பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

போர்ட் பிளேரில் உள்ள வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 18 JUL 2023 1:47PM by PIB Chennai

வணக்கம்!

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் திரு டி.கே.ஜோஷி அவர்களே, எனது அமைச்சரவை சகாக்கள் ஜோதிராதித்ய சிந்தியா, வி.கே.சிங் அவர்களே, எனது நாடாளுமன்ற சகாக்கள், மற்ற அனைத்து பிரமுகர்கள், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த எனது சகோதர சகோதரிகளே!

இன்றைய நிகழ்வு போர்ட் பிளேரில் நடந்தாலும், ஒட்டுமொத்த தேசத்தின் பார்வையும் இதன் மீது உள்ளது. வீர் சாவர்க்கர் விமான நிலையத்தின் திறனை அதிகரிக்க வேண்டும் என்று அந்தமான் நிக்கோபார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொரு வாரமும் எனது அறைக்கு வந்து இந்த விவகாரம் தொடர்பாக பணியாற்றுவார். எனவே இன்று அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிகிறது, எனது பழைய நண்பர்கள் அனைவரையும் திரையில் பார்க்க முடிகிறது. நேரமின்மை காரணமாக இன்று என்னால் நேரடியாக வரமுடியவில்லை,

நண்பர்களே!

தற்போதுள்ள முனையத்தின் திறன் ஒவ்வொரு நாளும் 4,000 சுற்றுலாப் பயணிகளைக் கையாள முடிந்தது. புதிய முனையம் கட்டப்பட்ட பின்னர், ஒவ்வொரு நாளும் சுமார் 11,000 சுற்றுலாப் பயணிகளைக் கையாளும் திறனைக் கொண்டுள்ளது. இதன் கீழ், தற்போது 10 விமானங்களை ஒரே நேரத்தில் நிறுத்த முடியும். அதிக விமானங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவது அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது. இது வர்த்தகம் செய்வதை எளிதாக்கும் மற்றும் போக்குவரத்து இணைப்பும் மேம்படும். இதற்காக நாட்டு மக்களுக்கும், போர்ட் பிளேரில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நீண்ட காலமாக, சில கட்சிகளின் சுயநல அரசியலால், நாட்டின் தொலைதூர பகுதிகளுக்கு வளர்ச்சியின் பயன்கள் சென்றடையாமல், நமது பழங்குடிப் பகுதிகளும் தீவுகளும் வளர்ச்சிக்காக ஏங்கிக் கொண்டிருந்தன.

கடந்த 9 ஆண்டுகளில் முந்தைய அரசுகளின் தவறுகள் திருத்தப்பட்டுள்ளன. தற்போது இந்தியாவில் வளர்ச்சிக்கான ஒரு புதிய மாதிரி வளர்ச்சி உருவாகியுள்ளது. இந்த மாதிரி 'சப்கா சாத், சப்கா விகாஸ்' என்று அழைக்கப்படுகிறது. 'சப்கா விகாஸ்' அல்லது அனைவரின் வளர்ச்சி என்று சொல்லும்போது - அதன் பொருள் மிகவும் பரந்ததாக இருக்கிறது. 'சப்கா விகாஸ்' என்பது ஒவ்வொரு நபரின், ஒவ்வொரு வகுப்பினரின், ஒவ்வொரு பகுதியின் வளர்ச்சியைக் குறிக்கிறது. சப்கா விகாஸ் என்பது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமான வளர்ச்சி, கல்வி, சுகாதாரம், இணைப்பு, மற்றும் அனைத்து வழிகளிலும் அனைவரின் வளர்ச்சி.

இந்த சிந்தனையுடன், கடந்த 9 ஆண்டுகளில் அந்தமான்-நிக்கோபாருக்கு சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டது. அதாவது அந்தமான் நிக்கோபார் வளர்ச்சிக்காக முன்பை விட இருமடங்கு பணத்தை அரசு செலவிட்டுள்ளது.

முந்தைய அரசின் 9 ஆண்டுகளில், இங்கு 28 ஆயிரம் வீடுகள் மட்டுமே குடிநீர் விநியோகத்துடன் இணைக்கப்பட்டன. ஆனால் கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில் சுமார் 50 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இன்று இங்குள்ள ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வங்கிக் கணக்குகள் உள்ளன. மேலும் இங்குள்ள ஏழைகளுக்கு 'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு' என்ற வசதி கிடைத்துள்ளது. எங்கள் அரசு போர்ட் பிளேரில் ஒரு மருத்துவக் கல்லூரியை நிறுவியுள்ளது.

கடந்த ஆட்சியின் போது, அந்தமான் நிக்கோபாரில் இணையத் தொடர்பு செயற்கைக் கோள்களை மட்டுமே நம்பியிருந்தது. தற்போது கடலுக்கு அடியில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் பதிக்கப்பட்டு இப்பிரச்சனைக்கு அரசு தீர்வு கண்டுள்ளது.

 

நண்பர்களே!

அந்தமான் நிக்கோபாரில் உள்ள வசதிகள் இங்குள்ள சுற்றுலாத் துறைக்கு உத்வேகம் அளிக்கிறது. கைப்பேசி இணைப்பு, சுகாதார உள்கட்டமைப்பு, விமான நிலையம் மற்றும் சாலை வசதிகள் மேம்படும்போது, சுற்றுலாப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2014-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

ஸ்னோர்கெல்லிங், ஸ்கூபா டைவிங் மற்றும் கடல் பயணம் போன்ற சாகசங்களுக்காக இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்தமான் நிக்கோபார் சகோதர சகோதரிகளே, இது ஒரு தொடக்கம் மட்டுமே. வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும். இதனால் இங்கு புதிய வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன.

நண்பர்களே!

இன்று அந்தமான் நிக்கோபார் வளர்ச்சியும், பாரம்பரியமும் கைகோர்த்து செல்லும் மகா மந்திரத்தின் வாழும் உதாரணமாக மாறிவருகிறது.

நாட்டிற்காக வீரத்தை வெளிப்படுத்திய வீர மகன்கள், அதாவது பரம்வீர் சக்ரா வெற்றியாளர்களின் பெயர்களை 21 தீவுகளுக்கு அரசு சூட்டியுள்ளது. இன்று, அந்தமான் நிக்கோபார் தீவுகள் நாட்டின் வளர்ச்சிக்கு நாடு முழுதிலும் உள்ள இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கின்றன.

நண்பர்களே!

சுதந்திரத்திற்குப் பிந்தைய 75 ஆண்டுகளில், நமது நாடு மிகப் பெரிய உயரத்தை எட்டியிருக்கலாம். இந்தியர்களாகிய நம்மிடம் திறமைக்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. ஆனால் ஊழல் மற்றும் குடும்பம் சார்ந்த கட்சிகள் எப்போதும் இந்திய மக்களின் திறனுக்கு அநீதி இழைத்துள்ளன. இன்று, 2024 தேர்தலில் மீண்டும் எங்கள் அரசை ஆட்சிக்கு கொண்டு வர மக்கள் மீண்டும் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவின் அவல நிலைக்கு காரணமான சிலர் தங்கள் கீழ்த்தரமான தொழிலை தொடங்கி இருப்பதை பார்க்கும்போது எனக்கு ஒரு கவிதையின் சில வரிகள் நினைவுக்கு வருகின்றன. அவதியில் ஒரு கவிஞர் எழுதியிருந்தார். இது அவாதி மொழியில் எழுதப்பட்ட கவிதை.

2024 தேர்தலுக்காக ஒன்றிணைந்துள்ள 26 அரசியல் கட்சிகளுக்கு இது மிகவும் பொருத்தமானது.

‘’அதாவது, யாரோ பாடலைப் பாடுகிறார்கள், ஆனால் உண்மை வேறு. லேபிள் வேறு ஒருவருடையது, அதே நேரத்தில் தயாரிப்பு வேறு ஒன்று’’. இதுதான் அவர்களின் வியாபாரத்தின் யதார்த்தம். முதலாவதாக, அவர்கள் தங்கள் கடையில் சாதிய விஷத்தை விற்கிறார்கள். இரண்டாவதாக, இவர்கள் அளவு கடந்த ஊழலில் ஈடுபடுகிறார்கள். 

ஒரு காலத்தில் மிகவும் பிரபலமான பாடல் ஒன்று இருந்தது, அது - மக்கள் ஒரே முகத்தில் வெவ்வேறு முகமூடிகளை அணிகிறார்கள். இவர்களுக்கு வெவ்வேறு முகங்கள் உண்டு, என்பதாகும். இவர்கள் கேமரா முன் ஒரே ஃப்ரேமில் ஒன்றிணையும் போது, நாட்டு மக்களின் மனதில் முதலில் தோன்றும் எண்ணம் - பல லட்சம் கோடி ரூபாய் ஊழல். அதனால் தான் நாட்டு மக்கள் இதை 'கச்சிதமான ஊழல் மாநாடு' என்று சொல்கிறார்கள். இவர்கள் வேறு எதையோ பாடிக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் நிலைமை வேறு. அவர்கள் லேபிள்களை வேறு ஏதோ ஒன்றில் வைத்துள்ளனர், அதே நேரத்தில் அவர்களின் தயாரிப்புகள் வேறுபட்டவை. அவர்களின் தயாரிப்பு 20 லட்சம் கோடி ரூபாய் ஊழலுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

நண்பர்களே,

இந்த கூட்டத்தில் இன்னொரு சிறப்பும் உண்டு. பல கோடி ரூபாய் ஊழல் மற்றும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள் சந்திப்பதால் அவர்களிடையே ஊழலின் மீது மிகுந்த ஈர்ப்பும், அன்பும் உள்ளது. அதனால்தான் 20 லட்சம் கோடி ரூபாய் ஊழலுக்கு உத்தரவாதம் அளிக்கும் இவர்கள் ஒருவருக்கொருவர் மிகுந்த அன்புடனும், பாசத்துடனும் சந்தித்து வருகின்றனர்.

நண்பர்களே,

ஊழலில் ஈடுபட்ட இவர்கள் அனைவரும் வாரிசு முறையின் தீவிர ஆதரவாளர்கள் - குடும்பம் என்ன சொன்னாலும் அது சரிதான். மக்களாட்சிக்காக - மக்களால், மக்களுக்காக என்பது நம்பப்படுகிறது. ஆனால் வாரிசு அரசியலை ஆதரிக்கும் இவர்களின் தாரக மந்திரம் - 'குடும்பம், குடும்பத்தால், குடும்பத்திற்காக'. இதுதான் அவர்களின் உத்வேகம்.

இவர்கள் நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் பிணயக்கைதிகளாக்க நினைக்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன்... "வெறுப்பு இருக்கிறது, ஊழல்கள் உள்ளன. நாடு பல தசாப்தங்களாக வாரிசு அரசியலின் பிடியில் உள்ளது.

நண்பர்களே,

நாட்டின் ஏழைகளின் குழந்தைகளின் வளர்ச்சி அவர்களுக்கு முக்கியமல்ல, ஆனால் அவர்களின் சொந்த குழந்தைகள், அவர்களின் சகோதரர்கள் மற்றும் மருமகன்களின் வளர்ச்சி எப்போதும் அவர்களின் முன்னுரிமையாக இருந்தது. இப்போதெல்லாம் நாட்டில் புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை காண்கிறீர்கள். நம் இளைஞர்கள் காப்புரிமை பெறுகின்றனர்; நாட்டின் இளைஞர்கள் விளையாட்டு உலகில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள், மகள்கள் அதிசயங்களை உருவாக்குகிறார்கள்!

இந்த இளைஞர் சக்தி நம் நாட்டில் இதற்கு முன்பும் இருந்தது, ஆனால் இந்த வாரிசு கட்சிகள் நாட்டின் இளைஞர்களின் சக்திக்கு ஒருபோதும் நியாயம் செய்யவில்லை. அவர்களுக்கு ஒரே ஒரு சித்தாந்தம், ஒரே ஒரு செயல்திட்டம் மட்டுமே உள்ளது - குடும்பத்தைக் காப்பாற்றுங்கள், குடும்பத்திற்காக ஊழலை உயிர்ப்புடன் வைத்திருங்கள்! நாட்டின் வளர்ச்சியைத் தடுப்பதும், தங்களது தவறான நிர்வாகத்தை மூடி மறைப்பதும், ஊழல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை நிறுத்துவதும்தான் அவர்களின் குறைந்தபட்ச செயல்திட்டம்.

தற்போது பாருங்கள், இந்த குழு அவர்கள் செய்த மிகப்பெரிய ஊழல்கள் மற்றும் குற்றங்கள் என்று வரும்போது வாயடைத்து நிற்கிறது. ஏதேனும் ஒரு மாநிலத்தில் அவர்களின் தவறான ஆட்சி அம்பலமானால், பிற மாநிலங்களைச் சேர்ந்த தங்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் உடனடியாக அவர்களுக்கு ஆதரவாக வாதங்களை முன்வைக்கத் தொடங்குகிறார்கள். ஆனால் எங்காவது வெள்ள பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது யாராவது கடத்தப்பட்டாலோ இந்த வாரிசுகள் அனைவரும் அமைதியாகி விடுவார்கள்.

 

மேற்கு வங்கத்தில் சில நாட்களுக்கு முன்பு பஞ்சாயத்து தேர்தல் நடந்த போது வெளிப்படையான வன்முறை நடந்தது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் தொண்டர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கின்றனர். ஆனால், அவர்களின் தலைவர்கள், தங்கள் சுயநலத்தில், தங்களைத் தற்காத்துக் கொள்ள தங்கள் தொண்டர்களை தனியாக விட்டுவிட்டனர்.

ராஜஸ்தானில் மகள்கள் சித்ரவதை செய்யப்படுவது அல்லது தேர்வுத் தாள்கள் கசிந்தது என எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். மாற்றம் பற்றி பேசி மக்களுக்கு துரோகம் செய்பவர்கள் கோடிக்கணக்கில் மதுபான ஊழலில் ஈடுபடும்போது, இந்த குடும்பம் மீண்டும் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது. அந்த அப்பட்டமான ஊழலை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.

நாட்டின் எந்த ஏஜென்சியும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது, ஒவ்வொரு முறையும் அவர்கள் சொல்வது ஒன்றுதான் - "எதுவும் நடக்கவில்லை... எல்லாம் ஒரு சதி, எங்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறது" என்பதுதான். தமிழகத்தைப் பார்த்தால், பல ஊழல், மோசடி வழக்குகள் வெளி வருகின்றன. ஆனால் இந்த வாரிசு கட்சிகள் ஏற்கனவே அனைவருக்கும் குற்றமற்றவர்கள் என்ற சான்றிதழை வழங்கி உள்ளன. சகோதர சகோதரிகளே, இவர்களிடம் கவனமாக இருங்கள்!

நண்பர்களே,

இவர்களின் சூழ்ச்சிகளுக்கு மத்தியில், நாட்டின் வளர்ச்சிக்காக நம்மை அர்ப்பணிக்க வேண்டும். தீவுகள் மற்றும் கடலோர நாடுகள் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றத்தை அடைந்ததற்கு இன்று உலகில் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. இந்த நாடுகள் முன்னேற்றப் பாதையைத் தேர்ந்தெடுத்தபோது, பல்வேறு சவால்களை எதிர்கொண்டனர்.

எல்லாம் எளிதல்ல. ஆனால் வளர்ச்சி நிகழும்போது, அது அனைத்து வகையான தீர்வுகளையும் கொண்டு வருகிறது என்பதை அந்த நாடுகள் நிரூபித்துள்ளன. அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் இந்த முழு பிராந்தியத்தையும் மேலும் வலுப்படுத்தும் என்று நம்புகிறேன். போக்குவரத்து இணைப்பு தொடர்பான இந்த புதிய வசதி, அதாவது வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையம் அனைவருக்கும் பயனளிக்கும் என்று நம்புகிறேன்.

 

இந்த வாழ்த்துடன், இந்த காணொலிக்காட்சி நிகழ்ச்சிக்கு அதிகளவிலானோர் வந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் இங்கிருந்தும் என்னால் உணர முடிகிறது.

இத்தகைய சந்தர்ப்பத்தில், நாடு ஒரு புதிய நம்பிக்கையுடனும் புதிய உறுதியுடனும் முன்னேற வேண்டும். அந்தமான்-நிக்கோபார் அதை முன்னெடுத்துச் செல்லும் என்று நம்புகிறேன். இந்த வாழ்த்துடன், உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள், மனமார்ந்த நன்றி!

பொறுப்பு துறப்பு: இது பிரதமர் இந்தியில் நிகழ்த்திய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும்.

***

 (வெளியீட்டு எண்: 1940428)


(Release ID: 1940644) Visitor Counter : 141