பிரதமர் அலுவலகம்

இலங்கை அதிபரின் இந்தியப் பயணத்தின்போது பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம்

Posted On: 21 JUL 2023 1:40PM by PIB Chennai

மேதகு அதிபர் ரணில் விக்கிரமசிங்க அவர்களே,

இரு நாட்டு பிரதிநிதிகளே,

அனைத்து ஊடக நண்பர்களே,

ஹலோ!

அயுபோவன்!

வணக்கம்!

அதிபர் விக்கிரமசிங்க மற்றும் அவரது தூதுக்குழுவினரை நான் அன்புடன் வரவேற்கிறேன். அதிபர் விக்கிரமசிங்க பதவியேற்று ஓராண்டு இன்று நிறைவு பெறுகிறது. இந்த தருணத்தில்நம் அனைவரின் சார்பிலும்அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஓராண்டு இலங்கை மக்களுக்கு சவால்கள் நிறைந்ததாக இருந்தது.  ஒரு நெருங்கிய நண்பர் என்ற முறையில்  எப்போதும் போலஇந்த நெருக்கடியான நேரத்தில் இலங்கை மக்களுடன் தோளோடு தோள் நிற்கிறோம். இந்த சவாலான சூழ்நிலைகளை தைரியமாக எதிர்கொண்ட இலங்கை மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நண்பர்களே.

நமது உறவுகள் நமது நாகரிகங்களைப் போலவே தொன்மையானவை மற்றும் விரிவானவை. இந்தியாவின் "அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை" கொள்கை"சாகர்" தொலைநோக்கு ஆகிய இரண்டிலும் இலங்கைக்கு ஒரு முக்கிய இடம் உள்ளது. இன்று இருதரப்புபிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்த எங்கள் கருத்துக்களை நாங்கள் பகிர்ந்து கொண்டோம். இந்தியா மற்றும் இலங்கையின் பாதுகாப்பு நலன்களும் வளர்ச்சியும் பின்னிப் பிணைந்தவை என்று நாங்கள் நம்புகிறோம். எனவேஒருவருக்கொருவர் பாதுகாப்பு மற்றும் உணர்திறன்களை மனதில் கொண்டு நாம் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம்.

நண்பர்களே,

இன்று நமது பொருளாதார கூட்டாண்மைக்கான தொலைநோக்கு ஆவணத்தை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். இந்த தொலைநோக்கு இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான கடல்சார்வான்எரிசக்தி மற்றும் மக்களுக்கு இடையிலான இணைப்பை வலுப்படுத்துவதாகும். சுற்றுலாமின்சாரம்வர்த்தகம்உயர்கல்விதிறன் மேம்பாடு ஆகியவற்றில் பரஸ்பர ஒத்துழைப்பை விரைவுபடுத்துவதே இதன் நோக்கமாகும். இதுதான் தொலைநோக்குப் பார்வை - இலங்கை மீதான இந்தியாவின் நீண்டகால அர்ப்பணிப்பு.

நண்பர்களே,

பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க முடிவு செய்துள்ளோம். இது இரு நாடுகளுக்கும் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான புதிய வாய்ப்புகளைத் திறக்கும்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான விமான இணைப்பை மேம்படுத்தவும் வர்த்தகம் மற்றும் மக்கள் நடமாட்டத்தை அதிகரிக்கவும் ஒப்புக் கொண்டுள்ளோம்தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் இலங்கையின் காங்கேசன் துறைக்கும் இடையே பயணிகள் படகு சேவைகளைத் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான மின் கட்டமைப்பை இணைக்கும் பணிகளை விரைவுபடுத்த முடிவு செய்துள்ளோம். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பெட்ரோலியக் குழாய் அமைப்பதற்கான சாத்தியக்கூறு பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும். இது தவிரதரைப்பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் சரிபார்க்க முடிவு செய்யப்பட்டது. இலங்கையில் யுபிஐயை அறிமுகப்படுத்த  இன்று கையெழுத்தான உடன்படிக்கையால்  ஃபின்டெக் இணைப்பும் அதிகரிக்கும்.

நண்பர்களே,

மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறித்தும் இன்று விவாதித்தோம். இந்த வியத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இலங்கையில் புனரமைப்பு மற்றும் நல்லிணக்கம் குறித்தும் நாங்கள் பேசினோம். அதிபர் விக்கிரமசிங்க தனது அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை குறித்து என்னிடம் கூறினார்.

இலங்கை அரசு தமிழர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் என்று நாங்கள் நம்புகிறோம். சமத்துவம்நீதி மற்றும் அமைதிக்கான மறுகட்டமைப்பு செயல்முறையை முன்னெடுக்கும்  பதின்மூன்றாவது திருத்தத்தை அமல்படுத்துவதற்கும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குமான அதன் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதுடன்இலங்கைத் தமிழ் சமூகத்திற்கு மரியாதையும் கண்ணியமும் நிறைந்த வாழ்வை இலங்கை உறுதி செய்யும்.

நண்பர்களே,

இருதரப்பு உறவுகளுக்கு இந்த ஆண்டு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. நமது தூதரக உறவுகளின் 75 வது ஆண்டு நிறைவை நாங்கள் கொண்டாடுகிறோம். மேலும்இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ் சமூகம் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த சந்தர்ப்பத்தில்இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தமிழ் குடிமக்களுக்காக ரூ.75 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்மேலும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்தியாவும் பங்களிக்கும்.

மேதகு அதிபர் அவர்களே,

ஒரு நிலையானபாதுகாப்பான மற்றும் வளமான இலங்கை இந்தியாவின் நலனுக்காக மட்டுமல்லஒட்டுமொத்த இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் நலனுக்காகவும் உள்ளது. இந்தப் போராட்ட நேரத்தில் இந்திய மக்கள் இலங்கை மக்களுடன் இருக்கிறார்கள் என்பதை நான் மீண்டும் உறுதியளிக்கிறேன்.

மிக்க நன்றி.

*****

பொறுப்பு துறப்பு - இது பிரதமரின் ஊடக அறிக்கையின் தோராயமான மொழிபெயர்ப்பு ஆகும். அசலான ஊடக அறிக்கை இந்தியில் வழங்கப்பட்டது.

 (Release ID: 1941342)

ANU/SMB/KRS



(Release ID: 1941599) Visitor Counter : 140