பிரதமர் அலுவலகம்
தேசிய வேலைவாய்ப்புத் திருவிழாவில் பிரதமர் உரையாற்றினார்
பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்ற புதிதாக தேர்வு செய்யப்பட்ட 70,000 பேருக்குப் பணி நியமன ஆணைகளைப் பிரதமர் வழங்கினார்
“இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கெடுக்க ஒட்டுமொத்த உலகமும் ஆர்வத்துடன் உள்ளது”
“இன்றைய உலகில் அரசியல் நிலைத்தன்மைக்குப் பெயர்பெற்ற நாடாக இந்தியா உள்ளது. தற்போது உறுதியாக முடிவெடுக்கும் அரசு என இந்திய அரசு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முற்போக்கான பொருளாதாரம் மற்றும் சமூக மாற்றத்திற்கான செயல்பாடுகளுக்குப் பெயர்பெற்ற அரசாக இந்த அரசு உள்ளது”
“அரசின் நலத்திட்டங்கள் மக்கள் நலனில் மிகச் சிறப்பாக பல்வேறு நல்ல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன”
“வேலை வாய்ப்புகளுக்குப் பணம் கொடுக்க வேண்டிய காலங்கள் கடந்துவிட்டன. தற்போதைய அரசு, இளைஞர்களின் நலனைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது”
“மொழி என்பது முன்பு பிரித்தாள்வதற்கு தவறாகப் பயன்படுத்தப்பட்டது. தற்போது மொழியை வேலைவாய்ப்புக்கான வலுவான ஊடகமாக அரசு மாற்றியுள்ளது”
“சேவைகளை வீடுகளுக்கே கொண்டுசென்று வழங்குவதன் மூலம் இப்போது அரசு மக்களின் வீடுகளைச் சென்றடைகிறது”
Posted On:
13 JUN 2023 11:52AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தேசிய வேலைவாய்ப்புத் திருவிழாவில் இன்று (13.06.2023) காணொலி காட்சி மூலம் உரையாற்றியதுடன் பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்ற புதிதாகத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்குப் பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.
நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலிலிருந்து அரசுப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள், நிதிச்சேவைகள் துறை, அஞ்சல்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, பாதுகாப்பு அமைச்சகம், வருவாய்த்துறை, சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், அணுசக்தித்துறை, ரயில்வே அமைச்சகம், கணக்கு மற்றும் தணிக்கைத்துறை, உள்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்ற உள்ளனர். இந்த வேலைவாய்ப்புத் திருவிழா நாடு முழுவதும் 43 இடங்களில் நடைபெற்றது. மத்திய அரசின் துறைகள், மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளின் துறைகளில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், வேலைவாய்ப்புத் திருவிழா என்பது இந்த அரசின் புதிய அடையாளமாக அமைந்துள்ளது என்றார். இன்றைய நிகழ்ச்சியில் 70,000 பேருக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பிஜேபி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநில அரசுகளும் இது போன்ற வேலைவாய்ப்புத் திருவிழாக்களைத் தொடர்ந்து நடத்தி வருவதை அவர் சுட்டிக்காட்டினார். தேச விடுதலையின் அமிர்த காலம் தொடங்கியிருக்கும் இந்தச் சூழலில், அரசுப் பணியில் சேருபவர்களுக்கு இது முக்கியமான தருணம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். அவர்கள் அடுத்த 25 ஆண்டுகளுக்கு நாட்டின் வளர்ச்சியில் தங்களின் பங்களிப்பை செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். நாட்டின் எதிர்காலத்திற்காக சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். புதிதாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இந்நிகழ்ச்சியின் போது பிரதமர் வாழ்த்துத் தெரிவித்தார்.
தற்போது நாட்டில் வேலைவாய்ப்புகளும் சுய வேலைவாய்ப்புக்கான சூழல்களும், பெரிய அளவில் அதிகரித்து வருவது குறித்தும் பிரதமர் எடுத்துரைத்தார். முத்ரா திட்டம், ஸ்டார்ட்அப் இந்தியா , ஸ்டாண்ட் அப் இந்தியா போன்ற பல்வேறு அரசின் திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் குறித்து அவர் விவரித்தார். தற்போது இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்குபவர்களாக மாறிவருவதாக அவர் கூறினார். முன் எப்போதும் இல்லாத வகையில், இளைஞர்கள் அரசுப் பணியில் சேருவதற்கான இயக்கங்கள் தற்போது நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். பணியாளர்கள் தேர்வாணையம் (எஸ்எஸ்சி), மத்திய அரசுப் பணியார்கள் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்ஆர்பி) போன்றவற்றின் மூலம் புதிய நடைமுறைகள் கொண்டுவரப்பட்டு அதிகப் பணிகள் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். இந்த நிறுவனங்கள் வேலைவாய்ப்புக்கான தேர்வு நடைமுறைகளை எளிமையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடத்துவதில் கவனம் செலுத்துவதாக அவர் கூறினார். பணி நியனம நடைமுறைகள் நிறைவடைய ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஆன நிலையில், அவை தற்போது சில மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
ஒட்டுமொத்த உலகமும் தற்போது இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கெடுத்துக் கொள்வதில் ஆர்வமுடன் இருப்பதாக அவர் கூறினார். இந்தியா மற்றும் அதன் பொருளாதாரத்தின் மீது உலகம் மிகச் சிறந்த நம்பிக்கையைக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பொருளாதார மந்தநிலை, பெருந்தொற்றுப் போர் காரணமாக விநியோகத்தொடர் பாதிப்பு போன்றவற்றுக்கு இடையிலும் இந்தியப் பொருளாதாரம் புதிய உச்சங்களைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு அதிகரிப்பது பன்னாட்டு நிறுவனங்கள் பல இந்தியாவில் உற்பத்தி செய்ய விரும்புவது போன்றவற்றைப் பிரதமர் உதாரணம் காட்டினார். நாட்டில் மேற்கொள்ளப்படும் அந்நிய முதலீடுகள், உற்பத்தியை விரைந்து அதிகரித்து புதிய தொழிற்சாலைகள் உருவாகவும், அவை விரிவடையவும், ஏற்றுமதி அதிகரிக்கவும், வேலைவாய்ப்புகள் பெருகவும் வழிவகை செய்வதாக அவர் குறிப்பிட்டார். தற்போதைய அரசின் கொள்கைகள், தனியார் துறையிலும் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருப்பதாக அவர் கூறினார். உதாரணமாக வாகன உற்பத்தித் துறையில், அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இத்துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 6.5 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். வாகன பொதுத்துறையின் ஏற்றுமதியும் வளர்ச்சியடைந்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார். பயணிகள் வாகனங்கள், வணிக வாகனங்கள், இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதை அவர் எடுத்துரைத்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பு வாகனத் தொழில்துறையின் மதிப்பு ரூ. 5 லட்சம் கோடியாக இருந்தது என்று கூறிய அவர், தற்போது இந்தத் தொழில்துறையின் மதிப்பு ரூ.12 லட்சம் கோடிக்கும் அதிகமாக வளர்ச்சி அடைந்துள்ளது என்று தெரிவித்தார். அரசின் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டமும், வாகனத் தொழில்துறை வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றுவதாகக் கூறிய அவர், இது போன்ற துறைகள் பல லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு எண்ணற்ற வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகத் தெரிவித்தார்.
10 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலையுடன் ஒப்பிடுகையில் தற்போது இந்தியா அதிக நிலைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் வலிமை கொண்ட நாடாக உள்ளது என்று பிரதமர் கூறினார். முன்பு நிர்வாகத்தில் முறைகேடுகளும், பொதுமக்களுக்கு சிக்கல்களும் அதிக அளவில் இருந்ததாகக் கூறிய அவர், இன்று உலகில் அரசியல் நிலைத்தன்மைக்கு பெயர் பெற்ற நாடாக இந்தியா திகழ்கிறது என்றார். தற்போது இந்த அரசு உறுதியான முடிவுகளை எடுக்கும் அரசு என அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். முற்போக்கான பொருளாதாரம் மற்றும் சமூக முடிவுகளுக்குப் பெயர்பெற்ற அரசாகவும் இது விளங்குகிறது என்று அவர் கூறினார். மக்களின் வாழ்க்கையை எளிமைப்படுத்துதல், உள்கட்டமைப்பை அதிகரித்தல், வர்த்தகம் புரிவதை எளிதாக்குதல் போன்ற அரசின் நடவடிக்கைகள் சர்வதேச அமைப்புகளால் பாராட்டப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் சமூகக் கட்டமைப்புகளை மேம்படுத்த மிகப் பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார். சமூகக் கட்டமைப்புகள் குறித்து பேசிய அவர், ஜல்ஜீவன் இயக்கத்தை உதாரணமாகக் குறிப்பிட்டார். இது அனைவருக்கும் பாதுகாப்பானக் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வதாக பிரதமர் தெரிவித்தார். இத்திட்டத்திற்காக இதுவரை ரூ. 4 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட போது, கிராமப்புறங்களில் 100 வீடுகளுக்கு 15 வீடுகளில் மட்டுமே குழாய் மூலம் குடிநீர் இணைப்பு இருந்ததாகவும். தற்போது 100 வீடுகளுக்கு 62 என அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார். தற்போது நாட்டின் 130 மாவட்டங்களில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் மூலம் மக்களின் நேரம் மிச்சமாவதுடன் நீர் மாசுபாட்டால் ஏற்படும் பல்வேறு நோய்கள் தடுக்கப்படுகிறது என்று அவர் கூறினார். வயிற்றுப் போக்கால் ஏற்படும் சுமார் 4 லட்சம் மரணங்கள், தூய்மையானக் குடிநீர் காரணமாகத் தடுக்கப்பட்டுள்ளது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டார். மேலும் நீருக்காகவும், நீர் தொடர்பான நோய்களால் ஏற்படும் சிகிச்சைக்காகவும் மக்கள் செலவு செய்யும் ரூ. 8 லட்சம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது என்ற விவரமும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக பிரதமர் கூறினார். அரசுத் திட்டங்களால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு நன்மைகள் குறித்து புதிதாக பணிக்குத்தேர்வு செய்யப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தினார்.
அரசுத்துறை வேலைவாய்ப்பு நடைமுறைகளில் முன்பு, வாரிசு முறைகள், பரிந்துரைகள் மற்றும் பாரபட்சங்கள் இருந்தன என்றும் வேலைவாய்ப்புக்குப் பணம் தரவேண்டிய நிலையும் இருந்தது என்றும், இவை சில இடங்களில் பெரிய பிரச்சனையாக எழுந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். உணவகங்களில் உணவுகளுக்கு விலைப் பட்டியல் வைத்திருப்பதைப் போல, பல்வேறு வகையான வேலைவாய்ப்புகளுக்கு பல விதமான தொகை வசூலிக்கப்பட்டதாகவும் பிரதமர் தெரிவித்தார். முன்பு ரயில்வே அமைச்சராக இருந்த ஒருவரது பதவிக்காலத்தின் போது, ரயில்வே வேலைவாய்ப்புக்கு நிலம் மோசடி தொடர்பான புகார்கள் எழுந்ததையும் அவர் குறிப்பிட்டார். அது தொடர்பான வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரித்து வருவதையும், அந்த வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதையும் தெரிவித்தார். வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் அதுபோன்ற கட்சிகள் தொடர்பாகவும், வேலைவாய்ப்புகளின் பெயரால் இளைஞர்களை மோசடி செய்வோர் குறித்தும் இளைஞர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தினார். முந்தைய காலத்தில் வேலைவாய்ப்புகளுக்கு பணம் நிர்ணயிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்ட நிலையில், தற்போதைய அரசு, இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில், செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இளைஞர்களின் எதிர்காலம், வேலைவாய்ப்புகளுக்குப் பணம் வசூலிக்கப்படுவதில் அமைந்துள்ளதா அல்லது அவர்களை அதிலிருந்து பாதுகாத்து நியாயமான நடைமுறைகளை வகுப்பதில் அமைந்துள்ளதா என்பதை இப்போது தேசம் முடிவு செய்யும் என்று பிரதமர் தெரிவித்தார்.
சில அரசியல் கட்சிகள் மொழியின் பெயரால் மக்களை பிரிக்க முயல்வதாக கூறிய அவர், தற்போதைய மத்திய அரசு மொழியை வேலைவாய்ப்புக்கான வலுவான ஊடகமாக மாற்றியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். வேலைவாய்ப்புக்கான தேர்வுகள் தாய் மொழியில் நடத்தப்படுவது இளைஞர்களுக்கு பெரிதும் பயனளிப்பதாக அவர் கூறினார்.
தற்போதைய இந்தியாவில் அரசு அமைப்புகளும், அரசு ஊழியர்கள் பணிபுரியும் முறையும் வேகமாக மாறிவருகிறது என்று பிரதமர் தெரிவித்தார். நாட்டின் சாதாரண மக்கள் முன்பு அரசு அலுவலகங்களுக்குச் சென்றபோது அவர்கள், சிக்கலான அனுபவங்களை சந்தித்ததைப் பிரதமர் நினைவூட்டினார். ஆனால் தற்போது மக்களுக்கான சேவைகளை அரசு அவர்களின் வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்குவதாகவும் இதன் மூலம் ஒவ்வொரு வீட்டையும் அரசு சென்றடைகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். அரசாங்க அலுவலகங்கள் மற்றும் துறைகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப பணிகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். அரசின் டிஜிட்டல் சேவைகள் பெறுவதை மொபைல் செயலிகள் எளிதாக்கியிருப்பதாகவும், மக்கள் குறைதீர்க்கும் அமைப்பு தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு வருவதாகவும் திரு நரேந்திர மோடி கூறினார்.
இன்று பணிநியமன ஆணை பெற்றுள்ளவர்கள் நாட்டு மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அரசு பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த அவர், புதிதாக பணியமர்த்தப்பட்டவர்கள் இந்த சீர்திருத்தங்களை மேலும் வலுவாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். இவற்றுக்கு இடையே, புதிய அம்சங்களைக் கற்கும் ஆர்வத்துடனும், அனைவரும் செயலாற்ற வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். அரசின் ஒருங்கிணைந்த இணையதள பயிற்சித் தளமான (ஐஜிஓடி- iGoT) தளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பத்து லட்சத்தை தாண்டியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்தத் தளத்தில் கிடைக்கும் பயிற்சி வாய்ப்புகளை அரசுப் பணியாளர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். அடுத்த 25 ஆண்டுகாலத்தில் விடுதலையின் அமிர்த காலப் பயணத்தில், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நோக்கி நாம் இணைந்து முன்னேறுவோம் என்று கூறி பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.
பின்னணி:
வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பது பிரதமரின் உயர் முன்னுரிமைத் திட்டங்களில் ஒன்றாகும். இதை நிறைவேற்றுவதன் ஒரு படியாக இந்த வேலைவாய்ப்புத் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. இந்த வேலைவாய்ப்புத் திருவிழாக்கள், மேலும் பல வேலைவாய்ப்புகளை உருவாக்க உந்துசக்தியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், இளைஞர்களுக்கு அதிகாரமளித்து, அவர்களை தேசிய வளர்ச்சியில் பங்கேற்க செய்யும் சிறந்த வாய்ப்புகளையும் இது வழங்குகிறது.
புதிதாகப் பணியில் சேர்க்கப்பட்டுள்ளவர்கள், அரசின் பயிற்சி இணையதளமான ஐஜிஓடி கர்மயோகி தளத்தில் உள்ள கர்மயோகி பிராரம்ப் என்ற பயிற்சித் தொகுப்பு நடைமுறையின் மூலம் தங்களுக்குத் தாங்களே பயிற்சி பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். இந்த ஐஜிஓடி கர்மயோகி தளத்தில் 400-க்கும் மேற்பட்ட மின்னணு பயிற்சித் தொகுப்புகள் உள்ளன. இவற்றை எங்கிருந்தும் எந்தவொரு கணினி சாதனத்தின் மூலமும் பெறமுடியும்.
***
AP/PLM/RS/GK
(Release ID: 1931985)
Visitor Counter : 138
Read this release in:
Bengali
,
Khasi
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Nepali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam