பிரதமர் அலுவலகம்

பாலியில் ஜி-20 உச்சிமாநாட்டின் மூன்றாவது அமர்வான டிஜிட்டல் மாற்றத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 16 NOV 2022 11:59AM by PIB Chennai

மேதகு பெருமக்களே,

டிஜிட்டல் மாற்றம் என்பது நமது யுகத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றமாகும். வறுமைக்கு எதிராக உலகம் முழுவதும் பல தசாப்தங்களாக நடைபெறும் போராட்டங்களுக்கு, டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் முறையான பயன்பாடு உந்து சக்தியாக மாறியுள்ளது. தொலைதூரத்தில் இருந்து பணி புரிதல் மற்றும் காகிதம் இல்லா பசுமை அலுவலகங்கள் போன்று கொவிட் காலத்தில் நமக்கு பரிச்சயமான டிஜிட்டல் தீர்வுகள், பருவநிலை மாற்றத்திற்கு எதிரான முயற்சியிலும் உதவியாக இருக்கக்கூடும். எனினும் டிஜிட்டல் அணுகுமுறை முற்றிலும் உள்ளடக்கியதாக, டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாடு பரவலாக்கப்பட்ட பிறகு தான் இதன் பயன்கள் முழுவதும் உணரப்படும். துரதிஷ்டவசமாக, இத்தகைய ஆற்றல் வாய்ந்த கருவியை வரவு, செலவு புத்தகத்துடன் தொடர்புபடுத்தி எளிய வர்த்தக நோக்கத்துடன் மட்டுமே நாம் அணுகி வருகிறோம். டிஜிட்டல் மாற்றத்தின் பயன்களை மனித சமூகத்தின் சிறு பிரிவினர் மட்டுமல்லாமல் அனைவரும் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்வது ஜி-20 தலைவர்களாகிய நமது பொறுப்பாகும்.

டிஜிட்டல் கட்டமைப்பை உள்ளடக்கியதாக மாற்றினால், சமூகப் பொருளாதார மாற்றங்கள் ஏற்படும் என்பதை கடந்த சில ஆண்டுகளில் தனது அனுபவத்தின் மூலம் இந்தியா அறிந்துள்ளது. டிஜிட்டல் பயன்பாட்டினால் அளவும், வேகமும் அதிகரிக்கும். ஆளுகையில் வெளிப்படுத்தன்மையைக் கொண்டு வர முடியும். ஜனநாயக கோட்பாடுகளை உள்ளடக்கிய அடிப்படை கட்டமைப்புடனான டிஜிட்டல் பொது சொத்துக்களை இந்தியா உருவாக்கியுள்ளது. வெளிப்படையான ஆதாரம், வெளிப்படையான ஏ.பி.ஐ மற்றும் வெளிப்படை தரங்களின் அடிப்படையில் இயங்கக்கூடிய வகையில், பொதுவான ஒன்றாக இந்த தீர்வுகள் அமைந்துள்ளன. இன்று இந்தியாவில் ஏற்பட்டுள்ள டிஜிட்டல் புரட்சியை எங்களது இந்த அணுகுமுறை அடிப்படையாகக் கொண்டுள்ளது. உதாரணமாக, எங்களது ஒருங்கிணைந்த கட்டண இணைப்பு (யு.பி.ஐ).

கடந்த ஆண்டு உலகம் முழுவதும் 40% கட்டண பரிவர்த்தனைகள் யு.பி.ஐ வாயிலாக நடைபெற்றன. அதேபோல டிஜிட்டல் அடையாளத்தின் அடிப்படையில் 460 மில்லியன் புதிய வங்கி கணக்குகளை உருவாக்கி, நிதி உள்ளடக்கத் துறையில்  இந்தியாவை சர்வதேச நாடுகளின் வழிகாட்டியாக உயர்த்தி உள்ளோம். எங்களது கோவின் தளம், மனித வரலாற்றின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தி, பெரும் வெற்றி பெற்றது.

மேதகு பெருமக்களே,

இந்தியாவில் டிஜிட்டல் அணுகலை நாங்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய முயற்சி மேற்கொண்டாலும், சர்வதேச அளவில் மாபெரும் டிஜிட்டல் இடைவெளி இன்னும் உள்ளது. ஏராளமான வளர்ந்து வரும் நாடுகளின் மக்களுக்கு டிஜிட்டல் அடையாளங்கள் எதுவும் இல்லை. 50 நாடுகளில் மட்டுமே டிஜிட்டல் கட்டண முறை உள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பயன்களை உலகம் முழுவதும் அனைவரும் பெற்று, அடுத்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று நாம் ஒன்றிணைந்து உறுதிமொழி ஏற்போமா!

அடுத்த ஆண்டு ஜி-20 அமைப்பிற்கு இந்தியா தலைமை ஏற்கும் போது தனது கூட்டாளிகளோடு இந்த நோக்கத்திற்காக இணைந்து பணியாற்றும். “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற எங்கள் தலைமையின் ஒட்டுமொத்த கருப்பொருளின் உள்ளார்ந்த அங்கமாக “வளர்ச்சிக்கு தரவு” என்ற கோட்பாடு இருக்கும்.

 

நன்றி.

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

**************

(Release ID: 1876347)

MSV/RB/KRS



(Release ID: 1876526) Visitor Counter : 208