உள்துறை அமைச்சகம்

ஹரியானா மாநிலம் சூரஜ்கண்டில் நடைபெறும் இரண்டு நாள் சிந்தனை முகாமில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று உரையாற்றினார்

Posted On: 27 OCT 2022 6:28PM by PIB Chennai

ஹரியானா மாநிலம் சூரஜ்கண்டில் நடைபெறும் இரண்டு நாள் சிந்தனை முகாமில் முதல் நாளான இன்று, மத்திய உள்துறை  மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார். மாநிலங்களின் முதலமைச்சர்கள், உள்துறை அமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள், நிர்வாகிகள் இந்த முகாமில் பங்கேற்கின்றனர்.

பிரதமர் திரு நரேந்திர மோடியிடமிருந்து பெற்ற ஊக்கத்தில் சிந்தனை முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தமது உரையில் குறிப்பிட்ட  திரு அமித் ஷா, கணினி குற்றங்கள், போதைப்பொருள் பரவல், எல்லை தாண்டிய பயங்கரவாதம் போன்ற சவால்களை எதிர்கொள்ள பொது மேடையை இது வழங்குகிறது என்றார். தற்போது குற்றங்களின் தன்மை மாறிவருகிறது என்றும் எல்லைகள் இல்லாததாக அவை இருக்கின்றன என்றும் குறிப்பிட்ட அவர், இதனால், இவற்றை எதிர்த்து போராட மாநிலங்களுக்கு பொதுவான உத்தி தேவைப்படுகிறது என்றார்.

இடதுசாரி அதிதீவிரவாதத்தால்  பாதிக்கப்பட்ட பகுதிகள், ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவை ஒரு காலத்தில் வன்முறை மற்றும் அமைதியின்மையின் இடங்களாக இருந்தன என்றும் தற்போது இவை வளர்ச்சியின் இடங்களாக மாறியுள்ளன என்றும் உள்துறை அமைச்சர் தெரிவித்தார். கடந்த 8 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களின் பாதுகாப்பு நிலைமை குறிப்பிடத்தக்க அளவு முன்னேறியுள்ளது என்று கூறிய அவர், வன்முறை சம்பவங்கள் 74 சதவீதமும், பாதுகாப்புப் படையினரிடையே  உயிரிழப்புகள் 60 சதவீதமும் பொதுமக்கள் உயிரிழப்புகள் 90 சதவீதமும் குறைந்திருப்பதாக தெரிவித்தார். இது தவிர, பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதால் நீடித்த அமைதி நிலைநாட்டப்பட்டதாகவும், 9,000-க்கும் அதிகமான தீவிரவாதிகள் சரண் அடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தேசிய புலனாய்வு முகமை பற்றி குறிப்பிட்ட அவர், 2024-க்கு முன் அனைத்து மாநிலங்களிலும், இதன் கிளைகளை அமைப்பதன் மூலம் பயங்கரவாதத்திற்கு எதிரான வலைப்பின்னலை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார். பாதுகாப்புக்குரிய பெரும்பாலான இடங்கள், தேசவிரோத செயல்களிலிருந்து  பெரும்பாலும் விடுபட்டுள்ளதாகவும், இதற்குக் காரணம் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பும், ஒருங்கிணைப்பும்தான் என்று திரு அமித் ஷா கூறினார்.

தேசத்தின் வளர்ச்சிக்கும் நிலைத்தன்மைக்கும் நல்ல நிர்வாகத்திற்கும், உள்நாட்டு பாதுகாப்பு மிக முக்கியமானது என்று கூறிய உள்துறை அமைச்சர், அனைவருக்கும் இது பொதுப்படையான பொறுப்பு என்றார்.  தேசக்கட்டமைப்பில், மத்திய, மாநில அரசுளுக்கு சமபொறுப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார். அனைத்து நிலைகளிலும் நெருக்கமான ஒத்துழைப்பு இருக்கும்போதுதான் நாடு முன்னேற்றம் அடையும் என்று கூறிய  திரு அமித் ஷா, அமிர்த காலத்தில் ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சி முறையின் உணர்வு நம்மை இயக்கும் சக்தியாக இருக்கவேண்டும் என்றார். இந்த சிந்தனை முகாம் பிராந்திய ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் என்று அவர் நம்பிக்கை  தெரிவித்தார்ஃ

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1871341

-------(Release ID: 1871380) Visitor Counter : 172