வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

தண்ணீர் தீபாவளி - "பெண்களுக்காக நீர் , நீருக்காகப் பெண்கள்" என்ற இயக்கம் தொடங்கப்படுகிறது - நீர் நிர்வாகத்தில் பெண்களை பங்கேற்க வைக்கும் நடவடிக்கையாக சுய உதவிக் குழுவினர் 550 க்கும் அதிகமான நீர் சுத்திகரிப்பு நிலையங்களைப் பார்வையிடுவார்கள்

Posted On: 06 NOV 2023 11:57AM by PIB Chennai

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கமும் புத்துயிரூட்டல் மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் இயக்கம் எனப்படும் அம்ருத் திட்டமும் இணைந்து "நீருக்காகப் பெண்கள், பெண்களுக்காக நீர் இயக்கம்" என்ற முற்போக்கான முன்முயற்சியை அறிமுகப்படுத்துகின்றன. ஒடிசா அர்பன் அகாடமி அறிவுசார் கூட்டு செயல்பாட்டு நிறுவனமாக இதில் செயல்ப[டும். இந்த இயக்கம் "தண்ணீர் தீபாவளியைக்" கொண்டாடுகிறது. இது 2023 நவம்பர் 7-ல் தொடங்கி நவம்பர் 9 வரை நடைபெறும்.

நீர் நிர்வாகத்தில் பெண்களை இணைப்பதற்கான தளத்தை வழங்குவதை இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்தந்த நகரங்களில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்குச் சென்று பார்வையிடுவதன் மூலம் நீர் சுத்திகரிப்பு செயல்முறைகள் குறித்து அவர்களுக்கு நேரடி விளக்கம் வழங்கப்படும். வீடுகளுக்குத் தூய்மையான மற்றும் பாதுகாப்பான குடிநீரை வழங்குவதில் உள்ள முக்கிய நடைமுறைகள் குறித்து இதில் எடுத்துக் கூறப்படும்.   நீர் தரச் சோதனை நெறிமுறைகளைப் பற்றியும் பெண்களுக்கு விளக்கப்படும்.

இந்தியாவில் 3,000-க்கும் அதிகமான நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. அவை 65,000 எம்.எல்.டி-க்கும் அதிகமான நீர் சுத்திகரிப்புத் திறன் மற்றும் 55,000 எம்.எல்.டி- க்கும் அதிகமான செயல்பாட்டுத் திறன் கொண்டவை. இந்த இயக்கத்தின் போது, மகளிர் சுய உதவிக் குழுவினர், 550-க்கும் மேற்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்களைப் பார்வையிடுவார்கள். 

வீட்டு நீர் மேலாண்மையில் பெண்கள் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். நீர் சுத்திகரிப்பு செயல்முறைகள் மற்றும் உள்கட்டமைப்பு பற்றிய தகவல்களை பெண்களுக்கு வழங்குவதன் மூலம், அவர்களின் திறனை மேம்படுத்துவதை வீட்டுவசதி அமைச்சகம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

"பெண்களுக்காக  நீர், நீருக்காகப் பெண்கள் இயக்கம்", "தண்ணீர் தீபாவளி" ஆகியவற்றின் முதல் கட்டத்தில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலில் உள்ள 5 மாநிலங்களைத் தவிர, நாடு முழுவதும் மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 15,000 க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களின் பெண்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

***************

ANU/PKV/PLM/KV



(Release ID: 1974990) Visitor Counter : 131