நிதி அமைச்சகம்

பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (PMJJBY) பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டம் (PMSBY) மற்றும் அடல் ஓய்வூதியத் திட்டம் (APY) ஆகியவை 8 ஆண்டுகளாக நாட்டு மக்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்கி வருகின்றன


மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், மூன்று மக்கள் பாதுகாப்புத் (ஜன் சுரக்ஷா) திட்டங்களும் குடிமக்களின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிக்கப்பட்டவை என்றும், எதிர்பாராத ஆபத்துகள், இழப்புகள் மற்றும் நிதி நிச்சயமற்ற தன்மைகளிலிருந்து மனித வாழ்க்கையைப் பாதுகாக்கின்றன என்றார்

மக்கள் பாதுகாப்புத் (ஜன் சுரக்ஷா) திட்டங்களின் சேவையை மேலும் அதிகரிக்குமாறு கள அளவிலான செயல்பாட்டாளர்களுக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் டாக்டர் பகவத் காரத் அறிவுறுத்தியுள்ளார்

Posted On: 09 MAY 2023 7:45AM by PIB Chennai

பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (PMJJBY): ஒட்டுமொத்த பதிவுகள் 16 கோடிக்கும் மேல்

பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டம் (PMSBY): 34 கோடிக்கும் அதிகமான ஒட்டுமொத்த பதிவுகள்

அடல் ஓய்வூதியத் திட்டம் (APY): 5 கோடிக்கும் மேல் சந்தாதாரர்கள்

பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (PMJJBY), பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டம் (PMSBY) மற்றும் அடல் ஓய்வூதியத் திட்டம்  (APY) ஆகிய மூன்று மக்கள் பாதுகாப்பு (ஜன் சுரக்ஷா) திட்டங்களின் 8வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இவ்வேளையில், இந்தத் திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்பட்டன என்பதை விபரமாகப் பார்க்கலாம். மிகக்குறைந்த விலையில் காப்பீடு மற்றும் மக்களுக்கு பாதுகாப்பு (ஜன் சுரக்ஷா), சாதனைகள் மற்றும் முக்கிய அம்சங்கள் பற்றி:

பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (PMJJBY), பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டம் (PMSBY) மற்றும் அடல் ஓய்வூதியத் திட்டம் (APY) ஆகியவை பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களால் 9 மே, 2015 அன்று மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில்  தொடங்கப்பட்டது.

இந்த மூன்று திட்டங்களும் நாட்டு மக்களின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. எதிர்பாராத நிகழ்வுகள் மற்றும் நிதி நிச்சயமற்ற சூழ்நிலைகளிலிருந்து மனித வாழ்க்கையைப் பாதுகாப்பதன் அவசியத்தை அங்கீகரித்துள்ளன. நாட்டின் அமைப்புசாரா பிரிவைச் சேர்ந்த மக்கள் நிதி ரீதியாக பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக அரசு இரண்டு காப்பீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தியது பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (PMJJBY) மற்றும் பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டம் (PMSBY) மேலும் வயதான காலத்தில் தேவைகளை பூர்த்தி செய்ய அடல் ஓய்வூதியத் திட்டத்தையும் (APY) அறிமுகப்படுத்தியது.

மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், 2014ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் வங்கி வசதிகள், நிதி, கல்வியறிவு மற்றும் சமூக பாதுகாப்பு ஆகியவற்றை பெறுவதை உறுதி செய்யும் முதன்மை நோக்கத்துடன் நிதி உள்ளடக்கத்திற்கான தேசியப் பணி தொடங்கப்பட்டது. நாட்டை மேலும் மேம்படுத்தும் நோக்கத்துடன் மே 9, 2015 அன்று மூன்று மக்கள் பாதுகாப்புத் (ஜன் சுரக்ஷா) திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன என்றார்.

மத்திய நிதியமைச்சர் கூறுகையில், "மூன்று சமூக பாதுகாப்பு திட்டங்களும் மக்களின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிக்கப்பட்டவை. எதிர்பாராத ஆபத்துகள், இழப்புகள் மற்றும் நிதி நிச்சயமற்ற சூழலில் பாதுகாப்பான வாழ்க்கையை நடத்துவதற்கான முக்கியத்துவத்தை உறுதி செய்கின்றன. இந்தத் திட்டங்கள் பின்தங்கிய மக்களுக்கு அத்தியாவசிய நிதி சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன." என்று தெரிவித்தார்.

மக்கள் பாதுகாப்புத்(ஜன் சுரக்ஷா) திட்டங்களின் 8 வது ஆண்டு விழாவின் தரவுகளை மேற்கோள் காட்டி, ஏப்ரல் 26, 2023 வரை பிரதமரின் ஆயுள் காப்பீடுத் திட்டம் (PMJJBY) பிரதமரின் விபத்துக் காப்பீடுத் திட்டம் (PMSBY) மற்றும் அடல் ஓய்வூதியத் திட்டம் (APY) ஆகியவற்றின் கீழ் முறையே 16.2 கோடி பேர், 34.2 கோடி பேர் மற்றும் 5.2 கோடி பேர் பதிவு செய்துள்ளனர் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில், (PMJJBY) 6.64 இலட்சம் குடும்பங்களுக்கு 13,290 கோடி ரூபாய் இதுவரை வழங்கப்பட்டுள்ளது  என்று நிதியமைச்சர் கூறினார்.

 நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கூறுகையில், பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் (PMSBY) திட்டத்தின் கீழ் 1.15 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் ரூ. 2,302 கோடி பெற்றுள்ளனர். பிரதமரின் ஆயுள் காப்பீடுத் திட்டம் (PMJJBY) மற்றும் பிரதமரின் விபத்துக் காப்பீடுத் திட்டம் (PMSBY) ஆகிய இரண்டு திட்டங்களுக்கும் செயல்முறையை எளிமையாக்குவதன் மூலம் இழப்பீடு வழங்குவதை விரைவு படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார்.

நிதியமைச்சர் தனது உரையின் நிறைவாக "இந்தத் திட்டங்கள், இலக்கு அணுகுமுறையின் மூலம் அவற்றின் வரம்பை அதிகரிக்கச் செய்வது ஊக்கமளிக்கிறது. நமது பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில்  இந்த சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் நன்மைகள் அனைவரையும் சென்றடைவதை உறுதி செய்வதில் நமது அரசு நிலைத்தன்மையுடனும்   அர்ப்பணிப்புடனும் உள்ளது." என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் டாக்டர் பகவத் கிசன்ராவ் காரத் பேசுகையில், "கிராமப்புறங்களில் உள்ள மக்களை இத்திட்டத்திற்குள் கொண்டு வர அரசு இலக்கு வைத்து செயலாற்றுகிறது. மேலும் திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக நாடு முழுவதும் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் பிரச்சாரங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன." என்றார்.

இந்த மக்கள் பாதுகாப்புத் (ஜன் சுரக்ஷா) திட்டங்களை பிரபலமாக்கியதற்காக அனைத்து களநிலை செயல்பாட்டாளர்களையும் வாழ்த்திய அமைச்சர், அவர்களின்  சேவையை மேலும் மேம்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடருமாறு அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

மக்கள் பாதுகாப்பு (ஜன் சுரக்ஷா) திட்டங்களின் 8 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், இதுவரையிலான அவற்றின் அம்சங்கள் மற்றும் சாதனைகளைப் பார்ப்போம்.

 

1. பிரதமரின் ஆயுள் காப்பீடுத் திட்டம் (PMJJBY)

திட்டம்: பிரதமரின் ஆயுள் காப்பீடுத் திட்டம் (PMJJBY) என்பது ஒரு வருட ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இது ஆண்டுதோறும் புதுப்பிக்கத்தக்கது. எந்த காரணத்திற்காக மரணம் நிகழ்ந்தாலும் இறப்பிற்கு பின் இழப்பீடு வழங்குகிறது.

தகுதி: 18-50 வயதுக்குட்பட்ட தனிநபர் வங்கி அல்லது தபால் அலுவலகக் கணக்கு வைத்திருக்கும் நபர்கள் இத்திட்டத்தின் கீழ் பதிவுசெய்ய முடியும். 50 வயதைத் தொடும் முன் திட்டத்தில் சேரும் நபர்கள், வழக்கமான பிரீமியத்தைச் செலுத்தினால், 55 வயது வரையிலான ஆயுள் காப்பீட்டைத்  தொடரலாம்.

பலன்கள்: ஆண்டுக்கு ரூ 436/- பிரீமியம் செலுத்துவோருக்கு, ஏதேனும் காரணத்தால் மரணம் ஏற்பட்டால் ஆயுள் காப்பீடாக ரூ. 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

பதிவு செய்தல்: இத்திட்டத்தின் கீழ் பதிவுசெய்ய வங்கிக் கிளையை அல்லது வங்கியின் இணைய சேவையைத் தொடர்பு கொள்ளலாம். தபால் அலுவலக சேமிப்பு வங்கிக் கணக்காக இருந்தால் தபால் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். இந்தத் திட்டத்திற்கான பிரீமியம், கணக்கு வைத்திருப்பவரிடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் அவர்களுடைய வங்கிக் கணக்கில் இருந்து தானாகவே பிடித்தம்  செய்யப்படுகிறது. திட்டம் மற்றும் படிவங்கள் பற்றிய விரிவான தகவல்கள் (இந்தி, ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளில்) https://jansuraksha.gov.in இல் கிடைக்கின்றன.

சாதனைகள்: 26.04.2023 நிலவரப்படி, இத்திட்டத்தின் கீழ் மொத்தப் பதிவுகள் 16.19 கோடிக்கும் அதிகமாகவும்,  6,64,520 கோரிக்கைகளுக்கு ரூ. 13,290.40 கோடி செலுத்தப்பட்டுள்ளது.

2. பிரதமரின் விபத்துக் காப்பீடுத் திட்டம்

திட்டம்: பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டம் என்பது, ஒரு வருட விபத்து காப்பீட்டுத் திட்டமாகும். விபத்தினால் ஏற்படும் மரணம் அல்லது உடல் ஊனத்திற்க்கு காப்பீடு பாதுகாப்பு  வழங்கும் திட்டத்தை வருடத்திற்கு ஒரு முறை புதுப்பித்துக் கொள்ளலாம்.

தகுதி: 18 முதல் 70 வயது வரையில் உள்ள, தனி நபர் வங்கி கணக்கு அல்லது அஞ்சலக கணக்கு வைத்திருப்போர், இத்திட்டத்தில் சேர தகுதி உடையோர்.

பயன்கள்: ஆண்டுதோறும் ரூ. 20 ஐ காப்பீட்டுக் கட்டணமாக செலுத்தினால், விபத்தால் இறப்போர் அல்லது உடல் ஊனம் ஏற்பட்டால் ரூ. 2 லட்சம் (சிறிதளவு ஊனத்திற்கு ரூபாய் 1 லட்சம்) வழங்கப்படும்.

திட்டத்தில் சேர்தல்: குறிப்பிட்ட வங்கியின் கிளை/ இணையதளம் அல்லது அஞ்சலக அலுவலகத்திற்கு நேரில் சென்று திட்டத்தில் சேரலாம். இத்திட்டத்தின் கீழ், கட்டணத் தொகை, கணக்கு வைத்திருப்பவரிடமிருந்து கட்டாயத்தின் அடிப்படையில் ஒருமுறை ஒவ்வொரு ஆண்டும் சந்தாதாரரின் வங்கி கணக்கிலிருந்து தானாகவே எடுத்துக்கொள்ளப்படும். திட்டம் குறித்த கூடுதல் தகவல்களும், படிவங்களும் (இந்தி, ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளில்) https://jansuraksha.gov.in என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.

சாதனைகள்: 26.04.2023 வரை இத்திட்டத்தில் 34.18 கோடிக்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர். 1,15,951 விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 2,302.26 கோடி வழங்கப்பட்டுள்ளது.

3. அடல் ஓய்வூதிய திட்டம்:

பின்னணி: அனைத்து இந்தியர்களுக்கும் குறிப்பாக ஏழைகள், நலிவடைந்தோர் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நாடு தழுவிய சமூக பாதுகாப்பு அமைப்புமுறையை உருவாக்குவதற்காக அடல் ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அமைப்புசாரா துறையில் உள்ள மக்களுக்கு நிதி பாதுகாப்பு வழங்கவும், எதிர்கால தேவைகளைப் பூர்த்தி செய்யவும் அரசு மேற்கொண்ட முன்முயற்சி இது. தேசிய ஓய்வூதிய அமைப்புமுறையின் ஒட்டுமொத்த நிர்வாகம் மற்றும் நிறுவன கட்டமைப்பின் கீழ் ஓய்வூதிய நிதி கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் அடல் ஓய்வூதியத் திட்டம் நிர்வகிக்கப்படுகிறது.

தகுதி: வருமான வரி செலுத்தாத 18 முதல் 40 வயது வரையிலான வங்கிக் கணக்கு உள்ள அனைவரும் அடல் ஓய்வூதியத் திட்டத்தில் சேர தகுதியுடையோர் ஆவர். தேர்ந்தெடுக்கப்பட்ட ஓய்வூதியத் தொகையின் அடிப்படையில் பங்களிப்புகள் வேறுபடும்.

பயன்கள்: இத்திட்டத்தில் சேர்ந்த பிறகு 60 வயதிற்கு மேல், சந்தாதாரர்களின் பங்களிப்பின் அடிப்படையில் மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.1000/- அல்லது ரூ.2000/- அல்லது ரூ. 3000/- அல்லது ரூ. 4000/- அல்லது ரூ. 5000/- உத்தரவாத ஓய்வூதியமாக அவர்களுக்கு வழங்கப்படும்.

திட்டத்தின் பயன்களின் விநியோகம்: மாதாந்திர ஓய்வூதியம் சந்தாதாரருக்கு வழங்கப்படும். அவரது காலத்திற்குப் பிறகு அவரது துணைவருக்கும், அதற்குப் பிறகு சந்தாதாரரின் 60-ஆவது வயதில் பெறப்பட்ட ஓய்வூதியத் தொகை அவரால் நியமிக்கப்பட்ட நபருக்கும் திருப்பி அளிக்கப்படும்.

சந்தாதாரர் ஒருவேளை 60 வயதிற்கு முன்பு மரணிக்க நேர்ந்தால், அவரது 60 வயது வரையிலான காலத்திற்கு உரிய தொகையை  சந்ததாரரின் துணைவர், அடல் ஓய்வூதிய திட்ட கணக்கில் மீதமுள்ள காலத்துக்கு தொடர்ந்து பங்களிக்க முடியும்.

மத்திய அரசின் பங்களிப்பு: குறைந்தபட்ச ஓய்வூதியத்திற்கு அரசு உத்தரவாதம் அளிக்கும். அதாவது பங்களிப்புகளின் அடிப்படையில் திரட்டப்பட்ட தொகை, முதலீட்டில் மதிப்பிடப்பட்ட தொகையை விட குறைவாக இருந்து, குறைந்தபட்ச உத்தரவாத ஓய்வூதியத்தை வழங்க போதுமானதாக இல்லாமல் இருந்தால், அத்தகைய பற்றாக்குறை நிதியை மத்திய அரசு வழங்கும். மாற்றாக, முதலீட்டின் அடிப்படையிலான வருமானம் அதிகமாக இருந்தால், மேம்பட்ட ஓய்வூதிய பயன்களை சந்தாதாரர்கள் பெறுவார்கள்.

கட்டணம் செலுத்த வேண்டிய கால அளவு: மாதாந்திர/ காலாண்டு/ அரையாண்டு விகிதத்தில் அடல் ஓய்வூதிய திட்டத்திற்கான பங்களிப்புகளை சந்தாதாரர்கள் செலுத்தலாம்.

திட்டத்திலிருந்து தொகையை பெற்றுக் கொள்ளுதல்: சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு  அடல் ஓய்வூதியத் திட்டத்திலிருந்து சந்தாதாரர்கள் தாமாகவே வெளியேறிக் கொள்ளலாம். அத்தகைய நிலையில் அரசின் இணை பங்களிப்பு மற்றும் வட்டி குறைத்துக் கொள்ளப்படும்.

சாதனைகள்: 27.04.2022 வரை 5 கோடிக்கும் அதிகமான தனிநபர்கள் இத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.

***

AD/JL/BR/RK



(Release ID: 1922743) Visitor Counter : 4074