பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியாவில் தீபோத்சவ் கொண்டாட்டத்தில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

Posted On: 23 OCT 2022 8:37PM by PIB Chennai

சியாவர் ராமச்சந்திராவுக்கு ஜே!

சியாவர் ராமச்சந்திராவுக்கு ஜே!

சியாவர் ராமச்சந்திராவுக்கு ஜே!

மேடையில் வீற்றிருக்கும் உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்தி பென் படேல் அவர்களே, செல்வாக்கு மிக்க முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களே, அயோத்திவாழ் மக்களே,  உள்நாட்டிலும், உலகிலும் உள்ள ஸ்ரீ ராம் மற்றும் ஸ்ரீ பரத்  பக்தர்களே, சகோதர, சகோதரிகளே!

அயோத்தி இன்று தீபங்களின் ஒளியால் தெய்வீகமாகவும், உணர்ச்சிகளால் பிரமாண்டமாகவும் உள்ளது. அயோத்தி இன்று இந்தியாவின் கலாச்சார மறுமலர்ச்சியின் பொன்னான அத்தியாயத்தின் பிரதிபலிப்பாகும். ஏற்கனவே ராஜ்யாபிஷேகத்திற்கு நான் இங்கு வந்தபோது எனக்குள் உணர்ச்சிகளின் வேகத்தை உணர்ந்தேன். 14 ஆண்டுகால வனவாசத்திற்குப் பின் பகவான் ஸ்ரீராமர் திரும்பும்போது அயோத்தி எப்படி அலங்கரிக்கப்பட்டிருக்கும் என்பதை எண்ணிப்பார்த்து வியந்தேன். இன்று, இந்த அமிர்த காலத்தில், ஸ்ரீ ராமரின் ஆசீர்வாதத்துடன், அயோத்தியின் தெய்வீகத்தன்மையையும் அழியாத தன்மையையும் நாம் காண்கிறோம்.

நண்பர்களே,

வாழ்க்கையின் இயற்கையான பகுதியாக விழாக்களும், கொண்டாட்டங்களும் நிறைந்த நாகரீகத்தையும், கலாச்சாரத்தையும், நாம் கொண்டிருக்கிறோம். இந்த சமூகத்தில் புதிதாக ஏதாவது நிகழ்ந்தால், புதிய விழாவை நாம் உருவாக்குகிறோம். சமூகத்தில் வெற்றி வாய்மைக்கு உரியது, பொய்மைக்கு அல்ல என்பதை  நாம் உயிர்ப்புடன் வைத்திருக்கிறோம். இதற்கு இந்தியாவிற்கு இணையாக எவரும் இல்லை. ராவணனின் கொடுங்கோன்மைக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஸ்ரீ ராமபிரான் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பிறகும் கூட, இந்த சம்பவத்திலிருந்து உருவான செய்தி விளக்குகள் வடிவத்தில் அலங்கரித்து கொண்டாடப்படுகிறது.

நண்பர்களே,

ராமனின் நன்னடத்தைக்கே எப்போதும் வெற்றி கிடைக்கும், ராவணனின் தவறான நடத்தைக்கு அல்ல என்று நமது ஞானிகள் கூறியுள்ளனர். விளக்கின் ஒளியே பிரம்மாவின் வடிவமாகும். இந்த ஆன்மீக ஒளி இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டிற்கு வழிகாட்டும் என்று  நான் நம்புகிறேன்.

இந்த புனிதமான நாளில், இந்த லட்சக்கணக்கான விளக்குகளின் ஒளி குறித்து மேலும் ஒரு விஷயத்தை நாட்டு மக்களுக்கு நான் நினைவுப்படுத்த விரும்புகிறேன். கோஸ்வாமி துளசிதாஸ் அவர்கள், தமது ராம்சரித மனஸ்-ல் ஒட்டுமொத்த உலகத்திற்கும் ராமபிரானே ஒளி அளித்ததாக கூறுகிறார். அவரே, ஒட்டுமொத்த உலகிற்கும் வழிகாட்டியாக இருந்தார். இந்த விளக்கின் பொருள் என்ன, அன்பு மற்றும் கருணை, மனிதாபிமானம் மற்றும் கவுரவம், சமத்துவம் மற்றும் நேசம்.  இந்த விளக்கு அனைவருக்குமானது, அனைவருடனும் ஒருங்கிணைந்து பயணிப்பதன் செய்தியை இந்த விளக்கு கூறுகிறது. 

பல ஆண்டுகளுக்கு முன் குஜராத்தியில் நான் எழுதிய ‘தியா’ எனும் விளக்கைப் பற்றிய கவிதையிலிருந்து சில வரிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். விளக்கு என்பது நம்பிக்கையையும் வெப்பத்தையும் நெருப்பையும் இளைப்பாறுதலையும் தருகிறது. உதிக்கும் சூரியனை அனைவரும் வழிபட்டாலும், இருள் சூழ்ந்த மாலைப் பொழுதில் ஆதரவாக இருப்பது விளக்கு (தியா) தான். மக்கள் மனதில் அர்ப்பணிப்பு உணர்வைக் கொண்டுவரும் அதே வேளையில், இருளைப் போக்க விளக்கு தன்னைத் தானே எரித்துக்கொள்கிறது. அதே போல், நாம் அனைவருக்காகவும், பாடுபடுகிறோம். அதன் மூலம் சுயநலமற்ற உணர்வுடன் ஒட்டுமொத்த உலகத்திற்கும் நன்மை என்ற  விளக்கொளியை பரவச் செய்கிறோம்.

சகோதர சகோதரிகளே,

 

 

இடைக்காலத்திலும், நவீன காலத்திலும் இருண்ட காலத்தின் மோசமான விளைவுகளை இந்தியா எதிர்கொண்டாலும், நாட்டு மக்கள் விளக்கு ஏற்றுவதை நிறுத்தவில்லை, நம்பிக்கையை வளர்த்துக் கொள்வதை நிறுத்தவில்லை. கொரோனா நெருக்கடியின் போதும் ஒவ்வொரு இந்தியரும் ஒரே உணர்வில் விளக்கேற்றினர், பெருந்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு உலகமே சாட்சியாக இருந்தது. கடந்த காலத்தில் இருந்த ஒவ்வொரு இருளிலிருந்தும் இந்தியா வெளிவந்ததுடன் முன்னேற்றப் பாதையில் அதன் வலிமையின் ஒளியைப் பரப்பியது.

இந்த நம்பிக்கையுடன்  உங்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை தெரிவிக்கிறேன். முழுமையான பக்தி உணர்வுடன் என்னுடன் இணைந்து கூறுங்கள்.

சியாவர் ராமச்சந்திராவுக்கு ஜே!

சியாவர் ராமச்சந்திராவுக்கு ஜே!

சியாவர் ராமச்சந்திராவுக்கு ஜே!

****

 (Release ID: 1870519)


(Release ID: 1870823) Visitor Counter : 130