பிரதமர் அலுவலகம்

புதுதில்லியில் பிரதமரின் விவசாயிகள் கவுரவிப்பு மாநாடு 2022 ன் தொடக்க விழாவில் பிரதமர் உரையின் தமிழாக்கம்

Posted On: 17 OCT 2022 4:36PM by PIB Chennai

பாரத் மாதாகி ஜே!

பாரத் மாதாகி ஜே!

பாரத் மாதாகி ஜே!

திருவிழாக்களின் எதிரொலிகள் சுற்றிலும் கேட்கின்றன.  தீபாவளி நமது கதவுகளை தட்டுகிறது.  இத்தகைய தருணத்தில் இன்று ஒரே இடத்தில் புதிய தொழில்களை தொடங்குவதும், லட்சக்கணக்கான விவசாயிகள் கூடியிருப்பதும் நிகழ்கிறது.  ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய் விஞ்ஞான், ஜெய் அனுசந்தன்!  ஒரு வகையில் இந்த மந்திரத்தின் உயிர்ப்பான வடிவத்தை இந்த விழாவில் நாம் காண்கிறோம். 

நண்பர்களே,

நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும், வேளாண் துறையின் முக்கியமான பங்குதாரர்கள் நேரடியாகவோ, காணொலி மூலமாகவோ இன்று இந்த நிகழ்ச்சியோடு தொடர்பு கொண்டிருக்கிறார்கள்.  இன்று 600-க்கும் அதிகமான பிரதமரின் விவசாயிகள் வள மையங்கள் திறக்கப்படவுள்ளன.  இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியை சற்றுமுன் நான் பார்வையிட்டேன்.  பல தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அங்கே காட்சிக்கு இருந்தன.  மேலும் சிறிதுநேரம் அங்கே இருப்பதற்கு நான் விரும்பினேன்.  ஆனால், நீங்கள் அதிகநேரம் காத்திருக்கக்கூடாது என்பதற்காக மேடைக்கு வந்து விட்டேன்.  பிரதமரின் விவசாயிகள் வள மையம் என்ற புதுமையான வடிவத்தை கண்டறிந்த மன்சுக்பாய் மற்றும் அவரது குழுவினரை உண்மையிலேயே நான் பாராட்டுகிறேன்.  இந்த மையம் என்பது வெறுமனே உரங்களை விவசாயிகளுக்கு வாங்கி விற்கும் இடமல்ல.  அவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கின்ற அனைத்து வகையிலும் அவர்களுக்கு உதவி செய்கின்ற மையமாக விளங்கும். 

நண்பர்களே,

சற்றுநேரத்திற்கு முன் நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகள் பிரதமரின் விவசாயி கவுரவிப்பு நிதியாக ரூ.16,000 கோடியை மற்றொரு தவணையாக பெற்றுள்ளனர்.  இங்கே அமர்ந்துள்ள விவசாயிகள் தங்களின் செல்பேசிகளை இயக்கி பார்த்தால் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.2,000 செலுத்தப்பட்டு இருப்பதற்கான செய்தி வந்திருக்கும்.    இதில் எந்த இடைத்தரகரும் இல்லை.  நிறுவனமும் இல்லை.    பயன்பெறும் விவசாயிகள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன்.   

நண்பர்களே,

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் சிறு விவசாயிகள் எவ்வாறு பயனடைகிறார்கள் என்பதற்கு பிரதமரின் விவசாயி கவுரவிப்பு நிதி ஒரு உதாரணமாகும்.  இந்த திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து  இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக பண பரிமாற்றம் செய்யப்பட்டது.  விதைகள் அல்லது உரங்கள் வாங்க விவசாயிகளுக்கு இது பயன்படுகிறது.  பிரதமரின் விவசாயி கவுரவிப்பு நிதி தங்களின் பெரும் சுமையை குறைத்திருப்பதாக நாடுமுழுவதும் உள்ள   விவசாயிகள் என்னிடம் கூறுகிறார்கள்.  

நண்பர்களே,

இறக்குமதிகளுக்கான செலவை குறைத்து நாட்டை தற்சார்புடையதாக மாற்றுவதற்கு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். உணவு மற்றும் வேளாண் பொருட்களை இறக்குமதி செய்யாமல் இருக்க நாம் உறுதி மேற்கொள்ள வேண்டும்.  கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கு வெளிநாடுகளை சார்ந்திருப்பதை குறைப்பதற்காக உயிரி எரிபொருள் எத்தனால் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்க நாம் பணிபுரிந்து வருகிறோம்.  இதில் விவசாயிகளும்,  வேளாண்மையும் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளன.  இனிவரும் காலத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனாலில் கார்கள் ஓடும்.  கழிவுப்பொருட்கள் மற்றும் மாட்டுச்சாணத்தில் இருந்து எரிவாயு உற்பத்தி செய்யப்படும்.  சமையல் எண்ணெயில் தற்சார்பை அடைவதற்காக எண்ணெய் பனை இயக்கத்தையும் நாம் தொடங்கி இருக்கிறோம். 

புதிய தொழில் நிறுவனங்களோடு தொடர்புடைய அனைத்து இளைஞர்களுக்கும் வேளாண் துறை சார்ந்த சகோதர சகோதரிகளுக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

மிக்க நன்றி.

**************



(Release ID: 1869275) Visitor Counter : 146