பிரதமர் அலுவலகம்

வேலைவாய்ப்பு திருவிழாவில் 51,000 க்கும் மேற்பட்ட பணிநியமனக் கடிதங்களை பிரதமர் வழங்கினார்


"நீங்கள் இந்த 'அமிர்த காலத்தின்' 'அமிர்த பாதுகாவலன் "

"கடந்த சில ஆண்டுகளில், துணை ராணுவப் படைகளின் பணியாளர் சேர்ப்பு நடைமுறையில் நாங்கள் பல முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளோம்"

"சட்டத்தின் ஆட்சியால் பாதுகாப்பான சூழல் வளர்ச்சியின் வேகத்தை விரைவுபடுத்துகிறது"

"கடந்த 9 ஆண்டுகளில் ஒரு புதிய மாற்றத்தைக் காணலாம்"

"9 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தொடங்கப்பட்ட மக்கள் வங்கிக் கணக்கு, கிராமப்புற ஏழைகளின் பொருளாதார மேம்பாட்டில் பெரும் பங்கு வகிக்கிறது"

நாட்டில் சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை விரைவுபடுத்துவதில் மக்கள் வங்கிக் கணக்கு உண்மையில் கருத்தில் கொள்ளவேண்டியது

"அரசு மற்றும் நிர்வாகத்தில் மாற்றத்தைக் கொண்டு வரும் பணியில் இளைஞர்களாகிய நீங்கள் அனைவரும் எனக்கு மிகப்பெரிய பலம்"

Posted On: 28 AUG 2023 11:58AM by PIB Chennai

புதிதாக பணியில் சேர்க்கப்பட்ட 51,000 பேருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் பணி நியமனக் கடிதங்களை வழங்கினார். நாடு முழுவதும் 45 இடங்களில் வேலைவாய்ப்பு திருவிழாக்கள் நடைபெற்றது.  இந்த வேலைவாய்ப்பு திருவிழாவின் மூலம் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்), எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), சஷ்ஸதிரா சீமா பல் (எஸ்எஸ்பி), அசாம் ரைஃபிள்ஸ், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்), இந்தோ திபெத் எல்லைக் காவல் படை (ஐடிபிபி) மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) மற்றும் டெல்லி காவல்துறை போன்ற பல்வேறு மத்திய பாதுகாப்பு காவல் படைகளில் (சிஏபிஎஃப்) பணியாளர்களை உள்துறை அமைச்சகம் பணியாளர்களை சேர்த்து வருகிறது.  நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்படும் இவர்கள், உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பல்வேறு நிறுவனங்களில் கான்ஸ்டபிள் (பொதுப்பணி), சப்-இன்ஸ்பெக்டர் (பொதுப்பணி) மற்றும் பொதுப்பணி அல்லாத கேடர் பதவிகள் போன்ற பல்வேறு பதவிகளில் சேருவார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், அமிர்த காலத்தின் 'அமிர்த பாதுகாவலன்' என்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் நாட்டுக்கு சேவை செய்வது மட்டுமல்லாமல், நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாப்பார்கள் என்பதால் அவர்களை அமிர்த பாதுகாவலன் என்று அழைத்தார். "நீங்கள் இந்த அமிர்த காலத்தின்  'அமிர்த பாதுகாவலன்" என்று பிரதமர் கூறினார்.

நாடு பெருமிதத்துடனும் நம்பிக்கையுடனும் இருக்கும் நேரத்தில் இந்த வேலைவாய்ப்பு திருவிழா நடைபெறுகிறது  என்பதை பிரதமர் சுட்டிக் காட்டினார். சந்திரயான்-3 மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை நிலவின் சமீபத்திய படங்களை தொடர்ந்து அனுப்புகின்றன என்று அவர் கூறினார். இந்த மதிப்புமிக்க தருணத்தில், புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்நாளின் மிக முக்கியமான பயணத்தைத் தொடங்குகிறார்கள் என்று கூறிய பிரதமர், புதிதாக நியமிக்கப்பட்ட அனைவருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

ராணுவம் அல்லது பாதுகாப்பு மற்றும் காவல் படைகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் வரும் பொறுப்பு குறித்து குறிப்பிட்ட பிரதமர், படைகளின் தேவைகள் குறித்து அரசு மிகவும் தீவிரமாக உள்ளது என்று கூறினார். துணை ராணுவப் படையில் பணியாளர் சேரப்பின் மாற்றங்களை அவர் குறிப்பிட்டார். விண்ணப்பம் முதல் இறுதித் தேர்வு வரை பணியாளர் சேர்ப்பு நடைமுறை விரைவுபடுத்தப்பட்டுள்ளது. முன்பு போலவே ஆங்கிலம் அல்லது இந்தி மற்றும் 13 உள்ளூர் மொழிகளில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. சத்தீஸ்கரில் நக்சல் பாதித்த பகுதிகளில் விதிமுறைகளை தளர்த்தி நூற்றுக்கணக்கான பழங்குடி இளைஞர்களை பணியில் அமர்த்தியதாக அவர் குறிப்பிட்டார். எல்லைப் பகுதி மற்றும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு குறித்தும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்வதில் புதிய பணியாளர்களின் பொறுப்புகளை எடுத்துரைத்த பிரதமர், சட்டத்தின் ஆட்சியின் மூலம் பாதுகாப்பான சூழல் வளர்ச்சியின் வேகத்தை விரைவுபடுத்துகிறது என்று கூறினார். உத்தரப்பிரதேசத்தை உதாரணமாகக் குறிப்பிட்ட பிரதமர், அந்த மாநிலம் ஒரு காலத்தில் வளர்ச்சியில் பின்தங்கியிருந்ததாகவும், குற்றச் செயல்களில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இருந்ததாகவும் குறிப்பிட்டார். உத்தரபிரதேசத்தில்  சட்டத்தின் ஆட்சி அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், மாநிலம் இப்போது வளர்ச்சியின் புதிய உயரங்களை அடைய முடிகிறது என்றும், அச்சமற்ற ஒரு புதிய சமூகம் நிறுவப்படுகிறது என்றும் அவர் மேலும் கூறினார். "சட்டம் ஒழுங்குக்கான இத்தகைய ஏற்பாடு மக்கள் மீதான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது", என்று அவர் மேலும் கூறினார். குற்ற விகிதம் குறைவதால் மாநிலத்தில் முதலீடுகள் அதிகரித்து வருவதாக குறிப்பிட்ட அவர், அதிக குற்ற விகிதம் உள்ள மாநிலங்களில் மிகக் குறைந்த முதலீடுகள் காணப்படுவதாகவும், அனைத்து வேலை வாய்ப்புகளும் தடைபட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். 

விரைவாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியாவின் நிலையைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்த பத்தாண்டுகளில் உலகின் முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் என்று மீண்டும் கூறினார். "மோடி அத்தகைய உத்தரவாதங்களை மிகுந்த பொறுப்புடன் வழங்குகிறார்", என்று பிரதமர் கூறினார். சாதாரண குடிமக்கள் மீதான வளர்ந்து வரும் பொருளாதாரத்தின் தாக்கம் குறித்து குறிப்பிட்ட பிரதமர், வளர்ச்சியை உறுதி செய்ய ஒவ்வொரு துறையும் வளர வேண்டியது அவசியம் என்றார். தொற்றுநோய்களின் போது மருந்துத் துறையின் பங்கு குறித்து அவர் பேசினார். இன்று, இந்தியாவின் மருந்துத் தொழில் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ளது. மேலும் 2030 ஆம் ஆண்டில் இந்தத் தொழில் சுமார் 10 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சியானது, வரும் ஆண்டுகளில் மருந்துத் துறைக்கு அதிக இளைஞர்கள் தேவைப்படுவார்கள் என்றும், இது பல வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் பிரதமர் கூறினார்.

வாகன உற்பத்தி மற்றும் வாகன உதிரிபாகங்கள் துறையின் விரிவாக்கம் குறித்து சுட்டிக் காட்டிய பிரதமர், இரண்டு தொழில்களின் மதிப்பு 12 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருப்பதாகவும், வரும் ஆண்டுகளில் இது மேலும் வளரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார். இந்த வளர்ச்சி விகிதத்தை பராமரிக்க வாகன உற்பத்தித் துறைக்கு மேலும் பல இளைஞர்கள் தேவைப்படுவார்கள் என்றும், இதன் மூலம் நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார். கடந்த ஆண்டு சுமார் 26 லட்சம் கோடி ரூபாயாக இருந்த உணவுப் பதப்படுத்தும் தொழில் அடுத்த மூன்றரை ஆண்டுகளில் 35 லட்சம் கோடியாக உயரும் என்றும் அவர் குறிப்பிட்டார். அத்துறை விரிவாக்கத்துடன் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கின்றன, என்று அவர் மேலும் கூறினார்.

உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து குறிப்பிட்ட பிரதமர், கடந்த ஒன்பது ஆண்டுகளில் மத்திய அரசு உள்கட்டமைப்புக்காக 30 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவிட்டுள்ளதாக தெரிவித்தார். இது இணைப்பு மற்றும் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றிற்கு ஊக்கமளிக்கிறது, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது.

2030-ம் ஆண்டுக்குள் சுற்றுலாத் துறை 20 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பங்களிப்பை அளிக்கும் என்றும், இதன் மூலம் 13-14 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் பிரதமர் கூறினார். இவை வெறும் எண்கள் அல்ல, இந்த முன்னேற்றங்கள் வேலைகளை உருவாக்குவதன் மூலமும், வாழ்க்கையை எளிதாக்குவதன் மூலமும், வருமானத்தை அதிகரிப்பதன் மூலமும் சாதாரண குடிமக்களின் வாழ்க்கை மேம்படும் என்று அவர் விளக்கினார்.

"கடந்த 9 ஆண்டுகளில் அரசின் முயற்சிகள் காரணமாக மாற்றத்தின் ஒரு புதிய சகாப்தத்தைக் காண முடியும்" என்று பிரதமர் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு இந்தியா சாதனை அளவிற்கு ஏற்றுமதி செய்தது, உலக சந்தையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கான தேவை அதிகரித்ததன் அறிகுறியாக இது உள்ளது என்று அவர் தெரிவித்தார். இதன் விளைவாக, உற்பத்தி அதிகரித்துள்ளது, வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது, அதன் மூலம் குடும்பத்தின் வருமானம் உயர்ந்துள்ளது என்று திரு. மோடி கூறினார். உலகின் இரண்டாவது பெரிய மொபைல் உற்பத்தி நாடாக இந்தியா மாறியுள்ளது என்றும், இந்தியாவில் மொபைல் போன்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். மொபைல் உற்பத்தி பன்மடங்கு அதிகரித்ததற்கு அரசின் முயற்சிகளே காரணம் என்று அவர் பாராட்டினார். நாடு இப்போது மற்ற மின்னணு சாதனங்களிலும் கவனம் செலுத்துகிறது என்று குறிப்பிட்ட திரு. மோடி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் வன்பொருள் உற்பத்தித் துறையில் மொபைல் உற்பத்தித் துறையின் வெற்றியை இந்தியா பிரதிபலிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

"மேட் இன் இந்தியா மடிக்கணினிகள் மற்றும் தனிப்பட்ட கணினிகள் நம்மை பெருமைப்படுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை" என்று பிரதமர் மேலும் கூறினார். உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்ற மந்திரத்தைக் இது சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மடிக்கணினிகள் மற்றும் கணினிகளை வாங்குவதற்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், இதன் விளைவாக உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் கூறினார். நாட்டில் இடம்பெறும் பொருளாதார அபிவிருத்திகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய பொறுப்பு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டவர்களின் மேல் சுமத்தப்பட்டுள்ளதாக அவர் மீண்டும் தெரிவித்தார்.

9 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் பிரதமரின் மக்கள் வங்கிக்கணக்குத் திட்டம் தொடங்கப்பட்டதை பிரதமர் நினைவு கூர்ந்தார். "கிராமப்புற ஏழை மக்களின் பொருளாதார வலுவூட்டலுடன் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் இந்தத் திட்டம் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளது என்று பிரதமர் கூறினார். இந்த திட்டத்தின் கீழ், கடந்த 9 ஆண்டுகளில், 50 கோடிக்கும் அதிகமான வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டம் ஏழை, எளிய மக்களுக்கு நேரடியாகவும், பழங்குடியினர், பெண்கள், தலித்துகள் மற்றும் இதர நலிவடைந்த பிரிவினரின் வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலைவாய்ப்புக்கும் உதவியது. பல இளைஞர்களுக்கு வங்கி முகவர்களாக வேலை கிடைத்தது. 21 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வங்கி முகவர்களாக ஈடுபட்டுள்ளனர் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். மக்கள் வங்கிக் கணக்குத் திட்டம், முத்ரா திட்டத்தை வலுப்படுத்துவதாக அவர் கூறினார். முத்ரா திட்டத்தின் கீழ் இதுவரை 24 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பிணையில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது என்றார். பயனாளிகளில், 8 கோடி பேர் முதல் முறை தொழில் முனைவோராக உள்ளனர். பிரதமரின் சாலையோர வியாபாரிகள் திட்டத்தின் கீழ், சுமார் 45 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு முதல் முறையாக பிணையில்லா கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  இந்த திட்டங்களின் பயனாளிகளில் ஏராளமான பெண்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின இளைஞர்கள் உள்ளனர். மக்கள் வங்கிக் கணக்குகள் கிராமங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களை வலுப்படுத்தியுள்ளன என்று பிரதமர் தொடர்ந்து கூறினார். "நாட்டில் சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை விரைவுபடுத்துவதில் மக்கள் வங்கிக் கணக்குத் திட்டத்தின் பங்கு உண்மையில் கருத்தில் கொள்ள வேண்டியது என்று அவர் மேலும் கூறினார்.

பல வேலைவாய்ப்பு திருவிழாக்களில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உரையாற்றிய பிரதமர், அவர்கள் பொது சேவை அல்லது பிற துறைகளில் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர் என்று கூறினார். "அரசு மற்றும் நிர்வாகத்தில் மாற்றத்தைக் கொண்டுவரும் பணியில் இளைஞர்களாகிய நீங்கள் அனைவரும் எனது மிகப்பெரிய பலம்" என்று பிரதமர் குறிப்பிட்டார். அனைத்து செயல்முறைகளையும்  ஒரு கிளிக் மூலம்  நிறைவேற்றும்  தலைமுறையிலிருந்து  இன்றைய  இளைஞர்கள் வந்துள்ளனர் என்று  பிரதமர் குறிப்பிட்டார். விரைவான விநியோகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், இன்றைய தலைமுறையினர் பிரச்சினைகளுக்கு தற்காலிக தீர்வுகளாக அல்லாமல், நிரந்தரத் தீர்வுகளைக் காண்கிறார்கள்  என்று கூறினார். அரசு ஊழியர்கள் என்ற வகையில், புதியவர்கள் நீண்டகால நோக்கில் மக்களுக்கு நன்மை பயக்கும் முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அவர் சுட்டிக் காட்டினார். "நீங்கள் சார்ந்த தலைமுறை எதையாவது சாதிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. இந்த தலைமுறை யாருடைய தயவையும் விரும்பவில்லை, அவர்களின் வழியில் யாரும் தடையாக இருக்கக்கூடாது என்று அவர்கள் விரும்புகிறார்கள் என்று பிரதமர் கூறினார். அரசு ஊழியர்களாக மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதன் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டினார். இந்த புரிதலுடன் செயல்பட்டால் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க நிறைய உதவிகள் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

நிறைவாக உரையாற்றிய பிரதமர், துணை ராணுவப் படைகளாக கற்றல் மனப்பான்மையை பராமரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், ஐ.ஜி.ஓ.டி கர்மயோகி தளத்தில் உள்ள 600-க்கும் மேற்பட்ட படிப்புகளை எடுத்துரைத்தார். இந்த இணையதளத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பதிவு செய்துள்ளனர். நீங்களும் இந்த இணையதளத்தில் இணைந்து பயன்பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று பிரதமர் தெரிவித்துள்ளார். இறுதியில், புதிதாக பணியில் சேர்பவர்களின் வாழ்க்கையில் உடல் தகுதி மற்றும் யோகாவை தினசரி பயிற்சியாக சேர்க்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார்.

***

AD/ANU/IR/RS/KPG



(Release ID: 1953009) Visitor Counter : 182