பிரதமர் அலுவலகம்
ஸ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வரின் 150-வது பிறந்தநாள் விழாவில் காணொலி வாயிலாக பிரதமரின் உரை
Posted On:
26 OCT 2022 7:41PM by PIB Chennai
ஸ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வரின் 150-வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டவர்களுடன் காணொலி செய்தி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.
உலகம் முழுவதும் வசிக்கும் ஜெயின் மதம் மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்கு பிரதமர் வணக்கம் செலுத்தினார். ஏராளமான துறவிகளின் மத்தியில் கலந்து கொள்வதும், அவர்களது ஆசியைப் பெறுவதும் தமது அதிர்ஷ்டமாக அவர் குறிப்பிட்டார். ஆச்சார்யா ஸ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர் அவர்களின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் துவக்கத்தை நினைவுகூர்ந்த பிரதமர், அன்னாரது திருவுருவச் சிலையைத் திறந்து வைக்கும் பெருமை தமக்கு கிடைத்தது பற்றி பேசினார். “தொழில்நுட்பத்தின் உதவியுடன் துறவிகளாகிய உங்களது மத்தியில் மீண்டும் ஒருமுறை நான் கலந்து கொண்டிருக்கிறேன்”, என்றார் அவர். ஆச்சார்யா ஸ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர் மகாராஜின் வாழ்க்கை தத்துவமான ஆன்மீக உணர்வோடு மக்களை இணைக்கும் நோக்கத்துடன் ஆச்சார்யா ஸ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர் அவர்களை கௌரவிக்கும் வகையில் நினைவு தபால்தலையும், நாணயமும் இன்று வெளியிடப்பட்டதை பிரதமர் சுட்டிக் காட்டினார்.
உலகில் நிலவும் தற்போதைய புவி அரசியல் சூழ்நிலை குறித்துப் பேசிய பிரதமர், “போர், தீவிரவாதம், தாக்குதல்கள் உள்ளிட்ட நெருக்கடிகளை உலகம் தற்போது சந்தித்து வருவதோடு, இவற்றில் இருந்து விடுபடுவதற்கு ஊக்குவிப்பை எதிர்நோக்குகிறது”, என்று கூறினார். இது போன்ற நிலையில், இந்தியாவின் ஆற்றலுடன் இணைந்த பழங்கால பாரம்பரியங்களும், தத்துவங்களும் தான் உலக நாடுகளுக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக மாறி வருவதாக அவர் தெரிவித்தார். ஆச்சார்யா ஸ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர் அவர்கள் காட்டிய வழியும், ஜெயின் மதகுருக்களின் போதனைகளும் தான் சர்வதேச சிக்கல்களுக்கு தீர்வாகும் என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த காலங்களில் ஆச்சார்யாக்கள் உருவாக்கிய சமூக நலன், மனித சேவை, கல்வி மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு போன்ற வளமான பாரம்பரியம் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். “விடுதலையின் அமிர்த காலத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதை நோக்கி நாம் முன்னேறுகிறோம். இதற்காக நாடு ஐந்து உறுதி மொழிகளை எடுத்துக் கொண்டிருப்பதோடு அவற்றை நிறைவேற்ற துறவிகள் நம்மை வழி நடத்துகின்றனர்”, என்று பிரதமர் தெரிவித்தார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே அனைவரும் வாங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், ஆச்சார்யா மகாராஜா அவர்களுக்கு நாம் செலுத்தும் மிகப்பெரிய மரியாதை அதுதான் என்று கூறி தமது உரையை நிறைவு செய்தார்.
************
MSV/RB/IDS
(Release ID: 1871172)
Visitor Counter : 126
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam