்களுக்கு மிக முக்கியமானது. இதுதான் சமூக நீதி பற்றிய எங்களின் கருத்து. இந்திய அரசியலமைப்பின் ஒவ்வொரு பிரிவின் உணர்வும் இதுதான்.

நீண்ட காலமாக உரிமைகள் பற்றிய விவாதங்கள் மட்டுமே இருந்தன. அரசின் கடமைகள் குறித்தும் வலியுறுத்தினோம். இது நாட்டு மக்களிடையேயும் கடமை உணர்வை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, ஒருவர் தனது கடமைகளை நிறைவேற்றுவது ஒருவரின் உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது என்ற உணர்வு உருவாக்கப்பட்டுள்ளது.

இதுவரை வளர்ச்சிப் பாதையில் இருந்து விலகி இருந்தவர்கள் மீதும் எனது அரசு அக்கறை கொண்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான பழங்குடியின கிராமங்களுக்கு மின்சாரம், சாலை  வசதிகள் முதல்முறையாக வழங்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான பழங்குடியின குடும்பங்கள் இப்போது குழாய் மூலம் குடிநீர் பெறத் தொடங்கியுள்ளன. சிறப்பு இயக்கத்தின் கீழ், பெரும்பாலும் பழங்குடியினர் வசிக்கும் ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கு 4ஜி இணைய வசதியை எனது அரசு வழங்கி வருகிறது. வனப் பொருட்கள் மையங்கள் ஏற்படுத்தப்பட்டது மற்றும் 90-க்கும் அதிகமான வன விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்பட்டதன் மூலம் பழங்குடியினர் பெரிதும் பயனடைந்துள்ளனர்.

 முதன்முறையாக, எனது அரசு குறிப்பாக பாதிக்கக்கூடிய பழங்குடியினக் குழுக்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது. இந்தக் குழுக்களுக்காக ரூ.24 ஆயிரம் கோடி செலவில் பிரதமரின் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பல தலைமுறைப் பழங்குடி குடும்பங்கள் அரிவாள் செல் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  முதன்முறையாக, இதை சரி செய்ய ஒரு தேசிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் கீழ் இதுவரை சுமார் ஒரு கோடியே 40 லட்சம் பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்காக எனது அரசு மாற்றுத்திறனாளிகளுக்கான பாரதத்  திட்டத்தையும் தொடங்கியுள்ளது. இந்திய சைகை மொழியில் பாடப்புத்தகங்களும் கிடைக்கின்றன.

சமூகத்தில் திருநங்கைகளுக்கு மரியாதைக்குரிய அந்தஸ்து வழங்கவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் ஒரு சட்டமும் இயற்றப்பட்டுள்ளது.

மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,

22. விஸ்வகர்மா குடும்பங்கள் இல்லாமல் அன்றாட வாழ்க்கையைக் கற்பனை செய்து பார்ப்பது கடினம்.   இந்தக் குடும்பங்கள் தங்கள் திறமைகளை ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்குக் கற்றுக்கொடுக்கின்றன. இருப்பினும், அரசு ஆதரவு இல்லாததால், நமது விஸ்வகர்மா நண்பர்கள் கடினமான நேரத்தை எதிர்கொண்டனர். அத்தகைய விஸ்வகர்மா குடும்பங்களை எனது அரசு கவனித்துக் கொண்டுள்ளது. பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் இதுவரை 84 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர்.

பல பத்தாண்டுகளாக, நமது நண்பர்கள் சாலையோர வியாபாரிகளாகப் பணி புரிந்தனர். பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான நிதியுதவி திட்டத்தின் மூலம் அவர்களுக்கு வங்கி சேவையை அணுக எனது அரசு அனுமதி அளித்துள்ளது. இதுவரை, 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது நம்பிக்கை வைத்து, அரசு பிணை இல்லாத கடன்களை வழங்கியது. இந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தி, பெரும்பாலான மக்கள் கடனை திருப்பிச் செலுத்தியது மட்டுமின்றி, அடுத்தத் தவணையையும் பெற்றனர். பெரும்பாலான பயனாளிகள் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பெண்கள் ஆவர்.

மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,

  23. "அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி" என்ற மந்திரத்தின் அடிப்படையில் வழிநடத்தப்படும் எனது அரசு, சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் நியாயமான வாய்ப்புகளை வழங்க உறுதிபூண்டுள்ளது.

முதல்முறையாக இடஒதுக்கீட்டின் பலன் பொதுப்பிரிவில் உள்ள  பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளில் மத்திய ஒதுக்கீட்டின் கீழ் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சாசன அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

பாபா சாஹேப் அம்பேத்கருடன் தொடர்புடைய 5 இடங்கள் பஞ்சதீர்த்தமாக மேம்படுத்தப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட 10 அருங்காட்சியகங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,

   24. பல பத்தாண்டுகளாக புறக்கணிக்கப்பட்டிருந்த பகுதிகளுக்கு எனது அரசு முதல் முறையாக வளர்ச்சியைக் கொண்டு வந்துள்ளது. எல்லையை ஒட்டிய கிராமங்கள் நாட்டின் கடைசி கிராமங்களாக பார்க்கப்பட்டன. அவற்றை நாட்டின் முதல் கிராமங்களாக அங்கீகரித்தோம். இந்த கிராமங்களை மேம்படுத்தும் வகையில், துடிப்பான கிராமத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

 நமது தொலைதூர தீவுகளான அந்தமான்-நிக்கோபார் மற்றும் லட்சத்தீவுகள் வளர்ச்சி குறைந்து காணப்பட்ட நிலையில், இந்தத் தீவுகளிலும் நவீன வசதிகளை எனது அரசு உருவாக்கியுள்ளது. அங்கு சாலைகள், விமானப் போக்குவரத்து, அதிவேக இணைய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சில வாரங்களுக்கு முன், லட்சத்தீவுகளும் நீருக்கடியில் அமைக்கப்பட்ட கண்ணாடி இழை மூலம் இணைக்கப்பட்டன. இதன் மூலம் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் பயனடைவார்கள்.

முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களின் வளர்ச்சிக்கு எங்கள் அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, அரசு முன்னேற விரும்பும் வட்டங்கள் திட்டத்தையும் தொடங்கியுள்ளது. நாட்டின் பின்தங்கிய வட்டங்களின் வளர்ச்சிக்கு தற்போது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,

  25. இன்று எனது அரசு எல்லை முழுவதிலும் நவீன உள்கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. முன்னுரிமை அடிப்படையில் இந்த வேலை நீண்ட காலத்திற்கு முன்பே செய்யப்பட்டிருக்க வேண்டும். பயங்கரவாதமாக இருந்தாலும், ஊடுருவலாக இருந்தாலும், நமது படைகள் இன்று தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றன.

உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்த எனது அரசு மேற்கொண்ட முயற்சிகளின் உறுதியான பலன்கள் எங்களுக்குத் தெரிகின்றன.

ஜம்மு-காஷ்மீரில் இன்று பாதுகாப்பு உணர்வு ஏற்பட்டுள்ளது.

வேலைநிறுத்தம் காரணமாக சந்தைகளின் முந்தைய வெறிச்சோடிய தோற்றம் நெரிசலான சந்தைகளின் காட்சிகளால் மாற்றப்பட்டுள்ளது.

வடகிழக்கில் பிரிவினைவாத சம்பவங்கள் கணிசமாகக்  குறைந்துள்ளன.

நிரந்தர சமாதானத்தை நோக்கி பல அமைப்புகள் நடவடிக்கை எடுத்துள்ளன.

நக்சல் பாதிப்பு பகுதிகள் குறைந்து, நக்சல் வன்முறை வெகுவாகக் குறைந்துள்ளது.

மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,

26. எதிர்வரும் நூற்றாண்டுகளுக்கான எதிர்காலத்தை இந்தியா எழுத வேண்டிய நேரம் இது.   நமது முன்னோர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமக்கு ஒரு பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளனர். இன்றும் நம் முன்னோர்களின் தனித்துவமான சாதனைகளைப் பெருமையுடன் நினைவுகூர்கிறோம். இன்றைய தலைமுறையினர் பல நூற்றாண்டுகளுக்கு நினைவுகூரப்படும் நீடித்த பாரம்பரியத்தை உருவாக்க வேண்டும்.

 எனவே, எனது அரசு தற்போது மகத்தான தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு வருகிறது.

 இந்தத் தொலைநோக்குப் பார்வை அடுத்த 5 ஆண்டுகளுக்கான திட்டத்தையும் கொண்டுள்ளது. இது அடுத்த 25 ஆண்டுகளுக்கான ஒரு திட்டத்தையும் கொண்டுள்ளது. எங்களைப் பொறுத்தவரை, வளர்ச்சியடைந்த பாரதத்தின் தொலைநோக்குப் பார்வை என்பது பொருளாதார வளத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை. சமூக, கலாச்சார மற்றும் உத்திசார்ந்த வலிமைகளுக்கு நாங்கள் சமமான முக்கியத்துவம் அளித்து வருகிறோம். அவை இல்லாமல், வளர்ச்சியும், பொருளாதார செழிப்பும் நிரந்தரமாக இருக்காது. கடந்த பத்தாண்டுகளில் எடுக்கப்பட்ட முடிவுகளும் இந்த நோக்கத்தை மனதில் கொண்டே எடுக்கப்பட்டுள்ளன. இந்த இலக்கை மனதில் வைத்து மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,

27. இன்று உலகின் ஒவ்வொரு நிறுவனமும் இந்தியாவின் விரைவான வளர்ச்சி குறித்து உறுதியளிக்கப்பட்டுள்ளது.   தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளின் மதிப்பீடுகள் இந்தியாவின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. உள்கட்டமைப்பு, கொள்கை சீர்திருத்தங்களில் சாதனை முதலீடுகள், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கின்றன. முழு பெரும்பான்மையுடன் ஒரு நிலையான, வலுவான அரசை இந்தியர்கள் விரும்புவது உலகின் நம்பிக்கையை புதுப்பித்துள்ளது.

உலகளாவிய விநியோக அமைப்பை இந்தியாவால் மட்டுமே வலுப்படுத்த முடியும் என்று தற்போது உலகநாடுகள் நம்புகின்றன. அதனால்தான் இந்தியாவும் தற்போது இந்தத் திசையில் பெரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாட்டில் சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வலுவான கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.

   எனது அரசு 14 துறைகளுக்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், இதுவரை சுமார் 9 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உற்பத்தி நடைபெற்றுள்ளது. இதன் மூலம் நாட்டில் லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளும், சுய வேலைவாய்ப்புகளும் உருவாகியுள்ளன.

 மின்னணு, மருந்து, உணவுப் பதப்படுத்துதல், மருத்துவ சாதனங்கள் துறைகளுக்கும் உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம் பயனளிக்கிறது. மருத்துவ சாதனங்கள் தொடர்பான ஏராளமான திட்டங்களில் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. எனது அரசு நாட்டில் 3 மொத்த உற்பத்தி மருந்துப் பூங்காக்களை உருவாக்கியுள்ளது.

மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,

28. இன்று இந்தியாவில் தயாரிக்கப்பட்டது உலகளாவிய தயாரிப்பாக மாறியுள்ளது.   தற்போது, இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்ற திட்டம் நமது குறித்து உலக நாடுகள் மிகவும் உற்சாகமாக உள்ளன. "தற்சார்பு இந்தியா" என்ற நோக்கத்தை உலகம் பாராட்டுகிறது. இன்று உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் இந்தியாவில் வளர்ந்து வரும் துறைகள் குறித்து உற்சாகமாக உள்ளன. செமிகண்டக்டர் துறையில் முதலீடு செய்வதன் மூலம் இது விளக்கப்படுகிறது. மின்னணு மற்றும் வாகன உற்பத்தித் துறைகள் செமிகண்டக்டர் துறையால் கணிசமாகப் பயனடைகின்றன.

எனது அரசு பசுமை நகர்வைப் பெரிய அளவில் ஊக்குவித்து வருகிறது. நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் லட்சக்கணக்கான மின்சார வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பெரிய விமானங்களைத் தயாரிக்கவும் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளோம். வருங்காலத்தில் உற்பத்தித் துறையில் கோடிக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,

29. தற்போது உலகம் முழுவதும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களுக்கு சிறப்பு தேவை உள்ளது.   அதனால்தான் எனது அரசு  ‘சுற்றுச்சூழலை பாதிக்காத, குறைபாடில்லாத’ என்பதற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. நாங்கள் இப்போது பசுமை எரிசக்திக்கு அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.

10 ஆண்டுகளில், புதைபடிவ எரிபொருள் அல்லாத எரிசக்தி திறன் 81 ஜிகாவாட்டிலிருந்து 188 ஜிகாவாட்டாக அதிகரித்துள்ளது.

இந்தக் காலகட்டத்தில், சூரிய மின்சக்தி திறன் 26 மடங்கு அதிகரித்துள்ளது.

அதேபோல், காற்றாலை மின் உற்பத்தி இரு மடங்காக அதிகரித்துள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் நிறுவப்பட்ட திறனைப் பொறுத்தவரை நாம் உலகில் நான்காவது இடத்தில் இருக்கிறோம்.

காற்றாலை மின் உற்பத்தித் திறனில் நாம் நான்காவது இடத்தில் உள்ளோம்.

சூரியசக்தி திறனில் நாம் ஐந்தாவது இடத்தில் உள்ளோம்.

2030-ம் ஆண்டுக்குள் இந்தியா தனது மின்சார நிறுவப்பட்ட திறனில் 50 சதவீதத்தைப் புதைபடிவம் அல்லாத எரிபொருட்களிலிருந்து அடைய இலக்கு நிர்ணயித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில், 11 புதிய சூரியசக்தி பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று 9 சூரியசக்தி பூங்காக்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

சில நாட்களுக்கு முன், சூரிய மேற்கூரை அமைப்புகளுக்கான புதிய திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் 1 கோடி குடும்பங்களுக்கு உதவி வழங்கப்படும். இதனால், மக்களின் மின் கட்டணம் குறைந்து, உபரியாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மின் சந்தையில் கொள்முதல் செய்யப்படும்.

அணுசக்தித் துறையிலும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. எனது அரசு 10 புதிய அணுமின் நிலையங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ஹைட்ரஜன் எரிசக்தித் துறையிலும் இந்தியா விரைவாக முன்னேறுகிறது. இதுவரை, லடாக், டாமன்-டையூவில் இரண்டு திட்டங்களை நாங்கள் தொடங்கியுள்ளோம்.

எத்தனால் துறையில் எனது அரசு முன்னெப்போதும் இல்லாத வகையில் பணியாற்றியுள்ளது. 12 சதவீத எத்தனால் கலப்பு என்ற இலக்கை நாடு எட்டியுள்ளது. 20 சதவீத எத்தனால் கலப்பு என்ற இலக்கும் மிக விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது. இது நமது விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும். இதுவரை அரசு நிறுவனங்கள் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள எத்தனாலைக் கொள்முதல் செய்துள்ளன. இந்த முயற்சிகள் அனைத்தும் நமது எரிசக்தித் தேவைகளுக்கு வெளிநாடுகளை சார்ந்திருப்பதைக் குறைக்கும். சில நாட்களுக்கு முன், வங்காள விரிகுடாவில் ஒரு புதிய பகுதியில் எண்ணெய் உற்பத்தி தொடங்கியது. இது நாட்டுக்கு மிகப்பெரிய சாதனையாகும்.

மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,

30. புவியில் உள்ள முக்கியமான கனிமங்களின் அளவு வரையறுக்கப்பட்டுள்ளது.   அதனால்தான் எனது அரசு சுழற்சிப் பொருளாதாரத்தை ஊக்குவித்து வருகிறது. இந்தியாவின் முதலாவது 'பழைய வாகனங்கள் அகற்றுதல்’ கொள்கையும் இந்த நோக்கத்தை அடைய முயல்கிறது.

ஆழ்கடல் சுரங்கம் மூலம் கனிமங்களின் வாய்ப்புகளை ஆராய்வதும் முக்கியமானது. இந்த இலக்கை மனதில் கொண்டு ஆழ்கடல் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பணி கடல்வாழ் உயிரினங்களைப் பற்றிய நமது புரிதலை மேம்படுத்தும். இந்தியாவைச் சேர்ந்த 'சமுத்திரயான்' இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்தியாவை உலகின் முக்கிய விண்வெளி சக்தியாக மாற்றுவதில் எனது அரசு ஈடுபட்டுள்ளது. இது மனித வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாகும். தவிர, இது விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கை அதிகரிக்கவும் முயற்சிக்கிறது. இந்தியாவின் விண்வெளித் திட்டத்தை விரிவுபடுத்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இது பல புதிய விண்வெளித் தொடக்கங்களை உருவாக்க வழிவகுத்தது. இந்தியாவின் ககன்யான் விண்ணை அடையும் நாள் வெகு தொலைவில் இல்லை.

மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,

31. எனது அரசு இந்தியாவை உலகின் முன்னணி டிஜிட்டல் பொருளாதாரங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது.   இதன் மூலம் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

நான்காவது தொழில் புரட்சியில் இந்தியா உலகின் முன்னணியில் இருக்க வேண்டும் என்பதே எங்களது முயற்சியாகும்.

செயற்கை நுண்ணறிவு இயக்கத்தில் எனது அரசு செயல்பட்டு வருகிறது. இது இந்திய இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளை வழங்கும். இது புத்தொழில் நிறுவனங்களுக்கான வாய்ப்புகளைத் திறக்கும். இது வேளாண்மை, சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவரும்.

தேசிய குவாண்டம் இயக்கத்திற்கும் எனது அரசு ஒப்புதல் அளித்துள்ளது. குவாண்டம் கம்ப்யூட்டிங் ஒரு புதிய தலைமுறைக்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்கும். இதில் இந்தியா முன்னணியில் இருப்பதை உறுதி செய்வதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,

32. இந்திய இளைஞர்களின் கல்வி, திறன் மேம்பாட்டுக்காக எனது அரசு தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு, விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தேசிய கல்விக் கொள்கையில், தாய்மொழி, இந்திய மொழிகளில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பொறியியல், மருத்துவம், சட்டம் போன்ற பாடங்கள் இந்திய மொழிகளில் கற்பிக்கத் தொடங்கப்பட்டுள்ளன.

பள்ளி மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்குவதற்காக, 14,000-க்கும் மேற்பட்ட 'பிரதமரின் ஸ்ரீ வித்யாலயா'க்களை எனது அரசு செயல்படுத்தி வருகிறது. இவற்றில் 6000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்படத் தொடங்கியுள்ளன.

எனது அரசின் முயற்சிகள் காரணமாக நாட்டில் இடைநிற்றல் விகிதம் குறைந்துள்ளது. உயர்கல்வியில் மாணவிகளின் சேர்க்கை அதிகரித்துள்ளது. ஷெட்யூல்டு வகுப்பு மாணவர்களின் சேர்க்கை சுமார் 44 சதவீதமும், பழங்குடியின மாணவர்களின் சேர்க்கை 65 சதவீதத்திற்கு அதிகமாகவும், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் சேர்க்கை 44 சதவீதத்திற்கு அதிகமாகவும் அதிகரித்துள்ளது.

அடல் புதுமை கண்டுபிடிப்பு இயக்கத்தின் கீழ், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக 10,000 அடல் டிங்கரிங் சோதனைக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 1 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

2014-ம் ஆண்டு வரை நாட்டில் 7 எய்ம்ஸ் மருத்துவமனைகளும், 390-க்கும் குறைவான மருத்துவக் கல்லூரிகளும் இருந்தன. கடந்த பத்தாண்டுகளில் 16 எய்ம்ஸ் மருத்துவமனைகளும், 315 மருத்துவக் கல்லூரிகளும் நிறுவப்பட்டுள்ளன.

157 செவிலியர் கல்லூரிகளும் நிறுவப்பட்டு வருகின்றன.

கடந்த பத்தாண்டுகளில், எம்.பி.பி.எஸ் இடங்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.

மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,

33. சுற்றுலா என்பது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ஒரு பெரிய துறையாகும்.   கடந்த 10 ஆண்டுகளில், சுற்றுலாத் துறையில் எனது அரசு முன்னெப்போதும் இல்லாத வகையில் பணியாற்றியுள்ளது. இந்தியாவுக்கு வரும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையுடன், இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்குக் காரணம் இந்தியாவின் வளர்ந்து வரும் நிலையே ஆகும். இன்று உலகம் இந்தியாவை ஆராயவும், தெரிந்து கொள்ளவும் விரும்புகிறது. இது தவிர, சிறந்த போக்குவரத்து காரணமாக சுற்றுலாவின் வாய்ப்பும் அதிகரித்துள்ளது. பல்வேறு இடங்களில் விமான நிலையங்கள் அமைவதும் சாதகமாக உள்ளது. தற்போது, வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை வரலாறு காணாத அளவில் அதிகரித்து வருகிறது. இப்போது அந்தமான்-நிக்கோபார் மற்றும் லட்சத்தீவுகளில் உற்சாகம் அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள புனித தலங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை மேம்படுத்துவதற்கு எனது அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதனால் இந்தியாவில் புனித யாத்திரை மேற்கொள்வது தற்போது எளிதாகியுள்ளது. அதே நேரத்தில், இந்தியாவின் பாரம்பரிய சுற்றுலா மீது உலக அளவில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. கடந்த ஓராண்டில் 8.5 கோடி பேர் காசிக்கு வருகை தந்துள்ளனர். 5 கோடிக்கும் அதிகமான மக்கள் மகாகாலுக்கு வருகை தந்துள்ளனர். 19 லட்சத்துக்கும் அதிகமானோர் கேதார் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர். "பிராண பிரதிஷ்டை" நடைபெற்ற பிறகு 5 நாட்களில் 13 லட்சம் பக்தர்கள் அயோத்திக்கு வருகை தந்துள்ளனர். கிழக்கு-மேற்கு-வடக்கு-தெற்கு என இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் புனிதத் தலங்களின் வசதிகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விரிவடைந்துள்ளன.

 கூட்டங்கள், கண்காட்சிகள் தொடர்பான துறைகளுக்கான முன்னணி இடமாக இந்தியாவை மாற்றவும் எனது அரசு விரும்புகிறது. இதற்காக பாரத் மண்டபம், யசோபூமி போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வருங்காலத்தில் சுற்றுலா முக்கிய வேலைவாய்ப்பு ஆதாரமாக அமையும்.

மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,

 34. நாட்டின் இளைஞர்களை திறன், வேலைவாய்ப்புடன் இணைப்பதற்காக விளையாட்டுப் பொருளாதாரத்தை நாங்கள் வலுப்படுத்தி வருகிறோம். விளையாட்டு வீரர்களுக்கு எனது அரசு முன்னெப்போதும் இல்லாத ஆதரவை அளித்துள்ளது. இன்று இந்தியா ஒரு சிறந்த விளையாட்டு சக்தியாக மாறுவதை நோக்கி நகர்ந்து வருகிறது.

விளையாட்டு வீரர்களுடன், விளையாட்டு தொடர்பான இதர அம்சங்களுக்கும் இன்று நாங்கள் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இன்று தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளது. நாட்டில் ஏராளமான சிறப்பு மையங்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இது இளைஞர்களுக்கு விளையாட்டை ஒரு தொழிலாகத் தேர்வு செய்வதற்கான வாய்ப்பை வழங்கும். விளையாட்டு உபகரணங்கள் உற்பத்தித் தொழிலுக்கு அனைத்து வகையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த 10 ஆண்டுகளில், பல விளையாட்டுகள் தொடர்பான சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

'எனது இளைய பாரதம்' அமைப்பு நமது இளைஞர்களை ஊக்குவித்து, 'வளர்ச்சியடைந்த பாரதம்' கட்டமைப்பதில் பங்களிக்கவும், அவர்களிடையே கடமை உணர்வையும், சேவை மனப்பான்மையையும் ஏற்படுத்தவும் உருவாக்கப்பட்டது. இதுவரை, சுமார் 1 கோடி இளைஞர்கள் இந்த முயற்சியில் இணைந்துள்ளனர்.

மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,

35. எழுச்சி நிலவும் காலகட்டத்தில் வலுவான அரசு இருப்பதன் பயனை நாம் காண்கிறோம்.   கடந்த 3 ஆண்டுகளாக உலகம் இக்கட்டான நிலையில் கொந்தளிப்பில் உள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் பல மோதல்கள் நடந்து வருகின்றன. இந்தக் கடினமான காலங்களில் இந்தியாவை உலக நண்பனாக எனது அரசு நிறுவியுள்ளது. இந்தியாவின் இந்தப் பங்களிப்பு காரணமாகவே நாம் இன்று உலகளாவிய தெற்கின் குரலாக மாறியுள்ளோம்.

கடந்த 10 ஆண்டுகளில், மற்றொரு வழக்கமான சிந்தனை முறை மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக, அரசு தொடர்பான நடவடிக்கைகள் தில்லியில் மட்டும் நடைபெற்றன. இதிலும் பொதுமக்கள் நேரடியாக பங்கேற்பதை எனது அரசு உறுதி செய்துள்ளது. இதற்கு ஒரு சிறந்த உதாரணத்தை இந்தியாவின் ஜி-20 தலைமையின் போது பார்த்தோம். ஜி-20 அமைப்பை இந்தியா மக்களுடன் இணைத்த விதம் முன்னெப்போதும் இல்லாதது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் மூலம் இந்தியாவின் உண்மையான திறனை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. ஜம்மு-காஷ்மீர், வடகிழக்குபகுதிகள் முதல் முறையாக இதுபோன்ற பெரிய சர்வதேச நிகழ்வுகளைக் கண்டன.

இந்தியாவில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஜி-20 உச்சி மாநாட்டை ஒட்டுமொத்த உலகமும் பாராட்டியது. பிளவுபட்ட சூழலிலும் தில்லிப் பிரகடனத்தை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது வரலாற்று சிறப்புமிக்கது. 'மகளிர் தலைமையிலான வளர்ச்சி' முதல் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் வரையிலான இந்தியாவின் பார்வை இந்தப் பிரகடனத்தின் அடிப்படையாக மாறியுள்ளது.

ஜி-20 அமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியத்திற்கு நிரந்தர உறுப்பினர் பதவி கிடைக்க நாங்கள் மேற்கொண்ட முயற்சிகளும் பாராட்டுக்குரியவை. இந்த மாநாட்டின் போது, இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா வழித்தடத்தின் முன்னேற்றம் அறிவிக்கப்பட்டது. இந்த வழித்தடம் இந்தியாவின் கடல்சார் திறனை மேலும் வலுப்படுத்தும். உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியின் தொடக்கமும் ஒரு பெரிய நிகழ்வாகும். இத்தகைய நடவடிக்கைகள் உலகளாவிய பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இந்தியாவின் பங்கை விரிவுபடுத்துகின்றன.

மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,

36. உலகளாவிய பிரச்சனைகள், மோதல்கள் நிறைந்த இந்த சகாப்தத்தில் கூட, எனது அரசு இந்தியாவின் நலன்களை உலகநாடுகள் முன் உறுதியாக வைத்துள்ளது.   இந்தியாவின் இன்றைய வெளியுறவுக் கொள்கையின் நோக்கம் கடந்த காலத்தின் கட்டுப்பாடுகளுக்கு அப்பால் சென்றுள்ளது. இன்று இந்தியா பல உலகளாவிய அமைப்புகளில் மரியாதைக்குரிய உறுப்பினராக உள்ளது. இன்று பயங்கரவாதத்திற்கு எதிராக உலகின் முன்னணிக் குரலாக இந்தியா திகழ்கிறது.

 இன்று இந்தியா வலுவாக எதிர்வினையாற்றி, நெருக்கடிகளில் சிக்கியுள்ள மனிதகுலத்திற்கான முன்முயற்சிகளை மேற்கொள்கிறது. இன்று உலகில் எங்கு நெருக்கடி ஏற்பட்டாலும், இந்தியா உடனடியாக பதிலளிக்க முயற்சிக்கிறது. உலகெங்கிலும் பணியாற்றும் இந்தியர்களுக்கு எனது அரசு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நெருக்கடி ஏற்பட்ட இடங்களில் ஆபரேஷன் கங்கா, ஆபரேஷன் காவேரி, வந்தே பாரத் போன்ற இயக்கங்கள் மூலம் ஒவ்வொரு இந்தியரையும் நாங்கள் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளோம்.

  யோகா, பிராணாயாமம், ஆயுர்வேதம் போன்ற இந்தியப் பாரம்பரியங்களை உலகம் முழுவதும் கொண்டு செல்ல எனது அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் கடந்த ஆண்டு 135 நாடுகளின் பிரதிநிதிகள் ஒன்றாக யோகா செய்தனர். இது ஒரு சாதனைதான். ஆயுஷ் வளர்ச்சிக்காக எனது அரசு புதிய அமைச்சகத்தை அமைத்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவத்திற்கான முதல் உலகளாவிய மையம் இந்தியாவில் நிறுவப்பட்டு வருகிறது.

மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,

37. நாகரிகங்களின் வரலாற்றில் முக்கிய தருணங்கள் உள்ளன. அவை எதிர்வரும் நூற்றாண்டுகளுக்கான எதிர்காலத்தை வடிவமைக்கின்றன.   இந்திய வரலாற்றிலும் இதுபோன்ற பல முக்கியமான தருணங்கள் இருந்திருக்கின்றன.

இந்த ஆண்டு, ஜனவரி 22 அன்று, இதேபோன்ற ஒரு தருணத்தை நாடு கண்டது.

பல நூற்றாண்டுகளாகக் காத்திருந்த ராம் லல்லா (குழந்தை ராமர்) இப்போது அயோத்தியில் உள்ள அவரது பிரமாண்டமான கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.

இது நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் விருப்பம், நம்பிக்கை சார்ந்த விஷயமாகும், இதற்கான தீர்வு இணக்கமான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,

38. நீங்கள் அனைவரும் கோடிக்கணக்கான இந்தியர்களின் விருப்பங்களை பிரதிநிதித்துவம் செய்கிறீர்கள்.   பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் இளைஞர்களின் கனவுகள் முற்றிலும் மாறுபட்டவை. அமிர்தத் தலைமுறையினரின் கனவுகளை நனவாக்க எந்த வாய்ப்பையும் விட்டுவிடாமல் இருக்க வேண்டியது நம் அனைவரின் பொறுப்பாகும். வளர்ச்சியடைந்த பாரதம் நமது அமிர்தத் தலைமுறையினரின் கனவுகளை நிறைவேற்றும். இதற்காக, இந்த முயற்சியில் வெற்றியடைய நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,

39.   மதிப்பிற்குரிய அடல் அவர்கள் கூறினார்:-

உங்கள் பணியை,

நாங்கள் ஒருபோதும் நிறுத்தவில்லை.

ஒரு சவாலை எதிர்கொள்ளும் போது

நாங்கள் ஒருபோதும் மண்டியிட்டதில்லை.

நாட்டின் 140 கோடி மக்களின் கனவுகளை நிறைவேற்றும் உத்தரவாதத்துடன் எனது அரசு முன்னேறி வருகிறது.

இந்தப் புதிய நாடாளுமன்ற அவை, இந்தியாவின் விருப்பப் பயணத்திற்குத் தொடர்ந்து வலு சேர்க்கும் என்றும், புதிய, ஆரோக்கியமான பாரம்பரியங்களை உருவாக்கும் என்றும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

2047-ம் ஆண்டைக் காண பல நண்பர்கள் இந்த அவையில் இருக்க மாட்டார்கள். ஆனால், எதிர்கால சந்ததியினர் நம்மை நினைவுகூரும் வகையில் நமது மரபு இருக்க வேண்டும்.

உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

நன்றி!

ஜெய் ஹிந்த்!

ஜெய் பாரத்!

***********

(Release ID: 2000781)

ANU/SMB/PLM/KPG/IR/AG/KRS

 



(Release ID: 2000946) Visitor Counter : 153