பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜோஷிமத் நிலைமை குறித்து பிரதமரின் முதன்மை செயலாளர் உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடத்தினார்

Posted On: 08 JAN 2023 6:50PM by PIB Chennai

ஜோஷிமத்தில் ஏற்பட்ட கட்டடச்சேதம் மற்றும் நிலச்சரிவு குறித்து உயர்நிலை ஆய்வுக் கூட்டத்தை பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா இன்று 2023 ஜனவரி 8 அன்று நடத்தினார். மத்திய அமைச்சரவை செயலாளர், உள்துறை செயலாளர், மத்திய அரசின் மூத்த அதிகாரிகள், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர்கள், உத்தராகண்ட் மாநிலத்தின் தலைமைச் செயலாளர், ஜோஷிமத் மாவட்ட காவல்துறை தலைமை இயக்குநர், ஆட்சியர், மூத்த அதிகாரிகள் மற்றும்  ஐஐடி ரூர்க்கி, தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம், இந்திய புவியியல் ஆய்வு மையம்,  வாடியா இமயமலைப் புவியியல் மைய நிறுவனத்தின்  நிபுணர்கள் காணொலி காட்சி மூலம் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஜோஷிமத் நிலவரம் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி கவலை கொண்டிருப்பதாகவும், நிலைமையை உத்தராகண்ட் முதலமைச்சருடன் ஆலோசித்ததாகவும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மத்திய நிபுணர்களின் உதவியுடன் மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகள் ஜோஷிமத்தின் சூழலை ஆய்வு செய்ததாக உத்தராகண்ட் தலைமைச் செயலாளர் தெரிவித்தார். சுமார் 350 மீட்டர் அகலத்திற்கு நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தேசிய பேரிடர் மீட்பு படையின் ஒரு குழுவும்,  மாநில பேரிடர் மீட்பு படையின் நான்கு குழுக்களும் ஜோஷிமத்தை அடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி, அவர்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஜோஷிமத் பகுதி மக்களுக்கு அங்குள்ள நிலவரம்   தெரிவிக்கப்பட்டு அவர்களின் ஒத்துழைப்பும் கோரப்படுகிறது. குறுகிய-நடுத்தர, நீண்ட காலத் திட்டங்களை உருவாக்க நிபுணர்களின் ஆலோசனைகளும் பெறப்படுகின்றன.

ஜோஷிமத்தில் இருந்து திரும்பி வந்த தொழில்நுட்பக் குழுக்களின் முடிவுகள் குறித்து ஆய்வு செய்து, நிலைமையை
எதிர்கொள்வதற்குத் தேவையான உடனடி, குறுகிய-நடுத்தர- மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுக்கு அவர்கள் ஆலோசனை வழங்குவர்.

பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பே அரசின் உடனடி முக்கியத்துவமாக இருக்க வேண்டும் என பிரதமரின் முதன்மைச் செயலாளர் வலியுறுத்தினார். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம், இந்திய புவியியல் ஆய்வு மையம், இந்திய தொழில்நுட்ப நிறுவனம்  ரூர்க்கி, வாடியா இமயமலைப் புவியியல் மையம் ஆகியவற்றின் வல்லுநர்களும், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹைட்ராலஜி மற்றும் மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமும் உத்தராகண்ட் மாநிலத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.  தொடர்ந்து நில அதிர்வு கண்காணிக்கப்பட வேண்டுமெனவும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, ஜோஷிமத் நகருக்கான நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டுமெனவும் பிரதமரின் முதன்மைச் செயலாளர் வலியுறுத்தினார்.

**********

CR/SMB/RJ


(Release ID: 1889745) Visitor Counter : 181